மரபுக்கு மாறான குழந்தை வளர்ப்பு வழக்கம் கொண்ட அழிந்து வரும் ஆண் தவளைகள் 33 குஞ்சுகளை ஈன்றுள்ளன. பேரழிவை ஏற்படுத்தும் பூஞ்சை நோயிலிருந்து இந்த இனத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரிட்டனில் அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சதர்ன் டார்வின்ஸ் இனத்தைச் சேர்ந்த தலைப்பிரட்டைகள், தங்கள் தந்தையரின் குரல்வளையில் வளர்ந்து அவற்றின் வாய் வழியே சற்று வளர்ச்சியடைந்த தவளைக் குஞ்சுகளாகப் பிறப்பெடுக்கின்றன.
சிலியின் தெற்கு கடற்கரையில் இருக்கும் இந்த தந்தைத் தவளைகள் படகு, விமானம் மற்றும் தரைப் பயணங்கள் வாயிலாக கிட்டத்தட்ட 7,000 மைல்கள் கடந்து லண்டன் உயிரியல் பூங்காவுக்கு வந்தடைந்துள்ளன.
இந்த இனத்தைச் சேர்ந்த தவளைகள் முதன் முதலாக 1834ஆம் ஆண்டு, சார்லஸ் டார்வினால் கண்டறியப்பட்டன. காட்டுயிர் ஆர்வலர்களின் கருத்துப்படி இந்தத் தவளைகளைப் பாதுகாக்கப்பட்ட சூழலில் வளர்ப்பது, அவற்றின் இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்குத் தேவையான நேரத்தைப் பெற்றுத் தரும் எனக் கூறுகின்றனர்.
ஆம்ஃபிபியன் கைட்ரிடியோமைகோசிஸ் (Amphibian chytridiomycosis) என்ற ஒரு வகைப் பூஞ்சை நோய், ஏறத்தாழ 500 நீர்-நில வாழ் உயிரினங்களைப் பாதித்துள்ளது. இதன் காரணமாக, அறிவியலால் வரையறுக்கப்பட்ட பேரழிவுத் தொற்று நோய்களில் ஒன்றாக இந்த பூஞ்சைத் தொற்று உள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு, தெற்கு சிலியில் உள்ள பார்க் டான்டாகோவில் வாழக்கூடிய சதர்ன் டார்வினஸ் தவளை இனங்களை இந்தக் கொடிய பூஞ்சை நோய் தாக்கியதை உறுதிபடுத்தியது. எளிய இலக்காக இருந்த இந்தத் தவளைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த கூட்டத்தின் எண்ணிக்கை ஓராண்டுக்கு உள்ளேயே 90 சதவீதம் குறைந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லண்டன் உயிரியல் பூங்காவை சேர்ந்த சூழலியலாளர்கள் இந்த பூஞ்சைத் தொற்று இல்லாத தவளைக் கூட்டத்தைக் கண்டறிந்தனர். இந்தத் தவளைகள் மிகவும் சிறியதாக இருந்ததோடு, தாங்கள் வாழும் பாசிபடிந்த இடங்களில் ஒன்றி இருந்ததால் இவற்றைக் கண்டறிவது சவாலான பணியாக இருந்தது.
வெவ்வேறு காலநிலைகளால் பாதிப்படையாத பெட்டிகளில் இந்தத் தவளைகள் வைக்கப்பட்டு, மிகவும் நீண்ட குழப்பமான பாதைகளைக் கடந்து பயணித்துள்ளன. அதாவது படகில் ஆறு மணிநேர பயணம், சிலியின் தலைநகரான சாண்டியாகோ வரை 15 மணிநேர தரைவழிப் பயணம் மற்றும் இறுதியாக ஹீத்ரோவுக்கு விமானம் வழியாகவும் இந்தத் தவளைகள் பயணம் மேற்கொண்டுள்ளன.
முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு ஆண் தவளையின் உடல் எடை 2 கிராமுக்கும் குறைவாகவும், உடல் அளவு 3 சென்டிமீட்டர் வரையும் இருக்கும்.
டேவிட் அட்டென்போரோவின், பிரபலமான Life On Earth ஆவணத் தொடரில் சதர்ன் டார்வின் தவளைகள் குஞ்சுகளை ஈனுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை நீங்கள் இங்கே காணலாம்.
பட மூலாதாரம், Zoological Society of London
படக்குறிப்பு, வளர்ந்த ஆண்தவளைகள் தலைப்பிரைட்டைகளை வாயில் வைத்துப் பாதுகாக்கின்றன
லண்டன் உயிரியல் பூங்காவின் நீர்-நிலவாழ் உயிரி கண்காணிப்பாளரான பெண் டாப்லே கூறுகையில், “பூஞ்சை நோயால் டார்வின் தவளைகளுக்கு ஏற்படும் பேராபத்தில் இருந்து அந்த இனத்தைப் பாதுகாப்பதில் இந்த முயற்சி மிக முக்கியமான மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
அதோடு, “சூழலியலாளர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது என்ன சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது இருக்கிறது. வெற்றிகரமாக தவளைக் குஞ்சுகளை ஈன்றெடுக்கும் இந்த நடவடிக்கை, இந்த இனத்திற்குப் புதிய நம்பிக்கைக்கான சின்னமாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிரியல் கல்வி நிறுவனமான லண்டன் உயிரியல் சங்கத்தின் ஆய்வு மாணவரான ஆண்ட்ரேஸ் வலென்சுவேலா சான்செஸ் கூறுகையில், “இந்தத் தவளைகள் வருங்காலத்தில் வரும் இதே இனத் தவளைகளுக்கு உயிர்நாடியாக இருப்பது மட்டுமின்றி, உலகளாவிய அளவில் சைட்ரிட் பூஞ்சை நோய்த் தொற்றிலிருந்து நீர்-நில வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையைக் கண்டறியவும் உதவும்,” என்றார்.