ஊட்டியில் விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் பிடிபட்ட விவகாரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது கஞ்சாவை விட, போதை மாத்திரைகள் அதிகம் புழங்குவதாகக் கூறும் காவல்துறையினர், இவர்களுக்கு விநியோகிப்பவர்களைப் பிடிப்பதற்காக, தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சிறப்புப் படையினர் புனே வரை சென்று, பலரை கைது செய்துள்ளனர்.
பெற்றோர் மற்றும் கல்லுாரி ஆசிரியர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இல்லாததால்தான் மாணவர்கள் தவறான திசைக்குத் திரும்புவதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உதகையில் 3 நாட்களுக்கு முன்பு, வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, இளைஞர் ஒருவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். 21 வயதே ஆன அந்த இளைஞரை விசாரித்தபோது, அவர் கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லுாரியில் படிக்கும் மாணவர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் (பெயர் வெளியிட அவர் விரும்பவில்லை), ”அந்த இளைஞனை விசாரித்தபோது அவருக்கு மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்றும், தன்னுடைய வழக்கமான செலவுகளுக்கு பெற்றோர் தரும் பணமே போதுமானதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.”
“ஆனால், ஒரு பெண்ணைக் காதலிப்பதால், அப்பெண்ணுக்கு சில பொருட்களை வாங்கித்தர பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காகவே கஞ்சா விற்றுள்ளார்.” என்றார்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது
எந்த போதைப் பழக்கமும் இல்லாத நிலையில், முதலில் இதைச் செய்வதற்கு பயந்த அந்த இளைஞர், சீனியர் மாணவர்கள் காட்டிய ஆசை வார்த்தையில் இதைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கஞ்சாவை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி, சிறு சிறு பொட்டலமாக மாற்றி ஒரு லட்ச ரூபாய் வரை விற்று வந்ததாகவும் அந்த மாணவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த மாணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இவருடைய எதிர்காலத்தைக் கருதி, சிறைக்கு அனுப்பாமல் பிணையில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர், உதகையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது, இரு மாவட்ட காவல் துறையினரை மட்டுமின்றி, கல்லுாரி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கோவை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், 8 பல்கலைக்கழகங்கள், 207 கல்லுாரிகள், 76 பொறியியல் கல்லுாரிகள், 6 மருத்துவக் கல்லுாரிகள், 36 மேலாண்மைக் கல்லுாரிகள் மற்றும் 20 ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் இருப்பதாக கோவை ஆவணப்புத்தகம் தெரிவிக்கிறது.
இவற்றில் படிக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில், பெரும்பாலானவர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சமீபமாக வெளிநாட்டு மாணவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
இப்படி வெளியே தங்கிப்படிக்கும் மாணவர்களைக் குறி வைத்தே போதைப் பொருட்கள் புழக்கத்தில் விடப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகர காவல் துறை எல்லையும், மாவட்ட காவல்துறை எல்லையும் பின்னிப் பிணைந்து இருப்பதால், கஞ்சா, போதைப் பொருட்கள் தடுப்பதில் மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்தே சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கோவை மாநகர காவல்துறையின் சார்பில் ‘மிஷன் கல்லுாரி’ என்ற திட்டம் துவக்கப்பட்டு, ‘போதைப் பொருட்கள் இல்லாத கோவை’ என்ற பெயரில் நுாற்றுக்கணக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள் உட்பட நுாற்றுக்கணக்கானவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
‘சீனியர்கள் விரிக்கும் வலையில் விழும் மாணவர்கள்’
கடந்த ஆண்டில், கோவை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனைகளில் கஞ்சா, போதை மாத்திரைகள், எல்.எஸ்.டி., போதை ‘ஸ்டாம்ப்’ மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்கள் வைத்திருந்த, விற்பனை செய்த 7 கல்லுாரி மாணவர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட காவல்துறை சார்பில், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு, கஞ்சா, போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
கல்லுாரிகளில் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த, கல்லுாரி நிர்வாகிகளுக்காக கடந்த ஆண்டில் மாநகர காவல்துறை சார்பில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பேசிய அப்போதைய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ”கஞ்சா விற்கும் நபர்களை போலீசார் எளிதில் பிடித்து விடுவர். அதனால்தான் மாணவர்களை வைத்து கஞ்சாவை விற்கின்றனர். மாணவர்கள் இந்த செயலில் ஈடுபடும்போது, போலீசாரால் மட்டும் அவர்களைக் கண்டறிவது சிரமம்.” என்று பேசினார்.
கல்லுாரி நிர்வாகங்கள், பெற்றோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் என எல்லாத் தரப்பினரும் ஒத்துழைத்தால் மட்டும்தான், மாணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்தையும், விற்பனை செய்வதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.
ஆனால் அந்த கூட்டம் நடத்திய பிறகு கல்லுாரி நிர்வாகங்கள் தரப்பிலிருந்து பெரியளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
கோவை நகரில் கல்லுாரி மாணவர்களிடம் போதைப் பழக்கத்தைத் தடுக்கவும், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். அப்போது விசாரணையில் தெரிந்த விஷயங்களை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்தார்.
”கல்லுாரிகளில் சீனியர்களாக இருக்கும் மாணவர்களில் சிலர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக இருப்பார்கள். அவர்களில் பலர், ஒரு கட்டத்தில் கஞ்சா விற்பனையாளர்களாக மாறி விடுகிறார்கள். கல்லுாரியை விட்டு வெளியே செல்லும் முன் அதே கல்லுாரியிலுள்ள ஜூனியர்கள் சிலரை இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கி, ஆசை காண்பித்து, காசு கொடுத்து அவர்களையும் விற்பனையாளர்களாக மாற்றி விடுகின்றனர்.”
“அவர்கள் வெளியே சென்றபின், இந்த விற்பனையைத் தொடரச் செய்கின்றனர். அதில் இரு தரப்புக்கும் பங்கு செல்கிறது என்பதைக் கண்டறிந்தோம்.” என்று தெரிவித்தார் ஸ்டாலின்.
‘கூரியர் மூலமாக கோவை வரும் கஞ்சா’
வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே விளையும் ‘OG’ எனப்படும் உயர்தரமான கஞ்சாதான், கோவையில் அதிகமாக புழக்கத்தில் இருந்ததாகத் தெரிவித்த ஸ்டாலின், அங்கேயிருந்து கூரியர் மூலமாக இவற்றை வாங்கி அதைப் பிரித்து விற்பனைக்கு அனுப்புவது தெரியவந்ததாகவும் கூறினார். இந்த கஞ்சா விற்பனையில் 6 மடங்கு லாபம் கிடைப்பதாகவும், அதை வைத்து புதிய பைக், செல்போன் வாங்குவதுடன், அளவுக்கு அதிகமாக செலவு செய்வதையும் இந்த மாணவர்கள் வழக்கமாக்கியுள்ளனர் என்று கூறினார்.
சமீபகாலமாக, கஞ்சாவை விட போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்தார்.
போதை மாத்திரை மட்டுமின்றி, ‘மெத்தபெட்டமைன்’ உள்ளிட்ட சிந்தடிக் போதை பொருட்களை சிலர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகக் கூறும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சில வாரங்களுக்கு முன், தொண்டாமுத்துார் பகுதியில் ‘மேஜிக் மஸ்ரூம்’ எனப்படும் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.
உதகையில் 3 நாட்களுக்கு முன் கஞ்சா விற்கும்போது கோவை கல்லுாரி மாணவர் பிடிபட்ட அதே நாளில் கோவை ரயில் சந்திப்பில் 3 இளைஞர்களை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளைக் கைப்பற்றினர்.
கோவையிலுள்ள மாணவர்களுக்கு விற்கப்படும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பெரும்பாலும், வட மாநிலங்களில் இருந்து வருவதை வருவதை உறுதிப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
”இதற்காகவே வடகிழக்கு மாநிலங்களில் ஏதாவது ஒரு பணியை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து கஞ்சாவை, கூரியர்களில் அனுப்பிய சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார் காவல்துறை அதிகாரி ஸ்டாலின்.
”வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்கள் உள்ளிட்ட எல்லா மாணவர்களும் கலந்து படிக்கும் பெருநகரங்களில்தான், இத்தகைய போதை மாத்திரைப் புழக்கம் அதிகமாகவுள்ளது. கல்லுாரி விடுதிகளில் ஓரளவுக்குக் கண்காணிப்பு இருப்பதால் அங்கு புழக்கமிருக்க வாய்ப்பு குறைவு. வெளியில் தங்கிப் படிக்கும் சில மாணவர்களிடம்தான் விதவிதமான போதை பொருள்கள் புழங்குகின்றன.” என்று அவர் தெரிவித்தார்.
புனே சென்று போதை கும்பலைப் பிடித்த காவல்துறை
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விட அவர்களுக்கு விநியோகிப்பவர்களைப் பிடிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதற்காக சிறப்புப் படைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறும் அவர், புனே வரை சென்று கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறினார்.
”நூறு போலீசாரை வைத்து, மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் சோதனைகளை நடத்துகிறோம். செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் 1000 வீடுகளில் சோதனை நடத்தினோம். அதேபோல, நகரில் திறந்த வெளிகளில் கஞ்சா, போதை பயன்படுத்துவது அதிகமாக இருப்பதால், பீட் போலீசாரை வைத்து இத்தகைய இடங்களில் யாரும் கூடாத வகையில் உடனுக்குடன் அகற்றி வருகிறோம்.” என்றார்.
மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுக்கும், குடியிருப்புவாசிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டம் குறித்தும் அவர் கூறினார்.
”ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல்துறை நண்பர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கவுன்சிலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கொண்டு வார்டு கமிட்டி அமைத்து, வாரந்தோறும் புதன்கிழமை விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.”
“மாணவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடும்போது கவனிக்க வேண்டியவை குறித்து உணர்த்துவதுடன், காவல்துறை சார்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சியே இந்த வாராந்திர கூட்டம்.” என்றார் சரவணசுந்தர்.
இதேபோல, மாவட்ட காவல்துறை சார்பில் கல்லுாரிகளில் ‘ஆன்டி டிரக் கமிட்டி’யை வலுப்படுத்த இருப்பதாகக் கூறுகிறார் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்.
தமிழகம் முழுவதும் கல்லுாரி மாணவர்கள் மத்தியில் கட்டற்ற விதமாக போதை புழங்கி வருவதாக கூறும் ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு உதவி ஆணையர் ரத்தினசபாபதி, “இதைத் தடுக்கும் அரசு நடவடிக்கைகளில் வேகமும் விவேகமும் இல்லை” என்கிறார்.
‘இயல்பான கண்காணிப்பும் சரியான வழிகாட்டுதலுமே தீர்வு’
ஆடம்பரச் செலவு, போதை போன்ற ஏதோ ஒரு தேவைக்காகவே இத்தகைய சட்டவிரோத செயல்களில் கல்லுாரி மாணவர்கள் ஈடுபடுவதாக கூறும் காவல்துறை அதிகாரி ஸ்டாலின், “இதைச் செய்யும்போது, சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும், எதிர்காலத்தில் எந்த வேலையும் கிடைக்காது, அவப்பெயர் ஏற்படும் என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை” என்கிறார்.
இதற்கு கல்லுாரி மாணவர்களின் வயதும், வாழ்வியல் சூழலும்தான் காரணமென்று கூறுகிறார் மனநல மருத்துவர் மோனி.
கோவை மாநகர காவல்துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்வுகளில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளம் வயதில் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு உளவியல்ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகிறார் மருத்துவர் மோனி.
போதைக்கு அடிமையான தந்தை, பிரிந்து விட்ட பெற்றோர், கற்பதற்குத் தடையாக இருக்கும் வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் மாணவர்கள் பலர் இத்தகைய போதைக்கு அடிமையாவதாகக் கூறுகிறார் அவர்.
”முன்பிருந்த சமுதாயக் கட்டமைப்பில், ஒவ்வொரு மாணவனுக்கும் ஏதாவது ஓர் ஆசிரியர், பெரியப்பா, சித்தப்பா, தாய்மாமன், பக்கத்து வீட்டுக்காரர் என யாராவது ஒருவர் வாழ்வின் வழிகாட்டியாக இருப்பார்கள். வீட்டில் தாய், தந்தை இவர்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டாலும் அவர்கள் இவர்களை வழிநடத்தினார்கள்.”
“இப்போதுள்ள மாணவர்களை சமூக ஊடகங்கள் வழி நடத்துவதால் அவர்கள் எளிதில் தவறான திசையைத் தேர்ந்தெடுத்து, எதிர்காலத்தைத் தொலைக்கின்றனர்.” என்றார் மோனி.
குழந்தைகளுக்கு அதீத சுதந்திரம், பணம் கொடுப்பதும், போதையில் வீழ்வதற்குக் காரணமாக இருப்பதாகக் கூறும் மோனி, “அதீத சுதந்திரம் போலவே, அதீத கட்டுப்பாடும் தவறாக வழி நடத்திவிடும். கண்காணிப்பதே தெரியாமல் இயல்பாக அவர்களிடம் பேசி, கண்காணித்து வழிநடத்துவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு