• Tue. Nov 4th, 2025

24×7 Live News

Apdin News

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்: தமிழகம் தழுவிய பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு | TN BJP Protest Announced for Condemns Coimbatore Sexual Harassment Issue

Byadmin

Nov 3, 2025


கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் புதன்கிழமை (நவ.5) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து கோவையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவையில் ஆண் நண்பருடன் காரில் இருந்த 19 வயது கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி என்றுதான் கூற வேண்டும்.

2013ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், கனிமொழியை அழைத்து சென்று மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார். கரூர் சம்பவத்துக்கும் இரவே சென்ற முதல்வர், கோவை சம்பவம் குறித்து இதுவரை அறிக்கை வெளியிடவில்லை.

கோவை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த உண்மையை வெளியே கூறினால் தனது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவில் பணியாற்ற காவல் துறையினர் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து கோவை மாவட்டத்துக்கு பணி இடமாறுதல் பெற வேண்டிய நிலை உள்ளது.

கஞ்சா பொருட்களின் இரண்டாவது தலைநகரமாக கோவை மாவட்டம் விளங்கிவருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளன. 2025 மே 5ம் தேதி வரை 18,200 பாலியல் பலாத்கார குற்றச் சம்பவங்கள் திராவிட மாடல் ஆட்சியில் நடந்துள்ளன. தவிர 6,000 கொலைக் குற்றங்கள், 31 லாக்-அப் இறப்பு, 15 சதவீதம் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. போக்சோ வழக்குகள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன.

இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (நவ.5) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தனிப்படைகள் அமைப்பது பெரிய காரியம் அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் காவல் துறை கண்காணிப்புப் பணி முற்றிலும் தோல்வியடைந்துள்ளது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவையில் ஆர்ப்பாட்டம்: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். பெப்பர் ஸ்பிரே, தீப்பந்தம் ஆகியவற்றை ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை. எனவே, பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றச் சம்பவங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் பெப்பர் ஸ்பிரே போன்ற பொருட்களை உடன் எடுத்து செல்வது அவசியம்” என்று வானதி சீனிவாசன் கூறினார்.



By admin