தமிழ்நாட்டில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க நேரில் வந்திருந்த தினத்தில், கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மறுத்துள்ள செய்தி மற்றும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் என்ற காரணத்தினால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் எப்படி மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று மாநில அமைச்சர்களும், திமுக கூட்டணிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
மத்திய அரசின் விதிகள் தெரிந்தும் கூட, இந்த நகரங்களின் சரியான மக்கள்தொகையையும், பிற விவரங்களையும் மாநில அரசு முறையாக சமர்ப்பிக்காமல் மத்திய அரசு மீது பழி போடுவதாக பாஜக குற்றம் சாட்டுகிறது.
இதற்கிடையில், கோவையில் ‘பிஹார் காற்று வீசுகிறது’ என்று பேசிய நரேந்திர மோதியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கோரிக்கையை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி மாறி மாறி வைக்கப்படும் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு இடையில், மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களான கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது இது குறித்த அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் தாங்கள் வெளியிடவில்லை, விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சென்னை, கோவைக்கு NO METRO” – முதலமைச்சர் குற்றச்சாட்டு
தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு” என பதிவிட்டிருந்தார். ஆனால், பிரதமர் கோவை வரும் நாளில் கோவைக்கு மெட்ரோ ரயில் வரவில்லை என பொய் பரப்புரை செய்யப்படுவதாக தமிழக பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.
கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இந்த திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மாநில அரசு அனுப்பியிருந்தது. அந்த திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்புவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு நவம்பர் 14ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களிலேயே மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும் என்ற விதியை குறிப்பிட்டு, இந்த திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன என்று தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 20 லட்சத்துக்கும் குறைந்த மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, பாட்னா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் எப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், “பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு” என்று முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது எக்ஸ் தள பதிவில், “அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல, மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
மத்திய அரசு கடிதத்தில் என்ன கூறியுள்ளது?
சென்னை மெட்ரோ ஃபேஸ் -1 -ல் 55 கி.மீ தூரத்துக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சராசரியாக தினமும் 4 லட்சம் பேர் மட்டுமே பயணித்துள்ள நிலையில், கோவையில் 34 கி.மீ தூர மெட்ரோ ரயில் தடத்தில் 5.9 லட்சம் பேர் தினமும் பயணிப்பார்கள் என்று கூறுவது அதீத மதிப்பீடாக இருப்பதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கடம்-கோவை சந்திப்பு, கோவை சந்திப்பு-ஹோப்ஸ் கல்லூரி, கோவை சந்திப்பு- ராமகிருஷ்ணா மில்ஸ் உள்ளிட்ட தடங்களின் விவரங்களை குறிப்பிடும் அந்த கடிதம், 79% சாலைகள் 20 மீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன, சில இடங்களில் 15 மீட்டருக்கும் குறைவாக உள்ளன, எனவே உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாகாது என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய கடிதத்தின் பகுதி.
மக்கள்தொகை காரணமா?
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி கோவை நகரின் மக்கள்தொகை 15.84 லட்சம் மற்றும் மதுரை நகரின் மக்கள்தொகை 15 லட்சம் மட்டுமே என்று தமிழ்நாடு அரசு திட்ட அறிக்கையில் உள்ளதை குறிப்பிடும் மத்திய அரசின் கடிதம், “மெட்ரோ ரயில் கொள்கை 2017- ன் படி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்கள் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து அமைப்புகளுக்கு திட்டமிடலாம்” என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், “மெட்ரோ ரயில் திட்டங்கள் அதிக பொருட்செலவு கொண்டவை, நீண்ட கால நிலைத்தன்மைக்கு அவை கவனமாக திட்டமிடப்பட வேண்டும். இந்த நகரங்களுக்கு செழிப்பான பேருந்து வசதி அல்லது BRTS போன்ற பொருட்செலவு குறைந்த நகர்ப்புற போக்குவரத்து தகுந்தவையாக இருக்கலாம். எனவே, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன” என்று மத்திய அமைச்சகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளின் ( Urban Agglomeration – ஒரு நகரமும், அதையொட்டி வளர்ந்து வரக்கூடிய புறநகர் பகுதிகளும்) மக்கள்தொகை 21.3 லட்சம் ஆகும்.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, பாட்னா, போபால் உள்ளிட்ட நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று இந்த திட்டங்களின் அறிக்கைகளில் உள்ள விவரங்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்புகிறார் தகவல் உரிமை சட்ட செயற்பாட்டாளர் தயானந்த் கிருஷ்ணன்.
“2011ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் வைத்து எப்படி இன்றைய தேவையை நிராகரிக்க முடியும். கோவையின் 2024 வாக்காளர்கள் எண்ணிக்கையே சுமார் 26 லட்சம் இருந்தது. மதுரையின் மக்கள்தொகையும் கடந்த 15 ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. கோவை மாநகரம் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது, அங்கு தொழில்துறையினர் பலர் இருக்கின்றனர். சராசரி தினசரி வருமானம் கணிசமாக கொண்டவர்கள் இருக்கிறார்கள். மெட்ரோ போன்ற போக்குவரத்தை பயன்படுத்த அவர்கள் விருப்பமாக இருப்பார்கள்” என்று கூறினார்.
பட மூலாதாரம், X/@SuVe4Madurai
பாஜக அரசின் பாகுபாட்டை எதிர்க்க வேண்டும் என்று மாநிலத்தின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். “மதுரையும், கோவையும் இந்தியாவின் வேகமாக வளரும் இரண்டாம் நிலை (Tier-II) நகரங்களில் முக்கியமானவை. இந்நகரங்களுக்கு மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல; அவசியமான உள்கட்டமைப்புத் தேவை. மக்கள் நெருக்கடியைக் குறைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, என அனைத்துக்கும் மெட்ரோ இன்றியமையாதது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையின் சரியான மக்கள்தொகையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என்கிறார்.
மெட்ரோ ரயில் திட்டங்கள் “தமிழகத்திற்கு எதிரான பாரபட்சத்தால் நிராகரிக்கப்படுகிறது” என்ற கூற்று தவறானது என்று கூறும் வானதி சீனிவாசன், “2017 மெட்ரோ கொள்கையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பித் தந்தது. இது 2011 நகர-சரியான மக்கள்தொகையைப் பயன்படுத்துகிறது. அந்த விதிப்படி கோவையின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளது” என்கிறார்.
“நகர்ப்புற திரட்சி(urban agglomeration) தரவுகளைப் பயன்படுத்தி, (அதன் படி கோவையின் மக்கள் தொகை 21 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது) தமிழ்நாடு அரசு தனது கோரிக்கையை மீண்டும் சமர்ப்பிக்கலாம். அல்லது சுற்றுலா காரணங்களுக்காக ஆக்ரா மெட்ரோவுக்கு ஒப்புதல் வேண்டும் என்று கோரப்பட்டது போல, சிறப்பு காரணங்களை தமிழ்நாடு முன் வைக்கலாம். போபால் மற்றும் பாட்னாவுக்கும் இது போன்ற காரணங்கள் இருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் தமிழ்நாடு 1.5 லட்சம் கோடி ரூபாய் ரயில்வே நிதியை பெற்றுள்ளது. இது தமிழ்நாடு விரோத போக்கு அல்ல” என்று வானதி பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்
அதிக பொருட்செலவு ஆகும் என்ற காரணம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என்கிறார் தயானந்த் கிருஷ்ணன்.
“இது மத்திய மாநில அரசுகளுக்கு இடையே 50-50 என்ற நிதி பங்கீட்டு முறையாக இருந்தாலும், இதில் 30% மட்டுமே அரசுகளின் நேரடி நிதியாகும், 70% கடனாக பெறுவதே. எனவே, மத்திய அரசு 15% மட்டுமே செலவு செய்யப் போகிறது. அதாவது ஏற்கெனவே வெளியான திட்ட அறிக்கை குறித்த தகவல்களின் படி, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் கோவை மெட்ரோவுக்கும், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதுரை மெட்ரோவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே சுமார் 3 ஆயிரம் கோடி (இது தோராயமான மதிப்பீடுகளே) மட்டுமே மத்திய அரசு செலவு செய்ய வேண்டியிருக்கும். அதுவும் மூன்று நான்கு ஆண்டுகள் நடைபெறும் திட்டம் என்பதால் ஆண்டு ஒன்றுக்கு 700 முதல் 800 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டியிருக்கும்.
சில ஆயிரம் பேர் மக்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய புல்லெட் ரயில் போன்ற திட்டங்களுக்கு கோடிக் கணக்கில் செலவு செய்யும் அரசு, ஏன் வெகுஜன மக்கள் அதிகம் பயன்படுத்த தயாராக இருக்கும் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கக் கூடாது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே அரசியாலாக்குகிறது திமுக என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் கடிதத்தில் மக்கள்தொகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை மட்டும் திமுக பொதுவெளியில் கசியவிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், மத்திய அரசு நவம்பர் 14ம் தேதி அனுப்பிய 3 பக்க கடிதத்தை (அந்த கடிதத்தின் விவரங்கள் முழுமையாக மேலே கொடுக்கப்பட்டுள்ளன) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். மத்திய அரசு கோரும் சரியான தரவுகளை தமிழ்நாடு அரசு விரைவாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திட்ட அறிக்கை மீண்டும் சமர்ப்பிக்கப்படுமா, அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கும் இன்னும் பதிலளிக்கவில்லை. பதில் கிடைக்கும் போது இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும்.