• Fri. Jan 3rd, 2025

24×7 Live News

Apdin News

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை முதல் புயல் பாதிப்பு வரை: ஆளுநரிடம் விஜய் பேசியது என்ன? | vijay governor meet

Byadmin

Dec 31, 2024


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம், தவெக தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார். பருவமழை ஃபெஞ்சல் புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மாநில அரசு கோரும் நிவாரணத் தொகையை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இச்சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று விஜய் சந்தித்தார். அப்போது 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை வழங்கினார். அந்த மனுவில், ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்’’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோரிக்கைகளை பரிசீலிப்பதாக விஜய்யிடம் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது, ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை விஜய் வழங்கினார். பதிலுக்கு ஆளுநரும் பாரதியார் கவிதை தொகுப்பை நடிகர் விஜய்க்கு வழங்கினார். இதையடுத்து, அங்கிருந்து விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சந்திப்பின்போது, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நடிகர் விஜய் ஆளுநரை சந்தித்து மனு வழங்கியிருப்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது. தவெக மாநாட்டில் ‘ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றிய விஜய், தற்போது ஆளுநரை சந்தித்து மனு அளித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

அண்ணாமலை வரவேற்பு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, தமிழக ஆளுநரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணனாகவும்.. அரணாகவும்.. அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை தொடர்ந்து ‘பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன்’ என நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்புத் தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கும், சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது, நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு கூறியுள்ளார்.



By admin