
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மாநில அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது, தமிழகத்தில் பெரும் அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, திமுக கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.
திமுக அரசு தேவையின்றி அரசியல் செய்வதாக பாஜக தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்று பிரதமர் மோதியிடம் மனு கொடுத்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு திமுக அரசின் குளறுபடியே காரணமென்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் பல்வேறு அமைப்பினரும் அதிமுக, திமுக என இரு அரசுகளும் 15 ஆண்டுகளாக இதைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக, கடந்த நவம்பர் 19-ஆம் தேதியன்று பிரதமர் மோதி கோவைக்கு வந்தார். அவர் தமிழகம் வருவதற்கு முந்தைய நாள், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் கோரி தமிழக அரசால் அனுப்பப்பட்டிருந்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாகத் தகவல் பரவியது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். “பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படிப் பழிவாங்குவது கீழமையான போக்கு” என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் விமர்சித்திருந்தார்.
பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் “இது பிரதமர் வரும் நாளில் மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பரப்புரை” என்று கூறியிருந்தார்.
ஆர்ப்பாட்டமும் பாஜக தலைவர்களின் பதில்களும்
இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களிலேயே மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற மெட்ரோ ரயில் விதியின்படி திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, “அதற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பிரதமர் வந்து திரும்பிய மறுநாளே, கோவையில் இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதில் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்குத் திட்ட அறிக்கை அனுப்பினால் 5 மாதங்களில் அனுமதி அளிக்கப்படுகிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை 15 மாதம் நிலுவையில் வைத்திருந்து மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தமிழக மக்கள் மீதான பாஜக அரசின் வன்மத்தையே காட்டுகிறது.” என்றார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், 2011 மக்கள் தொகையை வைத்து இந்தத் திட்டத்தை நிராகரித்து இருப்பதாகக் கூறிய செந்தில் பாலாஜி, “தமிழக அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது மோதி, அதற்கு முட்டுக் கொடுப்பது எடப்பாடி பழனிசாமி.” என்று பேசியிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாள், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக ஊடக பக்கத்தில், இந்த விவகாரத்தை திமுக வேண்டுமென்றே அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மத்திய அரசு கோரும் சரியான தரவுகளை தமிழக அரசு மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒப்புதல் கொடுத்தது. அதன் பிறகு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி கோரி இந்த விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது.
மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

தமிழக அரசு சமர்ப்பித்த இந்த அறிக்கையை, சில நாட்களிலேயே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டின் மெட்ரோ ரயில் திட்டக் கொள்கைப்படி, மெட்ரோ திட்டத்துடன் லைட் மெட்ரோ போன்ற மாற்றுத் திட்டம், பி.ஆர்.டி.எஸ், பொதுப் போக்குவரத்து திட்டங்களுக்கான பிற விவரங்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையுடன் சேர்த்து ஒருங்கிணைந்த திட்டத்தை (Comprehensive Mobility Plan and Alternative Analysis Report) அனுப்புமாறு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்தது.
அதில் 2024 அக்டோபர் வரையிலும் மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இது குறித்துக் கடந்த 2024 நவம்பரில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக்கிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, மத்திய அரசு கோரிய தகவல்களைச் சேர்த்து முழுமையான அறிக்கையை விரைவில் அனுப்புவதாகத் தெரிவித்திருந்தார்.
அந்த விவரங்களும் அனுப்பப்பட்ட நிலையில் ஓராண்டு கழித்து ஒட்டு மொத்தமாக விரிவான திட்ட அறிக்கையை மக்கள் தொகை குறைவு உள்ளிட்ட வேறு சில காரணங்களைக் காண்பித்து மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலுள்ள நகரத்திற்கு பேருந்து போக்குவரத்து திட்டமா?
கோவையின் மக்கள் தொகை மற்றும் பரப்பரவைக் கணக்கிட்டால் பஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (BRTS) போன்ற திட்டம் சரியானதாக இருக்கும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் பி.எம் இ-பஸ் சேவா திட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் மின்சார ஏ.சி. பேருந்துகளை தமிழக அரசு வாங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
“கோவையில் ஏற்கெனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில், அதே சாலைகளில் பேருந்துகளை இயக்குவது என்பது நெரிசலை மேலும் அதிகமாக்குமே தவிர, பிரச்னைக்குத் தீர்வாகாது.” என்கிறார் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன்.
கடந்த 2011-ஆம் ஆண்டில் அப்போதிருந்த மத்திய அரசு, இந்தியாவில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு கோவை உள்ளிட்ட 19 இரண்டாம் நிலை நகரங்களைத் தேர்வு செய்து அறிவித்தது. அதிலிருந்து அதற்காகப் பல்வேறு போராட்டங்களை இவர் முன்னெடுத்து வருகிறார்.
மெட்ரோ திட்டம் தொடர்பாக ஏராளமான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று தொகுத்தும் வைத்துள்ளார்.
மதிமுக மாநில இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன், கடந்த 2012ஆம் ஆண்டிலேயே கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.
தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத நிலையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
”முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, 2011ஆம் ஆண்டிலேயே மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தகுதியான நகரமாக கோவை தேர்வு செய்யப்பட்ட நிலையில், 15 ஆண்டுகள் கழித்துப் போதிய மக்கள் தொகை இல்லை என்று காரணம் கூறி, விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்திருப்பது, அப்பட்டமான புறக்கணிப்பு, பாரபட்சம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை” என்கிறார் ஈஸ்வரன்.

2011ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகை 21 லட்சம்
கடந்த 2011-ஆம் ஆண்டின் 19 இரண்டாம் நிலை நகரங்கள் பட்டியல் குறித்த அறிவிப்பையும் பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்தார். அதில் தமிழகத்தில் இடம் பெற்ற ஒரே நகரம் கோவை மட்டுமே.
“2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கோவையில் நகரத் தொகுப்பின் (Urban Agglomeration – ஒரு நகரமும், அதையொட்டி வளர்ந்து வரக்கூடிய புறநகர்ப் பகுதிகளும்) மக்கள் தொகை 21 லட்சத்து 51,466 ஆகவுள்ளது. இப்போது இந்த மக்கள் தொகை 25 லட்சத்தைத் தாண்டும்” என்கிறார் ஈஸ்வரன்
கடந்த 2013-ஆம் ஆண்டில் கோவையிலுள்ள தொழில் அமைப்புகள், இந்தியாவின் ‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீதரனை அழைத்து வந்து, கோவையில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின.
அப்போது கோவையில் 3 நாட்கள் கள ஆய்வு செய்த அவர், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டமே சிறந்தது என்று தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், “கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரியகடை வீதி, நஞ்சப்பா வீதி போன்ற பகுதிகள் மிகவும் நெரிசலான பகுதிகள் என்பதால் திட்டத்தைச் செயல்படுத்த கடைகளை இடிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
மெட்ரோ திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகத் தெரிவித்த வானதி சீனிவாசன், “2026ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பின் கோவைக்கு மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வருவோம்” என்றார்.

இதே கருத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அதிமுக ஆட்சி இருந்தபோதுதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டுகள் அதைக் கிடப்பில் போட்டு, 2024-ஆம் ஆண்டில்தான் மத்திய அரசுக்கு அனுப்பினர். அதில் குறைபாடுகள் இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது. அதை மீண்டும் சரியாக அனுப்பவில்லை” என்றார்.
அதோடு, ”மெட்ரோ ரயில் திட்டம் ஒரு நகருக்கு வேண்டுமென்றால் 20 லட்சம் மக்கள் தொகை வேண்டும் என்கின்றனர். ஆனால் 2011 மக்கள் தொகை அடிப்படையில் திட்ட அறிக்கை அனுப்பியதால் இந்த எண்ணிக்கை இல்லை என்று மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு திமுக அரசின் மெத்தனமும், அலட்சியமும்தான் முழு காரணம். இந்த ஆண்டில் கோவையில் மக்கள் தொகையைக் கணக்கெடுத்து அனுப்பி இருந்தால் அது நிறைவேறியிருக்கும். மீண்டும் குளறுபடி இல்லாமல் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு விரிவான திட்ட அறிக்கையை அனுப்ப வேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையைவிட சிறிய நகரங்களுக்கு, மெட்ரோ ரயில் திட்டத்தை அனுமதித்திருப்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் ராமதாஸ், “14 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையைக் கருத்தில் கொள்ளாமல் இன்றைய மக்கள் தொகை மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதலையும் நிதியையும் தரவேண்டும்.” என்று கோரியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (திமுக) ராஜ்குமார், ”எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை மக்களுக்குப் பகிரங்கமாக விடுக்கப்படும் மிரட்டலாகவே நாங்கள் கருதுகிறோம். அப்படியானால் வானதி ஸ்ரீனிவாசனை வெற்றி பெற வைத்த மக்களுக்கும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலைக்கு வாக்களித்த நான்கரை லட்சம் வாக்காளர்களுக்கும் அவர்கள் செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா என்பதே எங்கள் கேள்வி.” என்றார்.
கோவையைச் சேர்ந்த இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உள்ளிட்ட சில தொழில் அமைப்புகள், திருத்திய திட்ட அறிக்கையை விரைவாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் இப்போது வரை இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.
”மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்பதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 2011-ஆம் ஆண்டில் கோவையை இந்தத் திட்டத்திற்காக தேர்வு செய்த பிறகு எதுவுமே செய்யாமல் 10 ஆண்டுகளைக் கடத்தியது அதிமுக அரசு. திட்ட அறிக்கையை தெளிவாகத் தயாரித்து அனுப்பி, ஒப்புதலையும், நிதியையும் பெறத் தவறியது திமுக அரசு. சென்னை மெட்ரோவுக்கு நிதி வாங்க எடுத்த முயற்சியை கோவை, மதுரை மெட்ரோவுக்கு எடுக்கவில்லை. பாஜக, திமுக, அதிமுக என மூன்று கட்சிகளுமே மக்களை ஏமாற்றுகின்றன” என்கிறார் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு