பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசுக்குச் சொந்தமான கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், புதிய பணியாளர்களுக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வட மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் சிக்கி கைதாகியுள்ளனர்.
இதே நிறுவனத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஆள் மாறாட்ட மோசடி நடந்தது. அப்போதும் இப்போதும் வீடியோவும், கைரேகையும் ஆள் மாறாட்டத்தைக் காட்டிக் கொடுத்துள்ளன.
கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள வனக்கல்லுாரி வளாகத்தில், மத்திய அரசுக்குச் சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் அமைந்துள்ளது.
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் (ICFRE) கீழ் இயங்கி வரும் இந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காடுகள் சார்ந்த தேசிய அளவிலான ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளின் பிராந்திய வனவியல் ஆராய்ச்சிகளையும் கையாண்டு வருகிறது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துடனும், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்காணிப்பு மையத்துடனும் இந்த நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது. வனவியல், வன மரபியல், வன தாவரவியல், வன உயிரி தொழில்நுட்பம், தாவர உயிரி தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முழு நேரம், பகுதி நேரம் மற்றும் ஆராய்ச்சி (PhD) பட்டப்படிப்புகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
இங்கு 27 விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 48 அலுவலர்கள், 37 நிர்வாக அலுவலர்கள், 28 பல்நிலை பணி அலுவலர்கள் மற்றும் 4 மாற்றுப்பணி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டாவது முறையாக ஆள் மாறாட்டம்
இந்த நிறுவனத்துக்குத் தேவையான சில தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை, கடந்த ஜனவரி முதல் தேதியன்று வெளியிடப்பட்டது.
கீழ்நிலை எழுத்தர் (LDC-Lower Division Clerk), பல்நிலை பணி அலுவலர் (MTS–Multi Tasking Staff), தொழில்நுட்ப அலுவலர் (Technician) மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் (Technical Assistant) ஆகிய 4 பணியிடங்களுக்கான அந்த அறிவிக்கையில், குறைந்தபட்ச தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. சான்றிதழ் அடிப்படை கல்வித் தகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கு நாடு முழுவதிலிருந்தும் பலர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இந்நிறுவனத்தில் நடந்தது.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணல் முடிக்கப்பட்டு, இறுதியாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மார்ச் 10 ஆம் தேதியன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பல்நிலை பணியாளர் பணியிடத்துக்கு வந்திருந்த சிலருடைய சான்றிதழை சரி பார்த்தபோது, 8 பேர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வை எழுதியிருந்தது கண்டறியப்பட்டது. நிறுவனத்தின் இயக்குநர் குன்னிக்கண்ணன் அளித்த புகாரையடுத்து, சாய்பாபா காலனி போலீசார், இந்த 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையின்படி, பல்நிலை பணியாளர் (MTS) பணியிடத்துக்குத் தேர்வெழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்களிலும், பல கட்டங்களில் பலரும் கழிக்கப்பட்ட பின்பு, இவர்கள் அனைவரும் ஆவணங்கள் சரி பார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
தகுதியின் அடிப்படையில் அழைக்கப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷி குமார் (வயது 26), நரேந்திர குமார் ( வயது 24), பிபன் குமார் ( வயது 26), பிரசாந்த் சிங் ( வயது 26), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா ( வயது 24), அசோக் குமார் மீனா ( வயது 26), ஹரியாணாவை சேர்ந்த சுபம் ( வயது 26), பிகாரை சேர்ந்த ராஜன் குமார் கோண்ட் ( வயது 21) ஆகிய இந்த 8 பேரும் எழுத்துத் தேர்வை வேறு நபர்களை வைத்து எழுத வைத்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் இதே நிறுவனத்தில், இதே பணிகளுக்கு நடந்த எழுத்துத் தேர்விலும் ஆள் மாறாட்ட மோசடி நடந்தது.
அப்போதும் சான்றிதழ் சரி பார்ப்பின்போது, நிறுவன அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கட்ட பரிசீலனைகளில் ஹரியாணாவைச் சேர்ந்த அமித் குமார் (வயது 30), எஸ்.அமித் குமார், (வயது 26), அமித் (வயது 23) மற்றும் சுலைமான் (வயது 25) என 4 பேர் தங்களுக்காக வேறு நபர்களை வைத்து தேர்வெழுதியது கண்டு பிடிக்கப்பட்டு, 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
4 பணியிடங்கள் – மோசடியில் சிக்கிய 8 பேர்
மத்திய அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனம் என்பதால், இந்த நிறுவனத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பயில்கின்றனர். பணியாற்றுகின்றனர். புதிய பணியாளர்கள் தேர்வுக்கும் நாடு முழுவதிலும் இருந்தும் விண்ணப்பிக்கின்றனர்.
அதிலும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான ஆள் மாறாட்ட மோசடி நடப்பதும், இரண்டாவது முறையாக பலரும் பிடிபட்டிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் அலுவலகத் தலைமை நிர்வாகி நரேந்திர பாபு, ”கீழ் நிலை அலுவலருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பல நிலைகளிலும் நடந்த பரிசீலனைகளுக்குப் பின், 36 பேர், சான்றிதழ் சரி பார்ப்புக்கான அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 3 பேர் வரவில்லை. மீதமிருந்த 33 பேர்களில் இந்த 8 பேரும் இருந்தனர். முதலில் தேர்வு நடந்தபோது எடுத்த வீடியோவை வைத்து, இவர்களின் முகங்களை சரி பார்த்தோம். அதன்பின் கைரேகைகளையும் பரிசீலித்தோம். அதில்தான் இவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, போலீசில் புகார் தரப்பட்டது.” என்றார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று இந்த புகாரை விசாரித்து வரும் காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் தெரிவித்தார்.
சாய்பாபா காலனி காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், ”கைதான 8 பேரும்தான், ஒரிஜினல் விண்ணப்பதாரர்கள். அவர்கள் கொண்டு வந்ததும் அவர்களின் கல்வி சான்றிதழ்கள்தான். ஆனால் தேர்வெழுதியது இவர்களில்லை. இவர்களுக்காக தேர்வெழுதுவதற்கு, ஆட்களை நியமிக்க ஏஜென்சிகளைப் போல சிலர் செயல்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்தபோதும் தேர்வெழுதியவர்களை கைது செய்ய இயலவில்லை என கூறும் காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், ”இந்த முறை தேர்வெழுதியவர்களை தேடி வருகிறோம்” என்றார்
ஒரு குழுவாகவே இவர்கள் இயங்கி வருவதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்த காவல் ஆய்வாளர், ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுத வைக்கும் கும்பலையும் பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
”இந்த தேர்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விண்ணப்பத்திலுள்ள ஒவ்வொருவரின் புகைப்படத்தையும், தேர்வெழுதுபவரின் முகத்தையும் ஒப்பிட்டுப்பார்ப்பது மிகவும் கடினமான பணி. தேர்வுக்குப் பின், பல கட்டங்களில் ஆட்கள் குறைக்கப்பட்டபின், 50க்கும் குறைவானவர்கள் மட்டுமே இறுதிக்கட்டமாக நடக்கும் ஆவண சரி பார்ப்புக்கு வருகின்றனர். அதனால் அந்த கட்டத்தில் கண்காணிப்பை தீவிரமாக்கினால் போதுமானது; அதுவே எளிது,” என்றார் இந்திய வனப்பணி அதிகாரியான நரேந்திர பாபு.
கடந்த சில ஆண்டுகளாக, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் சார்பில் நடக்கும் அனைத்துத் தேர்வுகளும், நேர்காணல்களும் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவு செய்யப்படுவதாகத் தெரிவித்த அவர், அதுதான் இப்போது இதைக் கண்டறிய உதவியதாகத் தெரிவித்தார். இறுதிக்கட்டத்தில் குறைவான நபர்கள் வருவதால் அவர்களின் கைரேகையை ஒப்பிடுவதும் எளிதாயிருப்பதாகத் தெரிவித்தார்.
ஒரே மாதிரியான ஆள் மாறாட்ட மோசடி நடப்பது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் குன்னிக்கண்ணனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஆள் மாறாட்ட மோசடி – அன்றும் இன்றும்
கடந்த 2023 ஆம் ஆண்டில், இதே கல்வி நிறுவனத்தின் பணியாளர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 4 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், இப்போது அதே மோசடியில் ஈடுபட்ட 8 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த குற்றவியல் வழக்கறிஞர் சண்முகம், ”இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 419 என்பது ஆள் மாறாட்டத்தைக் குறிக்கும். அதற்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இப்போதுள்ள பிஎன்எஸ் 319 (2) பிரிவும் ஆள் மாறாட்டத்துக்கானது. ஆனால் இப்போது சிறைத் தண்டனை 5 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐபிசி 420, 468 மற்றும் 471 ஆகியவை போலி ஆவணங்களைக் கொண்டு ஏமாற்றுதலைக் குறிக்கும். அதற்கு 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் கிடைக்கும். பிஎன்எஸ் 318 (2) மற்றும் 336(3) ஆகிய பிரிவுகளும் இதே குற்றத்துக்கு பதியப்பட்டு, இதே தண்டனையை உறுதி செய்கின்றன.” என்றார்.
முன்பை விட, இப்போதுள்ள சட்டப்பிரிவுகளில் தண்டனை கடுமையாகியுள்ளதாகத் தெரிவித்த வழக்கறிஞர் சண்முகம், கடந்த முறை நடந்த ஆள் மாறாட்டத்தின்போது கூட்டுச்சதி குற்றம் பதியப்படாத நிலையில், இப்போது பிஎன்எஸ் 61(2) (a) என்ற கூட்டுச்சதிக்கான சட்டப்பிரிவும் பதியப்பட்டுள்ளதால், இந்த முறை, இதனுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு