பட மூலாதாரம், TN Police
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்
”இந்த குழந்தை நம் இருவருக்கும் பிறந்ததுதான். உங்களுக்கு சந்தேகமிருந்தால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம் என்றேன். நானே குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன், குழந்தையை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சினேன். அதைக் கேட்காமல் குழந்தையைப் பறித்து, ‘எனக்குப் பிறக்காத குழந்தை எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்’ என்று கூறி, குழந்தையை ரயிலில் இருந்து வெளியே வீசிவிட்டான்!”
தனக்குப் பிறந்த 13 நாட்களே ஆன பெண் குழந்தையை தன் கணவன் ரயிலுக்கு வெளியே வீசி எறிந்ததைப் பற்றி தாய் கவிதா காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ள வார்த்தைகள் இவை.
வீசி எறியப்பட்ட குழந்தையின் உடல் கிடைக்காத நிலையிலும் இந்த வழக்கில், கவிதாவின் கணவன் மாரிச்செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றத்தின் தன்மையை அறிந்து, குழந்தையின் உடல் கிடைக்காத நிலையிலும், கொலையாளிக்கு எதிராக அரசு சமர்ப்பித்த சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜிஷா தெரிவித்தார்.
குழந்தையை பறித்து நள்ளிரவில் ரயிலில் இருந்து வீசிய தந்தை
2022 மே மாதம் 15-ஆம் தேதி இரவு 9:15 மணிக்கு, கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய பெண், தன்னை தன் கணவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியிலுள்ள ஒரு விடுதி அறையில் அடித்துத் துன்புறுத்தி அடைத்து வைத்துப் பூட்டி விட்டுச் சென்று விட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டபோது, அப்பெண்ணின் தலை மற்றும் உடல் முழுவதும் காயங்களாக இருந்தன.
அந்தப் பெண்ணின் பெயர் கவிதா என்பதும், தென்காசி மாவட்டம் கடையநல்லுாரைச் சேர்ந்த அவர் நர்சிங் படித்தவர் என்பதும், அவரை அவருடைய கணவர் மாரிச்செல்வம் அந்த அறையில் அடித்து அடைத்து பூட்டிச் சென்றதும் தெரியவந்தது.
இந்த வழக்கைப் பதிவு செய்த கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தினர் பகிர்ந்த தகவலின்படி, கவிதாவுக்கும், மாரிச்செல்வத்துக்கும் 2021-இல் திருமணம் நடந்துள்ளது. அதன்பின் கர்ப்பமான கவிதாவை, 2022 ஏப்ரல் 30-ஆம் தேதி கோவைக்கு மாரிச்செல்வம் அழைத்து வந்துள்ளார். ஒலம்பஸ் பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்துள்ளார்.
கவிதாவுக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு வாரம் கழித்து, கவிதாவையும், குழந்தையையும் மாரிச்செல்வம் ரயிலில் கோவில்பட்டிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து கடையநல்லுாரிலுள்ள கவிதாவின் வீட்டில் விட்டுள்ளார்.
அதன்பின் இரண்டே நாட்களில் அங்கு வந்து சண்டை போட்டு, கவிதாவை அழைத்துக் கொண்டு, மீண்டும் கோவில்பட்டி வந்து அங்கிருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவைக்கு அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையில் மாரிச்செல்வத்துக்கு ஏற்கெனவே திருமணமான விஷயம், கவிதாவுக்கு தெரிந்து ரயிலில் வரும்போது அதைப் பற்றிக் கேட்டுள்ளார். அதுபற்றிக் கேட்டதும், அந்தக் குழந்தையே தனக்குப் பிறக்கவில்லை என்று கூறி கவிதாவுடன் மாரிச்செல்வம் கடுமையாக சண்டை போட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
”சந்தேகம் என்றால் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று நான் கூறினேன். அவன் அதைக் கேட்கவே இல்லை. நள்ளிரவு 12 மணிக்கு மேல், எல்லாப் பயணிகளும் துாங்கிக் கொண்டிருந்தபோது, மதுரையைக் கடந்து திண்டுக்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது என்னையும், குழந்தையுடன் வலுக்கட்டாயமாக ரயில் கழிப்பறைக்கு அருகில் இழுத்துச் சென்றான்.” என்று இந்த சம்பவத்தைப் பற்றி கவிதா கூறியதாக காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அதில், ”என்னிடமிருந்து குழந்தையைப் பறிக்க முயன்றான். அவனிடம் குழந்தையை நானே வளர்த்துக் கொள்வதாகக் கெஞ்சினேன். எங்களிருவரையும் விட்டுவிடுங்கள் என்று கதறினேன். அதைக்கேட்காமல் என்னிடமிருந்து குழந்தையைப் பறித்து, ‘இந்தக் குழந்தை எனக்குப் பிறக்கவில்லை. எதற்கு உயிருடன் இருக்க வேண்டும்’ என்று கூறிக்கொண்டே குழந்தையை ரயிலுக்கு வெளியே வீசி எறிந்துவிட்டான்.” என்று கவிதா கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தையை வீசி எறிந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிய மாரிச்செல்வம், அதற்குப் பின் தன்னை கோவைக்கு அழைத்துச் சென்று அறையில் வைத்து அடைத்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கவிதா கூறியுள்ளார்.
