• Wed. Mar 4th, 2026

24×7 Live News

Apdin News

சங்கர் கணேஷ் பிறந்தநாள்: இன்றும் இசை ரசிகர்களை கவரும் 10 சிறந்த பாடல்கள்

Byadmin

Mar 4, 2026


சங்கர் கணேஷ்

பட மூலாதாரம், Instagram

தமிழ் திரையுலகின் இசைத்துறையில் ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் கொடிக்கட்டி பறந்த காலத்தில், தங்களுக்கென தனி பாதை அமைத்து பல வெற்றி பாடல்களை கொடுத்தவர்கள் சங்கர்-கணேஷ். இந்தப் பாடல்களெல்லாம் இவர்களுடையதா எனப் பலரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு, சூப்பர்ஹிட் பாடல்களை இவர்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளர்களாக இருந்தபோது இந்த நண்பர்கள் நட்பால் இணைந்து இருக்கிறார்கள். பின்னர், இருவரும் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். சங்கர் மறைந்துவிட்ட நிலையில், கணேஷ் இன்று (மார்ச் 03) பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அப்பாவின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பத்து பாடல்களை சொல்ல முடியுமா என்று அவருடைய மகனும், நடிகருமான ஸ்ரீயிடம் கேட்டோம்.

இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், கணேஷ் மற்றும்அவரின் மகன் நடிகர் ஶ்ரீ
படக்குறிப்பு, இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், கணேஷ் மற்றும் அவரின் மகன் நடிகர் ஶ்ரீ

”மாமா சங்கர், அப்பா கணேஷ் நட்பு பற்றி, பாசம் பற்றி முதலில் சொல்கிறேன். சங்கர்- கணேஷ் என்ற பெயரை பிரிக்க முடியாத அளவுக்கு இருவரும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள். இத்தனைக்கும் மாமா சங்கர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர், அப்பா பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் அப்பா ரிதம் பிரிவில் இருந்தார். சங்கர் மாமா ஆர்மோனியம் பிரிவில் இருந்தார். இருவருக்கும் இடையே இருந்த நட்பு, இசை மீதான ஆர்வம் அவர்களை சங்கர்-கணேஷ் ஆக ஒன்றிணைத்தது.

இருவருக்கும் இடையே எந்த ஏற்றத்தாழ்வோ, மனக்கசப்போ வந்தது இல்லை. மெட்டு உருவாக்கம், பின்னணி இசை என இரண்டிலும் இருவரும் ஈகோ இல்லாமல் பணியாற்றி காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சேர்த்து மொத்தம் 1,100-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். மகராசி (1967) இவர்கள் இணைந்த முதல் படம். 50 ஆண்டுகளாக இவர்களின் இசை ராஜ்ஜியம் சிறப்பாக இருந்தது. அப்பாவின் பிறந்தநாளில் அவர்கள் இசையில் வந்த எனக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்துகொள்கிறேன்” என்று பிபிசி தமிழிடம் ஆர்வமாக பேச ஆரம்பித்தார் ஸ்ரீ.

By admin