• Sat. Aug 2nd, 2025

24×7 Live News

Apdin News

சங்க இலக்கியப் பதிவு – 50 | சங்க காலத்தில் கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

Byadmin

Aug 1, 2025


 

பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் மதுவினதும் புலாலினதும் மணம் பெருமளவில் வீசுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. நம் பழந்தமிழர் வாழ்வில் கள் காலம் காலமாக இருந்து வந்துள்ளது. பேரரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், தலைவர்கள், குடிமக்கள், முதுவாய் மக்கள் அதாவது நற்சொல் சொல்லும் பூசாரிகள், ஔவையார் போன்ற புலவர்கள் என அனைவருமே தம் வாழ்வியலில் கள் அருந்தி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

பாணர்கள், பொருநர்கள், கூத்தர்கள், புலவர்கள் போன்றோருக்கு அளிக்கும் விருந்தோம்பலிலும், போர் வெற்றியிலும், மக்களின் களிப்புக்காகவும், இறைவனுக்குபலி கொடுக்கவும், நடுகல் வழிபாட்டிலும், போருக்கு முன்னர் மறவர்களை உற்சாகப்படுத்தவும், மன்னரினதும் மக்களினதும் விருந்தோம்பலிலும் எனப் பல வாழ்வியல் நிலைகளில் கள் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இந்தக் கள் எவ்வாறெல்லாம் சங்க இலக்கியங்களில் மணம் வீசி எமது தமிழரின் வாழ்வியலைக் காட்டி நிற்கின்றது என்பதனை இந்தப் பதிவில் நாம் உற்று நோக்கலாம்.

கள் என்பதற்கு களித்தல் என்ற பொருள் கொள்ளலாம். மது என்னும் பொருளில் வெறி நீர், பதநீர், மட்டு, தேன், அறியல், தசும்பு, தேறல், தேன் தோப்பி, நறவு, நனை, மட்டம், பிழி, மகிழ், வேரி, நறவம், மதம் ஆகிய சொற்பதங்களை சங்க இலக்கியங்களில் காணலாம். கள் எனும் பானம் பல பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது. தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள், தோப்பிக்கள், தேக்கள், மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல் எனப் பல வகைகள் உண்டு. நெல்லில் இருந்து பெறப்பட்ட மதுவை நறவு என்றும் தேனில் இருந்து தயாரித்த மதுவை தேறல் என்றும் பூக்கள் பலவற்றோடு குங்குமப்பூ சேர்த்து தயாரித்த மதுவைப் பூக்கமழ் தேறல் என்றும், பல்வகை நறுமணப் பொருட்கள் சேர்த்து தேனுடன் தயாரித்த கள்ளை மணங்கமழ் தேறல் என்றும் அழைத்திருக்கிறார்கள்.

பொருநராற்றுப்படையில்,
“தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நறவு மறுகவும்
தீம் கரும்பொடு அவல் வகுத்தோர்
மான் குறையொடும் மது மறுகவும்” என்று பாடல் வரிகள் வருகின்றன. இது திணை மயக்கத்தைக் குறிக்கின்றது. பண்டமாற்று முறை இங்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு நிலத்தில் வாழும் உயிருக்கு மற்றொரு நிலத்தில் வாழும் உயிர்கள் உதவியாக அமையும். அந்த வகையில் அங்கு குறிஞ்சி நிலத்துக்குரிய தேனாகிய நெய்யோடு கிழங்கையும் கொண்டு போய் விற்றவர்கள், நெய்தல் நிலத்தில் அதற்கு விலையாக மீனின் நெய்யையும் கள்ளையும் வாங்கிச் செல்ல, மருத நிலத்தின் இனிய கரும்போடு அவலையும் கூறு கட்டி விற்றவர்கள் அதற்கு விலையாக முல்லை நிலத்தின் மான் கறியோடு கள்ளையும் வாங்கிச் செல்வதாக வருகின்றது.

இதே பொருநராற்றுப் படையில்,
“பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் வைகல் கை கவி பருகி”
எனவரும் அடிகளின் பொருளானது, குங்குமப் பூவின் வாசம் கமழும் கள் தெளிவை ஏவல் மகளிர் மென்மேலும் வார்த்துத் தந்து கொண்டே இருப்பர். அதை ஒவ்வொரு நாளும் போதும் போதும் என கையால் மறுத்தவாறு பரிசில் பெற வந்த பொருநர் பருகுவார்கள். இவ்வாறாக
பொருநர்கள் பணிப் பெண்கள் கொடுத்த கள்ளினைக் குடித்து மகிழ்ச்சியாக அந்தி நேரத்தில் களித்ததாக வருகின்றது. இதிலிருந்து நாள் தோறும் குங்குமப்பூ மணம் வீசும் கள்ளினை போதும் என மறுத்தவரே கரிகால் வளவனின் விருந்தோம்பல் வேளையில் இந்தப் பொருநர்கள் குடித்தனர் என்பது புலப்படுகின்றது.

இதே போலவே, சிறுபாணாற்றுப்படையில் “நுளைமகள் அரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்ப”
என வரும் அடிகளில் பரதவப் பெண்கள் காய்ச்சிய பழைய கள்ளின் தெளிவைப் பரதவர்கள் பாணர்களுக்கு ஊட்டுவார்கள் என நெய்தல் நில மக்களின் விருந்தோம்பலை காட்சிப்படுத்தும் புலவர், பெண்கள் கள்ளினைக் காய்ச்சி வடித்த செய்தியை இதில் புலப்படுத்துகின்றார்.
இதே இலக்கியத்தில்,
“பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி” என் வரும் அடி கூறுவதாவது, இதன் பாட்டுடைத் தலைவன் நல்லியக் கோடன் என்ற சிற்றரசன் வறுமையில் வாடும் பாணரைக் கண்டதும் பாம்பின் விடம் ஏறியதைப் போன்ற விறுவிறுப்பான மயக்கம் தரும் கள்ளை விருந்தோம்பல் வேளையில் கொடுப்பான் எனக் கூறப்படுகின்றது.

நற்றிணை 293 இல் கயமனார் பாடுவதாவது,
“மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்
பலிக்கள் ஆர்கைப் பார் முது குயவன்”
என வரும் அடிகளில் நீல மணி போலத் தோன்றும் நொச்சியின் பூங் கொத்துகளைச் சூடிக் கொள்ளும் மரபினை உணர்த்தும் குயவன் காளி கோயில் பூசாரி. அவன் பலியாக பெற்ற கள்ளினைக் குடித்துக் கொள்வான். அதன் பின் தெய்வத்துக்கு இட வேண்டிய பலியைப் பற்றி ஊராருக்கு எடுத்துச் சொல்லியபடி இருப்பானென வருகின்றது. இதில் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக இருந்து பலியாக கொடுத்த கள்ளைக் குடிப்பதாகத் தெரிய வருகிறது.

மலைபடுபடாம் என்ற சங்க இலக்கியத்தில் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார்,
“வேய்ப் பெயல் விளையுள் தேக்கட்தேறல்”
என்ற அடியினைப் பாடுகின்றார்.
இந்த நூலில் கூத்தருக்கு விருந்தோம்பும் வேளையில் மூங்கில் குழாய்க்குள் சேமித்த தேனால் செய்த கள்ளின் தெளிவைக் குறைவின்றி மக்கள் கொடுக்க அதை குடித்த பின் நறுமணக் களிப்பில் கூத்தர்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுவதாவது,
“கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய” என வரும் பாடல் தொடரில் பலரும் புகுகின்ற வாயிலில் கள் விற்கும் இடம் காணப்பட்டது. கள் விற்கும் கடைக்கு முன்னால் கொடிகள் அசைந்து ஆடும். வாசலில் சிவந்த மலர்களைத் தூவி இருப்பர். கடையின் முன்னால் புற்களைச் செதுக்கியிருப்பர். அந்த இடத்தில் பெண்கள் கள்ளினைச் சமைத்துள்ளனர்.கள் விற்கும் இடத்திற்கு கள் உண்பார் பலர் வந்தாலும் இல்லை என்று கூறாது கள் வழங்கும் வழக்கம் அக்கால மக்களிடையே இருந்திருக்கின்றது. இதே கருத்தையே, கள் விற்கும் கடைகளுக்கு முன்னால் கொடிகள் நாட்டு வைக்கும் வழக்கம் பட்டினப் பாலையிலும் அகநானூறு பாடல்களிலும் கூறப்படுகின்றது.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரனார் பாடும் போது, குறிஞ்சி நில மக்கள்,
“நீடு அமை விளைந்த தேக்கள் தேறல்”
என வரும் அடியில் நீண்ட மூங்கில்களில் தேன் எடுத்து பக்குவப்படுத்தி கள்ளாகப் பதப்படுத்தி வைத்திருப்பர். அந்த கள்ளின் தெளிவினைத் தம் சுற்றத்தோடு குடித்துக் களிப்பர்.

மலைபடுகடாம் என்ற நூலிலும்
“திருந்தமை விளைந்த தேக்கட் தேறல்”
என்பதில் தேனை மூங்கில் குழாயில் ஊற்றி பதப்படுத்திய பின் உண்டாகும் கள் மிகுந்த சுவையாக இருந்தது என்று குறிப்புகள் இருக்கின்றன.

அகநானூறு 368 ல் பரணர்,
“அம்பணை விளைந்த தேக்கட் தேறல்”
என்று பாடும் அடிகளில் முற்றி முதிர்ந்த மூங்கில் குழாயில் உள்ள கள்ளின் தெளிவை வண்டு மொய்க்கும் ஊரைக் கொண்டுள்ள தலைவன் என வருகின்றது.

அது போலவே, அகநானூறு 157 இல் குமரனார்,
“பகுவாய்ப் பாளை குவிமுனை சுரந்த”
என்பதில் மகளிர் கள் விற்பதும், போருக்குச் செல்லும் வீரர்கள் அந்த கள்ளை மகிழ்வாக அருந்திவிட்டு போர் புரியச் சென்றதையும் இந்த பாடல் எடுத்துரைக்கின்றது.

தோப்பிக் கள் என்பது நெல், தினை போன்றவற்றிலிருந்து தயாரித்த கள்ளாகும். பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
“இல்லடு கள்ளின் தோப்பி”எனவும்,
“திணைக்கள் உண்ட தெறி கோட் மறவர்” என அகநானூறு 224 இல் ஆவூர் மூலங்கிழார் மகனார் கூறும் செய்திகளானது, நெல், தினை போன்றவற்றில் உருவாக்கிய கள்ளினை மக்கள் உண்டு மகிழ்ந்ததைத் தெரிவிக்கின்றன.

அகநானூறு 35 இல் நடுகல் வழிபாட்டில்,
தோப்பிக் கள்ளொடு துருஉப்பலி கொடுக்கும்”
என்ற அடியில் தோப்பிக் கள்ளோடு துருஉ என்னும் செம்மறி ஆட்டை பலி கொடுத்து போரில் இறந்த வீர மறவர்களுக்கு நடுகல் அமைத்து வழிபட்டமை புலப்படுகின்றது.

புறநானூறு 235 இல்
சிறிய கட்பெறினே எமக்கீயும் மன்னே
பெரிய கட்பெறினே”
என ஔவையார் அதியமான் இறந்ததும் அவனின் கொடை, விருந்தோம்பல் பற்றிப் பாடுகின்றார். அதியமான் சிறிய அளவு மது கிடைத்தால் அதனை எமக்கு அளிப்பான். பெரிய அளவு கள் கிடைத்தால் யாம் பாட எமக்கு அளித்து அவனும் உண்பான் என்கிறார் .விருந்தோம்பலில் கல் முக்கிய இடம் பெறுவதை இந்தப் பாடல்களினூடு நாம் காணலாம்.

மக்கள் கள்ளுடன் பல வகை மருத்துவக் குணம் கொண்ட பொருட்களை சேர்த்து உண்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதனால் தீங்கேதும் நேராது வாழ்ந்து வந்துள்ளமை தெளிவாகின்றது.

புறநானூறு 258, 262, 286, 290, 292 போன்ற பாடல்களில் போருக்கு புறப்படும் முன்னர் வீரர்கள் அல்லது அரசர்கள் கள் வழங்கி உற்சாகப்படுத்தியதையும் பின்னர் போர் புரிந்த வீரர்களின் களைப்பினைப் போக்க மதுவை பிழிந்து கொடுத்ததும், ஆட்டுக்கடாய் வெட்டி உணவு கொடுத்தும் உண்டும் மகிழ்ந்திருக்கின்றார்கள். போராற்றி வரும் வெட்சித் தலைவனுக்கும் படை மறவருக்கும் “உண்டாட்டு” என்னும் விருந்தோம்பலை கள்ளோடு சேர்த்து வழங்கி இருக்கின்றனர்.

யவனர் தேறல் என்பது தெளிந்த மதுவைக் குறிப்பதாகும். கிரேக்கர் அல்லது ரோமானியர் கொண்டு வந்த மது யவனர் தேறல் எனப்பட்டது. பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் யவனர் இறக்குமதி செய்த மதுவை பற்றிக் கூறப் படுகின்றது. இன்றும் தமிழ்நாட்டில் அழகன்குளம் மற்றும் அரிக்கமேடுப் பகுதியில் யவனர் கொண்டு வந்த மதுக்குவளைகளின் (amphorae) ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யவனர் தமது மதுவையும், பொன்னையும் கொடுத்து விட்டு “யவனப்பிரியா” என அழைக்கப்படும் மிளகை வாங்கிச் சென்றதாகப் பட்டினப் பாலைக் குறிப்புகள் நமக்கு கூறுகின்றன.

சங்கத்தமிழனுக்கு கள்ளும் இறைச்சியும் முக்கிய பங்காக அவன் வாழ்வில் இருந்திருக்கின்றன. சங்காலத்தில் நமது தமிழனின் வாழ்வியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இந்த கள் என்ற மதுபானம் விளங்கி வந்துள்ளது என்பது வரலாறு கூறும் உண்மை என்பது தெளிவாகின்றது.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 37 | பட்டினப்பாலை கூறும் புலிச் சின்னம் பொறித்த சுங்க முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

By admin