அப்போதுதான் அவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது கவிதா எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டு விட்டனர். இந்த வழக்கு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ், கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 25-ஆம் தேதி) வழங்கிய தீர்ப்பில் ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து பெண்ணை ஏமாற்றியது, குழந்தையை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக, மாரிச்செல்வத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளார்.
வழக்கமாக கொலை வழக்குகளில் கொலை செய்யப்பட்டவரின் உடல், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் கொலைக் குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்படும்.
முக்கிய சாட்சியாக இருந்த 2 ரயில் நிலை கேமரா காட்சிகள்!
பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்த வழக்கில் ரயிலில் இருந்து துாக்கி வீசப்பட்ட குழந்தையின் உடல் கிடைக்கவே இல்லை. இருப்பினும் கவிதாவின் வாக்குமூலம் மற்றும் பிறருடைய சாட்சிகள், வேறு சில ஆவணங்களின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அரசு வழக்கறிஞர் ஜிஷா, ”இந்தியாவில் இதற்கு முன் அரிதான மிகச் சில வழக்குகளில் மட்டுமே, கொலை செய்யப்பட்டவரின் சடலம் கிடைக்காத நிலையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சில வழக்குகளில் கொல்லப்பட்டவரின் உடல் அமிலத்தில் கரைக்கப்பட்ட நிகழ்வும் நடந்துள்ளது. அதேபோல இந்த வழக்கிலும் குழந்தையின் உடல் கிடைக்கவில்லை. ஆனாலும் வலுவான சாட்சிகள், ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.
இதுபற்றி மேலும் விளக்கிய அவர், ”இதில் சிசிடிவி காட்சிகள் பேருதவியாக இருந்தன. கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மாரிச்செல்வம், கவிதா, குழந்தை மூவரும் ரயில் ஏறிய காட்சி கேமிராவில் பதிவாகியிருந்தது.”
“ஆனால் கோவை ரயில் நிலைய கேமராவில் அந்த ரயிலில் இருந்து இறங்கிவரும்போது, குழந்தை இல்லாமல் இருவர் மட்டுமே நடந்து வருகின்றனர். அதேபோன்று விடுதியிலும் இருவர் மட்டுமே வந்து அறை எடுக்கின்றனர். கவிதா போலீஸுக்கு போன் செய்து, போலீசார் வந்து மீட்டதும் இதில் முக்கிய சாட்சிதான்.” என்றார்.
கவிதாவை மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, அதே மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்த விபரமும் தெரியவந்ததாக ராமநாதபுரம் போலீசார் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் கொலைக்கு மிக முக்கிய ஆதாரமான குழந்தையின் உடல் 3 நாட்களாக தேடியும் கிடைக்காததால், மற்ற வழிகளிலான வலுவான ஆதாரங்களைத் திரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவம் அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Jisha
குழந்தையைக் கொன்ற வழக்கில் கைதான மாரிச்செல்வம், மொத்தம் 80 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
”அதன்பின் பிணையில் வெளியில் வந்த அவர், தன்னை பிணையில் எடுக்க தாமதித்துவிட்டதாகக் கூறி, தன் தந்தை ஆறுமுகத்தையும் கொலை செய்துள்ளார். திருநெல்வேலியில் பதிவான அந்த கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையையும், மாரிச்செல்வம் மீது ஏற்கெனவே பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கு தொடர்பான ஆவணங்களையும் இதில் ஆதாரங்களாக வைத்தோம்” என்கிறார் அரசு வழக்கறிஞர் ஜிஷா தெரிவித்தார்.
”மாரிச்செல்வம், பொறியியல் படித்துவிட்டு கோவையில் பணியாற்றியுள்ளார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. அந்தப் பெண்ணையும் இவர் கொடுமைப்படுத்தியுள்ளார். அவர் ஒன்றரை மாதங்களில் பிரிந்து சென்று விட்டார். ஆனால் அதை மறைத்து, கவிதாவை திருமணம் செய்துள்ளார். அது தெரிந்து முதல் மனைவி கோவில்பட்டிக்கு வந்ததால்தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிதாவை வலுக்கட்டாயமாக ரயிலில் கோவையில் அழைத்துவந்துள்ளார்.” என்றார் ஜிஷா.

இவ்வழக்கில் மாரிச்செல்வத்தின் முதல் மனைவியும் தனக்கு நிகழ்ந்த அனுபவங்களையும், திருமணம் நடந்ததையும் சாட்சியாகத் தெரிவித்துள்ளார்.
முதல் திருமணம் பற்றி கவிதா கேள்வி எழுப்பியதால்தான், அவரை திசை திருப்புவதற்காக அந்தக் குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று கவிதாவை மாரிச்செல்வம் மிரட்டியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார்.
கொலை நடப்பதற்கான காரணங்கள், சூழ்நிலை, நேரடி சாட்சிகள் மற்றும் கேமிரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால்தான் ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு