• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

கோவை வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வானதி சீனிவாசன் கோரிக்கை | Vanathi Srinivasan demands ban on dumping plastic waste on Coimbatore forest border

Byadmin

May 22, 2025


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வன எல்லைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆஸ்திரேலிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற ‘ஸ்பெஷல் விசிட்’ என்ற நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நான் கலந்து கொண்டேன். ஆஸ்திரேலியா அரசின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்தும், அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் குறித்தும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.

ஒரு வார கால பயணத்தில் ஆஸ்திரேலிய அரசின் நடைமுறைகள், அமைச்சக செயல்பாடுகள், அரசின் கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இப்போதும் அந்த நாட்டில் வாக்குச்சீட்டு முறை தான் நடைமுறையில் உள்ளது. அதை எப்படி அமல்படுத்துகிறார்கள் என தெரிந்து கொண்டேன்.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நடந்த தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவை குறித்து பேசப்பட்டது. இந்த பயணம் இந்தியா ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் அமைந்தது. ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை இதுவரை புறக்கணித்துவந்த முதல்வர் இப்போது செல்கிறார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

கோவை மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு மற்றும் மனித – வன உயிரினங்கள் மோதல் பிரச்சினைகள் தொடர்வது குறித்து சட்டப்பேரவையில் பேசி உள்ளேன். அரசு விரிவான திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, வன எல்லைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.



By admin