பட மூலாதாரம், Getty Images
மே, 2018… ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்கிறார் ஜஸ்டின் லாங்கர்.
முதல் பத்திரிகையாளர் சந்திப்பில், “களத்தில் உங்களுக்கான பெரிய சவாலாக எதைக் கருதுகிறீர்கள்?” என்று கேட்கப்படுகிறது.
அதற்கு லாங்கர் கொடுத்த பதில்: “ஒரு உலகக் கோப்பை, இரண்டு ஆஷஸ் என நிறைய பெரிய தொடர்கள் வரப்போகின்றன. ஆனால், அதையெல்லாம் விடப் பெரிய சவால் என்றால், இன்னும் 3-4 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் ஆடும் டெஸ்ட் தொடர்தான். ஏனெனில், நாங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் அணியா என்பதை இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவதை வைத்துத்தான் மதிப்பிடுவோம். என் கரியரைத் (carrier) திரும்பிப் பார்த்தாலும், 2004ம் ஆண்டு நாங்கள் இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தியதுதான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதைப் போன்ற தருணம் என்று சொல்வேன்”
உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களை விடவும் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் மிகப் பெரிய சவால் என்று கூறியிருந்தார் அன்றைய ஆஸ்திரேலிய பயிற்சியாளர். ஏனெனில், இந்தியா அப்படியொரு கோட்டையாக இருந்தது. எந்த அணியாலும் அவ்வளவு எளிதாக இந்தியாவில் தொடரை வென்றிட முடியவில்லை.
அப்படி யாராலும் எளிதில் வென்றிட முடியாத இடமாக இருந்த சொந்த மண்ணில், தற்போது தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி.
சமீபத்தில் இந்தியாவில் ஆடிய 4 டெஸ்ட் தொடர்களில் இரண்டை இழந்திருக்கிறது இந்திய அணி. கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் ‘ஒயிட் வாஷ்’ ஆன இந்திய அணி, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் 2-0 என தொடரை இழந்திருக்கிறது.
ஒரு காலத்தில் இந்திய மண்ணில் கோலோச்சிக்கொண்டிருந்த அணி இப்படி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருப்பது பெரும் விமர்சனம் ஆகியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் பற்றி இது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கம்பீர் பயிற்சியாளர் ஆனதும் இந்தத் தோல்விகள் ஏற்பட்டிருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஆனால், இந்தத் தோல்விகள் கம்பீருக்கு அப்பார்ப்பட்டது என்கிறார்கள் வல்லுநர்கள். ‘சுழற்பந்து வீச்சு மற்றும் அதற்கு எதிரான செயல்பாடு’ அவர்கள் கைகாட்டும் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், இந்திய டெஸ்ட் அணி உள்ளூரில் இந்த சரிவை சந்தித்திருப்பது நீண்ட காலமாகவே மெல்ல மெல்ல நடந்த விஷயம்தான் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
சுழலுக்கு எதிராகத் தடுமாறும் இந்திய பேட்டர்கள்
இந்திய அணியின் இந்த மிகப் பெரிய சரிவுக்கு மிக முக்கியக் காரணமாக பெரும்பாலானவர்கள் சொல்வது சுழற்பந்துவீச்சுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் செயல்பாட்டைத்தான்.
இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை இழக்கும்போதெல்லாம் அங்கு எதிரணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலித்திருப்பதைக் காண முடியும்.
இந்த தென்னாப்பிரிக்க தொடரில் 2 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை சைமன் ஹார்மரிடம் இழந்தது இந்தியா. முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஹார்மர், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.
அதேபோல், 2024 புனே டெஸ்ட்டில் மிட்செல் சான்ட்னர் (13 விக்கெட்டுகள்), மும்பை டெஸ்ட்டில் அஜாஸ் பட்டேல் (11 விக்கெட்டுகள்), 2023 இந்தூர் டெஸ்ட்டில் நாதன் லயான் (11 விக்கெட்டுகள்), 2017 புனே டெஸ்ட்டில் ஸ்டீவ் ஓ’கீஃப் (12 விக்கெட்டுகள்) போன்ற ஸ்பின்னர்கள் இந்தியாவை வீழ்த்த தங்கள் அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கியிருக்கிறார்கள்.
