”திருமணம் செய்வித்து அனுப்பிவிடு. இத்தனை பேரை வீட்டில் வைத்துக்கொண்டால் எப்படி என பலர் கூறினர். இன்று என் நான்கு பிள்ளைகளுக்கும் அரசு வேலை உள்ளது. எங்களுக்கு இப்போது எந்தக் குறையும் இல்லை.”
கணவர் இறந்த பிறகும், கூலி வேலைக்குச் சென்று, கஷ்டப்பட்டு நான்கு மகள்களையும் படிக்க வைத்து அரசு ஊழியர்களாக ஆக்கிய தாய் கௌரம்மா பெருமையுடன் சொன்ன வார்த்தைகள் இவை.
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம், புங்கனூருக்கு அருகிலுள்ள வேபமாகுலபல்லே கிராமத்தைச் சேர்ந்த கௌரம்மா – முனிவெங்கடப்பா தம்பதிக்கு நான்கு மகள்கள்… வீணா குமாரி, வாணி, வனஜாக்ஷி, மற்றும் ஷிரிஷா.
அவர்களின் சிறுவயதிலேயே தந்தை இறந்தபோதிலும், தாயின் உழைப்பு வீணாகாமல், போட்டிபோட்டுப் படித்து, நான்கு பேரும் அரசு வேலைகளைப் பெற்றுள்ளனர்.
மூத்த மகள் வீணா குமாரி, மூன்றாவது மகள் வனஜாக்ஷி ஆகியோர் போலீஸ் கான்ஸ்டபிள்கள். இரண்டாவது மகள் வாணி, கடைசி மகள் ஷிரிஷா ஆகியோர் ஆசிரியர் (SGT) வேலைகளைப் பெற்றனர்.
அரசு வேலைகள் பெற்ற இந்த நான்கு சகோதரிகளின் ஊக்கமளிக்கும் பயணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ‘பிபிசி’ கௌரம்மாவின் வீட்டுக்குச் சென்றது.
கிராமம் எப்படி இருக்கிறது?
வேபமாகுலபல்லே கிராமம் புங்கனூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்தக் கிராமத்தில் சுமார் 30 வீடுகள் உள்ளன. அவற்றில் நடுவில் உள்ளது கௌரம்மாவின் வீடு.
பழைமையான வீடு, அதன் முன்பகுதியில் தகரம் வேயப்பட்ட ஒரு கொட்டகை உள்ளது.
வீட்டுக்கு மேலே செல்ல படிக்கட்டுகள் கூட இல்லை. அந்த வீட்டில் தான் நான்கு மகள்களையும் வளர்த்து ஆளாக்கினார். அவர்கள் வேலைகளைப் பெற்ற பிறகு, இருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
அவருக்குச் சில விவசாய நிலங்களும் உள்ளன. இருப்பினும், அவர் கூலி வேலைகளுக்கும் சென்றதாகக் கூறினார்.
தனது மகள்களும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளுக்குச் சென்றதாக கௌரம்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
கணவரை இழந்த பிறகு…
2007-ல் கௌரம்மாவின் கணவர் முனிவெங்கடப்பா உடல்நலக்குறைவால் இறந்தபோது, நான்கு பெண் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியானது.
”என் கணவர் மிகவும் நன்றாகக் கவனித்துக் கொண்டார். ‘என் பிள்ளைகளுக்கு என்ன குறை? ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ அவர்கள்தான் எனக்கு எல்லாம்’ என்று கூறுவார். அவருக்கு 2007-ல் மஞ்சள் காமாலை, பக்கவாதம் வந்து இறந்துவிட்டார். அப்போது என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை. என் அண்ணன், நான் இருக்கிறேன், படிக்க வைக்கலாம் என்றார்” என்று கௌரம்மா நினைவுகூர்ந்தார்.
கூலி வேலைக்குச் சென்றபடியே பிள்ளைகளைப் படிக்க வைத்ததாகக் கூறிய அவர், நான்கு பெண்களில் மூத்தவரான வீணா குமாரி தனக்குத் துணையாக நின்றதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் வேலை பெற்றதாகவும் கூறினார்.
