• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

சக படைப்பாளியையும் ஊக்குவிப்பதே ஓர் எழுத்தாளனின் சிறந்த பணியாகும்!

Byadmin

Nov 14, 2024


கனடா அறிவகம் அதிபர் கா.யோ.கிரிதரன் உரை:
——————————————————-

எழுத்தாளன் தனது படைப்புக்களை மாத்திரமின்றி சக படைப்பாளர்களையும் ஊக்குவித்து, உத்வேகப்படுத்தி பிரசுரப்பதில் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் பணி சிறப்பானது என கனடாவில் நிகழ்ந்த நூல் வெளியீட்டில் கனடா அறிவகம் பாடசாலைகளின் அதிபர் திரு. கா.யோ.கிரிதரன் தெரிவித்தார்.

சக எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புக்களையும், தொகுப்புக்களையும் முன்நின்று இவர் வெளியீடு செய்திருக்கிறார். வடமராட்சி ஒபரேஷன் லிபரேஷன் படுகொலைகள் எம் மண்ணின் வரலாற்றில் பதியப் பட்ட துயர வரலாறு. உலகையே அதிர வைத்த படுகொலைகளின் களம் அது. அக்கொலைகளை நினைவு கூரும் வகையில் எட்டு இளம் கவிஞர்களின் “கல்லறை மேலான காற்று “ எனும் கவிதைத் தொகுதியினை 1988 ம் ஆண்டு தொகுத்தளித்தவரும் இவரே என திரு. கா.யோ.கிரிதரன் தெரிவித்தார்.

கடந்த வாரம் கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரியேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த நவம்பர் 3ம் திகதி நவம்பர் ஞாயிற்றுக்கிழமை மாலை இவ் வெளியீட்டு நிகழ்வு சிறப்புற
நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடா தமிழ் அறிவகம் மாணவர்களால் தமிழ் வாழ்த்துப் பாடலும், கனடா நாட்டு தேசிய கீதமும் பாடப்பட்டது.

இந்நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கினார். அத்துடன் சிறப்புரையை தமிழர் தகவல் ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்கினார்.

வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை புகழ்பெற்ற வானெலி அறிவிப்பாளர் திரு. இளங்குமரன், கனடா தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர் திரு. கா. யோ. கிரிதரன், மற்றும் எழுத்தாளர் திருமதி. சிறி ரஞ்சினி ஆகியோர் வழங்கினர்.

பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை அரசியல் ஆய்வாளர் திரு. திரு. லெனி மரியதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் திரு. மீரா பாரதி அவர்கள் ஆற்றினார். அத்துடன் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை கவிஞர் திரு. அகனி சுரேஷ் அவர்கள் ஆற்றினார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் சிறப்புரையையும், நூலாசிரியரின் ஊடக – எழுத்து பற்றி உலகத்தமிழர் ஆசிரியர் திரு. கமல் நவரட்ணம் அவர்கள் வழங்கினார். கனடாவில் நிகழ்ந்த இந்நூல் வெளியீட்டின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கனடா அறிவகம் பாடசாலைகளின் அதிபர் திரு. கா.யோ.கிரிதரன் மேலும் தெரிவிக்கையில், ஈழப்போரின் வலியைச் சுமந்த அகிலன் திருச்செல்வத்தின் கவிதைகள் நூலைத் தொகுத்தவரும் இவரே. அகிலனின் முதலாவது ஆண்டு நினைவாக 1990 அல்ல ‘மரணம் வாழ்வின் முடிவல்ல’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது.

எழுத்துப் பணிகளில் ஆவணப்படுத்தற் பணிகளில் அதிகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஐங்கரன் விக்கினேஸ்வராவின் பல கவிதைத் தொகுப்புக்கள் 1980களின் இறுதியில் வெளியாயின. இவற்றில் யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவு கூர்ந்து வெளியான “அணையாத அறிவாலயம்” பரந்த கவனம் பெற்ற தொகுப்பாகும்.

வரலாற்றை எழுத்தில் கொண்டு வருவது என்பது இச்சமுதாயத்துக்கு ஒரு படைப்பாளி செய்யும் மகத்தான பணியாகும். இவற்றை ஆவணப் படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.
சமகாலத்தில் நடப்பவைகளின் பதிவுகள் எதிர்காலச் சந்ததியினருக்கு பெறுமதி வாய்ந்த ஆவணங்களாக கை மாற்றப்படுகிறது.

இப்பணியை திரு ஐங்கரன் அவர்கள் ஒரு சமுதாய நோக்கோடு அமைதியான முறையில் பொறுப்போடு செய்து வருகிறார். திரு ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் மூன்று நூல்கள் சமீபத்தில் வெளியாகியிருக்கின்றன. “ இலங்கை இதழியலில் சிவகுருநாதன்”, “ பாலஸ்தீனம் எரியும் தேசம்”, “ ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்” ஆகிய நூல்களே அவை. அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலும் இந்நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப் பட்டிருக்கின்றன. இந்நூல்களின் பேசு பொருள் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன என கனடா அறிவகம் பாடசாலைகளின் அதிபர் திரு. கா.யோ.கிரிதரன் தெரிவித்தார்.

By admin