பட மூலாதாரம், Getty Images
கோவையில் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் பெற்றோரை தொடர்புகொண்டு மாநில அரசின் கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் கூறி, வங்கி விவரங்களை பெற்று பல லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணத்தை இழந்த பெற்றோர் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
கோவையில் நடந்த சைபர் மோசடி
வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை முகமைகளிலிருந்து அழைப்பதாக கூறி, நாடு முழுவதும் பொதுமக்களை மிரட்டி ஆன்லைன் மூலம் சிலர் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்வதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் அழைப்பதாகக் கூறி, கல்லூரியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அழைத்து ஜி.பே (Gpay) மூலம் மர்ம கும்பல் பண மோசடியை அரங்கேற்றி வருகிறது.
தற்போது கோவை கிக்கானிக் பள்ளியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களை குறிவைத்து கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, அவர்களின் வங்கி விவரங்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை சுமார் 43 மாணவர்களின் பெற்றோர் தமது பணத்தை இழந்ததாக கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஒரே வகையான உரையாடல் – குற்றம் நடந்தது எப்படி?
போலீஸார் அளித்த தகவலின்படி, மோசடியில் ஈடுபடும் நபர்கள், முதலில் தாங்கள் பள்ளிக் கல்வித்துறையில் இருந்து பேசுவதாக கூறுகின்றனர். மேலும், மாணவர்களின் கல்வி விவரங்களையும் பெற்றோரிடம் கூறுகின்றனர். பின்னர், தமிழ்நாடு அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் மூலம் மாணவரின் உயர்கல்விக்கு ரூ.38,500 உதவித்தொகை வந்துள்ளது என்றும் இந்த தொகையை மாணவரின் படிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
பின்பு மாணவர்கள் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு பெற்றோரை வீடியோ அழைப்பில் வருமாறு கூறுகிறார். அதன்பின், டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளின் கியூஆர் கோடை (QR code) அனுப்பினால் பணம் அனுப்புகிறேன் எனக் கூறுகிறார். பின்பு பணப்பரிவர்த்தனை செயலியின் கடவுசொல்லை சொல்லுமாறு கூறி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறார். மாணவர்களின் பெற்றோர் அளித்துள்ள அழைப்பு ஒலிப்பதிவுகள் பெரும்பான்மையாக இதேபோல் தான் உள்ளது.
பணத்தை இழந்த மாணவர்கள், பெற்றோர் கூறுவதென்ன?
பாதிக்கப்பட்ட மாணவர்களான மகேஷ்வர், தீபக் என்பவர்கள் அளித்த தகவல்களின்படி, “எங்களது பெற்றோர்களை செல்போனில் அழைக்கும் மர்ம நபர்கள், நாங்கள் கல்லூரிக்கு சென்று விட்டோமா என்பதை உறுதி செய்த பின்னரே இந்த மோசடியை செய்துள்ளனர். எங்கள் பள்ளியில் மட்டும் பத்து மாணவர்களுக்கு இம்மாதிரியான அழைப்பு வந்துள்ளது. நாங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இந்த தகவலை கூறிவிட்டோம், அதனால் பெரும்பாலான மாணவர்கள் தப்பிவிட்டனர்.” என தெரிவித்தனர்.
சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தினமும் இதேபோல் புகார் வருவதாக காவல்துறை தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர். இதுதொடர்பாக, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பணத்தை இழந்த மகேஷ்வரின் தந்தை சிவகிரி கூறுகையில், “40 அல்லது 50 வயது மதிக்கத்தக்க நபர் தான் வீட்டுக்கு வந்தார். பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பேசுவதாக போனில் கூறினார். போனில் பேசும்போது போனை மியூட்டில் போடக்கூடாது, அழைப்பை துண்டிக்கக்கூடாது என கண்டிப்புடன் கூறினார். ஆடியோ கால், வீடியோ கால் மற்றும் க்யூஆர் கோடு ஆகியவற்றுக்கு வெவ்வேறு எண்களிலிருந்து அழைத்தனர். அனைத்து எண்களிலும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இலச்சினை இருந்தது.” என்றார்.
வீடியோ காலில் கியூஆர் கோடை காட்டியதும் அதை அழித்துவிட்டதாகவும் சிறிதுநேரத்தில் பணம் செலுத்தப்பட்டு விட்டதாக கூறி, போலியான ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பியதாகவும் கூறுகிறார் சிவகிரி. ஆனால், வங்கியில் பணம் வரவு வைக்கப்படவில்லை எனவும் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை மோசடியாக அவர்கள் எடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சைபர் கிரைம் போலீசார் கூறுவது என்ன?
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பிபிசியிடம் பேசும்போது, “கடந்த சில மாதங்களாகவே கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி நடந்து வரும் மோசடி தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. QR கோடு ஸ்கேன் செய்ய சொல்லி மர்ம நபர்கள் அனுப்பும்போது, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பும்போது மட்டுமே “பாஸ்வோர்ட்” எனப்படும் கடவுச்சொல் போட வேண்டும். பணத்தை பெறுவதற்கு கடவுச்சொல் போட வேண்டியது இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“SCHOLARSHIP SCAM – மாணவர்களின் பெற்றோர்களுக்கு XXXXXXXX என்ற எண்ணிலிருந்து ஒரு நபர், தான் Government Scholarship டிபார்ட்மெண்டில் இருந்து பேசுவதாக கூறி, “உங்களுடைய மகளுக்கு/மகனுக்கு இவ்வளவு ரூபாய் கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது, அதற்கு மகளுக்கு/மகனுக்கு உடனடியாக அது கிடைக்க சில விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்” என்று சொல்லி, மகள்/மகனின் செல்போன் எண்ணை பெற்று மகள்/மகனிடம் அந்த நபர் இவர்களது அப்பா/அம்மாவிடம் செல்போன் எண் பெற்றதாக கூறி நம்பவைத்து கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு என்று கூறி அக்கவுண்ட் எண், ஜிபே மற்றும் ஃபோன்பே ஆகிய விபரங்களை கேட்டுப்பெற்று பின்பு அந்த நபர் QR CODEஐ அனுப்பி அதை ஸ்கேன் செய்ய சொல்லி குறிப்பிட்ட தொகையை அனுப்ப சொல்வார்.
அப்போது ஸ்காலர்ஷிப் தொகையுடன் இன்னும் 5 நிமிடங்களில் இந்த தொகையும் உங்களது அக்கவுண்ட்டுக்கு ரீஃபண்ட் ஆகிவிடும் எனச் சொல்லி நம்பவைத்து பணம் பெற்று ஏமாற்றி வருகிறார்கள். தற்போது வாட்ஸ்ஆப் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பின் மூலம் பேசியும் QR CODE அனுப்பி அதை ஸ்கேன் செய்ய சொல்லி குறிப்பிட்ட தொகையை அனுப்ப சொல்லியும் ஏமாற்றி வருகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி?
கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மேற்படி இணையவழி குற்றம் சம்பந்தமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
- Government Scholarship Department-இல் இருந்து பேசுவதாகவோ அல்லது கல்வித்துறையிலிருந்து பேசுவதாகவோ அல்லது கல்வி உதவித்தொகை தருவதாகவோ கூறி போன் மூலம் யார் பேசினாலும் அதை நம்பவேண்டாம். அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.
- அடையாளம் தெரியாத நபர்கள் உங்களுக்கு போன் செய்து உங்களைப் பற்றிய தகவல்களையும் உங்களது குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களையும் உங்களிடம் தெரிவித்தால் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.
- வாட்ஸ் ஆப் டிபி மற்றும் பிற சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசு கல்வி துறை என்று இலச்சினை (LOGO) வைத்து வரும் மெசேஜ்களை நம்பவேண்டாம்.
- ட்ரூகாலர் ஆப்பில் கல்வி உதவித்தொகை தருவதாக வரும் பெயர்களை உண்மையென நம்ப வேண்டாம்.
- உங்களுக்கு போன் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களின் மொபைல் எண்ணை கேட்டால் கொடுக்க வேண்டாம்.
- கல்வி உதவித்தொகைக்காக பதிவு செய்ய ஆன்லைனில் வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்.
- கல்வி உதவித்தொகை சம்மந்தமான .apk அப்ளிகேஷன் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
- அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை தவிர்க்கவும்.
- உங்களது வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி இருப்புத்தொகை பற்றிய விபரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
- ஜிபே/ஃபோன்பே, யூபிஐ ஐடி விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
- அடையாளம் தெரியாத நபர்களால் அனுப்பப்படும் QR code-ஐ ஸ்கேன் செய்ய வேண்டாம்.
- QR code-ஐ ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு பணம் அனுப்ப மட்டுமே முடியும். ஒருபோதும் பணத்தைப் பெற முடியாது என்பதை எப்போதும் மனதில் கொள்ளவும்.
- ஏதேனும் இணையவழி மோசடி குற்றத்தில் பாதிக்கப்பட்டாலோ அல்லது அது தொடர்பாக சந்தேகம் எழுந்தாலோ உடனடியாக 1930 என்ற (Cyber Crime Help line) எண்ணில் உடனடியாக தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்”
என தெரிவித்துள்ளது.
மாணவர்களின் தகவல்கள் வெளியாவது எப்படி?
தனியார் கல்லூரி முதல்வரும், சைபர் கிரைம் குறித்த ஆராய்ச்சியாளருமான முனைவர் செளந்திரராஜன் பிபிசியிடம் பேசுகையில், “மாணவர்களின் கல்விக்கடன் மற்றும் கல்வி உதவிக்காக பெற்றோர் பல இடங்களில் முயற்சிக்கின்றனர். அதேபோல், சேர்க்கைக்காகவும் பல்வேறு கல்லூரிகளை தேடுகின்றனர். வங்கிகள், கடன் வழங்கும் நிறுவனங்கள், கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தங்களது முழு தகவல்களையும் அளிக்கின்றனர். இதில் எதோவொரு வகையில் மாணவர்களின் தொடர்பு எண்கள், விவரங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.” என்றார்.
முன்பு கியூஆர் கோடு இல்லாதபோது உள்நுழைகையில் எழுத்துப்பிழை உள்ளதா என கவனிப்போம் என்றும், ஆனால் இப்போது கியூஆர் கோடை ஸ்கேன் செய்யும்போது நேராக உள்ளே செல்வதால் அதன் யூஆர்எல்லை நாம் படிப்பதில்லை என்றும் கூறுகிறார்.
“அது ரி-ரூட்டிங் செய்யப்படும்போது எந்த வலைதளத்துக்கு செல்கிறது என தெரிவதில்லை. மோசடி இணையதளங்கள் பார்ப்பதற்கு அரசு இணையதளம் போல இருக்கும். அதில் சில எழுத்து மாற்றங்கள், பிழைகள் இருக்கும். இதை நாம் கவனிக்க தவறுகிறோம். இதை நாம் விழிப்புணர்வுடன் அணுக வேண்டும்.” என கூறினார்.
அரசு சார்பில் என்னென்ன கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது, பெறும் வழிமுறைகள் என்ன என்பதை அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும் இதேபோல் தான் சாலை விதிமீறல் எனக்கூறி நடைபெறும் மோசடியும் நிகழ்கிறது என்றும் கூறுகிறார் அவர்.
“தவறான லிங்க்குகளை கிளிக் செய்யக்கூடாது. கியூஆர் கோடு வந்த பின்பு மோசடிகள் 60 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. தவறான கியூஆர் கோடை கிளிக் செய்தாலும் அதுசெல்லும் இணைய முகவரி httpயா அல்லது httpsஆ எனப்பார்க்க வேண்டும். Https என்றால் பாதுகாப்பான இணையதளம் என புரிந்துகொள்ளலாம். அதேபோல், குறிப்பிட்ட இணையதளத்தில் பூட்டு குறியீடு இருந்தால் அது பாதுகாப்பானது. இந்த இரண்டு விஷயங்களை கவனித்தால் போதும்.” என்றார்.
‘மாணவர்களின் விபரங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’
பள்ளிக் கல்வித்துறை பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சந்திரசேகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இதுபோன்ற எந்த திட்டமும் அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை. பெற்றோரின் விழிப்புணர்வின்மையே இதுபோன்ற மோசடிகளுக்குக் காரணம். மாணவர்களின் தகவல்கள் எவ்வாறு வெளியானது என்பது தெரியவில்லை. பள்ளி மாணவர்களின் தகவல்களை வெளிநபர்களுக்கு கொடுக்கக் கூடாது என கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டும்.” என்றார்.
இந்த விவகாரத்தில் மோசடி நபர்களை பிடித்து விசாரித்தால் தான் யாரிடம் இருந்து தகவல் சென்றது எனத் தெரியவரும் எனவும் மாணவர்களிடம் தங்களது தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார் அவர்.
“பள்ளிகளில் நடைபெறும் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகளில் அனைத்து மாணவர்களும் இதுகுறித்த விழிப்புணர்வு வழங்க வேண்டும்.” என்றார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் கூறுகையில், “அரசு சார்பில் இதுபோன்று எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இதுபோன்ற மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும்” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு