• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

“கோவை உயர்மட்ட பாலத்தின் 55% பணிகள் நிறைவுற்றது அதிமுக ஆட்சியில்தான்” – பழனிசாமி பேச்சு | Half of Avinashi Flyover Construction Work Done by AIADMK Governance: EPS Speech

Byadmin

Oct 9, 2025


திருச்செங்கோடு: “அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் ரூ.1621 கோடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் 55% நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று கிடப்பில் போட்டு, இப்போது ஸ்டாலின் திறக்கிறார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில், திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட கரட்டுபாளையம் பகுதியில் திருச்செங்கோடு – பரமத்தி சாலையருகே திறந்தவெளி மைதானத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது: “இந்தக் கூட்டம் இரண்டு முறை தள்ளிபோனது. மழை வந்ததால் ஒரு முறையும், ஒரு நிகழ்வின் காரணமாக இரண்டாவது முறையும் தள்ளிப்போனது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பொதுக் கூட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. குறைவான நேரத்தில் தங்கமணி பல்வேறு பிரச்சினைக் கு இடையில் பிரமாதமாக அரங்கம் பிடித்து, மின் விளக்குகள் அமைத்து பிரமாண்டம் காட்டியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நடக்கும் முதல் கூட்டமே வெற்றிகரமாக அமைந்துவிட்டது.

கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக பிரச்சினை உருவாக்கப்பட்டதாக தகவல். அதிமுகவைப் பொறுத்தவரை எந்த இடத்தில் கூட்டம் போட்டாலும் வெற்றிக் கூட்டமாக இருக்கும். பொதுமக்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். 168 தொகுதிக்கு நேரடியாகச் சென்று எழுச்சி பயணக் கூட்டத்தை மேற்கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, இன்று இங்கு கூட்டம் நடக்கிறது.

மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதில் ஸ்டாலினுக்கு நிகர் யாருமில்லை. இன்று கூட செய்திகளில் பார்த்தேன்… இனிமேல் ஆஸ்பத்திரியில் பயனாளிகள் என்று சொல்ல வேண்டுமாம், நோயாளி என்று சொல்லக் கூடாது. பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாம்? எல்லாவற்றுக்கு பெயர் மாற்றம், இரண்டாவது பெயர் வைப்பார், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. போட்டோ ஷூட்டோடு எல்லாம் முடிந்துபோகும்.

கோவையில் நாளை பாலம் திறக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே 10 கிலோ மீட்டர் நீளமான பாலம். அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் ரூ.1621 கோடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, பணிகள் 55% நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் போட்டனர். அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்று கிடப்பில் போட்டு, இப்போது அவர் திறக்கிறார்.

நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார், நல்ல பெயர் வைங்க, உங்க அப்பா பெயர் மட்டும் வைக்காதீர்கள். எங்க பார்த்தாலும் நாம் போட்ட திட்டத்துக்கு அவருடைய அப்பா பெயர் வைக்கிறார். கஷ்டப்பட்டு திட்டம் போட்டு, நிதி ஒதுக்கியது அதிமுக அரசு, ஆனால் பேர் வைப்பது மட்டும் அவர். நல்லவேளையாக நாளை திறக்கப்போகும் பாலத்துக்கு அவர் அப்பா பெயர் வைக்காமல் நல்ல பெயர் வைத்திருக்கிறார், வாழ்த்துகள்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொடர்ந்து போராடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அதிமுக அரணாகவும், துணையாக வும் நிற்கும். விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று தமிழகம் முழுக்க போராட்டக் களமாக மாறிவிட்டது.

இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்று அவரே சொல்கிறார். ஆனால் எதில் சூப்பர் முதல்வர்..? பொய் பேசுவதில், கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலம். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்தக் கடனை அடைப்பார்கள்.

மின் கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். ஆண்டுக்கு 6% முதல் 9% உயர்வு. வரி மேல் வரி போட்டு கடன் தொகையை வசூல் செய்வார்கள். இப்படிப்பட்ட அரசு தொடர வேண்டுமா?

இப்பகுதியில் திமுக கவுன்சிலர் கள்ளச்சாரயம் காய்ச்சி, போலி மதுபானம் காய்ச்சி, அதை அவரது அரசே கண்டு பிடித்தது. திமுக ஆட்சியில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம். அதற்கு திமுக நிர்வாகிகள் துணை போகிறார்கள். கஞ்சா விற்பவர்களும் திமுக நிர்வாகிகள், அதனால் காவல் துறையால் கட்டுப்படுத்த முடியலை, அதிமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை முழுமையாக தடை செய்யப்படும்.

10 ரூபாய் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியும். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு ரூ.5,400 கோடியுமாக இந்த நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இவற்றை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பழனிசாமி பேசினார்.



By admin