கவுஹாத்தி டெஸ்ட் போட்டியின்போது, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிய அளவு தடுமாறியிருப்பது பற்றி தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்தனர். அப்போது, இந்திய மண்னில் சுழலுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் சராசரி வெகுவாகக் குறைந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, தன்னுடைய யூ-டியூப் சேனலில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூட இதைப் பற்றிப் பேசியிருந்தார். “சுழலுக்கு எதிராக ஆடுவதில் தற்போது நாம் சிறந்த அணி இல்லை. பல மேற்கத்திய அணிகள் நம்மை விட சிறப்பாக சுழலை எதிர்கொள்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
இது கடைசி 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்னையா?
இந்த 5 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்தியா பெரும் தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும், இது வெகுநாள் முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், “2012ம் ஆண்டு இந்திய அணியில் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான் பேட்டர்கள் இருந்த காலத்திலேயே சுழலுக்கு எதிரான சரிவு தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணி இங்கு (இந்தியா) வந்து ஆடியபோதும் பனேசரும், ஸ்வானும் அந்தத் தொடரில் இந்தியாவைப் பந்தாடினார்கள். ஏன், இங்கிலாந்து ஆடுகளங்களில் மொயின் அலி கூட ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகள் (சவுதாம்ப்டன் 2018) எடுத்தார். இப்படி வெளிநாட்டு ஸ்பின்னர்கள் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும்போதெல்லாம் இந்திய பேட்டர்கள் தடுமாறியிருக்கிறார்கள்” என்றார்.
மேலும், 2012ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் தொடரை வென்றபோது, அவர்கள் கைப்பற்றிய 58 விக்கெட்டுகளில் 37 விக்கெட்டுகளை கிரீம் ஸ்வான் (20 விக்கெட்டுகள்) மற்றும் மான்டி பனேசர் (17 விக்கெட்டுகள்) இருவருமே கைப்பற்றியிருந்தார்கள் என்றும் அப்போதிருந்தே சுழலுக்கு எதிரான செயல்பாடு சரியத் தொடங்கிவிட்டது என்றும் கூறுகிறார் நானீ.
2012ல் பெற்ற தோல்விகளால் ஏற்பட்ட மாற்றம்
நானீ குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து (2011) மற்றும் ஆஸ்திரேலிய (2011-2012) சுற்றுப்பயணங்களில் இரண்டு டெஸ்ட் தொடர்களிலுமே 4-0 என வைட்வாஷ் ஆனது இந்தியா. வெளிநாடுகளில் தொடர்ந்து 8 போட்டிகளைத் தோற்றதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அந்தப் போக்கை மாற்ற விரும்பியதாகக் கூறுகிறார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.
“வெளிநாடுகளில் வெற்றி பெறவேண்டும் என்பதால், அதற்கேற்ப நம் வீரர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக, ரஞ்சி கோப்பை விளையாடும் ஆடுகளங்களில் குறைந்தது 4-6 மில்லிமீட்டர் உயர புற்கள் வளர்க்க வேண்டும் என்று பிசிசிஐ ஆணையிட்டது. குளிர்காலங்களில் அப்படியான ஆடுகளங்களில் ஆடும்போது பந்து நன்கு நகரத் தொடங்கியது. அதனால் அணிகள் வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கின” என்று அவர் கூறினார்.
இது சுழற்பந்துவீச்சாளர்களின் பயன்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார். “வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கிட்டத்தட்ட முதல் 45-50 ஓவர்கள் பந்துவீசினார்கள். அடுத்து 80வது ஓவர் முடிந்து புதிய பந்து பயன்பாட்டுக்கு வந்தவுடன் மீண்டும் அவர்களே பந்துவீசினார்கள். இடையே ஓவர்களை வேகமாக முடிக்கவே ஸ்பின்னர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதனால் அவர்களது செயல்பாட்டில் தேக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு போன்ற ஒருசில இடங்களைத் தவிர்த்து சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் எங்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை” என்றும் வித்யுத் சிவராமகிருஷ்ணன் கூறினார்.
நானீயும் இந்த மாற்றம் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வெற்றி பெறவேண்டும் என்ற தேடல் இந்தியாவில் பல வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது என்றும், அதைவைத்து இந்தியா வெளிநாடுகளில் பல வெற்றிகளைப் பெற்றது என்றும் கூறிய அவர், அதுவே சுழலுக்கு எதிரான செயல்பாடு சறுக்கக் காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘ஸ்வீப் ஷாட்கள் எங்கே?’
இந்தியாவின் இந்த சரிவுக்கு, தேர்வு செய சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்கு ஆடக்கூடிய வீரர்களைத் தேர்வு செய்யாததையும் ஒரு காரனமாக வித்யுத் கூறுகிறார்.
“சுழற்பந்துவீச்சை ஆடுவதற்கு கட், ஸ்வீப் போன்ற ஷாட்களை நீங்கள் நன்கு ஆடவேண்டும். பந்து அதிகம் திரும்பும் ஆடுகளங்களில் அதிகம் ஸ்வீப் ஆடவேண்டும். ஆனால், இந்த இந்திய அணியில் அதிகம் ஸ்வீப் ஆடக்கூடிய வீரர்களே இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் விளையாடும் எந்த அணியுமே ஸ்வீப் ஷாட்டை பெரிய ஆயுதமாகக் கையில் எடுப்பார்கள். 1987 உலகக் கோப்பையிலேயே இங்கிலாந்து அதைத்தான் செய்திருக்கும். இப்போது தென்னாப்பிரிக்கா கூட அதைத்தான் செய்தது. இந்த கவுஹாத்தி டெஸ்ட் போட்டியில் ஸ்டப்ஸ் – டி சார்ஸி இணை பெரும்பாலான ரன்களை ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம்தான் எடுத்தார்கள்.
ஆனால், இந்திய பேட்டர்களோ அப்படி ஸ்வீப் ஆடுவதில்லை.
இதுகுறித்துப் பேசிய வித்யுத், இந்தியாவில் சிறப்பாக ஸ்வீப் ஆடிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியதை குறிப்பிட்டார். “இந்தியாவில் நன்கு செயல்பட்ட வீரர்களைப் பாருங்கள்… லாரா, ஹெய்டன், குக், ஆண்டி ஃப்ளார் போன்ற அனைவருமே நன்கு ஸ்வீப் ஆடக்கூடியவர்கள். அதிலும் ஆண்டி ஃப்ளார் அப்போதே ரிவர்ஸ் ஸ்வீப் கூட சிறப்பாக ஆடுவார். இந்தியா ஏ அணிக்காக நான் அவருக்கு எதிராக ஒருமுறை ஆடினேன். நான் அவருக்கு வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளில், அவர் நான்கில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். இந்தியாவில் அப்படி ஸ்வீப் ஆடுவது அவசியம். அப்படியான வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
“கருண் நாயர், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால், அவர்களுக்கு இந்திய மண்ணில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
அதேசமயம், இப்போது டி20 போட்டிகளில் வீரர்கள் அதிகம் ஆடிப்பழகிவிட்டதால், அவர்கள் ஸ்வீப் ஆடுவதற்குப் பதிலாக வேறு வழிகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார் நானீ. “இப்போதெல்லாம் ஸ்வீப் ஆடவேண்டிய இடத்தில், கிரீஸுக்கு வெளியே வந்து மிட்விக்கெட் திசையில் பௌண்டரி அடிக்கப் பார்க்கிறார்கள்” என்கிறார் அவர்.
ஸ்வீப் ஆடுவது ஒரு கலை என்று குறிப்பிடும் நானீ, அதை தொடர்ச்சியாகச் செய்ய நன்கு பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
இங்குதான் அடுத்த கேள்வி எழுகிறது… ஏனெனில், நானீ வித்யுத் இருவருமே இப்போது வீரர்களிடம் அதற்கான நேரம் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
‘தொடர் போட்டிகள், டி20 மோகத்தால் பயிற்சி செய்ய நேரமில்லை’
கடந்த சில ஆண்டுகளாகவே வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதாலும், டி20 போட்டிகளின் மோகம் கூடிவிட்டதாலும், டெஸ்ட் போட்டிகள் மீதான முக்கியத்துவமும், அதற்குத் தயாராவதற்கு செலவு செய்யப்பட்ட நேரமும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நானீ, வித்யுத் இருவரும்.
“டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பிறகு வீரர்களின் ‘பேட் ஸ்பீட்’ (பந்தை அடிக்கும் வேகம்) கூடிவிட்டது. அதனால் தடுப்பாட்டக் கலை போய்விட்டது. மிட் ஆன், மிட் ஆஃப் பகுதிகளில் சிங்கிள் எடுப்பதே ஒரு கலை. அதையெல்லாம் இப்போது பார்க்க முடியவில்லை” என்கிறார் நானீ.
அதேசமயம், வீரர்களின் ஷாட் தேர்வுகளை மட்டும் அவர் காரணமாகச் சொல்லவில்லை. இந்த டி20 மோகத்தால் ஏற்பட்டிருக்கும் அதீத போட்டிகள் கொண்ட அட்டவணையையும் அவர் கைகாட்டுகிறார்.
இதுபற்றிப் பேசிய அவர், “இப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு வந்தது. இதுபோன்ற சிறிய இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளுக்குத் தகவமைத்துக்கொள்வது எளிதல்ல. இப்படியான குறுகிய இடைவெளிக்குப் பின் ஃப்ளாட்டான ஆடுகளங்களில் பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், சவாலான ஆடுகளங்களில் கடினம். அதுவும் குறிப்பாக இந்த எஸ்ஜி பந்து நல்ல சீம் கொண்டது, ஸ்பின்னர்களுக்கு நல்ல கிரிப் (grip) கொடுக்கும்” என்று குறிப்பிட்டார்.
இதே காரணத்தைச் சொல்லும் வித்யுத், இப்படி வீரர்கள் ‘ஷார்ட் ஃபார்மட்’ போட்டிகளில் அதிகம் விளையாடும்போது, அவர்கள் கடினமான டெஸ்ட் சூழலுக்கு தயாராவதற்கான அவகாசம் கிடைப்பதில்லை என்கிறார். அதேசமயம், இந்த கடின அட்டவணைக்கு நடுவே சிறப்பாக தயாராகும் வீரர்களால் தாக்கம் ஏற்படுத்த முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கு வாஷிங்டன் சுந்தரை ஒரு உதாரணமாகச் சொல்கிறார் வித்யுத். “இந்த தென்னாப்பிரிக்க தொடரில் யார் சிறப்பாக பேட்டிங் செய்தது என்று பாருங்கள்… வாஷிங்டன் சுந்தர் தான் நன்கு சுழலை எதிர்கொண்டார். ஏனெனில் அவர் (தமிழ்நாடு) முதல் டிவிஷன் போட்டிகளில் தொடர்ச்சியாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடியிருக்கிறார். அவர் ஆடும் எம்ஆர்எஃப் அணி சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடும் அணி. அங்கு தொடர்ச்சியாக அவர் ஆடி தயாரானதன் விளைவை இந்த டெஸ்ட் தொடரில் பார்க்க முடிந்தது” என்று கூறினார் அவர்.
இந்தத் தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன்கள் (124) அடித்ததும், அதிக பந்துகள் (310) சந்தித்ததும் வாஷிங்டன் சுந்தர் தான். அவரையும் ராகுலையும் (217) தவிர வேறு எந்த இந்திய பேட்டரும் இந்தத் தொடரில் 200 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை.
வாஷிங்டனின் அணுகுமுறையைப் பாராட்டிய நானீ, வித்யுத் இருவருமே சொல்லும் முக்கிய விஷயம், பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் ‘தடுப்பாட்ட கலை’யை இழந்துவிட்டார்கள் என்பதுதான். அதில் சிறந்து விளங்கியதால் தான் வாஷிங்டனால் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடமுடிந்தது என்று இருவரும் ஒரேபோல் சொல்கிறார்கள். இந்த பிரச்னைக்குப் பின்னால் டி20 போட்டிகளின் தாக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
இப்போது ஏன் இந்த விஷயம் பெரிதாகிறது?
சுழலுக்கு எதிரான இந்தியாவின் பிரச்னை 2012ல் இருந்தே தொடங்கிவிட்டது என்றால், கடந்த சில ஆண்டுகளாக மட்டும் அது அதிகம் கவனம் பெறுவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை ஒரு காரணமாகச் சொல்கிறார் நானீ.
“முன்பெல்லாம் இந்திய ஸ்பின்னர்கள் இந்தியாவில் நன்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் அது இந்திய பேட்டர்களின் தடுமாற்றத்தை ஓரளவு மறைத்துக்கொண்டிருந்தது. உதாரணமாக இந்தியா 265 ரன்கள் எடுத்தால், எதிரணியை 170 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துவிடுவார்கள். அஷ்வினும், ஜடேஜாவும் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். ஆனால், இப்போது அதே தாக்கம் இல்லை. அதனால் இப்போது முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக வருவதில்லை. அதனால் பேட்டிங் பிரச்னையும் பூதாகரமாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பந்துவீசவேண்டும் என்பதையே இந்திய பௌலர்கள் மறந்துவருவதாகக் குறிப்பிட்டார் அவர்.
“இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு ஸ்பின்னர்கள் நன்கு தயாராகி வருகிறார்கள். இந்திய சூழ்நிலையை நன்கு உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ப பந்துவீசுகிறார்கள். சைமன் ஹார்மர் கவுஹாத்தியில் அதை மிகச் சிறப்பாகச் செய்தார். முதல் இன்னிங்ஸில் சற்று மெதுவாகப் பந்துவீசிய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் அதைவிட வேகமாகப் பந்துவீசினார். அதற்கேற்ப அவருக்கு விக்கெட்டுகளும் கிடைத்தன” என்றார் நானீ.
முதல் டெஸ்ட்டுக்குப் பின் தன் யூ-டியூப் சேனலில் பேசியிருந்த அஷ்வின் கூட இந்த வேரியேஷன்களை பற்றிப் பேசியிருந்தார். “முதல் போட்டியில் ஜடேஜாவின் வேக அலைவரிசை (speed bandwidth) 90-95 kmph ஆக இருந்தது. ஆனால், ஹார்மரின் அலைவரிசையோ 80 முதல் 94-95 kmph வரை இருந்தது. அவர் அந்த அளவுக்கு தன் வேகத்தில் வேரியேஷன் காட்டினார்” எனக் கூறினார் அஷ்வின்.
இதைத்தான் இந்திய ஸ்பின்னர்கள் தற்போது தவறவிடுவதாக நானீ குறிப்பிட்டார். “அஷ்வினே இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசித்தான் விக்கெட்டுகள் எடுத்தார். வெறுமனே திரும்பும் ஆடுகளங்களில் ஆடினால் விக்கெட்டுகள் கிடைக்காது. அஷ்வின் வெளிக்காட்டிய அந்தத் திறனை இப்போது இந்திய ஸ்பின்னர்களிடம் பார்க்க முடியவில்லை” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
வெற்றிப் பாதைக்குத் திரும்ப என்ன செய்ய வேண்டும்?
சுழலுக்கு எதிரான இந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டு வர, இந்தியா மறுபடியும் சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்குத் திரும்ப கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்யலாம் என்று நம் வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வீரர்கள் ரஞ்சி போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது முக்கியம் என்று சொல்கிறார் நானீ. அதேபோல்,”ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்களைக் கண்டறிவதை நான் வரவேற்கிறேன். ஆனால், அதை வீரர்களைக் கண்டறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடியாக அங்கிருந்து அணிக்குள் கொண்டுவந்துவிடாமல், அவர்களை உள்ளூர் போட்டிகளில் நிறைய ஆடவைத்து, அங்கு நன்றாக செயல்படும்பட்சம் தேசிய அணிக்குள் வேகமாகக் கொண்டுவரலாம்” என்று அவர் கூறினார்.
இதற்கு வழிவகுக்கும் விதமாக, அட்டவணையும் அமைய வேண்டும் என்கிறார் வித்யுத். போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அதற்குத் தயாராவதும் முக்கியம் என்று அவர் கூறினார். சமீபத்தில் தமிழ்நாடு அணி ரஞ்சி போட்டிகளில் தடுமாறுவது பற்றிப் பேசியிருந்த அஷ்வின் கூட இதே கருத்தை முன்வைத்திருந்தார்.
இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாகக் கையாளும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். “ஹோம் மேட்சுகளுக்கென்று கூட குறிப்பிட்ட சில வீரர்களை தேர்வு செய்வது நல்லதாக இருக்கும். அவர்களை வெளிநாட்டு ஆடுகளங்களில் ஆடவைக்க வேண்டாம். இந்தியாவில் ஆடும் போட்டிகளில் மட்டும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்” என்று ஒரு யோசனை சொல்கிறார் அவர்.

அதேசமயம், எல்லா வீரர்களுமே ஸ்வீப் போன்ற விஷயங்களை மேம்படுத்த தனியாக உழைக்க வேண்டும் என்கிறார் நானீ. அதற்கு உதாரணமாக 1998ல் சச்சின் செய்த ஒரு விஷயத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“1998ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஷேன் வார்னே உலக கிரிக்கெட்டில் கோலோச்சத் தொடங்கிய நேரம். ஆனால், சச்சினோ அப்போதே சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். இருந்தாலும், வார்னேவுக்காக அவர் தனியாகப் பயிற்சி எடுத்தார்.
முதல் போட்டி அப்போது சென்னையில் நடக்கவிருந்தது. அதற்கு முன்பாக சென்னை வந்தார் சச்சின். முன்பே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனை அழைத்து அவர் பயிற்சி செய்ததை நானே பார்த்திருக்கிறேன். லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒரு ‘Rough’ உருவாக்கி, பந்தை அங்கு பிட்ச் செய்யச்சொல்லி தினமும் 4 மணி நேரம் வரை இரண்டு மூன்று தினங்கள் அவர் பயிற்சியெடுத்தார். அந்தப் போட்டியில் அவர் 155 ரன்கள் எடுத்தார்” என்று சொன்ன நானீ, அதேபோல், இன்றைய இளம் வீரர்களும் மூத்த வீரர்களை அணுகி தங்களின் பிரச்னைகளுக்கு விடை காணவேண்டும் என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்திய அணி அறிந்திருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார். “ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆடுகளமும் எப்படியிருக்கும் என்று நமக்கு நன்கு தெரியும். பெர்த் என்றால் வேகமும், பவுன்ஸும் கூடுதலாக இருக்கும். சிட்னியில் பந்து திரும்பும், அடிலெய்டில் பேட்டிங் நன்றாக இருக்கும். இதுபோல், இந்திய ஆடுகளங்களுக்கும் இதுதான் தன்மை என்று நாம் அறிந்திருக்கந் வேண்டும். அப்போதுதான் சொந்த மண்ணில் ஆடும் போட்டிகளிலும் அது கொஞ்சம் சாதகமான அம்சமாக இருக்கும்” என்றும் நானீ கூறினார்.
அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் எப்போது?
இந்தியா அடுத்து சொந்த மண்ணில் 2027ல் தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2027 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. அதற்கு முன் 2026ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் (ஆகஸ்ட் மாதம்), நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் (அக்டோபர் – நவம்பர்) விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டிகள் முறையே இலங்கையிலும் நியூசிலாந்திலும் நடக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு