பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசு சமீபத்தில், புதிதாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே (pre-installed) பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்தியாவில் ஒரு செயலி இவ்வாறு ஒவ்வொரு சாதனத்திலும் நிரந்தரமாக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த முடிவு தொழில்நுட்ப வல்லுநர்கள், டிஜிட்டல் உரிமை குழுக்கள் மற்றும் சாதாரண பயனர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது.
அதுகுறித்து எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, “இந்தச் செயலி வேண்டாமெனக் கருதினால் மக்கள் அதைத் தங்கள் மொபைலில் இருந்து நீக்கிவிடலாம்,” என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு என்ற பெயரில், இந்த நடவடிக்கை குடிமக்களின் தனியுரிமையைப் பாதிக்குமா? இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின்படி பொருந்துகிறதா? உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளிலும் இதே போன்ற செயலிகள் உள்ளனவா?
இதுபோன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்களை தெரிந்துகொள்ள, பிபிசி பல நிபுணர்களிடம் பேசியது.
1. சஞ்சார் சாத்தி செயலி ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் நிறுவப்படுமா?
இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) நவம்பர் 28 அன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய மொபைல் போன்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும்.
ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் செயலியை முடக்கவோ அல்லது அதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென்று இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை கூறியது.
அதேபோல, “பழைய செல்போன்களிலும் மென்பொருள் அப்டேட்களின் மூலம் இந்த செயலி சேர்க்கப்படும். போன் தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இது தொடர்பான விதிமுறைகளை 90 நாட்களுக்குள் பின்பற்ற வேண்டும்” என்று உத்தரவில் கூறப்பட்டது.
பட மூலாதாரம், @DOT
2. பயனர்களால் செயலியை நீக்கவோ, முடக்கவோ முடியுமா?
இந்த செயலி குறித்து வெளியான அறிவிப்புகளால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, சஞ்சார் சாத்தி செயலியை எந்த நேரத்திலும் மக்கள் தங்கள் செல்போனில் இருந்து நீக்கலாம் என்று தொலைத்தொடர்புத் துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், “நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சஞ்சார் சாத்தி செயலியை நீக்கிக் கொள்ளலாம். இது உங்கள் தொலைபேசியில் உள்ள பிற செயலிகளைப் போன்றதுதான். அதை அன்-இன்ஸ்டால் செய்வதில் உங்களிடமே முழு கட்டுப்பாடும் உள்ளது. உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் அதை அகற்ற முடிவு செய்யலாம்” என்றும் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் இதே போன்ற விளக்கத்தை அளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த செயலியைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், பதிவு செய்ய வேண்டாம், நீக்க விரும்பினால், அதை நீக்கிவிடுங்கள்” என்றும், “ஆனால், இணைய மோசடி மற்றும் திருட்டுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்த செயலி உதவுகிறது என்பதை மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த செயலியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது எங்கள் பொறுப்பு” என்று கூறினார்.
மேலும் இந்த செயலியில் பதிவு செய்தால் மட்டுமே அது செயலில் இருக்கும் என்றும், பதிவு செய்யாவிட்டால் அது செயல்படாது என்றும் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தினார்.
மறுபுறம், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “இது உளவு பார்க்கும் செயலி. குடிமக்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அரசின் கண்காணிப்பு இல்லாமல் தனிப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு உரிமை உண்டு” என்றார்.
“அவர்கள் இந்த நாட்டை எல்லா வகையிலும் சர்வாதிகாரமாக மாற்றுகிறார்கள். எந்தவொரு பிரச்னை குறித்தும் பேச மறுப்பதால் நாடாளுமன்றம் செயல்படவில்லை” என்று அவர் மத்திய அரசைக் குற்றம் சாட்டினார்.
பட மூலாதாரம், Getty Images
3. இதன் நோக்கம் குறித்து அரசாங்கம் கூறியது என்ன ?
சஞ்சார் சாத்தி செயலி தொலைபேசி பாதுகாப்பு, அடையாளப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்புக்கான எளிய மற்றும் பயனுள்ள கருவி என்று அரசாங்கம் கூறுகிறது.
இது தொலைபேசியின் ஐஎம்இஐ எண், மொபைல் எண் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தகவல்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் இந்த செயலியை தங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யும்போது, அது முதலில் அவர்களின் மொபைல் எண்ணைக் கேட்கும்.
அதை உள்ளிட்ட பிறகு, தொலைபேசிக்கு ஒரு ஒடிபி அனுப்பப்படும், இது தொலைபேசியை செயலி பயன்பாட்டுடன் இணைப்பதற்கு உள்ளிடப்படும். பின்னர் செயலி தொலைபேசியின் ஐஎம்இஐ எண்ணை அங்கீகரிக்கிறது.
இந்த செயலி தொலைத்தொடர்புத் துறையின் மத்திய உபகரணங்கள் அடையாளப் பதிவு (CEIR) அமைப்புடன் ஐஎம்ஈஐ குறியீட்டைப் பொருத்துகிறது மற்றும் தொலைபேசி திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதா அல்லது தொலைபேசி கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கிறது.
தொழில்நுட்பக் கொள்கை இணையதளமான Medianama.com-இன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான நிகில் பஹ்வா, இந்த செயலி தொலைபேசியை அரசாங்க கண்காணிப்பாளராக மாற்றும் எனக் கருதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
4. செயலி என்ன வகையான அனுமதிகளை கோருகிறது?
அரசின் கூற்றுப்படி, சஞ்சார் சாத்தி செயலி மொபைல் போன்களில் சரியாக இயங்குவதற்குச் சில அனுமதிகள் தேவை.
“ஆண்ட்ராய்டு போன்களில், இந்த செயலி உங்கள் தொலைபேசி எண்ணை அடையாளம் காண ‘தொலைபேசி அழைப்புகளை உருவாக்கவும் நிர்வகிக்கவும்’ அனுமதி கேட்கும்” என்று அரசாங்கம் கூறுகிறது. பதிவுச் செயல்பாடுகளை (registration) முடிக்க, 14422-க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும், அதனால் குறுஞ்செய்தியை தானே அனுப்பிக் கொள்வதற்கான “Send SMS” அனுமதியும் கேட்கப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான அழைப்பு அல்லது செய்தியைப் புகாரளிக்க விரும்பினால், “Call and SMS logs” தேவை. கூடுதலாக, தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளின் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது புகைப்படங்களைப் பதிவேற்ற “Photos and Files” அனுமதி கேட்கப்படுகிறது.
தொலைபேசியின் ஐஎம்இஐ எண்ணின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க, கேமராவை பயன்படுத்தி செயலி பார்கோடை ஸ்கேன் செய்கிறது என்பதால், அதற்கு கேமரா அனுமதியும் தேவைப்படுகிறது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, “இந்த செயலிக்கு ஐபோன்களில் குறைந்தபட்ச அனுமதிகளே தேவைப்படும். அதாவது, அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் குறித்துப் புகாரளிக்க, தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் குறித்துப் புகாரளிக்கத் தேவையான, புகைப்படங்கள் மற்றும் பிற கோப்புகளை பதிவேற்றுவதற்கான அனுமதி மற்றும் ஐஎம்இஐ எண்ணை ஸ்கேன் செய்வதற்காக கேமரா அனுமதியை மட்டுமே கேட்கிறது.”
செயலியின் முக்கியமான அம்சங்கள் செயல்படுவதற்கு இந்த அனுமதிகள் தேவைப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் தனியுரிமை நிபுணர்கள் இதுபோன்ற ஆழமான பயன்பாட்டு உரிமை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று கருதுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
5. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா?
சஞ்சார் சாத்தி இணையதளத்தின் தகவல்படி, இந்த செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்குத் தெரியாமல் தானாகவே சேகரிக்காது. செயலி தனிப்பட்ட தகவல்களைக் கேட்க வேண்டியிருந்தால், அது எதற்காக சேகரிக்கப்படுகிறது என்பது பயனர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
செயலியில் வழங்கப்படும் தனிப்பட்ட தகவல்கள், சட்ட அமலாக்க அமைப்புகள் சட்டப்படி கேட்டால் மட்டுமே மூன்றாம் தரப்புக்குப் பகிரப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.
“சட்டப்படி, உங்கள் மொபைல் போன் உங்கள் தனிப்பட்ட இடம். அங்குதான் மிகவும் தனிப்பட்ட உரையாடல்கள் நடைபெறுகின்றன. முக்கியமான தகவல்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன” என்று நிகில் பஹ்வா கருதுகிறார்.
“இந்த செயலியால் நமது தொலைபேசியின் கோப்புகள், புகைப்படங்கள் அல்லது செய்திகளைப் பார்க்க முடியாது என்பதை எப்படி உறுதியாகக் கூறுவது? அல்லது எதிர்கால அப்டேட்டில் இது நடக்காது என்பதை எப்படி உறுதியாகக் கூறுவது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
“பல வகையான தரவுகளும், அந்தத் தரவுகளின் அடிப்படையில் மக்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அரசுக்கு கிடைக்கும். ஒரு நபரின் செயல்பாடு, இருப்பிடம், உரையாடல் அல்லது நிதி பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறுவது எளிதாக இருக்கும். இது ஆபத்துகள் நிறைந்தது” என்று சைபர் நிபுணரும் வழக்கறிஞருமான விராக் குப்தா கூறுகிறார்.
6. திருடப்பட்ட போன்களை மீட்டெடுக்க இது உதவுமா?
இதன் மூலம் 37 லட்சத்திற்கும் அதிகமான திருடப்பட்ட அல்லது தொலைந்து போன மொபைல் போன்கள் வெற்றிகரமாக பிளாக் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
மேலும், சஞ்சார் சாத்தி செயலி மூலம் 22 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதனங்கள் வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
7. இந்த முடிவு மக்களின் ஒப்புதலின்றி எடுக்கப்பட்டதா?
இந்த உத்தரவு நிறைவேற்றப்படுவதற்கு முன்பு பொது மக்களிடம் ஆலோசனை நடத்தவோ அல்லது பெரிய அளவிலான விவாதங்கள் நடத்தப்படவோ இல்லை என்றும், எந்த விவாதமும் இல்லாமல் திடீரென அது செயல்படுத்தப்பட்டதாகவும் பல தொழில்துறை ஆய்வாளர்கள் மற்றும் கொள்கை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் இதை சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்பிற்கு விரோதமானது என்று கூறுகின்றன.
“அரசமைப்பின் ஏழாவது அட்டவணைப்படி, டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான முடிவுகள் மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருகின்றன. ஆனால் சைபர் குற்றங்களைத் தடுப்பது மாநிலங்களின் பொறுப்பு” என்று விரக் குப்தா கூறுகிறார்.
“அத்தகைய சூழ்நிலையில், இருவரின் உரிமைகளும் வேறுபடும் நிலையில், ஒரு புதிய விதியை உருவாக்குவதற்கு முன் மாநிலங்களையும் மக்களையும் ஏன் கலந்தாலோசிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது” என்று அவர் கூறுகிறார்.
“நவம்பர் 2025இல் எடுக்கப்பட்ட எங்களது கணக்கெடுப்பில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 10இல் 6 பேர் தங்கள் தொலைபேசிகளில் முன்பே பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் செயலிகளை விரும்பவில்லை என்பது தெரிய வந்தது” என்று உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுன்டர்பாயின்டின் ஆராய்ச்சி இயக்குநர் தருண் பதக் பிபிசியிடம் கூறினார்.
“இப்போதெல்லாம் மக்கள் தங்கள் அனுமதியின்றி முன்பே பதிவிறக்கம் செய்து வைக்கப்பட்டிருக்கும் செயலிகள் மற்றும் ப்ளோட்வேர்களை பற்றி மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்றும், இந்த செயலிகளை அவர்கள் விரும்பவில்லை என்றும் நான் நம்புகிறேன். எனவே, தனியுரிமை குறித்த விவாதம் அதிகரித்து எதிர்ப்புகளும் எழும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வேறு சில வழிகளைக் காணலாம்” என்று அவர் கூறுகிறார்.
இந்த செயலியால் சமூக ஊடகங்கள், பிரௌசர்கள் அல்லது பிற செயலிகளில் இருந்து தகவல்களைப் பெற முடியுமா?
இந்தக் கேள்விக்கு அதிகாரபூர்வமான பதில் எதுவும் இல்லை. ஆனால், இந்த செயலி நிரந்தரமாக தொலைபேசியில் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தாலும், எதிர்கால அப்டேட்டில் அதன் அனுமதிகள் விரிவாக்கப்படலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
8. நிறுவனங்கள் ஏற்கெனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனவா?
கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் அமைப்பின்படி, 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் 735 மில்லியன் ஸ்மார்ட்போன்களில், 4.5% மட்டுமே ஆப்பிளின் ஐஓஎஸ் செல்போன்கள். மீதமுள்ள அனைத்தும் ஆண்ட்ராய்டாக இருக்கும்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் செய்திப்படி, ஆப்பிள் நிறுவனம் தனது போன்களில் தமது சொந்த செயலிகளை முன்கூட்டியே நிறுவுகிறது. போன் விற்கப்படுவதற்கு முன்பு எந்த அரசு அல்லது மூன்றாம் தரப்பு செயலிகளையும் நிறுவ முடியாது என்பது அதன் கொள்கை.
“ஆப்பிள் எப்போதும் இதுபோன்ற அரசாங்க வழிமுறைகளைப் பின்பற்ற மறுத்துவிடுகிறது” என்று தருண் பதக் கூறுகிறார்.
ஆப்பிள் ஒரு நடுநிலையான முடிவை எட்ட முயலும் என்றும், பயனர்கள் செயலியை நிறுவப் பரிந்துரைக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் கருதுகிறார்.
9. இந்த செயலி இந்திய தரவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்குமா?
இந்தியாவின் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023, பயனர் ஒப்புதலுக்கே முன்னுரிமை அளிக்கிறது.
“இந்தியாவில் தரவுப் பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இது எந்தவொரு தனிப்பட்ட தரவையும் எடுப்பதற்கு ஒப்புதல் அவசியம் என்று தெளிவாகக் கூறுகிறது” என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் ஜோத்வானி கூறுகிறார்.
“தொலைபேசியில் என்ன இருக்க வேண்டும், எது இருக்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதி. இதுபோன்ற சூழ்நிலையில், தொலைபேசியில் இருந்து சஞ்சார் சாத்தி செயலியை அகற்ற வேறு வழி இல்லையெனில், அது பயனரின் தனியுரிமை, சுதந்திரம் மற்றும் அரசமைப்பு உரிமைகளுக்கு எதிரானதாகக் கருதப்படலாம்” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
10. பாதுகாப்பு நிறுவனங்கள் நிகழ்நேர கண்காணிப்புக்கு இந்த செயலியைப் பயன்படுத்த முடியுமா?
அதிகாரபூர்வமாக அரசாங்கம் இதை மறுக்கிறது.
ஆனால் இந்தியாவில் கண்காணிப்புச் சட்டங்கள் ஏற்கெனவே மிகவும் பெரிய அளவில் இருப்பதாக தொலைத்தொடர்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவைப்பட்டால், சட்ட உத்தரவுகளின் கீழ் கண்காணிப்புக்காக இதுபோன்ற செயலிகளை இயக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
11. பிற ஜனநாயக் நாடுகளிலும் இத்தகைய செயலி உள்ளதா?
பெரும்பாலான ஜனநாயக நாடுகள் முன்பே நிறுவப்பட்ட அரசாங்க செயலிகளை உபயோகிக்க கட்டாயப்படுத்துவதில்லை.
ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இப்படியான அணுகுமுறை காணப்படவில்லை.
“ஐரோப்பாவில் உள்ள டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தைப் பார்த்தால், பெரிய டிஜிட்டல் நிறுவனங்கள் (gatekeepers) பயனர்கள், செயலிகளை நீக்க அனுமதிக்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்று தருண் பதக் கூறுகிறார்.
“ஆனால் இந்தியாவில், இந்த உத்தரவின் மூலம் நாம் அதற்கு எதிர்த் திசையில் செல்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

12. ரஷ்யாவின் மேக்ஸ் செயலி எப்படிப்பட்டது?
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் தகவல்படி, ரஷ்யாவில் உள்ள அனைத்து புதிய மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களிலும் மேக்ஸ் என்ற மெசேஜிங் செயலி முன்பே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மேக்ஸ் செயலி என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு மெசஞ்சர் செயலி. இது ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியை 18 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அரசாங்க டிஜிட்டல் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று ரஷ்ய அரசாங்கம் கூறுகிறது.
மறுபுறம் குடிமக்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த செயலி பயன்படுத்தப்படலாம் என்று பல விமர்சகர்கள் நம்புகிறார்கள். ஆனால் ரஷ்யாவின் அரசாங்க ஊடகங்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிராகரித்துள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு