[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]
கோவை நகரிலுள்ள பெரியகடை வீதி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளரின் அறைக்குள் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இறந்து போன நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும், காவல் பணியில் இருந்த காவலருக்குத் தெரியாமல் மாடிக்குச் சென்று உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், இது லாக்கப் மரணம் இல்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர், தற்கொலை செய்வதற்கு முன்பாக அப்பகுதியில் நடமாடியது தொடர்பான காட்சிகளை சிசிடிவி மூலமாகக் கண்டறிந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அவர் மாடிக்குச் சென்றதை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.
இந்தநிலையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக, உதவி ஆய்வாளரும், காவலர் ஒருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை நகரின் மையப்பகுதியான பெரியகடை வீதி–வைசியாள் வீதி சந்திப்புப் பகுதியில், கோவை மாநகர காவல்துறைக்குட்பட்ட பெரியகடை வீதி (பி 1) காவல் நிலையம் உள்ளது. சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தில் தரை தளம் மற்றும் இரு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் உதவி ஆய்வாளர் அறை ஒன்று உள்ளது.
இன்று (ஆகஸ்ட் 6) காலை 8 மணியளவில் அந்த அறைக்கு காவலர் செந்தில்குமார் சென்று பார்த்தபோது, அறை உள்ளே பூட்டப்பட்டிருந்துள்ளது. தட்டிப்பார்த்தும் திறக்காத நிலையில், கதவை உடைத்துப் பார்த்தபோது, ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என காவல்துறை கூறுகிறது.
காவல்துறை அளித்த விளக்கம் என்ன?
நகரின் முக்கியப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒருவர் இறந்து கிடந்த தகவல், உடனடியாக காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
மீண்டும் ஒரு ‘லாக்கப் மரணம்’ என்று பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
”நேற்று (ஆகஸ்ட் 5) இரவு, பி 1 காவல் நிலையத்தில், காவலர் செந்தில்குமார் பணியில் இருந்த போது, 11.15 மணிக்கு ஒருவர் பதற்றமாக ஓடிவந்துள்ளார். தன்னை 25 பேர் துரத்தி வருவதாகக் கூறியுள்ளார். காவலர் செந்தில்குமார் வெளியே சென்று பார்த்துள்ளார். அங்கே யாருமில்லை என்பதால், மறுநாள் காலையில் வருமாறு அனுப்பியுள்ளார்.
அதன்பின் தொலைபேசி அழைப்பை எடுப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த நபர், அவருக்கு தெரியாமல் மாடிப்படியேறி மேலே சென்றுள்ளார். அங்கே உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.” என்று தெரிவித்தார் சரவணசுந்தர்.
மேலும், ”இது லாக்கப் டெத் இல்லை. காவல் நிலையத்தில் யாருக்கும் தெரியாமல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்து போன நபரின் பாக்கெட்டில் இருந்த சிறு டைரியை வைத்து அவருடைய பெயர் ராஜன் என்ற அறிவொளி ராஜன் (வயது 60) என்பதும், பேரூர் அருகேயுள்ள ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.” என்றும் காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.
அவர் காவல் நிலையத்துக்கு வருவதற்கு முன்பாக, அவரின் செயல்பாடுகள் குறித்து, டவுன்ஹால், பெரியகடை வீதி, வைசியாள் வீதி மற்றும் ஒப்பணக்கார வீதி ஆகிய பகுதிகளில் இருந்த பல்வேறு சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில் இரவு 11:04 வது நிமிடத்திலிருந்து 20 நிமிடங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து, ராஜன் காவல் நிலையம் வருவது வரையிலான பல காட்சிகள் பதிவாகியிருந்தன.
இரவு 11:19 மணிக்கு, அவர் பெரியகடை வீதி காவல் நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்த காவலர் செந்தில்குமாரிடம் பதற்றத்துடன் ஏதோ சொல்கிறார். அவர் வெளியே சென்று பார்த்துவிட்டு அவரிடம் பேசி அனுப்பி வைக்கிறார்.
அவரை அனுப்பிவிட்டு செந்தில்குமார் காவல் நிலையத்திற்குள் வந்து மேசையில் எதையோ தேடிக் கொண்டிருக்கும்போது, வெளியே சென்ற அந்த நபர், காவல் நிலையத்தின் முகப்பிலுள்ள மாடிப்படியின் வழியாக மேலே ஏறிச்செல்வதும் லேசான வெளிச்சத்தில் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அப்போது இரவு 11:24 மணி என்பதைக் குறிப்பிடும் போலீசார், அதற்குப் பின் மேலே யாரும் செல்லவில்லை என்கின்றனர்.
இரவில் உதவி ஆய்வாளர் அறையில் யாருமில்லாத நிலையில், அந்த அறையை ஏன் பூட்டவில்லை, நகரின் மையப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் இரவில் ஒரே ஒரு காவலரைத் தவிர வேறு யாருமே இல்லாததன் காரணமென்ன என்று காவல் ஆணையரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுதொடர்பாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
‘இறந்த நபர் மீது எந்த வழக்குகளும் இல்லை’
இதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் நாகராஜ், காவலர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவிட்டார். இறந்த அறிவொளி ராஜனின் உடலை, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய காவல் ஆணையர் சரவணசுந்தர், ”கடந்த 3 நாட்களாக அவர் தன்னை யாரோ துரத்துவதாக அவருடைய வீட்டிலும் கூறியிருப்பதாக, அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதே விஷயத்தைத் தான் அவர் நேற்றிரவு காவலர் செந்தில்குமாரிடமும் கூறியுள்ளார். அவர் வெளியே வந்து பார்த்தபோது யாருமில்லை. அவரிடம் பேசி, மறுநாள் காலையில் வரச் சொல்லிவிட்டு அனுப்பிய பின், அவருக்குத் தெரியாமல் தான் மேலே ஏறிச் சென்றுள்ளார்.” என்றார்.
இறந்த நபர் மீது எந்த காவல் நிலையத்திலும் எந்த வழக்குகளும் பதிவாகியிருப்பதாகத் தெரியவில்லை என்று பெரியகடை வீதி போலீசார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அவருடைய இறப்புக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று தெரியவருமென்று ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.
இன்று காலையில் பிரேத பரிசோதனை நடந்த நிலையில் மதியத்திற்குப் பின், அவரின் உடன் பிறந்த அக்கா வீரமணி, மாமா பாபு மற்றும் உறவினர்கள் சிலர், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்களிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த வீரமணி, ”என் தம்பி சென்ற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து என்னை யாரோ அடிக்க வருகிறார்கள், போலீஸ் ஸ்டேஷனில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் அவனை சத்தம் போட்டேன். மூன்று நாளாகவே அவனுக்கு மனநிலை சரியில்லை. மதுவுக்கு அடிமையாகி, இப்படி ஆனதாக நான் நினைத்தேன். நேற்று எங்கே போனான் என்பதே தெரியவில்லை. நீதிமன்றத்திற்குப் போய் அவன் பிரச்னை செய்ததும், ஸ்டேஷனுக்கு வந்து புகார் செய்ததும் போலீஸ் சொல்லியே தெரியும்.” என்றார்.
‘காவல் நிலையங்களின் பாதுகாப்புக்கு இது ஓர் எச்சரிக்கை’
இறந்த அறிவொளி ராஜனின் சட்டை கிழிந்திருந்தது குறித்தும், அவருடைய காலில் கட்டுப்போட்டிருந்தது குறித்தும் அவரின் மாமா பாபு கூறுகையில், ”சட்டை எப்படி கிழிந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவன் காலில் 3 மாதங்களாகவே காயம் இருந்தது. பழனிக்கு பாதயாத்திரை போகும்போது ஏற்பட்ட விபத்தில் அவன் காலில் காயம் ஏற்பட்டது. அது ஆறவேயில்லை. அவனுக்கு மனநிலை சரியில்லாமல் போய், தற்கொலை செய்து கொண்டதாகவே நாங்கள் நினைக்கிறோம். யார் மீதும் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.
தற்போது இவரின் மரணம் தொடர்பாக தற்கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
”இது தற்கொலையாக இருந்தால் இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததற்காக போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கையைத் தவிர வேறு எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க இயலாது. ஆனால் இந்த சம்பவத்தை, காவல் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.” என்றார் மூத்த குற்றவியல் வழக்கறிஞர் சண்முகம்
மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப காவலர்கள் எண்ணிக்கை இல்லை என்பது இப்போது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை என்று கூறும் வழக்கறிஞர் சண்முகம், விஐபிக்கள் பாதுகாப்பு, வேறு பணிகள் என்று பெரும்பாலான காவலர்களை வெளியில் அனுப்பிவிட்டால் காவல் நிலையத்தில் போதிய காவலர்களின்றி யார் வேண்டுமானாலும் நுழைய முடியும் என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது என்கிறார்.
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு