பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கோவை கிழக்கு புறவழிச்சாலைக்கு பல்வேறு கிராமங்களில் அளவீடு செய்து குறியிடும் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு செயல்படுத்தாத இத்திட்டத்தை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க திட்டமிடுவதால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்மொழிந்த திட்டத்துக்கு மாற்றாக புதிய அளவீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமென்று தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ள கோவை மாநகரம் 254 சதுர கி.மீ. பரப்புடையது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட கோவை மாஸ்டர் பிளான்படி, இதன் திட்டப்பகுதி 1,531 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோவை நகருக்கென்று இதுவரை முழுமையான சுற்றுச்சாலை (ரிங் ரோடு) எதுவுமில்லை.
சேலம்–கொச்சி தேசிய நெடுஞ்சாலையின் (என்எச் 544) ஒரு பகுதியாகவுள்ள எல் அண்ட் டி புறவழிச்சாலை என்றழைக்கப்படும் 27 கி.மீ. புறவழிச்சாலை மட்டுமே இந்த நகருக்கான ஒரேயொரு புறவழிச்சாலையாக உள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசின் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 32.4 கி.மீ. துாரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவற்றைத் தவிர்த்து, சேலம்–கொச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள நீலம்பூரில் துவங்கி, கோவை–சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில், கிழக்கு புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.
இந்த மூன்று புறவழிச்சாலைகளும் இணைந்தால் மட்டுமே, கோவை நகருக்கென்று முழுமையான ஒரு சுற்றுச்சாலை கிடைக்குமென்று கோவை தொழில் அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
பட மூலாதாரம், NHAI
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்மொழிந்த திட்டம்
ஆனால், பல ஆண்டுகளாகியும் கிழக்கு புறவழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த எந்தவொரு முன்னெடுப்பும் நடக்கவில்லை.
கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பின், கோவை-கரூர் பசுமை வழிச்சாலை திட்டத்துடன் சேர்த்து, ஒருங்கிணைந்த திட்டமாக (Combined Project) கோவை நகரின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வகையில் புதிதாக புறவழிச்சாலை திட்டமிடப்பட்டது.
கோவை-திருச்சி சாலையிலுள்ள காரணம்பேட்டையிலிருந்து கரூர் வரை 100 கி.மீ., துாரத்துக்கு ஒரே நேர்கோட்டில் பசுமை வழிச்சாலை, அதே காரணம்பேட்டையிலிருந்து மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் வரை 81 கி.மீ. புதிய புறவழிச் சாலையுடன் 181 கி.மீ., துாரத்துக்கு ஆறு வழிச்சாலை அமைக்கப்படும் என்று கூறி அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து, விரிவான திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
பட மூலாதாரம், NHAI
இந்த பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து, 2,957 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தைக் கைவிட்டதாக காரணம் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்திக்கொடுக்கும்பட்சத்தில், சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாராக இருப்பதாக ஆணைய அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
அந்த பசுமை வழிச்சாலையுடன் இணைந்த புறவழிச்சாலைத் திட்டமே புதிய கிழக்கு புறவழிச்சாலை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டில், இதற்காக தனியாக முன்மொழிவு அனுப்பப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், அதற்குப் பின் அந்த திட்டம் அடுத்தகட்டத்துக்கு நகரவே இல்லை என்று தெரிகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பிபிசி தமிழ் பெற்ற தகவல்களின்படி, ஆணையம் முன்மொழிந்த கிழக்கு புறவழிச்சாலை மொத்தம் 81 கி.மீ. தூரமும், 45 மீட்டர் அகலமும் உடையது. ஆறு வழிச்சாலை மற்றும் 4 வழி சேவைச்சாலைகள் (சர்வீஸ் ரோடு) கொண்ட இந்த புறவழிச்சாலையின் திட்ட மதிப்பு ரூ.3,750 கோடியாகும்.
கோவை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.81) துவங்கும் இந்த புறவழிச்சாலை, கோவை–பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.544), கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.83), கோவை–அவிநாசி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.544), கோவை–சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.948) மற்றும் கோவை–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.181) ஆகிய 6 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கான நில எடுப்பு உத்தரவுக்கே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்னும் ஒப்புதல் தரவில்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்ற தகவலால் தெரியவந்துள்ளது.
இந்நிலையில்தான், கடந்த சில வாரங்களாக திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பல்லடம் மற்றும் அன்னூர் வட்டாரங்களில், கிராமப்பகுதிகளில் விவசாய நிலங்களிலும், கட்டடங்களிலும் புதிய சாலைக்கான அளவீடுகளை மேற்கொள்ளும் பணியாளர்கள், அதற்கான குறிகளையிடும் பணியை (Marking) மேற்கொள்கின்றனர். அவர்களிடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விசாரித்தபோது, கிழக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான அளவீடு மேற்கொள்ளும் பணி என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இவ்வாறு குறியீடு வரையப்பட்டுள்ள பெரும்பாலான இடங்கள், விவசாய நிலமாக இருப்பதால், தங்களின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, விவசாயிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பல்வேறு விவசாய அமைப்பினரும், கிராமத்து மக்களும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களிடம் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். கோவை மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்திலும் மிகக்கடுமையாக தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர். இதற்காக பல்வேறு கட்சிகள், கட்சி சார்பற்ற விவசாய அமைப்புகள் இணைந்து கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பையும் புதிதாகத் துவக்கி, பகுதிவாரியாக கூட்டங்களை நடத்திவருகின்றனர்.
கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆணையத்தை விவசாயிகள் அணுகியுள்ளனர். அதற்கு அங்குள்ள அதிகாரிகள், இந்த அளவீடு செய்யும் பணியை ஆணையம் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை திட்ட இயக்குநர் செந்தில்குமார், ”கோவை–கரூர் பசுமை வழிச்சாலைத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த திட்டமாக கிழக்கு புறவழிச்சாலை திட்டமிடப்பட்டது. அது காரணம்பேட்டையிலிருந்து காரமடை அருகேயுள்ள பிளிச்சி வரை செல்வதாக வடிவமைக்கப்பட்டது. அந்த திட்டத்துக்கு நிலமெடுப்புப் பணிக்கு முன்மொழியப்பட்டது. ஆனால் இப்போது நடக்கும் அளவீடு மற்றும் குறியிடும் பணிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதை யார் செய்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை.” என்றார்.
மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த முடிவு
கோவை மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில், இத்திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் பலரும் பேசியபோது மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் இதே பதிலைக் கூறியுள்ளனர்.
திருப்பூரில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தபோது, அங்குள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் விசாரித்தபோதுதான், இந்த திட்டத்தை தற்போது தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மேற்கொள்ளவுள்ள தகவல் தெரியவந்ததாகக் கூறுகின்றனர் விவசாயிகள்.
மத்திய அரசு நிறைவேற்ற முன் வராத இத்திட்டத்தை, தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை ஆணையம் எடுத்துச் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதே விவசாய அமைப்பினரின் கேள்வியாகவுள்ளது.
நிலமெடுத்து ஆணையத்திடம் கொடுத்தால், ஆணையம் சாலையை மட்டும் அமைத்து சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்யும் என்பதால் இரண்டையும் தாங்களே செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தில், கிழக்கு புறவழிச்சாலையை கையில் எடுத்திருக்கலாம் என்று விவசாயிகள் சந்தேகிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத்தலைவரும், கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான சுரேஷ், ”இந்த திட்டத்தை வடிவமைத்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அவர்களே இதைச் செய்யாதபோது, தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை ஆணையம் இதைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதற்கு நிலமெடுக்கவே தற்போது குறியிடும் பணி நடப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.” என்றார்.
”இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, இரு மாவட்டங்களிலும் 1,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். இதில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகள் நிறைய அழிக்கப்படும். நன்செய், புன்செய் சேர்த்தால் 700–800 ஏக்கர் நிலங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மீதி மட்டுமே தரிசு நிலங்களாகவும் பிற பயன்பாட்டிலும் இருக்கின்றன.” என்றும் அவர் மேலும் விளக்கினார்.
கிழக்கு புறவழிச்சாலைத் திட்டத்துக்கு நிலமெடுப்பதற்கு அளவீடு செய்து குறியிடும் பணியை, கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் ஆலோசனை நிறுவனமே மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கான நிலமெடுப்பு குறித்து இதுவரை எந்த விதமான நில எடுப்பு உத்தரவையும் இரு மாவட்ட நிர்வாகங்களுக்கும் வரவில்லை என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர். இதே தகவலை பிபிசி தமிழிடமும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அதனால் இந்த திட்டம் குறித்த ஆதார ஆவணங்கள் எதுவுமில்லாத நிலையில், சட்டப்பூர்வமான போராட்டத்தைத் துவக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் கோவை தொழில் அமைப்புகள்
அதேநேரத்தில், கொடிசியா, கோவை நெக்ஸ்ட் உள்ளிட்ட கோவையின் முக்கியமான தொழில் அமைப்புகள் சார்பில், மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து இந்த கிழக்கு புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைத் திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர்.
கோவை நெக்ஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ”தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலேயே புதிய சாலைகள் அமைக்க நிலமெடுக்க எதிர்ப்பு இல்லை. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட விவசாயம் அதிகம் நடக்கும் பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்க செழிப்பான விவசாய நிலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் விவசாயமே நடக்காத பகுதிகளிலும் நிலத்தை எடுப்பதற்கு எதிராக சில விவசாய அமைப்புகள் போராடுகின்றன. சந்தை மதிப்புக்கேற்ற இழப்பீடு கேட்பது நியாயம். நிலத்தையே எடுக்கக்கூடாது என்றால் நகரின் வளர்ச்சியே கேள்விக்குறியாகிவிடும்.” என்கிறார்.
”ஐதராபாத்தில் வெளிவட்டச்சாலையும், துாரமாக விமான நிலையம் அமைத்தபோதும் எல்லோரும் அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்தனர். இன்றைக்கு அந்த நகரின் வளர்ச்சிக்கு இவையிரண்டும்தான் பெரும் உறுதுணையாக இருந்துள்ளன. அதேபோல கோவைக்கு புறவழிச்சாலைகள் முக்கியமாக கிழக்கு புறவழிச்சாலை மிக அவசியம். நகரிலுள்ள அவினாசி சாலையில் நில மதிப்பு அதீதமாகவுள்ளது. அங்கேயே நிலம் கொடுக்கும்போது, நகருக்கு 20 கி.மீ. துாரத்தில் நிலமெடுப்பதை எதிர்ப்பதை ஏற்கவே முடியாது.” என்கிறார் சதீஷ்.
இந்த கருத்தை மறுக்கும் விவசாய அமைப்பினர், கிழக்கு புறவழிச்சாலை திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளில், 13 இணைப்புச்சாலைகள் இருப்பதால் அவற்றை அகலப்படுத்தினாலே போதுமானது என்கின்றனர்.
நகரப் பகுதிகளுக்குள் பாலங்களை அமைத்துக் கொண்டு, மற்ற பகுதிகளில் தற்போதுள்ள சாலையை அகலப்படுத்தினாலே போதுமென்பது இவர்கள் தரும் ஆலோசனையாகவுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் பழனிச்சாமி, ”சேலம்–கொச்சி தேசிய நெடுஞ்சாலையே 150 அடி அகலத்தில் இருக்கும்போது, இந்த புறவழிச்சாலையை 65 மீட்டர் அதாவது 213 அடி அகலத்தில் திட்டமிட்டுள்ளதாக நில அளவை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். அந்தளவுக்கு தேவையே இல்லை. இப்போதுள்ள சாலைகளை அகலப்படுத்தினாலே இன்னும் 20 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது.” என்கிறார்.
கோவை மாவட்ட பாஜக பொதுச்செயலாளரும், கிழக்கு புறவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான சத்தியமூர்த்தி, ”சாலை வருவதால் நில மதிப்பு கூடும் என்கின்றனர். ஆனால், தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்தவர்களால் எப்படி அதை விட்டு வெளியேற முடியும்.” என்கிறார்.
ஆரம்ப நிலையிலேயே இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அளவீடு செய்யும் பணி குறித்து தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமைப்பொறியாளர் தேவராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
இதுபற்றி விளக்கிய அவர், ”காரணம்பேட்டையிலிருந்து பிளிச்சி வரை புதிய புறவழிச்சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்மொழிந்த திட்டமில்லை. தற்போது ஆலோசனை நிறுவனம் அளவீடு செய்து, சாத்தியக்கூறு குறித்து ஆராய்ந்து வருகிறது. அதன் அறிக்கையின் அடிப்படையில் திட்டம் வடிமைக்கப்படும்.” என்றார்.
நிலமெடுத்து தமிழக அரசே அந்த சாலையை அமைக்கும்பட்சத்தில், அந்த சாலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுமா என்று அவரிடம் கேட்டதற்கு, ”அதுபற்றி இப்போது முடிவு செய்ய இயலாது. இது ஆரம்ப கட்டம்தான். சாலை அமைப்பது, சுங்கச்சாவடி அமைப்பது ஆகியவற்றை அரசுதான் முடிவு செய்யும்.” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு