14
சங்க கால மக்கள் மரங்களை இறைவனாக வணங்கியும், உடன் பிறந்தவர் போலப் போற்றியும், தமது ஒவ்வொரு நிலையிலும் அவற்றின் பூக்களைச் சூடியும் அதனோடு இசைந்து வாழ்ந்து வந்துள்ளனர். அத்தோடு நீர் நிலைகள் அருகில் மரங்களை வளர்த்து இயற்கையைக் காத்தும் இயற்கை அழிவில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டும் வாழ்ந்து வந்துள்ளமை பல சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் புலனாவதை ஆய்ந்து நோக்குகின்றது இந்தப் பதிவு.
சங்ககாலத்தில் மரங்களை வணங்கும் பண்பு
ஆலமரம், அரசமரம், வேப்பமரம், கடம்பமரம், பனைமரம், வாகைமரம் வில்வமரம் போன்றவற்றை எம் மூதாதையர் வணங்கி வந்திருக்கின்றனர். இதைச் சான்று பகிரப் பல சங்க இலக்கிய பாடல்கள் நமக்கு சாட்சியாகி நிற்கின்றன.
அந்த வகையில் நற்றிணை 303 இல்
” தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை”
என்று தொடங்கும் நெய்தல் நிலத்தில் பாடப்பட்டுள்ள இந்தப் பாடலில், கடலுக்கு அணையாக பனை மரங்கள் இருக்கின்றன. அந்த பருத்த பனை மரங்களில் இறைவன் குடி கொண்டுள்ள இடமாக இருக்கின்றன என வருகின்றது. பழங்காலம் தொட்டு வந்து தங்கி வழிபட்டு அடியவர்க்கு அருளும் கடவுள் இருக்கின்றார் என இந்த பாடலில் வருகின்றது. இன்னும் வேறு சில சங்க இலக்கியப் பாடல்களிலும் இவ்வாறு பனையின் அடிவாரத்தில் கடவுளை நிறுத்தி மக்கள் வழிபடுகின்றனர் என்று வருகின்றது. பனை மரத்தை “அணை மரம்” என்றும் அழைப்பர்
அணை மரம் என்று இதனை அழைப்பதன் காரணம் இது பல கன எடை உள்ள தண்ணீரை அணையாக நின்று தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது ஆகும்.
அடுத்ததாகப் புறநானூறு 199 இல் “கடவுள் ஆலத்துத் தடவுச்சினை பல்பழம்”
என வரும் பாடலில் கடவுள் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் இருந்த பழங்களை உண்டோம் என வருகின்றது. ஆகவே இந்த ஆலமரத்தில் இறைவன் உறைந்துள்ளார் என மக்கள் நம்பியது புலனாகின்றது. அதன் வழி இன்றும் ஆலமரத்தின் கீழ், நாம் சிறு தெய்வங்களை வைத்து வழிபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
அடுத்து அகநானூறு 270 இல் “கடவுள் மரத்த முள்மிடை குடம்பை” என வரும் அடியில், கீழே கடவுள் சிலை இருக்கும் கடவுள் மரத்தில் கூடு கட்டி வாழும் பெண் பறவை என்று பொருள் வருவதால் மரத்தின் அடியில் இறைவனை வைத்து வழிபட்டு வந்தமை புலனாகின்றது.
அடுத்து குறுந்தொகை 87 இல்
“மன்ற மரா அத்த பே எமுதிர் கடவுள்” என்று பாடப்படும் பாடலில்
பொது இடத்தில் உள்ள மரா என்ற கடம்பு மரத்தில் தங்கியுள்ள பிறருக்கு அச்சம் தரும் பழமையான தெய்வம் கொடியவர்களை வருத்தும் என்று கடம்ப மரத்தில் குடிகொண்டுள்ள தெய்வப் பற்றிக் கூறப்படுகிறது.
குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் என மரங்களின் பெயர்களிலேயே ஐவகை நிலங்களையும் தொல்காப்பியர் வகைப்படுத்த இன்றுவரை அப்டியே அழைத்து வருகின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஐவகை நில மக்களும் இயற்கை சார்ந்து வாழ்ந்து வந்தனர். மரங்கள் அவர்களின் உணவாகவும், கூரையாகவும், வழிபாட்டுப் பொருளாகவும், வாழ்விடமாகவும் திகழ்ந்து வந்திருக்கின்றன.
அன்பின் ஐந்திணை என்ற அகத்திணையில் இதே குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் என ஐந்து மரங்களின் பெயர்களும், புறத்திணையில் உள்ள ஆறு திணைகள், வெட்சி, வஞ்சி, உழிஞை, வாகை, காஞ்சி போன்ற மரங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு புறத் திணையிலும் ஒவ்வொரு பூவை மக்கள் அணிந்து செல்வர். அதாவது உதாரணமாக வாகைத்திணையை எடுத்துக் கொண்டால் போரில் வெற்றி பெறுவதை வாகைத்திணை குறிக்கும். அந்த வெற்றியைக் கொண்டாட வாகைப் பூவினை சூடிச் செல்வார்கள்.
மரங்களை உடன் பிறந்தார் போல் போற்றிய சிறப்பினையும் நாம் நற்றிணை 172 ல் காணலாம்.
“நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று அன்னை கூறினள் புன்னையது நலனே” என வருகின்றது.
அதாவது சிறுவயதில் தலைவி தோழியருடன் விளையாடும் போது புன்னை விதைகளை மண்ணுக்குள் புதைத்து விளையாடினாள். ஒரு விதை செடியாக முளைத்து வந்தது. அதற்கு அவளது அன்னை கொடுத்த பாலையும் நெய்யையும் ஊற்றி வளர்த்தாள். இதை கேள்வியுற்ற அன்னை உனது பாலையும் நெய்யையும் ஊற்றி வளர்த்ததால் இது உனது தங்கை ஆகின்றது என்றாள். அன்றிலிருந்து அந்த புன்னை மரத்தைத் தங்கையாக நினைத்து வளர்த்து வந்தாள்.
இவள் காதலித்த தலைவன் அந்த புன்னை மரத்தடியில் சந்திக்க விரும்புகின்றான். அதற்குத் தோழி இந்தக் கதையைக் கூறி “தங்கை பார்க்க அவள் உன்னுடன் காதல் உணர்வில் இருக்க மாட்டாள். இந்த இடத்துக்கு அவள் வரமாட்டாள்” என்று கூறுகின்றாள். ஆக மரங்களை உடன் பிறப்பாக நினைத்து வளர்த்து வந்தமை புலனாகின்றது. இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்வையே நமது சங்கத் தமிழர் அவர்களின் வாழ்வில் கொண்டிருந்தனர்.
அன்றைய சங்கத் தமிழன் சூழலியல் விழிப்புணர்வுடனையே வாழ்ந்து வந்தான் என்பதைப் பல பாடல்கள் எமக்கு உணர்த்துகின்றன.
நற்றிணை 74 இல்
சிறுவீ ஞாழற் பெருங்கடற் சேர்ப்பனை”
என்று வரும் பாடலில் சிறு பூக்களை உடைய ஞாழல் மரங்களைக் கொண்ட பெரிய கடற்கரை நாட்டினன் நமது பாட்டுடைத் தலைவன் எனப் பாடுகின்றார் புலவர். இந்த ஞாழல் மரங்கள் கடற் பெருக்கினை தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்ற சான்றுகள் இல்லாவிடினும் இது சங்க இலக்கியத்தில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. ஞாழல் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியதும், கடலாடும் மகளிர் ஞாழல் பூக்களைக் கொய்து கொண்டு விளையாடியதும், மகளிர் கூத்து ஆடிய போது ஞாழல் பூக்களையும் வைத்து ஆடியதும் குறிப்பிடப்படுகிறது. அத்தோடு வைகை ஆறு அடித்துக் கொண்டு வந்த மலர்களில் ஞாழலும் ஒன்று என்பதும் பாடல்களில் உள்ளன. இது நெய்தல் நிலத்தில் பெருமளவில் இருந்திருக்கின்றது. இதனுடன் சேர்ந்து புன்னை மரங்களும் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனை பொன்னாவரை என்றும் கூறுகின்றார்கள் ஆனால் இதன் பூக்கள் வெண் கடுகு போல் சிறிதாக இருப்பதாகக் குறிப்பிடப்படுவதால் இது பொன்னாவரையாக இருக்க வாய்ப்புக் குறைவாகவே உள்ளது.
மலைபடுகடாம் 396 இல்
“நல் அரை மரா அத்த கடவுள் ஓங்கிய காடு”
என வரும் அடிகளில் நல்ல பெருத்த அடிப்பாகத்தை கொண்ட மரா மரங்களின் நிழலில் இருக்கும் தெய்வத்தன்மை மிகுந்த காடுகள் மன்னன் நன்னனின் நாட்டில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
அடுத்து கடற்கரை ஓரம் முழுக்க புன்னை மரங்கள் நின்று கொண்டு பூக்களைச் சொரிந்து கடல்நாற்றத்தைக் குறைப்பதாக நற்றிணை 94 குறிப்பிடப்படுகின்றது. கடற்பெருக்கை இந்த புன்னை மரங்கள் தடை செய்தது இதன் மூலம் அறியப்படுகிறது.
வையை ஆற்றைப் பற்றிப் பாடும் பரிபாடலில்
“மல்லிகை மௌவல் மணங்கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்”
என்று வரும் பாடலில் ஆற்றுப் பெருக்கை தவிர்க்க மல்லிகை, முல்லை மனங்கமழும் சண்பகம், அல்லி, செங்கழுநீர், தாமரை செவ்வல்லி வெட்சி, மகிழம், குறுக்கத்தி, பாதிரி நல்ல கொத்தாகப் பூத்துள்ள நாகம், நறவம், சுரபுன்னை எனப் பல வகையான மரங்கள், செடிகள் வைகைக் கரை இருமருங்கும் இருந்து மலர்கள் மூலம் மணம் பரப்பின எனக் கூறுவதன் மூலம் இவை அனைத்தும் ஆற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்தியது தெரிய வருகின்றது. வையை ஆறு மோதும் இடத்தில் நாகமரம், தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் என்பன மண் அரிப்பினை தடுத்ததும் இங்கு குறிப்பிடத் தக்கது.
ஆக எமது சங்கத் தமிழர் அன்று மரங்களையே இறைவனாக வழிபட்டு பாதுகாத்து வந்தனர். சூழலைப் பாதுகாத்து இயற்கையையுடனையே தமது ஒவ்வொரு வாழ்வின் நிலையிலும் இசைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் எமது பாரம்பரிய பண்பில் இருந்து தவறுகின்றோம். அண்மைய வேதனை தரும்
மண்சரிவு போன்ற இயற்கைப் பேரனர்த்தம் ஏற்பட அதே சங்கத் தமிழர்களின் வழிவந்தவர்கள் நாமும் கூடக் காரணமாகின்றோம் என்பது மனக்கவலைக்குரிய உண்மையும் ஆகின்றது.
ஜெயஸ்ரீ சதானந்தன்


சங்க இலக்கியப் பதிவு -52 | சங்க காலத்தில் நாழிகைக் கணக்கர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு -51 | சங்க காலத்தில் கூத்து | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 50 | சங்க காலத்தில் கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்