சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்ட தொடர் நாளை தொடங்குகிறது. பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்கான அலுவல் ஆய்வுக்குழு இன்று தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பின்னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்தனர்.
முன்னதாக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த மார்ச் 24-ம் தேதி துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி ஏப். 29-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரின்போது தமிழக அரசு சார்பில் 18 சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல், கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
சட்டப்பேரவை விதிகள்படி ஒரு பேரவை கூட்டம் முடிவுற்றால், அடுத்த கூட்டம் 6 மாதங்களில் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் வரும் 14-ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் குறித்து முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பேரவை தலைவர் அப்பாவு அறிவிக்கவுள்ளார். 3 அல்லது 4 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டம் முதல் நாளில் முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படவுள்ளது. வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இத்துடன் பேரவையின் முதல் நாள் நிகழ்வு முடிவடையும். அடுத்தடுத்த நாட்களில் பேரவையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 2025-26-ம் நிதியாண்டுக்கான கூடுதல் செலவினம் தொடர்பான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.