”எனக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் படிக்க வைத்தேன். என் பிள்ளைகளும் என்னைப் புரிந்துகொண்டனர். மூத்த மகள் வீணா குமாரி நன்றாகப் படிப்பாள். (கிராமத்திற்கு) வெளியே உள்ள பள்ளிக்குச் செல்லுமாறு சொன்னால், அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள். ‘நம் நிலைமை சரியில்லை, என் தங்கைகள் படிக்கட்டும்’ என்பாள். கூலி வேலைக்குப் போன பிறகு கல்லூரிக்குச் செல்வாள். கான்ஸ்டபிள் வேலை கிடைத்தது. நாங்கள் அனைவரும் பயந்தோம். ‘வேண்டாம்.. திருமணம் செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்’ என்று சொன்னோம். ‘யாரும் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படியே இருப்பேன்’ என்றாள்” என்று கௌரம்மா கூறினார்.
‘தடைகளே படிக்கட்டுகளாக மாறின’
தங்கள் சிறுவயது முதல் எதிர்கொண்ட கஷ்டங்களே நன்றாகப் படிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியை அதிகரித்தன என்கிறார் மதனபல்லேயில் போலீஸ் கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் மூத்த மகள் வீணா குமாரி.
”என் அப்பா இறந்த போது நாங்கள் சிறிய பிள்ளைகள். எங்கள் மாமா ஸ்ரீராமுலு மட்டும் எங்களுக்கு நல்ல ஆதரவாக இருந்தார். ‘ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ நீங்கள்தான் எனக்கு’ என்று கூறினார். எங்கள் மாமனும், எங்கள் அம்மாவும் எங்களுக்குத் துணையாக நின்றனர்” என்றார் அவர்.
அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் படித்ததாக வீணா கூறினார். தாய் ஒரு தோழியைப் போலத் தங்களை ஊக்குவித்ததாக அவர் சொன்னார்.
”நாங்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும் படித்தோம். எங்கள் அம்மா கூலி வேலை அல்லது விவசாயம் செய்வார். ஒரு நண்பரைப் போல எங்களுடன் மிகவும் இயல்பாகப் பழகுவார். நாங்களும் ஒவ்வொரு விஷயத்தையும் எங்கள் அம்மாவுடன் பகிர்ந்துகொள்வோம்.”
தனக்குத் திருமணமான பிறகு, கணவரும் தங்கள் குடும்பத்திற்குத் துணையாக நின்றதாகவும், தனது மூன்று தங்கைகளும் நன்றாகப் படித்து நல்ல வேலைகளைப் பெறத் துணையாக நின்றதாகவும் வீணா குமாரி தெரிவித்தார்.
”எனக்கு 2015-ல் திருமணம் நடந்தது. என் கணவர் ஊக்குவித்தார். அதனால் 2016-ல் என் இரண்டாவது தங்கை வாணிக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பிறகு 2018-ல் வாணிக்குத் திருமணம் செய்து வைத்தோம்” என்று வீணா குமாரி கூறினார்.
‘திருமணம் செய்து அனுப்பிவிடு என தாயிடம் கூறுவார்கள்’
மூத்த மகள் வீணா குமாரிக்கு 2014-ல் பெண் கான்ஸ்டபிள் வேலை கிடைத்த நிலையில், இரண்டாவது மகள் வாணி 2016-ல் ஆசிரியர் ஆனார்.
பெண் பிள்ளைகள் உள்ள குடும்பம் என்பதால், சமூகமும், உறவினர்களும் தங்களை மோசமாக பார்த்ததாகவும், சிலரின் வார்த்தைகள் தங்களை மிகவும் பாதித்ததாகவும் இந்தச் சகோதரிகள் கூறுகிறார்கள்.
‘திருமணம் செய்து அனுப்பிவிட்டால், பெண்கள் நன்றாக இருப்பார்கள்’ என்று பலர் அம்மாவிடம் கூறினர் என்று கௌரம்மாவின் இரண்டாவது மகள் வாணி நினைவுகூர்ந்தார்.
”ஆரம்பத்தில், பெண் பிள்ளைகள் என்பதால் எங்களை மிகவும் குறைவாக மதிப்பிட்டனர். ஆனால், இப்போது வேலை கிடைத்த பிறகு, ‘பெண் பிள்ளைகளாக இருந்தும் சாதித்தார்கள்’ என்று புகழ்கின்றனர். ஆனால், அன்று யாரும் எங்களை ஊக்குவிக்கவில்லை. ‘பெண் பிள்ளைகளுக்கு நீ திருமணம் செய்து வைக்க மாட்டாய், அந்தப் பிள்ளைகளை ஏதோ செய்கிறாய்’ என்று எங்கள் அம்மாவை மிகவும் அவமானப்படுத்தினர். இப்போது என் தங்கைகள் இருவருக்கும் இந்த வருடம் ஒரே நேரத்தில் வேலை கிடைத்ததால், எங்கள் அம்மா மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளார்” என்றார் அவர்.
