• Thu. Sep 4th, 2025

24×7 Live News

Apdin News

சங்க இலக்கியப் பதிவு -51 | சங்க காலத்தில் கூத்து | ஜெயஸ்ரீ சதானந்தன்

Byadmin

Sep 4, 2025


 

தொன்நெடுங் காலமாகவே உலக மக்கள் தம் பல்வேறு நிலைகளில் களைப்புத் தீரவும் களிப்பூட்டவும் ஆடிப் பாடியே வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதன் நீட்சியாக செம்மாந்து வாழ்ந்த சங்கத் தமிழனின் வாழ்வியலில் கூத்து முக்கிய இடம் பிடித்து வந்திருக்கின்றது. இந்தப் பதிவு, சங்க காலத்தில் நடந்தேறிய பல்வேறுபட்ட கூத்துகளையும், அவை எப்போதெல்லாம் நிகழ்த்தப்பட்டவை எனவும் ஆராய்கின்றது.

பாணர்

பாணர்கள் என்பவர்கள் பாடல்களை இயற்றிப் பாடுபவர்களாகவும் கூத்து ஆடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இவர்கள், தலைவன் தலைவிக்கு உதவுபவர்களாகவும், ஊடலைத் தீர்ப்பவர்களாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். யாழ் மிகவும் வாசிப்பதில் வல்லவர்கள்.
இந்தப் பாணர்களைப் பற்றிய குறிப்பு சிறுபாணாற்றுப்படையில் வருகின்றது.பாணர் எனும் பாடும் கலைஞர்கள் மூன்று வகையாக இருந்திருக்கின்றார்கள். இசைப் பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர் என்பவர்கள். இவர்களில் ஏழு நரம்புகளை உடைய சிறிய யாழை இசைப்பவர்கள் சிறுபாணர் என அழைக்கப்பட்டனர். இந்த சிறுபாணர்களை ஆற்றுப்படுத்த அமைந்த நூல் சிறுபாணாற்றுப்படை ஆகும்.

பாணர்களில், ஆண்களைப் பாணன், பாண்மகன் என்றும் பெண்களைப் பாண்மகள், பாட்டி, பாடினி, விறலி, பாடினிச்சி என்றும் அழைப்பர். விறலி போன்ற பெண்கள், பாடலுடன் ஆடும் வல்லமை பெற்றவர்கள். இவர்கள் தம் கலைத்திறனைக் காட்டி மன்னர்களிடம் பரிசு பெற்றது தெரிய வருகிறது.
பெரும்பாணர் என்று அழைக்கப்பட்டவர்கள் பேரியாழ் என்ற பெரிய யாழை இசைக்க வல்லவர்கள். 21 நரம்புகள் கொண்ட பேரியாழை இவரர்கள் வாசிக்கக் கூடியவர்கள். பத்துப் பாட்டு நூலில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படை இலக்கியம், பாணர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

விறலியர்
பாணர்களுக்குத் துணையாக இருந்து விறலியர் நடனமாடும் பெண்களாக இருந்திருக்கின்றனர். இந்தப் பதிவை வலுவூட்டும் வகையாக நற்றிணை 328 ல் கபிலர்,
“கலம் பெறு விறலி ஆடும் இவ்வூரே” எனப் பாடுகின்றார். கிழங்குகள் வேர் வீழ்த்திக் கீழே இறங்க, தேன் அடைகள் மரக்கிளைகளில் மேலாகத் தொங்கும் குறிஞ்சி நிலத்தில், சந்தன மரம் விகுதியாகக் கொண்ட மலைச்சாரலிலே நல்ல அணிகலன்களை பரிசாக பெறும் விறலியர் களிப்பூட்டும் கூத்தினை ஆடிக்கொண்டிருக்கும் ஊர் இது என வருகிறது. கலம் பெறு விறலி என்றால் ஆபரணங்கள் அணிந்த கூத்தாடும் பெண் அல்லது ஆபரணங்களைப் பரிசாகப் பெறும் கூத்தாடி எனவும் பொருள்படும்.

பொருநர்

பொருநர்களைப் பற்றி பத்துப்பாட்டில் ஒன்றான பொருநராற்றுப்படை மிக விவரமாக கூறுகின்றது. ஒரு பொருநன் இன்னொரு பொருநனைப் பார்த்து எனது வறுமையை நீங்கியது, அது போல நீயும் கரிகாலனிடம் சென்று உன் வறுமை போக்க பரிசில் பெறுக என ஆற்றுப்படுத்தும் நூலாக இந்த நூல் அமைகின்றது. பொருநர்கள் என்பவர்கள் தடாரி அல்லது கிணை என்னும் இசைக்கருவியை இசைத்தும் பாடியும் ஆடியும் நடிக்கும் கலை வல்லுனர் ஆவர். ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என மூன்று வகை பொருநர் இருந்தனர். இந்த நூலில் உள்ள பொருநர் கரிகாலனின் போர்க்களம் பாடியோர். பொருநர் பற்றிய குறிப்புகள், அவர்களின் இசை வாத்தியங்கள், வாழ்க்கை முறை, தொழில் அவர்கள் பரிசு பெறும் முறை என்பன பொருநராற்றுப் படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கூத்தர்

பத்துப் பாட்டு நூல்களில் அமைந்த மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை என்ற நூலில் கூத்தர்கள் பற்றி மிக விரிவாகக் குறிப்புகள் காணப்படுகின்றன. இது கூத்தரை ஆற்றுப்படுத்துவதற்காக அமைந்த நூலாக உள்ளது. இசைக்கருவிகளின் வகைகள், அவற்றின் தன்மைகள், பண்ணமைத்துப் பாடும் தன்மைகள், விளக்கப்படுத்தப்படுகின்றன . இசைக்கருவிகளைப் பெரிய பைகளில் கட்டி எடுத்து வருவதை பலாப்பழங்களைச் சீலையில் இட்டு மூடி வைத்தது போன்று காணப்பட்டது எனப் புலவர் வர்ணிக்கின்றார். இந்தக் கூத்தர்கள் பேரியாழ் இசைக்கும் வல்லவர்கள் என்கின்றார். மொத்தத்தில் கூத்தர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள், இசைக்கும் முறை விவரிக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்கள் நிகழ்த்தும் கூத்துக்கள், அவர்கள் செல்லும் வழியில் சந்திக்கும் நிகழ்வுகள், மக்கள் அவர்களை விருந்தோம்பி உபசரிப்பதையும் கூறுகின்றது.

குழல், குறும்பரந்தூம்பு, தூம்பு, கோடு, தட்டை, பாண்டில், முழவு, ஆகுளி, எல்லரி, பதலை பேரியாழ் போன்றவற்றை இசைத்துள்ளனர். கூத்தர் நாடகம் நடிப்பவராகவும் விறலியர் ஆடிப் பாடுபவராக இருந்திருக்கின்றனர். கூத்தினை மன்னனிடம் செய்து காட்டிப் பரிசு பெற்றிருக்கின்றனர். அரசனை வாழ்த்திப் போற்றும் மரபினராக கூத்தர் வாழ்ந்து வந்துள்ளனர்.
புறநானூறு 29 இல் விழாவிலே ஆடும் கூத்துரை போல வகைவகையாக ஆடிக் கழிவது தான் இவ்வுலக வாழ்வு என்று கூறுவதில் இருந்து விழாக்களில் கூத்தராடுவதை வழமையாகக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகின்றது.

கழைக்கூத்து

கோட்டம் பலவாணர் எனும் புலவர் நற்றிணை 95ல்
கழைபாடு இரங்கப் பல்லியம் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்யிற்று” என்ற வரிகளில் மூங்கில் குழலினது இனிய இசையானது ஒலிக்கவும் மற்றும் பலவகையான (பல்லியம்) வாத்தியங்கள் ஒலி முழங்கவும் ஆடு மகள் கூத்தாடுகின்றாள். அந்த ஆடு மகள் முறுக்குகள் அமைந்த புரி உடைய வலிய கயிற்றில் மேலாக நடந்து செல்கின்றாள். கழை என்றால் மூங்கில் குழாய் ஆகும். மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து கொண்டு கையில் மூங்கில் தடி வைத்தபடி ஆடி கூத்தர் குலப் பெண் வருவதாக இந்த பாடலில் குறிப்புகள் இருக்கின்றன. இந்த கழைக் கூத்து என்பது மக்களை மகிழ்ச்சிப்படுத்தி தமது வறுமையைப் போக்கி நடத்தப்பட்டு வந்த பண்டைய தமிழனின் கூத்துக்கலை ஆகும்.

துணங்கைக்கூத்து

குறுந்தொகை 364 கபிலர் பாடும் இந்த பாடலில்,
“வணங்கு இறைப் பணைத் தோள் எல்வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன”
எனக் கூறுகின்றார். மூங்கில் போன்ற தோள்களை உடைய ஒளி பொருந்திய வளையல்கள் அணிந்த பெண்கள் துணங்கைக் கூத்து ஆடும் நாட்கள் வந்தன என இந்த பாடலின் பொருள் அமைந்துள்ளது. அந்த துணைங்கைக் கூத்தில் வீரர்கள் தம் விளையாட்டுகளை செய்து காட்டி பெண்களை மணந்து கொள்கின்றனர் என வருகின்றது. இது போலவே குறுந்தொகை 31ல் ஆதிமந்தியார்

“மகளிர் தழீஇய துணங்கை யானும்” எனப்படுகின்றார். மகளீர் கூடி ஆடும் துணங்கைக் கூத்திலும் எனது தலைவனைத் தேடினேன் காணவில்லை எனப்படுகின்றார். மகளிர் பலர் சேர்ந்து கைகோர்த்துக்கொண்டு இசையின் துணைகொண்டு ஆடப்பட்ட நடனம் துணங்கைக் கூத்து ஆகும்.
திருமுருகாற்றுப் படையில் போர்க்களத்திலே பேய்ப் பாணியிலே போற்றி, பேய்மகள் பிணம் தின்கின்ற தன் வாயினால் பாடி தன்னுடன் கூடிய பேய் மகளிருடன் கூடித் துணங்கைக் கூத்து ஆடி மகிழ்ந்தாள் என “நிணந்தின் வாயள் துணங்கை தூங்க” எனும் அடியில் வருகிறது.

குரவைக் கூத்து

குரவைக்கூத்து என்பது என்பது பல பெண்கள் சேர்ந்து குலவை ஓசை செய்த பின் பாடிக்கொண்டு வட்டமாகச் சேர்ந்து ஆடும் ஒரு வகைக் கூத்து ஆகும். பொழுது போக்கிற்கும், வெற்றிக் களிப்பிற்காகவும், இறை நம்பிக்கையிலும், போர் தொடங்குவதற்கு முதலும், பயத்தைப் போக்கவும் என பல்வேறு வாழ்வியல் நிலைகளில் இந்த குரவைக் கூத்து ஆடப்பட்டு வந்திருக்கின்றது. குறுந்தொகை 294 இல் அஞ்சில் ஆந்தையார் என்பவர்,
” தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும்”
என் வரும் அடிகளில் கடலில் பலருடன் சேர்ந்து நீராடியும், கானற் சோலையிலே தங்கியிருந்து விளையாடியும், மாலைகள் அணிந்த மகளிர் கூட்டத்தோடு குரவைக்கூத்து ஆடியும் நாம் மகிழ்ந்திருப்போம் என வருகின்றது.
இதுபோலவே மதுரைக்காஞ்சி 615, நற்றிணை 276, ஐங்குறுநூறு 181, அகநானூறு 20, கலித்தொகை102 இலும் மற்றும் சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்ற பெயரிலும் குரவைக் கூத்துப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

குடக்கூத்து

பரிபாடலில் குடக் கூத்து பற்றிய குறிப்பு இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் மாதவி குடக்கூத்து புரிந்ததாக வருகின்றது. இடம் வலமாய் நின்று குடக்கூத்து ஆடுவோனே கோவலா! என வருவதில் மாயோனுக்குரிய ஆட்டமாக குடம் கொண்டு ஆடும் இந்த நடனம் பற்றிய குறிப்பு வருகின்றது. இதுவே பின்னாளில் கரகம் என மாறியது எனலாம். தஞ்சைப் பெரிய கோயிலில் என்றும் குடக்கூத்தின் சிற்பம் உள்ளது.

சிவன் கூத்து
கலித்தொகையில்,
“படுபறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி ஆடுங்கால்”
என வரும் பாடலில் பறை முழக்கத்துடன் பல உருவம் காட்டிக் கொண்டு நீ கொடுகட்டி ஆடும் போதும் உன்னோடு இருக்கும் உமை சீர்படுவாளோ! என கலித்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவன் கூத்து பற்றி வருகின்றது. இதில் சிவனின் மூன்று வகைக் கூத்து அதாவது மூன்று சிவதாண்டவங்கள் பற்றிப் பேசப்படுகின்றது. கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்பவை அவை. அவை கொடுகட்டி என்பது ஒலிமிக்க பறை கொண்டு ஊழிக்காலக் கூத்தையும் பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை எரியச் செய்து அந்த நீற்றைப் பூசி ஆடிய கூத்தையும், கையிலே தலையை ஏந்தி காபாலம் என்ற கூத்தினையும் ஆடிய செய்தி கிடைக்கின்றது. ஆனால் இந்த கடவுள் வாழ்த்து கலித் தொகையில் பிற்காலத்தில் ஏற்பட்ட இடைச் செருகலாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் சிவதாண்டவங்கள் என்பவை சங்க காலத்தில் இருந்ததில்லை.

வள்ளிக் கூத்து

அகநானூற்றில் வள்ளி கூத்து பற்றிய செய்தி வருகின்றது. வீரர்கள் போர் தொடங்கும் முன்னர் ஆநிரைகளை (மாடுகள்) கவரைச் செல்வர். வளைந்து வளைந்து ஆடும் இந்தக் கூத்தினை வீரர்கள் ஆநிரை கவரச் செல்வதற்கு முன்னர் நாட்டிற்கு வளமும் வெற்றியும் தருமாறு வேண்டி ஆடியிருக்கின்றனர்.

வெறிக்குரவை
புறநானூறு 22 இல் குறுங்கோழியூர் கிழாரால் “சினமாந்தர் வெறிக்குரவை” என வருகின்றது. சினத்துடன் வீரர் வெறியாடுவார்கள். அவர்களின் குரவை ஒலி கடலொலி போல கேட்கும் என இந்த பாடலில் புலவர் கூறுகின்றார்.

அல்லிப்பாவை கூத்து
புறநானூறு 33 கோவூர்கிழார் என்பவர்,
“அல்லிப்பாவை ஆடுவனப்பு ஏய்ப்ப” எனப் பாடுகின்றார். கலை வல்லோன் செய்த அல்லிப்பாவைகள் அல்லிக்கூத்து ஆடும் குறிப்பினைக் காணலாம். தோலில் செய்யப்பட்ட பாவைகளைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுபவை இவை.

குன்றுதோறாடல் திருமுருகாற்றுப்படையில் வேலனை நினைந்து கானவர் குடியினர் என் அழைக்கப் படும் குறிஞ்சி நில மக்கள் அவனை வேண்டி வெறியாடுவர். வெறியாடும் தலைவன் வேலன் எனப்படுவான். அவன் மீது அருள் கொண்டு எழுந்தருளி முருகன் ஆடுவதாக நம்பப்படுகிறது. இதனை “வேலன் வெறியாட்டு” என்பர். இறைவனே வேலன் மீது வந்து அமர்ந்து வாய்மொழியாக அருள்வாக்கு கூறுகின்றான் என்பது குறிஞ்சி நில மக்களுடைய நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது.

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்தில் 11 வகையான கூத்துகள் பற்றி குறிப்பு இருக்கிறது.குரவைக்கூத்து, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, அல்லியம், கொடுகொட்டி, குடைக்கூத்து, குடக்கூத்து, பாண்டரங்கம், துணங்கை, கொம்மை (கும்மி), ஆவலம், குஞ்சிதம் போன்றவை அவை.
அது போலவே மணிமகலையிலும் இந்திர விழாவில் கூத்து நடைபெற்றதையும் திருநங்கைகளால் பேடிக் கூத்து ஆடப்பட்டதும் காணப்படுகின்றது.
சீவக சிந்தாமணியில் வாளமாலை என்ற கூத்து வகை பற்றி கூறப்படுகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் தோன்றிய சில சிற்றிலக்கியங்களான பள்ளு, குறவஞ்சி போன்றவற்றிலும் கூத்து இடம்பெறுகின்றது.

கூத்து என்ற எம் பாரம்பரிய கலைக்கு ஆழமான நெடிய பயணம் உண்டு. இன்றும் அந்தப் பயணத்தை தொடர்ந்து செய்கின்றோம் என்ற பெருமை இருந்தாலும் அதில் தொய்வு ஏற்பட்டு வருவது வருந்தத் தக்கது. இந்தப் பதிவு பண்டைய காலத்தில் எம்முடன் கலந்த கூத்தின் ஒரு அறிமுகம் மட்டுமே. மென்மேலும் கூத்தின் சுவையின்பம் பெறத் தேடத் தூண்டும் பதிவாக இது அமையவேண்டும் என்பதே என் அவா.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 50 | சங்க காலத்தில் கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 37 | பட்டினப்பாலை கூறும் புலிச் சின்னம் பொறித்த சுங்க முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

By admin