• Tue. Oct 22nd, 2024

24×7 Live News

Apdin News

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் மூவர் கைது – என்ஐஏ நடவடிக்கை | NIA officials arrest 3 person in the connection of coimbatore car blast

Byadmin

Oct 21, 2024


கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, மேலும் மூவரை என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று (அக்.21) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்தி உயிரிழப்பு ஏற்படுத்த இக்கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது. கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உயிரிழந்த ஜமேஷா முபினும் ஒரு குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விசாரணை தீவிரம்: கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப் பத்திரிகை மற்றும் துணை குற்றப்பத்திரிகை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் மேலும், சிலருக்கு தொடர்பு இருப்பது அதிகாரிகளின் சமீபத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைப் பிடித்து விசாரணை நடத்துவதற்காக என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையில் இன்று (அக்.21) மாலை கோவைக்கு வந்தனர். போத்தனூர், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த அபு ஹனிபா, பயாஸ் ரகுமான், சரண் மாரியப்பன் ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் சென்றனர். இவர்களையும் சேர்த்து இதுவரை இவ்வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள என்.ஐ.ஏ கிளை அலுவலகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கமிஷனுக்காக நிதியுதவி: இதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தற்போது கைது செய்யப்பட்ட மூவரும் மேற்கண்ட சம்பவத்துக்கு ஒருவரிடம் இருந்து கமிஷன் தொகைக்காக நிதி திரட்டி தந்தது தெரியவந்தது. அபுஹனிபா கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். அங்கு உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள், ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தத்தில் தீவிரமாக இருந்தனர். தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஐஎஸ் இயக்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த அபு அல்ஹசன் அல்ஹாஸ்மி முன்பு தாக்குதல் நடத்துவதாக உறுதியேற்றார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ எனக் கூறப்பட்டுள்ளது.



By admin