இந்தியாவின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11 (திங்கட்கிழமை) அன்று சஞ்சீவ் கன்னா பதவியேற்க உள்ளார். அவருடைய பதவிக்காலம் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு நாள். அடுத்தாண்டு மே 13-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுவார்.
அவருடைய பதவிக்காலம் குறைவாக இருந்தாலும், சஞ்சீவ் கன்னாவின் திறன், நீதித்துறை மீதான அவருடைய கொள்கைகள் மற்றும் இந்திய சட்ட அமைப்பின் உள்ளார்ந்த கட்டுப்பாடுகள் குறித்து அதிக ஆர்வம் எழுந்துள்ளது.
குறிப்பாக, இந்திய வரலாற்றில் குறைந்த காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்கள், தனக்குப் பின்னால் வருபவர்கள் பின்பற்றும் அளவுக்கான சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் முன்னுதாரணமாக திகழ முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
நிர்வாக தலைமை மற்றும் நீதித்துறை தலைமை என இரண்டு விதமாகவும், நீதித்துறையில் தவறுகள், முரண்பாடுகள் மற்றும் அநீதியை குறைப்பதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அமைப்பு ரீதியான கட்டுப்பாடுகளால் சில முரண்பாடுகள் தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அவரால் மேற்கொள்ள முடியும்.
புதிய தலைமை நீதிபதிக்கான சவால்கள்
உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது மட்டும் புதிய தலைமை நீதிபதிக்கு பிரச்னை அல்ல.
கடந்த 2019-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், நீதிபதி கன்னாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அப்போது அவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கொலீஜியத்தின் பரிந்துரைக்கு, அவரை விட பணியில் மூத்த 32 நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் (உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேதியை பொருத்தவரை). முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன்னுடைய சுயசரிதையில், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்குள் குறைந்தது ஆறுமாத காலம் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவி வகிக்கலாம் என்பதால், அவரை கொலீஜியம் பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.
ஒருவருடைய தகுதி, நேர்மையை பாராமல், பதவிக்காலத்தைப் பொறுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கொலீஜியம் பரிந்துரைக்கிறது என்பது வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் சமீப ஆண்டுகளாக குறைவான காலமே தலைமை நீதிபதியாக இருந்தவர்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், குறிப்பாக தகுதியான பல நபர்கள் இருக்கும் போது இந்த முடிவு நேர்மறையானதாக பார்க்கப்படுகிறது.
நீதிபதி சஞ்சீவ் கன்னா டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து இப்பொறுப்புக்கு வருகிறார். சுமார் 20 ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக வரவில்லை என்பதும் கன்னாவுக்கு ஆதரவானதாக பார்க்கப்படுகிறது என்பது ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சன் கோகாயின் கூற்று.
பதவிக் காலம் எப்படி இருக்கலாம்?
கடந்த 2005-ஆம் ஆண்டு நீதிபதி கன்னா உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2006-ல் அவர் நிரந்தர நீதிபதியாக ஆனார். சுமார் 23 ஆண்டுகளாக அவர் வழக்கறிஞராக இருந்தார். முதலில் டெல்லியின் டிஸ் ஹஸாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திலும் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பணிபுரிந்தார். பின்னர் வரி, நடுவர் மன்றம், நிறுவனங்கள் சட்டம், நிலம் கையகப்படுத்துதல், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளில் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞராக இருந்தார். வருமான வரித்துறை மற்றும் டெல்லி அரசின் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தார். அதன்பின், உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார்.
அவருடைய துறையை பொருத்தவரை, அடிக்கடியில் பொது வெளியில் பேசுவது மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருந்தாலும், அவரின் முந்தைய பணி அனுபவங்களை வைத்துப் பார்த்தால் பெரும்பாலும் அவர் பொதுவெளியில் இருந்து விலகியே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தலைமை நீதிபதி அலுவலகம் பொதுமக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது. ஒரு நீதிபதியின் பணி மூப்பு, குறிப்பிட்ட தேதியில் அவரால் விசாரணையை மேற்கொள்ள முடியுமா என்பதை பொருத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுவதை தீர்மானிப்பவராக தலைமை நீதிபதியே இருக்கிறார். இதனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர்’ என அழைக்கப்படுகிறார்.
வழக்குகள் பட்டியலிடப்படுவது அவ்வப்போது தலைமை நீதிபதியால் மாற்றியமைக்கப்படுகிறது.
இதனால், தலைமை நீதிபதியின் அதிகாரங்கள் தன்னிச்சையானதாக இருப்பதாகவும் அவருக்கு சாதகமான விசாரணை முடிவுகளை பெறும் வண்ணம் அதை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசியல் கைதியின் ஜாமீன் விசாரணை அல்லது சட்டமன்றம் அல்லது (அரசு) நிர்வாகத்திற்கு எதிரான வழக்குகளை, குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு முன்பு பட்டியலிடும் போது, அதனால் நியாயமற்ற தீர்ப்புகள் வருவதற்கான சாத்தியம் இருப்பதாக விமர்சனம் எழுந்தது.
மாற்றத்தைக் கொண்டு வருவாரா?
நீதித்துறை சுதந்திரமும் வெளிப்படைத்தன்மைக்கான தேவையும் ஒன்றுக்கொன்று முரணானது இல்லை எனும் தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி கன்னா. எனவே, தன் அதிகாரங்களை செயல்படுத்துவதிலும் கொலீஜியத்தின் செயல்பாட்டிலும் கன்னா வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவாரா என கேள்வி எழுப்பப்படுகின்றது.
தலைமை நீதிபதியின் கீழ் உள்ள உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த அடுத்தடுத்து வந்த தலைமை நீதிபதிகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் அதன் செயல்பாடுகள் இன்னும் ரகசியமானதாகவே உள்ளது
பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் முடிவடையாத போரில் கொலீஜியம் (அரசு) நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளித்து வருவது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. கொலீஜியம் தனது பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால், அதனை அரசு கடைபிடிக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தாலும் இவ்வாறு செய்யப்படுகிறது.
நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்த போக்கில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வருவாரா? அடுத்தடுத்து வந்த தலைமை நீதிபதிகள் இதனை ஒரு நிர்வாக பிரச்னையாக கருதினர். கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் நியமனம் அல்லது பணியிட மாற்றத்தை தாமதப்படுத்தும் அரசை நீதித்துறை ரீதியாக ஒழுங்குபடுத்த செய்யப்படும் முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்பில்லை.
முக்கிய உத்தரவுகள்
நீதிபதி கன்னா சில முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதிலிருந்து அவர் (அரசு) நிறுவனத்திற்கு ஆதரவானவராக பலராலும் பார்க்கப்படுகிறார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செலுத்தப்படும் 100 சதவிகித வாக்குகளையும் அதன் விவிபாட் எனும் ஒப்புகை சீட்டுகளுடன் சோதித்துப் பார்க்க வேண்டும் என கோரிய மனுவை அவர் நிராகரித்தார். தற்போது, ஒரு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வாக்குப்பதிவு மையங்களில் மட்டுமே ஒப்புகை சீட்டுகள் சோதிக்கப்படுகின்றன.
கன்னா தலைமையில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்களவை தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட முதலில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்பின் ஜூலை மாதம், 90 நாட்கள் நீண்ட சிறைவாசத்தை கருத்தில் கொண்டு வழக்கமான ஜாமீன் வழங்கியது. நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளால், முதலமைச்சராக தொடர்வதில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டதால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்வதை உறுதிப்படுத்தும் கருத்தை அவர் தெரிவித்தார். நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள குடிமக்கள் அனுபவிக்கும் அந்தஸ்து மற்றும் உரிமைகளை ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் இப்போது அனுபவிப்பது தொடரும் என்றும், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது கூட்டாட்சி அமைப்பை மறுப்பதாகாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
லடாக் யூனியன் பிரதேசத்தை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம் என்ற அரசாங்கத்தின் பதிலை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷனுடன் ஏற்றுக்கொண்டார் சஞ்சீவ் கன்னா. ஆனால், தன் தனிப்பட்ட தீர்ப்பில், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது, கவலைக்குரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், கூட்டாட்சியின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
யூனியன் பிரதேசத்தை உருவாக்க அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 3-ஐ நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், இந்த நிபந்தனைகளை அரசு பின்பற்றியதா என அவர் கூறவில்லை.
நன்கொடையாளர்களுக்கு தனியுரிமை இல்லை என, மத்திய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்பிற்கு எதிரானதாகக் கூறி, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒரு பகுதியாக தீர்ப்பை வழங்கினார் சஞ்சீவ் கன்னா.
