படக்குறிப்பு, ஜம்முவில் சேதடைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் (மே 10-ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம்)கட்டுரை தகவல்
சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்த சில மணி நேரத்திலேயே அத்துமீறல்களில் ஈடுபட்டதாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் வெடிச்சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, ”இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களுக்கு இடையே எட்டப்பட்ட உடன்பாட்டை பாகிஸ்தான் மீறி வருகிறது” இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குற்றம்சாட்டினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “சில பகுதிகளில் இந்தியாவால் மீறல்கள் செய்யப்பட்ட போதிலும் சண்டை நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது” என்று கூறியது.
கடந்த நான்கு நாட்களில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த சண்டை இரு போட்டியாளர்களுக்கும் இடையிலான மிக மோசமான இராணுவ மோதலாக உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (கோப்புப் படம்)
சண்டை நிறுத்த ஒப்பந்தமும் குற்றச்சாட்டும்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரில் உள்ள இலக்குகளை இந்தியா தாக்கிய பிறகு, இருதரப்புமே டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தத் தொடங்கின. பஹல்காம் தாக்குதலில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்திருந்தது.
நான்கு நாட்கள் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறின.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை காலை தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் இந்தச் செய்தியை அறிவித்தார். இது அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் சாத்தியமானதாக அவர் கூறினார்.
ஒப்பந்தம் எட்டப்பட்டதை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பின்னர் உறுதிப்படுத்தினார், “30 நாடுகள்” இதற்கான ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்றும் அவர் கூறினார்.
ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் முக்கிய நகரங்களான ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் வசிப்பவர்களும், பிபிசி செய்தியாளர்களும் அங்கே வெடிச்சத்தங்களைக் கேட்டதாகவும், வானத்தில் மின்னல் போன்ற வெளிச்சத்தை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (கோப்புப் படம்)
இந்தியாவும் பாகிஸ்தானும் கூறியது என்ன?
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி “இது இன்று முன்னதாக எட்டப்பட்ட உடன்பாட்டை மீறுவதாகும். இதற்கு இந்திய ஆயுதப்படைகள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன” என்று கூறினார், மேலும் “இந்த மீறல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு பாகிஸ்தானை அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் “இன்று அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. சில பகுதிகளில் இந்தியா அத்துமீறல்களைச் செய்தாலும், நமது படைகள் நிலைமையை பொறுப்புடனும் நிதானத்துடனும் கையாளுகின்றன. சண்டை நிறுத்தத்தை சுமூகமாக செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பொருத்தமான மட்டங்களில் தொடர்பு கொண்டு தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். தரையில் உள்ள துருப்புகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (கோப்புப் படம்)
‘நடுநிலையான இடத்தில் பேச இரு நாடுகளும் ஒப்புதல்’
முன்னதாக, சண்டை நிறுத்தத்தை உறுதிப்படுத்திப் பேசிய போது இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “பயங்கரவாதத்திற்கு எதிராக, அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அது தொடரும்” என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “அனைவரின் நலனுக்காக” சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாகக் கூறினார்.
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.
தானும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் இந்திய மற்றும் பாகிஸ்தான் மூத்த அதிகாரிகளுடன் 48 மணிநேரம் செலவிட்டதாக அவர் கூறினார், அதில் அந்தந்த நாடுகளின் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் அடங்குவர்.
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டேரஸ், “மோதலைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும்” வரவேற்பதாகக் கூறினார்.
பிரிட்டன் “சில நாட்களாக” பேச்சுவார்த்தைகளில் “ஈடுபட்டுள்ளது” என்றும், வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி இரு தரப்பினருடனும் பேசியதாகவும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறினார்.
பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2 வாரங்கள் நீடித்த பதற்றத்திற்குப் பிறகு சமீபத்திய சண்டை தொடங்கியது.
இந்திய விமானப்படைத் தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் 36 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் குறைந்தது 21 பொதுமக்கள் இறந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு சண்டை தீவிரமடைந்தது. இரு நாடுகளும் விமானப்படை தளங்கள் மற்றும் பிற இராணுவ தளங்களை குறிவைத்ததாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டின.