சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பாஜக கேட்டு வரும் நிலையில், நாற்பது தொகுதிகளை கொடுக்கிறோம், அதில் இருபதை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என அதிமுக கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்பு என தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையில், பாஜக கூட்டணியில் தான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால், அவரை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக பெரிய அளவில் முயற்சிக்கவில்லை. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக 2 நாட்கள் முன்பு டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து, தவெக தலைமையில் 3-வது அணி அமையும் என்று கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார். அதேநேரத்தில், பாமக, தேமுதிகவை கூட்டணியில் தக்கவைக்க பாஜக முயற்சித்து வருகிறது.
இச்சூழலில், அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தற்போதுவரை அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இடம்பெற்றிருக்கும் நிலையில், மற்ற கட்சிகள் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பு, தங்களுக்கான தொகுதிகளை முன்கூட்டியே கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்ற நிலையில், தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதால், இம்முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டுப் பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 50 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக கேட்டுப் பெற விரும்புகிறது. ஆனால், கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் 20 முதல் 25 தொகுதிகளை மட்டும் வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 40 தொகுதிகளை கொடுத்து, அதிலிருந்து 20 தொகுதிகளை தேர்ந்தெடுக்குமாறு பாஜகவை அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “மொத்தம் 50 தொகுதிகள் வேண்டுமென அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால், வருவாய் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என 40 தொகுதிகளை வழங்குகிறோம். அதிலிருந்து 20 தொகுதிகளை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் எனவும் அதிமுக எங்களிடம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, வானதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் குறிப்பிட்ட தொகுதிகளைப் பெற வேண்டுமென மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் முறையிட்டு வருகிறார்கள். அதிமுகவும், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பதை ஆய்வுசெய்து, அவற்றை பாஜகவுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
எனினும், நாங்கள் முடிந்தவரையில் அதிகமான தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற முயற்சிப்போம். அதன்மூலம் கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பாஜகவுக்கு கிடைப்பார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.