வங்கி வேலைக்காகப் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட மூன்றாவது மகள் வனஜாக்ஷி, இறுதியில் 2025-ல் கான்ஸ்டபிளாகத் தேர்வானார்.
”நான் 2025-ல் கான்ஸ்டபிளாக தேர்வானேன். ‘உனக்கு வேலை இருந்தால் பாதுகாப்பாக இருக்கும்’ என்று என் அம்மா மிகவும் ஊக்குவித்தார். அம்மாவுக்குப் பிறகு, என் இரண்டு அக்காக்களும் எனக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்குத் திருமணம் ஆன பிறகு, என் அத்தான்கள் சுப்ரமணியம், அனில் குமார் ஆகியோரும் எங்களுக்கு ஆதரவு அளித்தனர்” என்றார்.
அறியா பருவத்தில் தந்தையின் இழப்பு
அனைவரையும் விட இளைய மகளான ஷிரிஷாவும் இந்த ஆண்டு (2025) ஆசிரியர் (SGT) வேலை பெற்றார்.
தனக்கு விவரம் தெரியும் முன்பே தந்தை இறந்துவிட்டதால், அம்மாவும், சகோதரிகளுமே எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு, தன்னை வளர்த்தனர் என்று ஷிரிஷா கூறினார்.
”நான் மூன்றாவது வகுப்பில் இருந்த போது என் அப்பா இறந்துவிட்டார். அப்போது எனக்கு விவரம் கூடத் தெரியாது. என் அம்மா எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் என்னைப் படிக்க வைத்தார்.”
”இப்படிப்பட்ட வீட்டில் பிறந்தது என் அதிர்ஷ்டம். மீண்டும் ஒரு பிறப்பு இருந்தால், இந்த அம்மாவின் வயிற்றில் தான் பிறக்க விரும்புகிறேன்” என்றார் ஷிரிஷா.
கணவர் வீட்டின் ஒத்துழைப்பு
நான்கு சகோதரிகளில் வீணா குமாரி, வாணி ஆகியோருக்குத் திருமணம் ஆகிவிட்டது. கணவர்களின் ஊக்குவிப்பு, மற்ற இரண்டு தங்கைகளையும் நன்றாகப் படிக்க வைக்க உதவியது என்று அவர்கள் இருவரும் கூறுகின்றனர்.
தனக்குக் கிடைத்த மருமகன்கள் மகன்களைப் போலத் தங்கள் வீட்டின் நல்லது கெட்டதை கவனித்துக்கொண்டதாகவும், மற்ற இரண்டு மகள்களும் அரசு வேலைகள் பெறுவதற்கு ஊக்குவித்ததாகவும் கௌரம்மா கூறினார்.
”என் மூத்த மருமகனும் ஒரு போலீஸ்காரர். அவரும் எங்களைப் பற்றி மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டார். இரண்டாவது மகளுக்கும் திருமணம் செய்து வைத்தோம். இரண்டு மருமகன்களும் சகோதரர்களைப் போல இருந்து, எங்களுக்கு மகன் இல்லாத குறையைத் தீர்த்தனர். என் பிள்ளைகளுக்கு சகோதரர் இல்லாத குறையையும், அப்பா இல்லாத குறையையும் தீர்த்தனர்” என்று கௌரம்மா கூறினார்.
‘அத்தையின் உழைப்புக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக மற்ற மகள்களையும் நன்றாகப் படிக்க வைக்க விரும்பினோம்’ என்று இரண்டாவது மருமகன் அனில் குமார் கூறினார். இவரும் ஒரு ஆசிரியர்.
”அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளித்து எங்கள் பங்குக்கு உதவினோம். எங்கள் மாமியார் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், பொருளாதார ரீதியாகச் சிரமங்கள் இருந்தாலும், பிள்ளைகளைப் படிக்க வைத்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தது பெருமைக்குரியது” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு