• Sat. Nov 22nd, 2025

24×7 Live News

Apdin News

கோவை: ‘ஊர் ஒன்று, கிராமம் இரண்டு’ – அரசுப் பேருந்தில் சாதிய பாகுபாடா? பிபிசி கள ஆய்வு

Byadmin

Nov 22, 2025


கெம்பனூர் பேருந்து நிறுத்தம்

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, பேருந்தை இயக்குவதில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தேசிய எஸ்.சி–எஸ்.டி. ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

”ஒரே ஊர்தான்… ஆனால், கிராமம் இரண்டு. ஊருக்குள் நிற்கும் பேருந்து அரை கிலோ மீட்டருக்குள் இருக்கும் எங்கள் பகுதிக்குள் வராது. ஏனென்றால், நாங்கள் ஏறி உட்கார்ந்தபின்பு, அங்கே இருப்பவர்கள் பேருந்தில் ஏறி இடமில்லை என்றால், ‘அவர்கள் உட்கார நாங்கள் நின்றுகொண்டு வருவதா’ என்ற மனோபாவத்தில்தான் 21ஆம் எண் பேருந்தை இங்கே வரவிடாமல் தடுக்கிறார்கள்!”

கோவை அருகிலுள்ள கெம்பனுார் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ரம்யா, பிபிசி தமிழிடம் முன் வைத்த குற்றச்சாட்டு இது.

இதே குற்றச்சாட்டை வேறு பலரும் தெரிவிக்கும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பலரும் இதுபற்றி பேசுவதற்கு மறுக்கின்றனர். இந்த சாதிய பாகுபாடு குற்றச்சாட்டு குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிபிசி தமிழ் நடத்திய களஆய்வில், மற்ற ஊர்களிலிருந்து இயக்கப்படும் வேறு பல பேருந்துகளும் இந்த பகுதி வழியாக இயக்கப்படும் நிலையில், கெம்பனுாரிலிருந்து கோவைக்கு அதிகமுறை இயக்கப்படும் 21 ஆம் எண் நகரப்பேருந்து கெம்பனுாரிலிருந்தே புறப்படுவது தெரியவந்தது. கெம்பனுாரில் அரசு செய்துள்ள பணிகளை விளக்கிய மாவட்ட நிர்வாகம், அண்ணாநகருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஆனால், ’21 ஆம் எண் பேருந்தை அண்ணாநகரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை’.

கோவை நகருக்கு அருகிலுள்ள தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பனுார் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் அண்ணாநகர் பகுதியிலிருந்து பேருந்து வசதிகளை ஏற்படுத்தாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோருக்கு, தேசிய எஸ்.சி.–எஸ்.டி. ஆணையம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு கிராமம், 2 வார்டுகள், 3 சமுதாய மக்கள்

தேசிய எஸ்.சி- எஸ்.டி ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, தேசிய எஸ்.சி.–எஸ்.டி. ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்

அதில் ஆணையத்துக்கு வரப்பெற்றுள்ள புகாரை இணைத்து, அதுகுறித்து 15 நாட்களுக்குள் விசாரித்து விளக்கம் அளிக்குமாறு ஆணையத்தின் மாநில இயக்குநர் ரவிவர்மன் அறிவுறுத்தியுள்ளார். உரிய காலத்துக்குள் பதில் தராவிடில் ஆணையத்தின் அழைப்பாணையின்படி ஆணையம் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில், கெம்பனுாரிலிருந்து கோவை காந்திபுரத்துக்கு இயக்கப்படும் 21 ஆம் எண் நகரப்பேருந்தை அண்ணாநகரிலிருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததன் பின்னணியில் சாதிய பாகுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புகார் குறித்தும், ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்தும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி பலரும் பலவிதமான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை நிலையை அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. கோவை நகருக்கு அருகில் இருக்கும் தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பனுார் கிராமத்தில் 3 மற்றும் 4 என இரு வார்டுகள் அமைந்துள்ளன. இவற்றில் 3வது வார்டுக்குட்பட்ட கெம்பனுாரில் சாதி இந்துக்களும், 4வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகரில் பட்டியலின மக்களும், அட்டுக்கல்லில் பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.

கோவை மாவட்ட நிர்வாகம் பகிர்ந்த தகவலின்படி, 2025 தோராய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 3 வது வார்டில் 915 பேரும், 4வது வார்டில் 1,214 பேரும் இருக்கின்றனர். அட்டுக்கல் என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி, கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. அண்ணாநகர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள், கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து 300 மீட்டர் துாரத்தில் உள்ளன. இவை இரண்டுக்கும் மத்தியில் கெம்பனுார் பழைய கிராமப்பகுதி உள்ளது.

கெம்பனூர் அண்ணாநகர் பேருந்து நிறுத்தம்

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, கெம்பனூர் அண்ணாநகர் பேருந்து நிறுத்தம்

கெம்பனுார் கிராமப் பகுதியின் நடுவில் சாலையை ஒட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. கோவை காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து கெம்பனுாருக்கு இயக்கப்படும் 21 ஆம் எண் நகரப்பேருந்து, இந்த பேருந்து நிறுத்தத்தில் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு புறப்பட்டுச் செல்கிறது. இதைத்தவிர்த்து, வடவள்ளி, போளுவாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சில பேருந்துகளும் சமீபகாலமாக கெம்பனுார் பகுதி வழியாகச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த பேருந்துகள் கெம்பனுார் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்வதையும் பார்க்க முடிந்தது.

ஆனால், கெம்பனுார்–காந்திபுரம் செல்லும் 21 ஆம் எண் நகரப்பேருந்து, ஒரு கி.மீ. தொலைவுக்குள் உள்ள அண்ணாநகருக்குச் செல்லாமல் வழக்கம்போல கெம்பனுார் பேருந்து நிறுத்தத்திலிருந்தே புறப்படுகிறது.

இதன் காரணமாக, அண்ணாநகர் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள், தங்கள் பகுதியிலிருந்து நடந்துவந்து கெம்பனுார் பேருந்து நிறுத்தத்தில் 21 ஆம் எண் பேருந்தில் ஏறிச்செல்கின்றனர். இதில்தான் சாதிய பாகுபாடு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் தீண்டாமை நிலவும் கிராமங்கள் குறித்து தங்கள் அமைப்பு ஆய்வு நடத்தியபோதுதான் இதைக் கண்டறிந்ததாகச் சொல்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகியான நிர்மல்குமார்.

‘கெம்பனுாரிலிருந்து இயக்கும் பேருந்தை ஏன் அண்ணாநகரிலிருந்து இயக்கவில்லை என்று கேட்டபோது, “அங்கிருந்து பேருந்து புறப்பட்டால், பட்டியலின மக்கள் முதலில் இருக்கைகளில் அமர்ந்து கொள்வார்கள். அதன்பின், கெம்பனுார் வரும்போது அங்குள்ள பிற சாதி மக்கள் நிற்க வேண்டிய நிலை வரலாம். அதனால்தான் அந்த பேருந்தை அண்ணாநகருக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார்கள் என்பதை எங்கள் ஆய்வில் கண்டுபிடித்தோம். அதிகாரிகளிடம் சொல்லியும் பலனில்லை.” என்றார் நிர்மல்குமார்.

தற்போது கோவை மாவட்ட ஆட்சியருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையமும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு இரு மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்றிருப்பதும் பிபிசி களஆய்வில் தெரியவந்தது.

விளக்கம் கேட்டுள்ள தேசிய ஆணையம்

கடந்த செம்டம்பர் மாதத்தில் ஆணையத்தால் அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸுக்கு, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கமும் பிபிசி தமிழுக்குக் கிடைத்தது. அதில் ஆணையத்தின் நோட்டீஸ் அடிப்படையில், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பேரூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்டு தலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில் கெம்பனுாருக்கு அரசால் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

துவக்கப்பள்ளி, நுாலகம், சமுதாயக்கூடம், நியாயவிலைக்கடை, பூங்கா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மயானம் ஆகியவை அரசால் செய்து தரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள கோவை மாவட்ட நிர்வாகம், அவற்றை அனைத்து மக்களும் ஒன்றாகப் பயன்படுத்தி வருவதாகவும், அங்கே எந்த சாதிய பாகுபாடும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. இவற்றில் மயானம் தவிர, மற்றவை அனைத்தும் கெம்பனுார் பகுதியில் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதையும் பிபிசி களஆய்வில் கண்டறிய முடிந்தது.

கோவையிலிருந்து கெம்பனுாருக்கு கடந்த 1981 ஆம் ஆண்டிலிருந்து பேருந்து இயக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், பேருந்து வசதிகள் குறித்து தனியே பட்டியலிட்டுள்ளது.

சாதிய பாகுபாடு புகார் குறித்து, பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், தங்கள் பகுதியில் எந்த சாதிய பாகுபாடும் இல்லை என்றும், கூடுதல் பேருந்து வசதிகள் வேண்டுமென்றும் மக்கள் கேட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதை ஏற்று 1 C, 21 B, 94 A, 64 C மற்றும் 64 D உள்ளிட்ட 7 பேருந்துகள் கெம்பனுார் மற்றும் அண்ணாநகர் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மாவட்ட நிர்வாகம், அவையனைத்தும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் என்றும் தெரிவித்துள்ளது.

கூடுதல் பேருந்துகள் கெம்பனுார் மற்றும் அண்ணாநகர் பகுதிக்கு இயக்கப்படுவதாக மாநில ஆணையத்திடம் மாவட்ட நிர்வாகம் விளக்கிய பின்பே, இதே புகார் பட்டியலின சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்திற்குச் சென்று கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் இந்த புகார் எழுவதற்கு, கெம்பனுாரிலிருந்து புறப்படும் 21 ஆம் எண் நகரப்பேருந்தை அண்ணாநகர் பகுதியிலிருந்து இயக்காமலிருப்பதே காரணமென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணாநகரை சேர்ந்த ஜெயக்குமார்

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, 21 ஆம் நம்பர் பேருந்தை அண்ணாநகரிலிருந்து இயக்க வேண்டுமென்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதாக சொல்கிறார் அண்ணாநகரை சேர்ந்த ஜெயக்குமார்

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அண்ணாநகரைச் சேர்ந்த செல்வராஜ் ஜெயக்குமார், ”மற்ற பேருந்துகள் வேறு பகுதிகளிலிருந்து இவ்வழியாக வருகின்றன. ஆனால் கெம்பனுாரிலிருந்து தினமும் 16 முறை இயக்கப்படும் 21 ஆம் நம்பர் பேருந்து மட்டுமே கெம்பனுாரிலிருந்தே இயக்கப்படுகிறது. இதை அண்ணாநகரிலிருந்து இயக்க வேண்டுமென்றே நாங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஓரிரு நாள் இங்கிருந்து புறப்பட்டதை பிற சாதியினர் தடுத்துவிட்டனர்.” என்றார்.

சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மக்கள் மிகக்குறைவாக பேருந்து வசதியைப் பயன்படுத்துவதாகவும், தங்கள் பகுதியிலிருந்தே பேருந்துகளில் அதிகளவு மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலுக்காக நகரத்துக்குள் செல்வதாக ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார். மற்ற பகுதி பேருந்துகளை உடனே இங்கே திருப்பும் அதிகாரம் படைத்த அதிகாரிகளால் கெம்பனுார் வரை வரும் பேருந்தை 500 மீட்டர் துாரத்துக்கு நீட்டிக்க முடியாததன் காரணமென்ன என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

மற்ற வழித்தடப் பேருந்துகள் அண்ணாநகரில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலையில், 21 ஆம் எண் நகரப்பேருந்தில் ஏறுவதற்கு அண்ணாநகரைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் பலரும் கெம்பனுார் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து வருவதையும் பார்க்க முடிந்தது. அந்த பேருந்து உட்பட மற்ற பேருந்துகளிலும் கெம்பனுாரிலிருந்து செல்வோர் மிகக்குறைவாகவே இருந்ததையும் அறியமுடிந்தது.

பேருந்து தடத்தை நீட்டிக்க மறுப்பதன் பின்னணியில் அரசியல் கட்சிகள்?

மாநில பட்டியலினத்தோர் ஆணையத்துக்கு மாவட்ட நிர்வாகம் அளித்த விளக்கத்தில், கெம்பனுாரிலிருந்து மதிய நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் 3 அல்லது 4 பேர் மட்டுமே பயணம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கெம்பனுாரிலிருந்து 100 மீட்டர் துாரத்தில்தான் அண்ணாநகர் இருப்பதாகவும், தேவைப்படும்போது அங்குள்ள மக்கள் கெம்பனுாருக்கு வந்து பேருந்து ஏறிச் செல்கின்றனர் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் 100 மீட்டர் துாரத்துக்கு அந்த பேருந்து தடத்தை நீட்டித்து, அங்கிருந்து புறப்படும் வகையில் நீட்டிக்க முடியாததற்கான காரணம் எதுவும் அந்த விளக்கத்தில் இல்லை.

 அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, பத்தாண்டுகளில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் கொடுத்தும் இப்போது வரையிலும் தீர்வு கிடைக்கவில்லை என்கிறார் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா

பிபிசி தமிழிடம் பேசிய அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா, ”ஏன் இங்கிருந்து இயக்க மறுக்கின்றனர் என்பதற்கு யாருக்கும் காரணம் சொல்லத் தெரியவில்லை. இது நீண்டகாலமாக நடக்கிறது. இங்கேயிருந்து பஸ் புறப்பட்டு, அதில் நாங்கள் ஏறி உட்கார்ந்து கொண்டால், கெம்பனுாரில் ஏறுபவர்களுக்கு இடமில்லாமல் போகவாய்ப்புண்டு. அதனால் நாங்கள் உட்கார்ந்திருக்கும்போது அவர்கள் நின்று வருவதா என்பதுதான் இந்த பிரச்னைக்கு முக்கியக் காரணமென நினைக்கிறோம்.” என்றார்.

ஊர் ஒன்றாக இருந்தாலும் இங்கே 2 கிராமங்கள் இருப்பதாகக் கூறிய ரம்யா, எல்லா பேருந்துகளும் அண்ணாநகருக்கு வந்து செல்ல வேண்டுமென்பதுதான் தங்களின் 10 ஆண்டு கால கோரிக்கை என்கிறார். இதற்காக பத்தாண்டுகளில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் கொடுத்தும் இப்போது வரையிலும் தீர்வு கிடைக்காமலிருப்பதற்கான காரணமே புரியவில்லை என்கிறார் ரம்யா.

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார்.

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, பேருந்து இயக்கப்படுவதில் சாதிய பாகுபாட்டின் பின்னணியில் அனைத்துக்கட்சியினரும், அதிகாரிகளும் இருப்பதாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் குற்றம்சாட்டுகிறார்.

இதன் பின்னணியில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும், அதிகாரிகளும் இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார். இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுகவைச் சேர்ந்த தொண்டாமுத்துார் முன்னாள் பேரூராட்சித் தலைவர் சிவசாமி, வெளியூரைச் சேர்ந்தவர்கள்தான் இந்த குற்றச்சாட்டைத் தெரிவிப்பதாகவும், உள்ளூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் தங்களுக்குள் எந்த சாதிய பாகுபாடும் இல்லை என்றும் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய சிவசாமி, ”இந்த ஊருக்கு பேருந்து வசதியே இல்லாதபோது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துதான் கோரிக்கை வைத்து பேருந்தை வரவைத்தோம். இப்போது வரை இங்கே எல்லோரும் ஒன்றாகப் பழகுகிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பும் கூட, கோவில் திருவிழாவில் அவர்கள் எல்லோருமே பங்கேற்றனர். பிரச்னை இருந்தால் எப்படி திருவிழாவுக்கு வருவார்கள். எங்களுக்குள் எந்த சாதிப் பாகுபாடும் இல்லை. ஒரு பேருந்து தடத்தை நீட்டிக்காததை தேவையின்றி பிரச்னையாக்குகின்றனர்.” என்றார்.

அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரான ராமனும் இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ஆனால் 21 ஆம் எண் பேருந்தை அண்ணாநகரிலிருந்து இயக்குவதில் என்ன பிரச்னை என்று அவர்களிடம் கேட்டபோது, ”அந்தக் காலத்திலிருந்தே இந்த பேருந்து இங்கேயிருந்துதான் இயக்கப்படுகிறது. இதை திடீரென மாற்றினால் இங்கேயிருப்பவர்கள் கேள்வி கேட்பார்கள்.” என்றனர்.

சரக்கு வாகனத்தில் சாதி இந்துகள் தோட்டங்களில் வேலை செய்ய செல்லும் பெண்கள்

பட மூலாதாரம், Xavier Selvakumar

படக்குறிப்பு, காலையில் சரக்கு ஏற்றும் வாகனங்களில் பெண்கள் பலரும் சாப்பாட்டுக்கூடையுடன் வேலைக்கு செல்லும் காட்சி

இந்த பிரச்னை பற்றி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் பேசத்தயங்கினர். சாதி இந்து மக்களின் தோட்டங்கள், வீடுகளில் பட்டியலின மக்கள் பெரும்பாலானோர் பணிக்குச் செல்வதால்தான் அவர்கள் பேச அஞ்சுவதாகத் தெரிவித்தார் நிர்மல் குமார். அதற்கேற்ப காலையில் சரக்கு ஏற்றும் வாகனங்களில் பெண்கள் பலரும் சாப்பாட்டுக்கூடையுடன் கூட்டமாக ஏறிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. சாதி இந்துக்களின் தோட்டங்களுக்கு பணிக்குச் செல்வதாக அந்தப் பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று அனுப்பிய நோட்டீசில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு அறிவுறுத்தியிருந்தது. இதுபற்றி கருத்துக் கேட்பதற்காக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை.

மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து ஆணையரிடமிருந்து விளக்கம் வந்துள்ளதா என்று பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணைய மாநில இயக்குநர் ரவிவர்மனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”இதுவரை இரு தரப்பிலிருந்தும் எந்த விளக்கமும் வரவில்லை. வழக்கமாக 15 நாட்களுக்குள் பதில் வராவிட்டால் இரு முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். அதற்கும் பதில் வராவிட்டால் அடுத்த கட்டமாக ஆணையத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சாதிய பாகுபாடு காரணமாக அண்ணாநகரிலிருந்து பேருந்து இயக்க மறுக்கப்படுகிறதா என்ற கேள்வியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட மேலாண்மை இயக்குநர் கணபதியிடம் பிபிசி தமிழ் முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ”அண்ணாநகர் பகுதி மக்கள் 21 ஆம் எண் பேருந்தை தங்கள் பகுதியிலிருந்து இயக்க வேண்டுமென்கின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக அமைதிக்குழு விசாரணை நடத்தியபோது கூடுதல் பேருந்துகள் வேண்டுமென்றே அப்பகுதி மக்கள் கேட்டனர். தற்போது கூடுதலாக பல பேருந்துகள் அப்பகுதிக்கு இயக்கப்படுகின்றன.” என்றார்.

”அங்கே சாதிய ரீதியாக சில பிரச்னைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் அந்த பேருந்து தடத்தை நீட்டிப்பது பற்றி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, இப்போதைக்கு வேண்டாமென்றும், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது. அதன்படியே கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin