கோவை: கோவைக்கு நாளை (நவ.19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (நவ.19) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். மேலும், கோவைக்கு வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, புதுடெல்லியில் நடந்த என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது பிரதமரை அவர் சந்தித்து பேசினார்.
பின்னர், கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அதன் பின்னர், பலமுறை பிரதமர் தமிழகத்துக்கு வந்து சென்றார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் அவரை சந்திக்கவில்லை. வரவேற்கவும் செல்லவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ள சூழலில், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்தது.
அதைத் தொடர்ந்து கோவைக்கு நாளை வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் வைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தொடர்ந்து இயற்கை விவசாயிகள் மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளதால், அவரும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பாஜகவின் பார்வை, தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இச்சூழலில், பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நாளை வரவேற்று பேசுவது அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமரை சந்திக்கும்போது, கூட்டணி விவகாரம், தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு உள்ள வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்தும் பழனிசாமி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.