சஞ்சய் கன்னா சென்ட்ரல் விஸ்டா திட்ட வழக்கில், (குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவை அடங்கிய திட்டம்) முடிவெடுப்பதில் பொதுமக்களின் பங்கு சம்பிரதாயமானதாக இருக்க முடியாது எனும் மாறுபட்ட கருத்தை கூறியதற்காக நினைவுகூரப்படுகிறார். மூன்று நீதிபதிகள் அடங்கிய அந்த அமர்வில், இரு நீதிபதிகள் வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், முடிவெடுப்பதில் எந்த குறையும் இல்லை என்று கூறி திட்டத்தை அனுமதித்தது.
சர்ச்சைகள்
நீதிபதி கன்னா சர்ச்சைகளுக்கு ஆட்படாதவர் அல்ல.
2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி சனிக்கிழமை, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கோகாய்க்கு எதிராக உச்ச நீதிமன்ற முன்னாள் பணியாளர் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்தது (கோகாய் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்).
நீதிபதி கோகாய் மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா, கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, தன் சுய லாபத்திற்காக கோகாய் தொழில் வாழ்க்கையில் சமரசம் செய்ததாக விசாரணையில் வெளிப்பட்டாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஊடகங்களுக்கு உத்தரவிட்டது. எனினும், அந்த அமர்வின் உத்தரவில் கோகாய் சேர்க்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் நடத்திய உள்மட்ட விசாரணை, கோகாய் மீது தவறு இல்லை என கூறியது. அதன் அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. பணிமூப்பை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, கன்னாவுக்கு பதவி உயர்வு வழங்க முடிவெடுத்தது அப்போதைய தலைமை நீதிபதி கோகாய் தலைமையிலான கொலீஜியம்தான்.
முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி கன்னாவை வெளிப்படையாகவே பாராட்டியுள்ளார். நீதிமன்றங்களில் தீவிரமான நெருக்கடிகள் நிலவும் போதும் அமைதியாகவும் இன்முகத்துடனும் இருக்கும் திறனையும் பாரபட்சம் காட்டாமல் இருப்பதையும் தலைமை நீதிபதி பொறுப்புக்கு ஏற்ற அவரின் அனுபவத்தையும் பாராட்டியுள்ளார் சந்திரசூட்.
குடும்ப பின்னணி
நேர்மைக்காக அறியப்பட்ட நீதிபதிகள் குடும்பத்தைச் சேர்ந்தவரான கன்னா, இதனால் நற்பெயரை பெற்றுள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ஹன்ஸ் ராஜ் கன்னா, இவருடைய மாமா ஆவார். ஹன்ஸ் ராஜ் கன்னா, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை உரிய நடைமுறையின்றி இடைநிறுத்த முடியாது என்று கூறி, அவசரநிலையின் போது ஹேபியஸ் கார்பஸ் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
பின்னர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, அடுத்த தலைமை நீதிபதியை நியமித்த போது அவரது பணிமூப்பு நிலையை புறக்கணித்தது. இதனால், ஹெச்.ஆர். கன்னா தனது பதவியை ராஜினாமா செய்தாலும், நீதிமன்ற வரலாற்றில் அவர் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.
நீதிபதி சஞ்சீவ் கன்னா, தனது மாமாவின் சிறப்பான பங்களிப்பை உணர்ந்து, எந்த லட்சுமண ரேகையையும் கடப்பாரா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, பொதுநல வழக்குகளில், (அரசு) நிர்வாகத்தையும் நீதித்துறையையும் பிரிக்கும் கோடுகள் அடிக்கடி கலைக்கப்படுகின்றன.
அவரைப் பொருத்தவரை, அடிப்படை உரிமைகள் அல்லது சட்டப்பூர்வ உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்படும் வரை, நீதித்துறையின் மறுஆய்வுக்கு வாய்ப்பில்லை.
நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளுக்காக அவரது பதவிக்காலம் உற்றுநோக்கப்படும். குறிப்பாக, LGBTQI+ எனும் பால்புதுமையினரின் திருமண உரிமையை மறுக்கும் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரும் வழக்கு, பாலியல் வன்புணர்வு வரையறையில் திருமண உறவில் நேரும் பாலியல் வன்கொடுமைக்கான விதிவிலக்கில் உள்ள சவால்கள், திருமண உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வமான தன்மை, குடியுரிமை (திருத்தச்) சட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பல ஆண்டுகளாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள் அவருடைய பதவிக்காலத்தில் உரிய நிவாரணம் பெறுவார்களா என்பதும் தலைமை நீதிபதியாக அவருடைய வெற்றிக்கு மற்றொரு சோதனையாக அமையும்.
(வி.வெங்கடேசன், இந்தியாவின் முன்னணி வெளியீடுகளுக்கு பங்களிக்கும் மூத்த நீதித்துறை ஊடகவியலாளர்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.