6
“ஆதன்” என்ற வீர மறவரின் பெயர் சங்க காலத்தில் நிறைந்திருந்தது என்பதை மறைக்கவோ மறக்கவோ முடியாது. அதனால் தான் கீழடி, சிவகலை போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் போது பல பானையோடுகளில் ஆதன் என்ற பெயரை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. சங்க காலத்தில் ஆதன் என்று பெயர் கொண்டு வாழ்ந்த மறவர்களின் வாழ்வியலை உற்று நோக்குகின்றது இந்தப் பதிவு.
தொல்காப்பியர் கூறும் ஆதன்
ஆதன் என்ற பெயர் தொல்காப்பியர் காலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வந்தமை அவரது நூற்பாவில் இருந்து அறிய முடிகின்றது. தொல்காப்பியர் கூட “அறிந்திசினோரே, தெரிந்துசினோரே” என இலக்கணக் கருத்துக்களை கூறி, “இதை அறிந்த அறிஞர்கள் கூறுவார்கள்” அல்லது “பழையோர் மொழி” என்று முடிக்கின்றார். தனக்கு முதல் இருந்த இலக்கியங்களை, இலக்கண மரபினை வைத்து அவர் இலக்கணம் எழுதியுள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது. ஆகவே அவருக்கு முதலே ஆதன் என்ற பெயர் புழக்கத்தில் இருந்திருக்கின்றது.
ஆக இந்த ஆதன் என்ற பெயர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.மு இரண்டாம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் இருந்தே தமிழர்களின் பெயராக நிலவி வந்திருக்கின்றது.
ஆதன் என்று சேர மரபினருக்கும் சிற்றரசர்களுக்கும் புலவர்களுக்கும் பெயர் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் ஆதன் என்பது அதிக வழக்கத்தில் இருந்த பெயராகவும் ஆதன் ஆண்பாற் பெயராகவும் ஆதி பெண்பாற் பெயராகவும் இருந்திருக்கின்றது.
அகம்பன்மால் ஆதனார்
ஆதன் என்ற பெயரில் இருந்து ஆதனார் என்று மரியாதைப் பண்பின் நிமித்தம் அழைப்பர். ஆதனார் என்ற சங்க காலப் புலவர்களை நோக்கும் போது,
அகம்பன்மால் ஆதனார் என்று ஒரு புலவர் இருந்திருக்கின்றார்.
இவர் நற்றிணை 81 வது பாடலைப் பாடி இருக்கின்றார். அகம்பன் என்றால் அரசாணைகளையோ, அறிவிப்புகளையோ பொது இடத்தில் மக்களுக்கு அறிவிப்பவன். ஆதன் என்பது இவரது இயற்பெயராக இருக்கிறது.
இந்தப் புலவர் நற்றிணை 81 இல்,
விருந்து அயர் விருப்பொடு
விருந்தினன் அசைஇய
என்று பாடுவதில், தலைவன் போர் முடித்து வெற்றி ஈட்டிய பின்னர் தனது தேர்ப்பாகனிடம் தனது பிரிவால் மனைவி விருந்தினரைப் பேணவில்லையே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். தான் திரும்பிச் சென்றால் மனைவி விருந்தினரை வரவேற்கும் மகிழ்ச்சியை நினைத்து தேரை விரைவில் செலுத்துக என்கின்றான். இதிலிருந்து வீரர்களின் விருந்தோம்பல் பண்பையும் நம் தமிழர்களின் இல்லற வாழ்வியலும் தெரிகின்றது.
கருங்குழலாதனார்
அடுத்து ஆதன் எனும் பெயர் கொண்ட கருங்குழலாதனார் என்னும் புலவர் புறநானூறு 7, மற்றும் புறநானூறு 224 என இரண்டு பாடல்களைப் பாடி இருக்கின்றார் ஆதன் என இயற்பெயர் கொண்டு கருங்குழல் கொண்டமையால் இப் பெயர் ஏற்பட்டது எனலாம். இவரது இரண்டு பாடல்களுமே கரிகால் பெருவளத்தானைப் பாடிய புறத்திணையில் அமைந்திருக்கின்றது.
புறநானூறு ஏழாவது பாடலில் கரிகால் பெருவளத்தானைப் பார்த்து களிற்றுப்படை, காலாட்படை ஆகியவற்றால் பகைவரை அழித்தாய். கட்டு மீறி வரும் நீர்ப் பெருக்கை மண்ணால் அடையாது, மீனால் அடைக்கும் நீர் வளம் செறிந்த பகைவனின் நாடுகளை இப்படி அழித்தாய். எவர்தான் நின்னைத் துணிந்து இனியும் எதிர்ப்பார்கள் எனப் பாடுகின்றார். இவர் புறநானூறு 224 இல் கரிகாலன் இறந்தது குறித்து,
இறந்தோன் தானே அளித்த இவ்வுலகம்
அருவி மாறி அஞ்சுவரக் கருகி
எனப் பாடுவதில் பாணர்களுக்கு பசி தீரக் குடம் குடமாக மதுவும் உண்பித்து அருளானவன். இப்போது ஆநிரைகள் தின்பதற்காக பூவும் தழையும் உதிர்த்து விட்ட வேங்கை மரம் போல அவனது மனைவியார் நிற்கின்றனரே எனப் பாடுகின்றார். இவர் கரிகாலனைப் பாடியதைத் தவிர வேறு ஒரு பாடலும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கரிகாலன் காலத்தில் வாழ்ந்த புலவராகவும் அவனுடன் நெருங்கிப் பழகியவராக இவர் இருந்திருக்கலாம்.
குண்டுகட் பாலியாதனார்
ஆதன் எனும் பெயர் கொண்ட குண்டுகட் பாலியாதனார் எனும் புலவர் புறநானூறு 387 பாடலைப் பாடி இருக்கின்றார். செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி வாழ்த்திப் பாடி இருக்கின்றார்.
கல்லென் பொருநை மணலினும் ஆங்கன்
பல்லூர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவே
என்று பாடுவதில், கனவு போல் நினைக்க நினைவில் வழங்கிய கொடையாளன் செல்வக் கடுங்கோ வாழியாதன். யானை போல வல்ல செல்வக் கடங்கோ வாழியாதன் பொருனை ஆற்று மணலினும், அந்த ஆற்றுப்பாய்ச்சலால் கழனிகளில் விளையும் நெற்களை விடக்கூடிய ஊழிக்காலம் வாழ்வானாக என வாழ்த்துகின்றார்
ஒய்மான் நல்லியாதன்
அடுத்துக் குறுநில மன்னர்களில் ஆதன் என்று பெயர் கொண்ட குறுநில மன்னர்களை நோக்கினால், ஓய்மான் நல்லியாதன் என ஒரு மன்னன் இருந்திருக்கின்றான். இவன் ஒய்மான் வில்லியாதன் என்றும் பெயர் பெறுகின்றான். ஒய்மான் எனும் நாட்டை நல்லியக்கோடன் என்ற அரசனுக்கு பின் ஆண்ட ஒரு குறு நில மன்னன் ஆவான். புறத்திணை நன்னாகனார் என்பவர் இந்த அரசனைப் பற்றி புறநானூறு 376 இல் பாடியுள்ளார்.
இரவினானே ஈத்தோன் எந்தை
அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
என் வருவதில்,
பாணர்கள் தடாரிப் பறையை இசைக்க அதைத் தன் கையில் வாங்கிக் கொண்டு கள்ளும் சூடான இறைச்சியும் கொடுத்துப் பாணரது வறுமை தீர அவ்விரவிலேயே வழங்கித் துயர் துடைத்தான் என வருகின்றது. இவன் சிறுபாணாற்றுப்படை நல்லியக்கோடனின் வழிவந்தவன். நல்லியக்கோடனின் சிறப்பு என்னவெனில் அன்றே விடுக்கும் அருமை என்பர். தாமதிக்காது அன்றே பரிசில்கள் கொடுத்து அனுப்புபவன் நல்லியக்கோடன். அவனின் வழி வந்த ஒய்மான் நல்லியாதனும் இதையே விருந்தோம்பலில் செய்கின்றான்.
புறநானூறு 379ல் இந்த ஓய்மான் நல்லியாதன் இலங்கைக் கிழவோன் எனப் பெயர் பெறுகின்றான். மாவிலங்கை என்னும் குறுநிலத்தை ஆண்டதால் இவனுக்கு இந்தப் பெயர் அமைந்திருக்கின்றது.
நறுநெய் உருக்கி நட்சோறு ஈயா
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என
இவ்வாறு வரும் அடிகள் கூறுவதாவது, நெய்யிலே பொரித்த பன்றித் தசையும் சோறும் பொருநர்க்கு என்றும் தந்து பசி தீர்ப்பவன் என அறிந்து தாயிடத்திலே பாலுண்ணத் தாவி வரும் குழந்தை போல நின்பால் பரிசு பெறும் ஆசை ஏவ இங்கு வந்தேன் என்று ஒரு பொருநன் கூறுவதாக வருகின்றது. இதன் மூலம் இவனது கொடைப் பண்பின் சிறப்பை அறிய முடிகின்றது.
வல்வில் ஓரி அல்லது ஆதன் ஓரி
அல்லது வல்வில் ஆதன் ஓரி
இந்த சிற்றரசன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். வில்வித்தையில் இவன் சிறந்து விளங்கினான் என்பதற்காகவே வல்வில் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு வல்வில் ஓரி எனவும் அழைக்கப்படுகின்றான். கொல்லிமலையையும் அதைச் சார்ந்த நாட்டையும் ஆண்ட குறுநிலத் தலைவன் இவன். ஓரி, பாரி ,காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி போன்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவனே இவன். புறநானூறு 152, 153, 158, 204, அகநானூறு 208, குறுந்தொகை சிறுபாணாற்றுப்படை போன்ற இலக்கியங்களின் மூலம் இவனது வாழ்க்கை வரலாற்றை அறியக் கூடியதாக உள்ளது.
இந்த வல்வில் ஓரி பற்றி புறநானூறு 152 இல் வன்பரணர் எனும் புலவர்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரிகொல்லோ அல்லன் கொல்லோ
என்று பாடுகின்றார். இவன் எய்த ஒரே ஒரு அம்பு யானையை வீழ்த்தி, பின்னுக்கு நின்ற புலியைக் கொன்று மானை உருட்டிப், பின் பன்றியை வீழ்த்தி அதன் பின் இருந்த மரத்தில் ஒளிந்திருந்த உடும்பையும் பதம் பார்த்ததாம். இவன் சாதாரண வேடுவன் போலத் தெரியவில்லை. கழுத்தில் அணிந்திருக்கும் மாலையைப் பார்த்தால் செல்வம் மிகுந்தவன் போல் உள்ளது எனப் பொரருநர்கள் நினைக்கின்றார்கள்.இவன்தான் கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரியோ எனக் கூறிக்கொண்டு அவனைப் போற்றி 21 துறைகளில் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பாட விடாமல் தான் கொண்டு வந்த மான்கறி, தேன், ஆநெய் போன்ற மதுவுள்ள மதுவும் கலந்தூட்டி பொன்னும் மணிகளும் குவித்து அந்தக் காட்டிலேயே கொடுத்த வள்ளல் என்று கூறப்படுகிறது.
அதுபோலவே இதே வன்பரணர்,
புறநானூறு 153 பாடலில்,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாறி வன்கொடை காணிய நன்றும்
என்று இவனைப் போற்றிப் பாடுகின்றார். பொன்னும், மணிகளும், அணிகளும், யானைகளும் மலைபோல அளித்தான் ஆதன் ஓரி. பசி தீர்ந்து பெரு விருந்து உண்டு களித்தனர் பாணர் சுற்றம்.ஆதன் ஓரியிடம் இருந்து பெற்ற பெரும் வளத்தால் நமது பாணர்கள் பசி இல்லாது இருக்கின்றனர். ஆகவே தான் அவர்கள் ஆடலையும் பாடலையும் மறந்தனர் என வன்பரணர் ஆதன் ஓரியின் கொடைச் சிறப்பைக் கூறுகின்றார்.
செல்வக் கடுங்கோ வாழியாதன்
இந்த சேரர் குல மன்னனுக்குப் பல பெயர்கள் உண்டு. சேரமான் கடுங்கோ வாழியாதன், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என இவன் அழைக்கப்படுகின்றான். கடுங்கோ என்பது இயற்பெயர். ஆழி என்றால் கடலுக்குரியவன். ஆதன், சேரன், சேரமான் என்பது சேரர் குடிப்பெயராகும். இவனைப் பற்றி பதிற்றுப்பத்து இலக்கியம் ஏழாம் பத்தில் பத்து பாடல்கள் உள்ளன. புறநானூறு 8, 14, 387 இலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன.
பதிற்றுப்பத்து ஏழாம் பத்தில் கபிலர் இவனை,
புலர்ந்த சாந்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
என்று கூறுவதில்
ஞானவளம் செறிந்த உள்ளம் உடையவனான இவன் எந்த மாசும் அற்றவன். அத்தகைய சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி கபிலர் பத்துப்பாட்டுகளாலே பாடி இருக்கின்றா.ர் பாரி மன்னன் இறந்த பின்னரே இதைக் கபிலர் பாடியுள்ளமையும் சுட்டிக் காட்டப்படுகின்றது. அரசனது கொடை, வெற்றி, செல்வச் சிறப்பு, ஏம வாழ்க்கை அதாவது அச்சமில்லாத வாழ்வு குடிவரலாறு போன்றவற்றைக் கூறி அயிரை மலை என்னும் நெடிய மலை போல் நின் வாழ்நாளும் என்றும் புகழோடு அழிவில்லாது நிலைத்திருப்பாயாக என பாடுகின்றார்.
சேரமான் பெருஞ்சேரலாதன் அல்லது சேரமான் பெருந்தோளாதன்
இவன் வெண்ணிப் பறந்தலைப் போரில் சோழன் கரிகான் பெருவளத்தானுடன் போரிட்டு மார்பிலே அம்பு பாய்ந்து முதுகு வரை சென்றதால் புறப்புண் என நாணி அதிலேயே வடக்கிருந்து உயிர் துறந்தான் எனப் பெண் புலவரான வெண்ணிக் குயத்தியார் பாடுகின்றார். வென்ற சோழன் வெற்றிப் புகழ் பெற்றான். தோற்ற சேரனோ வீரப் புகழ் பெற்றான். கரிகாலனே! வென்ற உன்னை விட வடக்கிருந்து உயிர் விட்ட சேரன் மிகவும் நல்லவன் எனப் பகைவனைப் பாராட்டி சோழனிடம் கூறுகின்றார்.
இதையே புறநானூறு 65 ல் கழாஅத்தலையார் என்ற புலவரும்,
புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள் வடக்கு இருந்தனன் ஈங்கு
என வரும் பாடலில் புண்பட்டு நாணினாய். வாளுடன் வடக்கிருந்தாய். என்னே இக் கொடுமை. முழவுகள் ஒலி அடங்கின. யாழிசை துறந்தன. தயிர் பானைகள் வெறும் பானைகள் ஆகின. சுற்றத்தினர் மதுவை மறந்தனர். உழவர் ஓதையும் அடங்கின. ஊர் விழாவும் ஒழிந்தன. உன்னையும் பகலையும் ஒன்றாகக் கண்டு மகிழ்ந்திருந்தோம். நீ இல்லையானால் இனிப் பகல் தான் நமக்கு எவ்வாறு இன்பமுடன் கழியுமோ எனப் பாடுகின்றார். ஆகவே இந்த சேரமான் பெருஞ்சேரலாதன் மிகச் சிறந்த வீரனாக அறியப்படுகின்றான்.
இவனைப் பற்றி அகநானூறு 55 மாமூலனார் என்ற புலவர்,
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
என்று குறிப்பிடும் செய்தியில், போர்க்களத்தில் புறப்புண் பட்ட நெடுஞ் சேரலாதன் அந்தக் களத்திலேயே ஒரு புறத்தில் வடக்கிருந்தான். இந்தத் துன்பம் தரும் செய்தி கேட்டு சான்றோர் தாமும் அவனுடன் சென்றுவிடும் பொருட்டு தம் உயிர்களை நீத்தனர் எனப் பாடுகின்றார். ஆகவே அவனுடன் சென்று அவர்களும் வடக்கிருந்து உயிர் துறந்தமை இந்தப் பாடல் மூலம் நமக்கு கிடைக்கின்றது.
சேரமான் பெருஞ்சோற்று உதயஞ்சரலாதன்
இவன் தலைச் சங்கத்து அரசன் ஆவான். பாரதப்போரில் பாண்டவருக்கும் கௌரவர்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் உணவு கொடுத்துள்ளான் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இந்தப் பெயர் பெற்றுள்ளான். புறநானூறு 2, அகநானூறு 233, சிலப்பதிகாரம் போன்றவற்றில் இவனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. வானவரம்பன் என்ற பெயரும் இவனுக்கு உண்டு. புறநானூறு 2 இல் முரஞ்சியூர் முடிநாகராயர், தெற்கே கடலும் வடக்கே இமயமும் எல்லையாக இருந்தாலும் மண்ணுலகில் அவனுக்கு வானமே வரம்பாக இருந்ததால் வானவரம்பன் என அழைக்கப்பட்டான் எனக் கூறுகிறார். பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நால் வேத நெறி திரிந்தாலும் மாறுபடாதவர்கள் இவனது சுற்றத்தினர் என்று பாடியுள்ளார்.
அகநானூறு 233 இல் மாமூலனார் புறமுதுகிடாத வலிமை கொண்ட உதியன் சேரலாதன் தன் முன்னோருக்கு பலியாக பெருஞ்சோறு அளித்த வேளை கூளிச் சுற்றங்கள் அந்த பெருஞ்சோற்றை உண்பதற்கு கூடயிருந்தன என்று பாடுகின்றார்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
இவன் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் குமட்டூர் கண்ணனாரால் பாடப் பெற்றான். இவனைப் பற்றி பத்து பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இவன் 58 ஆண்டுகள் அரசாட்சி செய்தான் என்றும் இமயம் வரை செங்கோலாச்சிய சிறப்புக்குரியவன் என்றும் கூறப்படுகின்றது. இதனால் இமயவரம்பன் எனப் பெயர் பெற்றான். இவன் இமயமலையில் வில் பொறித்து, ஆரியரை வென்று, யவனரைச் சிறை பிடித்துக் கொண்டு வந்தவன்.
அகநானூறு 127-ல் மா மூலனார் ஆரியரை அலறத்தாக்கி இமயம் வரை சென்று வில் பொறித்தவன் என்று கூறுகின்றார். வெற்றிக் கொடிகள் அசைந்தாடிக் கொண்டிருக்கும் படையாகிய ஏரைக்கொண்டு பகைவரை எல்லாம் உழுதளித்து வெற்றி கொள்ளும் படை ஏர் உழவன் இவன் என பதிற்றுப்பத்து கூறுகின்றது. போரில் பெற்ற செல்வங்களை எல்லாம் தன் படைகளுக்கும் குடிமக்களுக்கும் வாரி வழங்கியவன். இந்த பாடல்களை பாடிய குமட்டூர் கண்ணனாருக்கு உம்பக்காட்டு பகுதியில் உள்ள 500 ஊர்களை இறையிலி நிலமாக அதாவது வரியில்லாத நிலக்கொடையாக வழங்கினான்.
இன்னும் பல ஆதன் என்ற பெயரில் குறுநில மன்னர்களும் சேர குல மணலும் இருக்கின்றார்கள்.
– சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்- இவன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் தந்தை
-நெடுவேள் ஆதன் – இவன் போந்தை என்ற ஊரை ஆண்ட குறுநில மன்னன் ஆவான்.
-முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்- அகநானூறு 30 பாடிய புலவர்
– ஆதன் அழிசி- பூதப்பாண்டியனின் நண்பனான இவன் குறுநில மன்னன் ஆவான்.
– ஆதனுங்கன்- வேங்கட நாட்டின் குறுநில மன்னன்.
-ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் – சேரன் செங்குட்டுவனின் தம்பி.
-ஆதன் அவினி – பதிற்றுப்பத்து இலக்கியத்தில் முதல் பத்துப் பாடல்களின் தலைவன். ஆதன் தந்தை எனவும் அவினி என்பவன் மகன் எனவும் அறியப்படுகின்றது.
-ஆராத் திருவின் சேரலாதன்- பதிற்றுப்பத்து நான்காம் பத்துப் பாடல்களின் பாட்டுடைத் தலைவன்.
இவ்வாறாக ஆதன் என்ற பெயர் சேரர் குடிப்பேராகவும் அவர்களின் அடையாளமாகவும் இருந்திருக்கின்றது. சிற்றரசர்களுக்கும் புலவர்களுக்கும் பொதுவாகப் புழக்கத்தில் சங்க காலத்தில் இருந்திருக்கின்றது. இந்த ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பல பானை ஓடுகளைத் தமிழ் நாட்டில், கீழடியில் கண்டுபிடித்துள்ளனர். கறுப்பு, சிவப்பு கலந்த மற்றும் தனிச் சிவப்பு நிறப் பானை ஓடுகளில் தமிழி எழுத்துக்களில் இவை காணப்படுகின்றன. இவை கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கணிக்கப்படுகின்றது. 56 பானையோடுகளில் ஆதன் என்ற பெயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல சிவ கலை என்ற இடத்திலும் பல பானையோடுகளில் ஆதன் என்ற பெயர் வரையப்பட்டுள்ளது. ஆதன் என்பது சூரியன், காற்று, வானம், அல்லது பசுக்களை உடையவன் போன்றவற்றைக் குறிக்கிறது என்பது அறிஞர்கள் கருத்தாகவும் இருக்கின்றது. தமிழ் நாட்டில் சிவகங்கைப் பகுதியில் ஆதனூர் என்னும் ஊரும் உள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் யார் எழுதியிருப்பார்கள் என்ற கேள்வி எம்முள் எழ அதனை வடித்துக் கொடுத்த வேட்கோவரும் (குயவர்கள்) அல்லது அந்தப் பானைகளை வாங்கிய உரிமையாளர்களும் அதனை எழுதி இருப்பார்கள் என்ற முடிவிற்கு வரலாம். ஆகவே அன்றைய காலகட்டத்திலேயே கல்விப் பரவலாக்கம் என்பது சமமாக எல்லோருக்கும் இருந்திருப்பதைக் கூட இந்த ஆதன் என்ற சொல் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
ஆதன் என்ற பெயரை வெறுமனே ஒரு பெயராக மட்டும் நாம் பார்க்க முடியாது. அது எமது பண்பாட்டின் தொன்மையும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கின்றது. ஆகவே ஆதன் என்ற பெருமை மிகு பெயரைத் தொடர்ந்து வரும் எம் பரம்பரைகளுக்கும் சூட்டி எமது பண்பாட்டினை நீடூழி வாழ வைக்க வேண்டியதும் எமது கடமையாகின்றது.
ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-53 | சங்க கால மக்களும் மரங்களும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு -52 | சங்க காலத்தில் நாழிகைக் கணக்கர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு -51 | சங்க காலத்தில் கூத்து | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 50 | சங்க காலத்தில் கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்