பட மூலாதாரம், Getty Images
கடந்த நிதியாண்டில் (2024-25) ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் மென்பொருள் ஏற்றுமதி செய்ததன் மூலமாக, கோவை இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில் மிக முக்கிய மென்பொருள் தொழில்நகரமாக மாறியுள்ளது.
பல மென்பொருள் நிறுவனங்களும் கோவையில் கால் பதித்திருப்பதற்கு, இந்த நகரில் கிடைக்கும் தரமான மனிதவளமே காரணமென டைடல் பார்க் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால்தான், கோவையை ஐடி நிறுவன ஊழியர்களும், நிறுவனங்களும் தேர்வு செய்வதாக தொழில் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
நகரின் பரவலான வளர்ச்சியும் மென்பொருள் நிறுவனங்கள், கோவையைத் தேர்வு செய்ய முக்கியக் காரணமென்று அரசின் ‘வழிகாட்டி தமிழ்நாடு’ நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு விமான நிலைய விரிவாக்கம், மக்கள் போக்குவரத்துத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்த வேண்டுமென்பது கோவையிலுள்ள அமைப்புகளின் கோரிக்கையாகவுள்ளது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்னைக்கு அடுத்ததாக கோவை நகரம் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் இந்திய மென்பொருள் பூங்காக்கள் துறை (SEZ –Special Economic Zone & STPI Software Technology Parks of India) வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, கடந்த நிதியாண்டில் கோவையிலிருந்து ரூ.15,105 கோடி மதிப்பிலான மென்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரூ 2 ஆயிரம் கோடி, திருச்சி ரூ.900 கோடி என்ற அளவில் இதில் பங்களித்துள்ளன. இதே புள்ளி விபரங்களை நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 6 அன்று எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலாகத் தரப்பட்டுள்ளது.
‘கோவையின் பங்களிப்பு 25 சதவீதமாக உயர்ந்துள்ளது’
தமிழகத்தின் பிற இரண்டாம் நிலை நகரங்களை ஒப்பிடுகையில், கோவையின் மென்பொருள் ஏற்றுமதி பங்களிப்பு, பல மடங்கு அதிகமாகவுள்ளது.
கோவை டைடல் பார்க் சார்பில் பிபிசி தமிழிடம் பகிரப்பட்ட தகவல்களின்படி, தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதியில் கோவையின் பங்களிப்பு 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலையில் கோவையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் மட்டும் 6 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
பிபிசி தமிழிடம் பேசிய டைடல் பார்க் இயக்குநர் பிரசாந்த் சுப்பிரமணியம், ”பொதுவாக கீழ்மட்ட பணிகளைத்தான் அவுட்சோர்சிங்கில் கொடுப்பது உலகளாவிய வழக்கமாக இருந்தது. முக்கியப் பணிகள் நிறுவனத்திற்குள் நடக்கும். ஆனால் இப்போது அடுத்தகட்ட திட்டம், வளர்ச்சிக்கான மதிப்பீடு போன்ற உயர் பணிகளையும் வெளியில் கொடுக்கும் முறை உருவாகியுள்ளது. அதேபோன்று தலைமையிடங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த எல்லாப் பணிகளும் இப்போது பரவலாக்கப்பட்டுள்ளன. மென்பொருள்துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமே கோவையின் வளர்ச்சிக்கு அடிப்படை.” என்றார்.
இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ”முன்பு 50 மென்பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்த நிலை மாறி, இன்று மதிப்பு மிக்க மென்பொருள்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதே கோவையை முக்கிய இடத்தில் நிறுத்தியுள்ளது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
கோவையில் மென்பொருள் நிறுவனங்களும், ஏற்றுமதியும் அதிகரிப்பதற்கு வேறுசில காரணங்களைத் தெரிவிக்கிறார் வழிகாட்டி தமிழ்நாடு (Guidance TN) பிரிவுவின் அதிகாரி விக்ராந்த்.
”கோவையில் கிளை பரப்பாத மென்பொருள் நிறுவனங்களே இல்லை எனும் அளவுக்கு, இங்கே அனைத்து நிறுவனங்களும் வந்து விட்டன. இதற்கு கோவையின் பரவலான வளர்ச்சிதான் காரணம். மற்ற நகரங்களைப் போலன்றி கோவை எட்டுத்திக்கிலும் வளர்ந்து வருகிறது.” என்கிறார் வழிகாட்டி தமிழ்நாடு (Guidance TN) மேற்கு மண்டல உதவி துணை தலைவர் விக்ராந்த்.
கோவையில் அவினாசி சாலையில் எல்காட், டைடல் பார்க், சத்தியமங்கலம் சாலையில் கீரநத்தத்தில் கேஜிஐஎஸ்எல், சரவணம்பட்டியில் கேசிடி, எல் அண்ட் டி புறவழிச்சாலை மற்றும் பொள்ளாச்சியில் வேறு பல ஐடி நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருப்பதை அவர் பட்டியலிட்டார்.
சிடிஎஸ், டிசிஎஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அசெஞ்சர் என இங்கே இல்லாத நிறுவனங்களே இல்லை என்று அந்த நிறுவனங்களின் பட்டியலையும், பங்களிப்பையும் அவர் விளக்கினர்
பாஷ் உள்ளிட்ட சில நிறுவனங்கள், தமிழகத்தின் தலைமையிடமாக கோவையை வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினர்.
”கோவிட் பெருந்தொற்றுக்குப் பின், ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ என்ற நிலை ஏற்பட்ட பின், பெரும்பான்மையான ஐடி ஊழியர்கள், தங்கள் வீட்டிலிருந்து அல்லது சொந்த ஊர்களுக்கு அருகில் பணியாற்றுவதையே விரும்புகின்றனர். இதை நிறுவனங்களும் புரிந்து கொண்டுள்ளன. அதனால்தான் அந்த நிறுவனங்கள் இங்கேயே கிளைகளைத் துவக்கியுள்ளன. கோவிட்டுக்குப் பின் கோவையின் அசுர வளர்ச்சிக்கு இதுவே காரணம்.” என்றார் அவர்.
இயற்கைப் பேரிடர்கள் எதுவும் தாக்காத நகரம்!
பட மூலாதாரம், Getty Images
அது மட்டுமின்றி, பெருமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் எதுவும் தாக்காத, அதே நேரத்தில் 3 மணி நேரப்பயணத்தில் கடற்கரை, மலைப்பகுதிகளை அடையும் பொதுவிடமாக இருப்பதும், நல்ல காலநிலை, வாழ்வதற்கேற்ற சூழல், உயர்கல்வி நிறுவனங்கள், உயர்தர மருத்துவம் போன்றவையும் இந்த நகரை பலரும் நாடி வருவதற்குக் காரணமென்பதையும் பலரும் பட்டியலிடுகின்றனர்.
இந்திய தொழிற்கூட்டமைப்பின் கோவை மண்டலத் தலைவரான சிம்னா, ”இந்த வளர்ச்சிக்கு இங்குள்ள உயர் கல்வி நிறுவனங்கள்தான் அடித்தளம். கோவை நகரம் 100 ஆண்டுகளுக்கு முன்பே, தொழில்நுட்பத்தையும், புதுமையான முயற்சிகளையும் கொண்ட வரலாறுடையது. எந்தவொரு புதிய தொழில் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நகரம் கோவை. பாரம்பரியத் தன்மையும், காஸ்மோபாலிடன் கலாசாரத்தையும் உள்ளடக்கிய இரண்டாம் நிலை நகரம் என்றால் அது கோவை மட்டுமே.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சென்னை, பெங்களூருவை அடுத்து பல நிறுவனங்கள் இங்கே வர அதுவும் ஒரு காரணம் என்று கூறும் சிம்னா, ஒரு நகரில் குடியேறுவதற்கு விரும்புவோர் அந்த நகரிலுள்ள கல்வி, மருத்துவக் கட்டமைப்பைத்தான் முதலில் பார்ப்பார்கள் என்கிறார்.
பட மூலாதாரம், Prasanth Subramaniam
இந்திய தொழிற்கூட்டமைப்பு கடந்த ஜூலையில் வெளியிட்ட ‘கோயம்புத்துார் ரைசிங்’ என்ற பெயரிலான கோவையின் வளர்ச்சி குறித்த அறிக்கையையும் சிம்னா பகிர்ந்தார்.
அதில் கோவை நகரம் உலகளாவிய திறன் மையங்களை (GCC-Global Capability Centers) உள்ளடக்கிய நகரமாக வளர்ந்து வருவதற்கான பல்வேறு தரவுகளும் அட்டவணைகளாகவும், பல்வேறு துறை நிபுணர்களின் கருத்தாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கருத்தைப் பகிர்ந்துள்ள கேஜிஐஎஸ்எல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அசோக் பக்தவத்சலம், கடந்த 20 ஆண்டுகளில் உலகளாவிய பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் விரும்புகிற ஒரு நகரமாக கோவை உருவெடுத்திருப்பதற்கு இங்குள்ள புதுமையும் அர்ப்பணிப்பும் கொண்ட திறனுள்ள பணியாளர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இதுவரை 50க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும், 50க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்களுமாக 8.12 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான மென்பொருள் நிறுவனங்கள் கோவையில் செயல்படுவதையும் மேலும் பல லட்சம் சதுர அடி பரப்பளவில் பல நிறுவனங்கள், தங்கள் பரப்பை விரிவுபடுத்துவதையும் இந்திய தொழிற்கூட்டமைப்பு அறிக்கை விரிவாக அட்டவணைகளுடன் விளக்கியுள்ளது.
”இப்போது மென்பொருளின் தேவை எல்லாவற்றிலும் இருக்கிறது. செல்போன், வாட்ச் போன்றவற்றில் மட்டுமின்றி, இப்போது வரும் உயர்ரக கார்களிலும் மென்பொருள் பங்களிப்பு அதிகமாகி விட்டது. ஒரு காரில் இவ்வளவு மில்லியன் கோடு உள்ளது என்று விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு அதன் தேவை அதிகரித்துள்ளது. கோவையில் பல்வேறு பகுதிகளிலும் மென்பொருள் நிறுவனத்துக்கான இடம் பரவலாகக் கிடைப்பதால்தான் இங்கே நிறுவனங்கள் வருகின்றன.” என்கிறார் பிரசாந்த் சுப்பிரமணியம்.
”வருமானம் அதிகமாகவில்லை; வாடகை அதிகமாகிறது!”
பட மூலாதாரம், Directorate of Town and Country Planning
கோவையில் மூன்றிலிருந்து மூன்றரை லட்சம் வரையிலான ஐடி திறன் பணியாளர்கள் இருப்பதாகச் சொல்கிறது இந்திய தொழிற்கூட்டமைப்பின் அறிக்கை.
கோவையில் மென்பொருள் நிறுவனங்கள் அதிகரிப்பதால், வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் பணியாற்றும் பலரும் இங்கே வந்து தங்கள் பணியைத் தொடர்கின்றனர்.
ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய பொள்ளாச்சியைச் சேர்ந்த ராஜூ, இப்போது கோவையில் அதே நிறுவனத்தின் கிளையில் பணியாற்றுகிறார்.
சென்னையில் பணியாற்றிய ஜாக்குலின், தற்போது கோவையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அதை விட உயர்வான ஊதியத்தில் பணியை மாற்றிக் கொண்டுள்ளார். இவர்களைப் போலவே இன்னும் பலரும் வேறு நகரங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர். அந்த நகரங்களை விட இங்கு தங்களால் ஊதியத்தை அதிகமாகச் சேமிக்க முடிவதாக இவர்கள் கூறுகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமின்றி, ஜவுளித்துறை, ஆட்டோமொபைல், வான்வெளி, துல்லிய பொறியியல், மருத்துவ சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளிலும், மென்பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் கோவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கூறும் அந்த அறிக்கை, கோவை பன்முகத்தன்மையுள்ள வளர்ச்சியைக் கொண்ட நகரமாக மாறியுள்ளதாகக் கூறுகிறது.
இத்தகைய வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளில் கோவையின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்திருப்பதையும் தொழில் அமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிபிஆர்இ (CPRE stands for Certified Professional for Requirements Engineering) 2025 இரண்டாம் காலாண்டு அறிக்கையின்படி, கோவை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சிறிய கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி, கோவையில் பெரிய அளவிலான கட்டுமான நிறுவனங்களும் கால் பதித்துள்ளன.
நகரில் எந்தெந்தப் பகுதிகளில் தனிவீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் எவ்வளவு எண்ணிக்கையில் தயாராகி வருகின்றன என்ற விபரங்களை அட்டவணைப்படுத்தியுள்ள அந்த அறிக்கை, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நகரில் மொத்த குடியிருப்பு கையிருப்பு சுமார் 25,000–30,000 அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ளது என்று கூறுகிறது.
பட மூலாதாரம், Sathish
அதேவேளையில் இத்தகைய வேகமான வளர்ச்சியாலும், சமச்சீரற்ற பொருளாதாரச் சூழ்நிலையாலும் இந்த நகரிலுள்ள நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகச் சொல்கிறார் சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் தலைவர் லோகநாதன்.
அவர் கூறுகையில், ”மற்ற துறைகள் வளர்வதால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அதிகபட்ச ஊதியத்தைப் பெறும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் அதிகரிப்பதால் வீட்டு வாடகை, நிலமதிப்பு எல்லாமே அதிகமாகிறது. இவர்களால் நகரின் பொருளாதாரம், பணப்புழக்கம், தொழில் வளர்ச்சியடைந்தாலும் மறுபுறத்தில் இத்தகைய பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது. நகருக்குள் பணி செய்ய வேண்டிய பல லட்சம் பேருக்கு, வருவாய் அதிகமாகவில்லை. ஆனால் வாடகை அதிகமாகி வருவதால் நகருக்கு வெளியே குடியேற வேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளது.” என்றார்.
தமிழகத்தின் வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நியச் செலாவணி, வரி வருவாய் என பல விதங்களிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கோவை நகரம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு விமான நிலைய விரிவாக்கம், மக்கள் போக்குவரத்துத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டுமென்பது கோவையிலுள்ள அனைத்துத் தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை நெக்ஸ்ட் அமைப்பின் இயக்குநர் சதீஷ், ”மிக வேகமாக வளர்ந்து வரும் கோவைக்கு விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் பல ஆண்டுகளாக காகித வடிவிலேயே இருப்பது பெரும் வேதனைக்குரியது. மத்திய, மாநில அரசுகள் இந்த நகருக்கு பல திட்டங்களைக் கொடுத்தாலும் இவைதான் மிக முக்கியம். சர்வதேச விமானங்களை அதிகளவில் இயக்கினால் இன்னும் பல நிறுவனங்கள் இங்கு கால்பதிக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று பெரும் பிரச்னையாக உருவெடுத்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் திட்டமே தீர்வாகும்.” என்றார்.
இந்திய தொழிற்கூட்டமைப்பின் நிர்வாகி சிம்னா, ”சர்வதேச விமானப் போக்குவரத்தும், மெட்ரோ ரயில் போன்ற மக்கள் போக்குவரத்துத் திட்டங்களும் இல்லாமலே கோவை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இவையிரண்டும் கிடைத்தால் கோவையின் வளர்ச்சி இன்னும் அசாத்தியமான வேகத்தில் இருக்கும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு