19
இன்று எகிப்திய மன்னர்களின் பள்ளத்தாக்குக் கல்லறைகளில் (Valley of the Kings) தமிழி எழுத்துக்களில் எழுதப்பட்ட “சிகைக் கொற்றன்” என்ற தமிழ்ப் பெயர் தமிழர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இது எழுதப்பட்டதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
இந்தத் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளின் காலமும் சங்க காலமும் (கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி) ஒத்த காலமாக இருக்கின்றன. இந்தக் காலத்தில் கொற்றன் என்ற பெயர் மிகவும் பிரபலமானதாக வீரத்திலும், கொடையிலும், தமிழ்ப் புலமையிலும் சிறந்ததாக விளங்கி வந்திருக்கின்றது.
சங்ககாலத்தில் கொற்றன் என்ற பெயரில் புகழ் மிக்க சேர மண்ணைச் சார்ந்த சிற்றரசரும், புலவர்கள் பலரும் இருந்திருக்கின்றார்கள் என்பதனைச் சான்றுகளோடு விவரிக்கின்றது இந்தப் பதிவு.
கொற்றன் என்றால் கொற்றம் அதாவது வெற்றி என்று பொருள் படும். சிகை என்றால் மலை அல்லது குகை என்றும் பொருள்படும். ஆக சிகை கொற்றன் என்றால் ஒரு மலை சார்ந்த கொற்றன் என்றும் பொருள் கொள்ளலாம். சங்க காலத்தில் கொற்றன் என்ற பெயரில் மக்கட் பெயர்கள் இருந்திருக்கின்றன. என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. கொற்றம் என்றால் தலைமை, அரசு, அரசன் என்று பொருள்படும். கொற்றன் என்றால் தலைமையானவன், அரசன் என்று கூறலாம். கொற்றன் என்ற பெயரோடு கொற்றனார் என ஆர் விகுதி சேர்ந்ததாகவும் கொண்டு இரு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றது எனவும் கொள்ளலாம். ஆகவேதான் சங்க இலக்கியங்களில் கொற்றன், கொற்றனார் என்று பலருக்குப் பெயர்கள் நிலவி வந்திருக்கின்றன.
முதலாவதாக பிட்டங்கொற்றன் என்ற அரசனைப் பார்க்கலாம். இவன் பிட்டன் என்றும் அறியப்படுகின்றான். பிட்டங்கொற்றன் என்ற அரசன் ஒரு சிற்றரசன் ஆவான். இவன் செய்த கொடைப் பண்பினால் சிறந்த வள்ளலாக சங்க இலக்கியத்தில் போற்றப்படுகின்றான். இவன் வளம் பொருந்திய குதிரைமலைத் தலைவனாக இருந்தான். இந்தக் குதிரைமலை என்பது கொங்கு நாட்டில் உள்ள மலையாகும். இப்போது கேரள மாநிலத்தில் ஏழங்குளம் என்ற இடத்தில் இன்னும் “குதிரைமுகம்” என்ற பெயரில் ஒரு ஊர் உண்டு.
“இனி வாழ்வோர் வாழ்வெல்லாம் இவன் வாழ்க!
என்றும் சிறுமுள்ளும் குத்தாமல் நீடுழி வாழ்க!
எனப் புலவர்களால் வாழ்த்தப் படுகின்றான்.
இவனைப் பற்றி புறநானூற்றில் 5 பாடல்கள் பாடப் பட்டுள்ளன. அதுபோல அகநானூற்றிலும் பிட்டன் என்ற பெயரில் இரண்டு பாடல்களாக மொத்தமாக ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களில் சான்று பகர்கின்றன.
பிட்டு என்ற உணவு வகையால் இவன் இந்தப் பெயர் பெற்றான் என்கின்றனர். இவன் சேர மன்னனின் கீழ் ஆண்டு வந்ததால் சேரமான் கோதை அரசனுக்குப் படைத் துணைவனாக இருந்தான். ஆண்மையிலும் கொடையிலும் சிறந்து விளங்கினான்.
புறநானூறு 168 இல் கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார்,
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடக்கத்து மலர்ந்த காந்தள்
எனத் தொடங்கும் பாடலில் கூர்வேலும், வேங்கை மாலையும் வடித்த அம்பும் கொண்ட வில் வீரர்களின் தலைவனே! கடிய குதிரை உடைய கொற்றனே! பாலை உலை நீராக்கி, சந்தன விறகால் எரித்து, தினை சமைத்துப் புலாலுடன் அகன்ற வாழையிலைலே பலரோடும் உண்பவன். கொடுக்காதவர்கள் நாணத் தமிழகம் முழுதும் கேட்கப் பரிசிலர் உன்னை வாழ்த்திப் பாடுவர் என்கிறார்.
கைவளா ஈகைக் கடுமான் கொற்ற
வையக வரைப்பில் தமிழகம் கேட்ட என அந்த அடிகள் வருகின்றன.
புறநானூறு 169 இல் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடும் போது,
நும்படை செல்லுங்காலை அவர் படை
எடுத்தெறி தானை முன்னரே எனாஅ
என்பதில் உனது படை, போர் மேற்கொள்ளும் போதும் முன்னே நிற்பவன் நீ! பகைவர் பெரும் படையுடன் வரும்போது அணை போலத் தடுத்து நிறுத்தும் மலை போன்றவனும் நீ! பரிசில் தந்து என்னை அனுப்பி வைக்கும் உன் வெற்றி என்றும் நிலைபெற்று வாழ்வதாக! என வாழ்த்துகின்றார்.
புறநானூறு 170 இல் உறையூர் மருத்துவன் தாமோதரனார் பிட்டங்கொற்றனைப் பாடும்போது,
விசைத்து எறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லாளன்னே
என்கிறார். அதாவது பகைவரே! வலிமை பொருந்திய மலைநாட்டுத் தலைவனான கூர் வேலை உடைய பிட்டங்கொற்றனை அணுகாதீர்! அவன் யானைத் தந்தத்தில் விளைந்த முத்தத்தை விறலியருக்கும், கள்ளைப் பாணர்களுக்கும் கொடுக்கும் மென்மையானவன். ஆனால் பகைவர்களுக்கோ கொல்லன் உலைக் களத்திலே அடிக்கும் அடியை ஏற்கும் உலைக்கல் போன்ற வல்ளாளன் என்பதை மறவாதீர் என்கிறார். இதன் மூலம் அவனது மென்மையான குணம் கொண்ட கொடைப் பண்பும் வீரமும் தெளிவாகின்றது.
இது போலவே காவிரிப்பூம் பட்டினத்து காரைக்கண்ணனார் புறநானூறு 171 இல்
இன்று செலினுந் தருமே; சிறுவரை
நின்று செலினும் தருமே; பின்னும்
என்பதில், இன்று சென்றாலும் சில நாள் கழித்துச் சென்றாலும் நாள் தோறும் சென்றாலும் முன்னே தந்தேனே எனக் கூறாது என்றும் எமது உண்கலத்தை நிரப்புவான். கொடுப்பவர் அரிதான இவ்வுலகத்தில் இரவலர் உயிர் வாழுமாறு அவன் திருவடிகள் என்றும் நிலை பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துகின்றார்.
புறநானூறு 172 இல் வட மணக்கண் தாமோதரனார் பிட்டங்கொற்றனைப் பாடும் போது,
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபட ஓம்புக; என்று பாடும் அடிகளில்,
பிட்டனின் வெற்றிவேலும் அவனது தலைவன் சேரமான் கோதையும் நீண்ட காலம் வாழ்வதாக அவன் கொடுத்ததே போதுமானது இனிமேல் எங்கும் நாடிச் செல்ல வேண்டாம். உலை ஏற்றுக! சோறாக்குக! பிறவும் எல்லாம் செய்து மகிழ்க! எனப் பாடுகின்றார்.
இன்னும் பிட்டங்கொற்றன் பற்றி இரண்டு பாடல்கள் அகநானூற்றில் இருக்கின்றன. இதில் பிட்டன் என்று குறிப்பிடப் படுகின்றது.
அகநானூறு 77 இல் மருதனிளநாகனார்,
ஆனா நறவின் வண்மகிள் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
என்று கூறுவதில் தலைவன் தனது பிரிவுத் துயரில் தலைவியின் கண்கள் சேரமானின் படைமறவன் பிட்டங்கொற்றன் தான் வைத்திருக்கும் வேலினைப் பகைவரை எதிர்த்து உயர்த்தும் போது கடுமையான துன்பம் தரும். அதுபோலத் தலைவியின் கண்கள் துன்பம் தருகின்றன என பிட்டங் கொற்றனின் வேலினை ஒப்பிடுகின்றார்.
அகநானூறு 143 இல் ஆலம்பேரிச் சாத்தனார்,
நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்
பொய்யா வாய்வாள், புனை கழல் பிட்டன்
என்பதில் பொய்யாத வாளை ஏந்திய சிறப்பான படைத் தலைவனான பிட்டங்கொற்றனின் குதிரைமலைச் சுனையில் நீல மலர்கள் பூத்திருந்தன. அந்த மலர்களிலிருந்து பனித்துளிகள் சிந்தின. அதுபோலத் தலைவன் “பிரிந்து செல்கிறேன்” என்று கூறிய உடனே தலைவியின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின என்கிறார். இவ்வாறாக இந்த பிட்டங் கொற்றனின் வீரமும், குதிரை மலையின் வளமும், கொடைச் சிறப்பும் இந்த ஏழு பாடல்களிலுமே விரவி வருவதை நாம் காணலாம்.
அடுத்ததாக கொற்றன் என்ற பெயரில் பல புலவர்கள் சங்க இலக்கியங்களை எமக்குப் படைத்திருக்கின்றார்கள்.
1) இருந்தையூர் கொற்றன் புலவன். இருந்தையூர் இவருடைய ஊர். இதே ஊரின் பெயரில் இருந்தையூர் கருங்கோழி மூர்த்தியார் என்னும் சங்கப் புலவர் ஒருவர் இருந்திருக்கின்றார். திருக்கோவிலூர் என்னும் இடத்தில் இருந்தை என்னும் ஊர் இன்றும் இருப்பதை நாம் காணலாம். இவர் குறுந்தொகையில் 335 ஆவது பாடலைப் பாடியிருக்கின்றார்.
திணையை காத்துக் கொண்டிருக்கும் தலைவியை தலைவன் காண முடியாது. ஏனென்றால் வில்லேந்தி அவளது அண்ணன்மார்கள் வருவார்கள். ஆகவே விரைந்து திருமணம் செய்வாயாக எனத் தோழி கூறுவதாகப் பாடுகின்றார்.
உறையூர் முதுகொற்றன்
இந்த அடைமொழி புலவரின் ஊரைக் குறிக்கும். இவரது பெருமையால் முதுகொற்றன் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். கொற்றன், கொற்றனார் என்பவை கூற்றன், கூற்றனார் என்றும் கூத்தன், கூத்தனார் என்றும் ஏடு எழுதுவோரால் பிழை பட எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். ஒரு இடத்தில் உறையூர் முதுகொற்றன் என்றும் இன்னொரு இடத்தில் உறையூர் முதுகூற்றன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் புறநானூறு 331 இல் குறிப்பறிந்து தான் வறுமையில் இருந்தாலும் சில கொடுப்பான், அவனிடம் நிறைய இருக்கும்போது போரில் வெற்றி பெற்ற பின்னர் வெண் சோறு வாரி வழங்குவது போல அள்ளி அள்ளிக் கொடுப்பான் அந்த சிற்றூரின் தலைவன் என்கின்றார்.
செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதம் கொற்றனார்
கொற்றனார் என்பது இவரது இயற்பெயர். செல்லூர் கிழார் என்பவரின் மகனாவார். செல்லூர் என்பது ஆதன் எழினி ஆட்சி செய்த ஊர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சேரனை வென்று வெற்றி தூண் நாட்டிய ஊர் என அகநானூறு 220 கூறுகின்றது.
இவர் அகநானூறு 250 இல், தலைவியும் தோழியும் பேசுவதாகப் பாடுகின்றார். நாம் கடலில் விளையாடிக் கொண்டிருந்த போது
குதிரையில் வந்த தலைவன் எவ்வளவு பேசியும் நாம் பேசவில்லை. மக்கள் அலர் தூற்றுகின்றனர்( புறம் பேசுகின்றனர்). அதனால் நாம் வருந்தித் துயில் கொள்ளவில்லை. அந்தக் கடற்கரையும் துயில் கொள்ளவில்லை எனப் பாடுகின்றார்.
செல்லூர் கொற்றன்
செல்லூர் என்ற சேர நாட்டைச் சேர்ந்தவர். கொற்றன் என்ற இயற்பெயர் கொண்டவர். இவர் குறுந்தொகை 363 இல் ஒரே ஒரு சங்கப் பாடலை மட்டும் பாடியுள்ளார். அறுகம்புல்லை மேயும் மலைப்பசுவைக் கண்டு மலையெருது விருப்பத்தால் பெருமூச்செறிந்து உகாய் மர நிழலில் தங்குவது போல, நீ உன் தலைவியைப் பிரிந்து செல்வது இனிதோ! எனத் தோழி தலைவனிடம் உணர்த்திய பாடல் இது.
படுமரத்து மோசிக்கொற்றன்
இவருக்கு படுமாற்றூர் மோசிகீரன் கொற்றனார் என்ற பெயரும் உண்டு. இருவரும் ஒருவரே என்ற கருத்தும் உண்டு. புலவரின் ஊர் படுமரம் அல்லது படுமத்து அல்லது படுமற்றூராக இருக்கலாம். மோசி என்ற தந்தையின் பெயரோடு சேர்த்து மோசிகீரன் கொற்றன் என்றும் மோசிக்கொற்றன் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் இரண்டு பாடல்களைக் குறுந்தொகையில் பாடியுள்ளார்.
குறுந்தொகை 376 இல் தலைவியானவள் தாமரை மலரின் உள்ளிடமான வெம்மையினை உடையவள். இவளைப் பொருள் தேடும் பொருட்டு எப்படிப் பிரிவேன்? எனத் தலைவன் கேட்பதாக இந்தப் புலவர் பாடுகின்றார்.
மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்
மதுரையைச் சேர்ந்த இப் புலவர் குறுந்தொகையில் 144 ஆவது பாடல் மட்டும் பாடியுள்ளார். மலர் பறித்தும், கடலாடியும், தோழிகளுடன் விளையாடியிருந்த தலைவி, பாலை நிலத்தின் பருக்கைக் கற்கள் காலில் குத்துமாறு தலைவனோடு பிரிந்து சென்றாளே! எனச் செவிலித்தாய் வருந்துவதாக இந்தப் பாடலை அமைத்திருக்கின்றார்.
கண்ணகாரன் கொற்றனார்
இவர் கண்ணகன் கொற்றனார் எனவும் அழைக்கப்படுகின்றார். இவர் நற்றிணை 143 வது பாடலைப் பாடியுள்ளார். மகள் தன் தலைவனுடன் “உடன்போக்கு” சென்று விட்டதால் வீட்டு முற்றத்தில் தலைவியின் தோழிகளையும், அவள் வளர்த்த நொச்சிச் செடியையும், கிளியையும் பார்த்து தலைவியைப் பிரிந்த வருத்தம் அதிகமாகிறது என நற்றாய் கூறுவதாகப் பாடி இருக்கின்றார்.
கண்ணங் கொற்றனார்
இவரது இயற்பெயர் கொற்றனார். இது கண்ணனெனும் தந்தை பெயரோடு சேர்த்துக் கண்ணங் கொற்றனார் என ஆயிற்று. இவர் நற்றிணை 156 இல் ஒரே ஒரு பாடலைப் பாடியுள்ளார். தலைவியைத் தேடி தலைவன் இரவில் வர முடியாது. அவள் தினைப்புனம் காக்கச் செல்கிறாள். அவளது அண்ணன்மார் கொடுமையாகத் தண்டிக்க கூடியவர்கள். ஆகவே விரைந்து திருமணம் செய்வாயாக என தோழி கூறுவதாகப் பாடுகின்றார்.
கோழிக் கொற்றன்/ கூழிக் கொற்றன் /கூளிக் கொற்றன்
கோழி என்ற பெயரை உடைய உறையூரைச் சார்ந்த கொற்றனார் என இவர் பெயருக்கு விளக்கம் காணலாம். இவர் குறுந்தொகை 276 ஆவது பாடலை மட்டும் பாடியுள்ளார். காதலுற்ற தலைவன் தலைவியைத் தனக்கு உடன்படுமாறு கூறவும், அவள் இசையாது போக மடலேறி வந்தாவது மணப்பேன் என இப் பாட்டில் கூறுவதாக இருக்கின்றது.
வெண் கொற்றன்
வெண் கொற்றம் என்றால் சிறந்த ஆட்சி, சிறந்த ஆட்சியாளர் எனும் பொருள் தரும். வெண் கொற்றன் என்பது இயற்பெயர். கொற்றன் இயற்பெயராயின் வெண்ணிறமுள்ள அல்லது தூய கொற்றன் எனவும் கருத இடமுண்டு. இவர் குறுந்தொகை 86 ஆவது பாடலை மட்டும் பாடியுள்ளார். தலைவி தோழியிடம், தலைவனுடன் இருக்க வேண்டிய வேளை, நான் மட்டும் தனித்திருக்கிறேன். அங்கு அவர் வேறு மகளிரோடு இருப்பாரோ என எண்ணுவதாகப் பாடுகின்றார்.
இதுபோலவே,
பற நாட்டுப் பெருங் கொற்றனார் அல்லது புறநாட்டுப் பெருங் கொற்றனார் – அகநானூறு 323 பாடியுள்ளார்.
தங்கால் முடக் கொற்றனார்- அகநானூறு 48 பாடியுள்ளார்.
செயலூர் இளம் பொன் சாத்தன் கொற்றனார்- இவர் அகநானூறு 177 பாடியுள்ளார்.
கொற்றங் கொற்றனார் – இவர் நற்றிணை 259 ஆவது பாடல் பாடியுள்ளார்.
கொற்றன் அல்லது கொற்றனார் – இவர் குறுந்தொகை 218, 358, நற்றிணை 30 போன்ற பாடல்கள் பாடியுள்ளார்.
கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார் -இவர் நற்றிணை 364 ஆவது பாடலைப் பாடியுள்ளார். கிடங்கில் என்ற ஊர் திண்டிவனம் ஒய்மா நாட்டில் உள்ளது.
உமட்டூர் கிழார் மகனார் பரங் கொற்றனார்
அல்லது குமட்டூர்கிழார் மகனார் பரங் கொற்றனார் – இவர் குறுந்தொகை 390, 221 போன்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
உறையூர் முதுகொற்றன் அல்லது உறையூர் முதுகூற்றன் – இவர் குறுந்தொகை 371 மற்றும் புறநானூறு 331 பாடியுள்ளார்.
இடையன் சேர்ந்தன் கொற்றனார்- இடையர் குலத்தைச் சேர்ந்த சேந்தனின் மகன் ஆவார். இவர் அகநானூறு 375 ஆவது பாடலைப் பாடியுள்ளார்.
இன்னும் பல புலவர்களின் பெயர்கள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன.
இவ்வாறாக மிகவும் சிறப்பு வாய்ந்த இப்பெயருடைய சிகைக் கொற்றன் என்ற எம் மறத் தமிழன் எவ்வாறு எகிப்து நாட்டுக்கு அன்றைய காலத்தில் சென்றான் என்று ஆராயும் பொழுது,
எகிப்தில் தமிழர்கள் வணிகம் செய்ததற்கும் ஆட்சி செய்ததற்கும் ஏராளமான தொன்ம அடையாளங்கள் அந்த நாட்டில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர் ஒரிசா பாலு அவர்கள் குறிப்பிடுகின்றார். அங்குள்ள பிரமிட்டுகளில் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழின் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்கின்றார். அந்த வகையில் சிகைக் கொற்றன் அங்கு வணிக நோக்கில் சென்று தமிழியில் எழுதப்பட்டிருக்கக் கூடும்.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கடல் வழியாக தமிழர்களும் எகிப்தியர்களும் செம்பு, யானை, மயில் தோகை, வைரம், வைடூரியம் மாணிக்கம், உப்பு, மரம், போன்றவற்றை வணிகம் செய்திருக்கின்றன.
எகிப்தின் சாக்கட்ரோ என்று தீவில் உள்ள செங்கடல் நுழைவு வாயிலில் இன்றும் தமிழியில் எழுதப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த சிகைக்கொற்றன் என்பவன் ஒரு குழுவின் தலைவனாகவோ அல்லது வணிகக் குழுவின் தலைவனாகவோ இருந்திருக்க வாய்ப்புள்ளது. சங்க காலத்தில் இந்த நாட்டுடனான வணிகத் தொடர்பு இருந்திருக்கின்றது. தமிழர்கள் கடல் கடந்து பல நாடுகளோடு வணிகம் செய்தமையை சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் செய்தியானது, பல பொருட்கள் ஏற்றுமதியாகவும் இறக்குமதியாகவும் இருந்திருக்கின்றன. காவிரிப்பூம் பட்டினத்தில் பல மொழி பேசும் வெளிநாட்டவர்கள் வந்து தங்கி இருந்தது குறிப்பிடப்படுகின்றது.
ஸ்விட்சர்லாந்து மற்றும் பிரெஞ்சு ஆய்வாளர்கள் 2024 மற்றும் 2025 இல் எகிப்தின் கல்லறைகளில் தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகளில் எழுதி இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதுவரைக்கும் அவை என்ன எழுத்துகள் என அறியப் படாமலே இருந்திருக்கின்றன. இவர்கள் 30 எழுத்துக் கல்வெட்டுக்கள் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராக்கிருதம், காந்தாரி (பாகிஸ்தானில் பேசப் படும் மொழி) போன்ற மொழிகளில் எழுதி இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதில் 20 கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகள் உள்ளன. அது போல செங்கடல் பிரதேசத்தில் உள்ள துறைமுகமான வெரணிக்கு என்ற இடத்திலும் தமிழி எழுத்துள்ளது.
சிகைக் கொற்றன் என்ற பெயர் எட்டு இடங்களில் காணப்படுகின்றது.
சிகைக் கொற்றன் வந்தான் பார்த்தான்.
என்று மூன்று முறை எழுதப்பட்டுள்ளது. இன்னொரு கல்லறையில் மிகவும் உயரத்தில் இந்தப் பெயர் எழுதப்பட்டுள்ளது. 1,2,6,8,14 ஆகிய கல்லறைகளில் சிகைக் கொற்றன் என்ற சொல் எழுதப்பட்டுள்ளது.
14 ஆவது கல்லறையில்,
சிகைக் கொற்றன் வந்து விட்டதால் பார்த்து விட்டான்.
என்றுள்ளது. தமிழ் நாடு புகளூரில் கிடைத்த கல்வெட்டுகளிலும் சிகைக் கொற்றன் என்ற பெயர் காணப்படுகின்றது. இவனை வணிகன் என்று கருதுவதை விட ஒரு வீரத்தமிழன் வணிகரின் பாதுகாப்பிற்காக வந்தவன் என்று சார்லட் ஸ்மித் என்ற பேராசிரியர் கூறுகின்றார். இந்தப் பெயரைத் தவிர என்ற பெயரை விட முதலாவது கல்லறையில், “கோபன் வரத கண்டன்” என்றும் எட்டாவது கல்லறையில் “சாத்தன்” என்றும் ஒன்பதாவது கல்லறையில் கீரன் என்ற பெயரும் இருக்கின்றன. இந்த கீரன் என்ற பெயர் புகளூர் கல்வெட்டில் உள்ளது. சங்க காலத்தில் கீரன் என்ற பெயரில் மன்னர்களும் புலவர்களும் இருந்திருக்கின்றனர்.
ஆகவே 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ரோமானியப் பேரரசர் காலத்தில் சங்கத் தமிழர்கள் எகிப்து நாட்டுடன் வணிகராக மட்டும் இருக்காது அவர்களுடன் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுடன் இருந்திருக்கின்றார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சங்ககாலம் எனக் கருதப்படும் காலத்தில் இந்தப் பெயர் பொறிக்கப்பட்டதன் மூலம் பண்டைய நம் தமிழரின் சர்வதேச வணிகத் தொடர்பையும் எகிப்து நாட்டிலான பயணத்தொடர்பையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த காலத்தில் ரோம், எகிப்து, தென்கிழக்காசியா போன்ற நாடுகளுடன் சிறந்த வணிக உறவுகளை தமிழர் பேணி வந்துள்ளனர். சேரநாட்டு முசிறி துறைமுகத்தினூடாக இந்த வணிகம் நடந்ததற்கான சங்க இலக்கியச் சான்றுகள் இருக்கின்றன. அது போல கொற்கை, புகார் துறைமுகங்களிலிருந்தும் மிளகு, வாசனைத் திரவியங்கள், பட்டு, முத்துக்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்தும் தங்கம், குதிரை போன்றவற்றை இறக்குமதி செய்தும் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். நமது முன்னோர்கள் உலகெங்கும் தமது பெயரை நிலை நாட்டினார்கள் என்பதை எகிப்தில் உள்ள சிகைக் கொற்றன் என்ற பெயர் பறை சாற்றிச் சாட்சியாக நிற்கிறது என்பதை நாம் பெருமையுடன் கூறிக் கொள்ள வேண்டும்.
ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 54 | சங்க காலத்தில் ஆதன் எனும் பெயர் கொண்ட வீரமறவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-53 | சங்க கால மக்களும் மரங்களும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு -52 | சங்க காலத்தில் நாழிகைக் கணக்கர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு -51 | சங்க காலத்தில் கூத்து | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 50 | சங்க காலத்தில் கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 48 | சங்க காலத்தில் ஏறு தழுவுதல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 47 | சங்க காலத்தில் வேட்கோ என அழைக்கப்பட்ட குயவர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 46 | சங்க காலத்தில் உழைக்கும் மகளிர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்