கோவையில் தனது நிறுவனத்திலிருந்து விலகி, தனியாக நிறுவனம் துவக்கிய பெண்ணுக்கு, நுாற்றுக்கணக்கில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பிய ஒரு நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘அந்தப் பெண் நிறுவனத்திலிருந்து விலகியதால், தனது தொழில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு பழி வாங்கவே தான் இப்படிச் செய்ததாகவும்’ அவர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் பிபிசி தமிழிடம் விளக்கினார்கள்.
நடந்தது என்ன?
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவருக்கு கடந்த ஆண்டிலிருந்து வெவ்வேறு கூரியர்கள் மூலமாக பார்சல்களில் பலவித பொருட்கள் வந்துள்ளன. இவர் எதுவுமே ஆர்டர் செய்யாத நிலையில், இவருடைய பெயரில் இவரின் வீட்டு முகவரிக்கு, இவரின் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், பணம் கொடுத்து பார்சல் வாங்கும் முறையில் (CoD) அவை வந்திருந்தன. இதனால் அந்த பெண் பெரும் குழப்பம் அடைந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
‘தான் எதையும் ஆர்டர் செய்யவில்லை’ என்று கூறி அவற்றை அவர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தினமும் 50 முதல் 100 வரையிலான பார்சல்கள் வரத் துவங்கியுள்ளன. அதிலும் அந்தப் பெண்ணின் பெயரின் முன்பு அல்லது பின்பு வேறு ஒரு ஆபாசமான பெயரையும் சேர்த்து, அவருடைய முகவரிக்கு பார்சல்கள் வந்துள்ளன என காவல்துறையினர் கூறுகின்றனர்.
”இவற்றைக் கொடுப்பதற்காக ஒரே நேரத்தில் பலரும் இவருடைய அலைபேசி எண்ணுக்கு அழைப்பதும், ஒரே நேரத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு பார்சல்களுடன் பலரும் வந்து நிற்பதும் தினமும் நடந்துள்ளது. ஒரு நாள் கூட இடைவெளியின்றி, மாதக்கணக்கில் இது தொடர்ந்துள்ளது. இதனால் அந்த பெண் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்” என்கிறது காவல்துறை.
இது தொடர்பாக, கடந்த ஏப்ரலில் கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவில் அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரணையைத் துவக்கியுள்ளனர். சுமார் 8 மாதங்களுக்குப் பின்பு, ”இதில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்” என காவல்துறை தெரிவித்துள்ளது.
‘பழிவாங்கும் நோக்கில் அனுப்பப்பட்ட பார்சல்கள்’
பட மூலாதாரம், Sathish Kumar
படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட சதீஷ்குமார்
ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ்குமார் என்பவர்தான் இந்த பார்சல்களை அனுப்பியதாகக் கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சதீஷ்குமாரின் நிறுவனத்தில் கடந்த 2023-இல் பணிக்குச் சேர்ந்த அந்தப் பெண், ஓராண்டுக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டில் அங்கிருந்து விலகி, தனியாக நிறுவனம் துவக்கியுள்ளார். அதற்குப் பின் சில மாதங்கள் கழித்தே பார்சல்கள் வந்துள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் அழகுராஜா,” இந்த பெண் அங்கு பணியாற்றிய வரையிலும் அந்த நிறுவனத்திற்கு ஏராளமான ஆர்டர்கள், வருவாய் கிடைத்துள்ளது. இவர் வெளியே வந்து தனியாக நிறுவனம் துவக்கியதும் அந்த வாடிக்கையாளர்கள் இந்தப் பெண்ணின் நிறுவனத்திற்கு மாறிவிட்டனர்.” என்றார்.
”இதனால் சதீஷ்குமாரின் நிறுவனம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதன் காரணமாக அந்தப் பெண்ணைப் பழிவாங்கும் நோக்கில் இப்படிச் செய்ததாக சதீஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சமூக ஊடகத்தில் பார்க்கிற பொருளையெல்லாம் ஆர்டர் செய்து, பல்லாயிரக்கணக்கான பார்சல்களை அந்தப் பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். எதிலும் இவருடைய தொடர்பு குறித்து வெளிப்படவில்லை. அந்தப் பெண்ணுக்கும் சதீஷ் மீது எந்த சந்தேகமும் ஏற்படாததால் உடனடியாக அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்றார்.
பட மூலாதாரம், TNPolice
பெண்ணின் புகாரின் அடிப்படையில், பார்சல்கள் அனுப்பிய நிறுவனங்கள் பலவற்றுக்கும் சில தகவல்களைக் கேட்டு சைபர் க்ரைம் காவல்துறையினர் அணுகியுள்ளனர்.
ஒரு நிறுவனத்திடமிருந்து, ஆர்டர் கொடுத்த ‘ஐபி’ முகவரியை வாங்கி, அதன் மூலமாக இதைச் செய்தது சதீஷ்குமார்தான் என கண்டறிந்ததாக காவல்துறை கூறுகிறது.
சதீஷ்குமாரை கைது செய்வதற்கு முந்தைய நாள் வரையிலும், அந்தப் பெண்ணுக்கு இதுபோன்று பார்சல்கள் வந்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அலைபேசி எண்ணை மாற்றுமாறு கோரியும், தொடர்பு எண் மாறினால் தொழிலில் பாதிப்பு ஏற்படுமென்று அதை மாற்றுவதற்கு அந்தப் பெண் மறுத்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர் இதுகுறித்து எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
‘புகார் அளிக்க முன் வர வேண்டும்’
இதேபோன்று சமூக ஊடகங்களையும், இணைய வசதிகளையும் தவறாகப் பயன்படுத்தி, பெண்கள் மீதான குற்றங்கள் நிறைய நடந்தாலும் பலரும் புகார் தருவதற்கு முன் வருவதில்லை என சைபர் க்ரைம் பிரிவு போலீசார் கூறுகின்றனர். இதற்காக பல்வேறு கல்லுாரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்தனர்.
”இந்த பெண் துணிச்சலுடன் புகார் அளிக்க முன் வந்ததால்தான், பல வழிகளிலும் போராடி, தற்போது அந்த நபரை பிடிக்க முடிந்துள்ளது. ஆனால் இதுபோன்று பாதிக்கப்படும் பெண்கள், தங்களுக்கு எந்த வகையிலாவது தொந்தரவு வரத் துவங்கியதுமே புகார் தந்துவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.” என்றார் அழகுராஜா.
”இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், நன்கு படித்தவராகவும், நல்ல திறன் படைத்தவராகவும் இருந்ததால்தான் அவர் பணியாற்றிய நிறுவனத்துக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. அது கைவிட்டுப் போனதால்தான் அந்த நிறுவனத்தை நடத்தியவர், பழி வாங்கத் திட்டமிட்டுள்ளார். இத்தகைய சூழல்களில் துரிதமாகவும், துணிச்சலாகவும் பெண்கள் செயல்படுவது அவசியம்.” என்கிறார் அவர்.