பட்டாம்பூச்சிகளின் வர்ணங்களில்
லயித்துக் கிடப்பவனல்ல
நட்சத்திரங்களின் ஒளியைத்
தேடித் திரிபவனல்ல
இலைகள் உதிர்வதற்காக
கண்ணீர் சிந்துபவனல்ல
பூக்களின் மலர்தலுக்காக தவம்
கிடப்பவனல்ல
வெடிமருந்து வாசனையை
நுகர்ந்து களிப்பவனல்ல
குழந்தைகளின் அழுகையை
சங்கீதமென்று ரசிப்பவனல்ல
பெண்களின் சதையை
திருட்டுப் பூனையாய் தின்பவனல்ல
புத்தகங்களில் இருளை
நிரப்புவனல்ல
நுகத்தடிகளை ஆபரணங்களென
எவர் மீதும் பூட்ட நினையாதவன்
சாதி நஞ்சை எவருக்கு புகட்டாதவன்
மதவெறியை இருதயத்திலும் மூளையிலும் சுமக்காதவன்
தாய்மொழியை நேசிப்பான் மற்ற மொழிகளைத் தூஷிப்பவனல்ல
தன் இனம் செழிப்பதற்காக
அயல் இனத்தை உரமாக்குபவனல்ல
கடவுள் கற்பனையை சமூகத்தின் குருதியில் கலக்கமாட்டான்
இயற்கையின் உயிரான நீர் நிலம் காற்றில் சுயநலத்தின் பேராசையை நிரப்பமாட்டான்
மனிதனை மனிதனாக வாழ
திரள் சமூகத்தோடு கரங்கள் கோர்த்து
மனிதத்தை எதிர்கால சந்ததிக்காக
விதைத்தே
வாழ்வை எழிலார்ந்த பூவனமாக்க
தன்னையே பலியிட தயங்காதவன்.

வசந்ததீபன்
படம் – LOKO
The post சக மனிதனுக்காக துக்கிப்பவன் | வசந்ததீபன் appeared first on Vanakkam London.