கோவை: சங்கனூர் ஓடையில் வீடு இடிந்து விழுந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை டாடாபாத் ஆறுமுக்கு பகுதியை அடுத்துள்ள அண்ணா நகரில், சங்கனூர் ஓடைக்கான தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ஒப்பந்த நிறுவனத்தினரால், ஓடையின் இருபுற ஓரங்களிலும் தரையிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு சுவர் கட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு நேற்று (ஜன.20) இரவு சுவர் அமைக்க தரைப்பகுதி தோண்டப்பட்டபோது, சுரேஷ் என்பவரின் தரைத்தளம், முதல் தளம் கொண்ட அடுக்குமாடி வீட்டின் அஸ்திவார தூண்களை, தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த நிறுவனத்தினர் இடித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அந்த வீட்டின் சுவரில் விரிசல் விழுந்து சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து சிறிது நேரத்தில் சுரேஷின் அடுக்குமாடி வீட்டுக் கட்டிடம் பின்பக்கமாக சரிந்து ஓடையில் விழுந்தது. சுரேஷின் வீட்டை ஒட்டியுள்ள லட்சுமணராஜ் மற்றும் தனலட்சுமி ஆகியோரது வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தது.
சுவருக்காக குழி தோண்டப்படுவதால், மேற்கண்ட சுரேஷ் தனது குடும்பத்தினருடன் மாற்று இடத்தில் தங்கியிருந்தார். மேலும், சத்தம் கேட்டவுடன் ரேணுகாதேவி, தனலட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டனர். அதனால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை. வீடு இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதைத் தொடர்ந்து கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையர் சுல்தானா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு இன்று (ஜன.21) வந்து விசாரித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் யாரும் செல்ல முடியாதவாறு போலீஸாரால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
சுரேஷின் மகள்கள் பூர்ணிமா, அம்பிகா ஆகியோர் கூறும்போது, ‘‘நாங்கள் தந்தை சுரேஷ், தாய் மீனா ஆகியோருடன் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். தந்தை ஆட்டோ ஓட்டுகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டை கட்டினோம். சுவர் அமைக்கும் பொழுது, வீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாது என முன்னரே மாநகராட்சியிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனத்தினர் திட்டமிட்டு, எங்களது வீட்டின் அஸ்திவார தூண்களை இடித்ததால், உறுதித்தன்மை இழந்து வீடு சரிந்துள்ளது. வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டே குழி தோண்டி சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்’’ என்றார்.
சித்தாபுதூரில் வீடுகள் ஒதுக்கீடு: இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ‘‘ஓடையை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி முன்னரே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. இவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். சுரேஷ், லட்சுமணராஜ், தனலட்சுமி ஆகியோருக்கு சித்தாபுதூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.