பட மூலாதாரம், Getty Images
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சூரத்தை இரண்டு முறை கொள்ளையடித்தார். இந்த இரண்டு தாக்குதல்களிலும் சிவாஜியின் படைகள் பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்தன. ஆனால், இந்த இரண்டு தாக்குதல்களின் போதும் அவர்களால் சூரத்தில் இருந்த ஆங்கிலேயர்களிடம் கொள்ளையடிக்க முடியவில்லை.
அந்த நேரத்தில் சூரத்தில் ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுகாரர்களின் கிடங்குகள் இருந்தன. இந்தக் கிடங்குகளில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன. ஆனால், மராத்தியர்களால் ஆங்கிலேயர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாமல் போனது ஏன்?
இதைப் புரிந்து கொள்ள, நாம் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சூரத் அந்தக் காலகட்டத்தில் செல்வச் செழிப்புடன் வளமையாக இருந்தது. ஆனால் அந்நிய ஆக்கிரமிப்பைத் தடுக்க அங்கு பாதுகாப்பு வசதிகள் ஏதும் இருக்கவில்லை. அதன் பாதுகாப்பைப் பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை.
இந்த நிலையில், தெற்கில் மராத்திய சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு எதிராக முகலாயர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை அதிகரித்திருந்தனர். எனவே, அதற்குப் பழிவாங்குவதற்காக சிவாஜியின் கவனம் சூரத் பக்கமாகத் திரும்பியது.
கடந்த 1662-ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனி சூரத்தில் இருந்த தங்கள் முகாமுக்கு ஓர் ஆளுநரை நியமித்தது. அந்த ஆளுநரின் பெயர் ஜார்ஜ் ஆக்சாண்டன்.
அந்த நேரத்தில், சில ஆங்கிலேயர்கள் சூரத் முகாமில் தனிப்பட்ட முறையில் வணிகம் செய்து நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தனர். இந்த நஷ்டத்தை தடுப்பதே ஆக்சாண்டனின் பணியாக இருந்தது.
“ஜனவரி 6, 1664 அன்று, முகலாய பேரரசின் மிகவும் செல்வம் கொழிக்கும், வளமான துறைமுகமான சூரத்தை சிவாஜி நான்கு நாட்கள் கொள்ளையடித்தார். அந்த நகரத்தின் பாதுகாப்பிற்கு எந்த ஏற்பாடும் இல்லை. அங்கு அபரிமிதமான செல்வம் இருந்தது. அரச வரி (ஜகாத்) மூலம் மட்டுமே முகலாய பேரரசுக்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது” என்று ஜதுநாத் சர்க்கார் தனது ‘ஔரங்கசீப் 1618-1707’ என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார்.
ஜனவரி 5, 1664 செவ்வாய்க்கிழமை காலையில், சிவாஜி சூரத்தை சூறையாட வருகிறார் என்ற செய்தி பரவியது.
அந்த நேரத்தில் சிவாஜியின் படை சூரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள காந்த்தேவி பகுதியை அடைந்திருந்தது. சூரத் மக்களிடையே பீதி பரவியது. மக்கள் அச்சத்தில் ஓடத் தொடங்கினர். பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் தபி (Tapi) ஆற்றைக் கடந்து சென்றனர்.
பட மூலாதாரம், Getty Images
அந்த நேரத்தில், இனாயத் கான் சூரத்தின் முகலாய ஆளுநராகவும் கோட்டைக் காவலராகவும் இருந்தார்.
அவர் ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுகாரர்களிடம் உதவி கோரினார். ஆனால் அவர்கள், “எங்களால் உதவ முடியாது, நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டனர்.
“இனாயத் கான் லஞ்சம் வாங்கிக்கொண்டு செல்வந்தர்களுக்குக் கோட்டையில் புகலிடம் அளித்தார். நகர மக்களைக் கடவுளின் கையில் விட்டுவிட்டு, அவரும் கோட்டைக்குள் ஒளிந்துகொண்டார்” என்று ஜாதுநாத் சர்க்கார் எழுதியுள்ளார்.
ஜனவரி 6 புதன்கிழமை அன்று காலை, சிவாஜி சூரத்தை அடைந்து கிழக்கே உள்ள பர்ஹான்புரி வாயிலில் இருந்து சிறிது தொலைவில் முகாமிட்டார்.
மராட்டியப் படை சூரத்தைத் தாக்கியது. வீடுகளைச் சூறையாடி தீ வைத்தனர். இந்தத் தாக்குதல் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டன.
“நகரின் மூன்றில் இரண்டு பங்கு அழிக்கப்பட்டது. டச்சு தொழிற்சாலை அருகில் அந்தக் காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய பணக்கார வணிகரான வீர்ஜி வஹோராவின் அரண்மனை இருந்தது. அந்த நேரத்தில், அவரது மொத்த சொத்து மதிப்பு 80 லட்சம் ரூபாய் என்று நம்பப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் மராத்தியர்கள் வீர்ஜி வஹோராவின் அரண்மனையைச் சூறையாடினர். இறுதியில், அவர்கள் அதற்குத் தீயும் வைத்தனர்” என்று ஜதுநாத் சர்க்கார் குறிப்பிட்டுள்ளார்.
“பிரிட்டிஷ் தொழிற்சாலைக்கு அருகில் ஹாஜி சையத் பேக் என்ற மற்றொரு பணக்கார வணிகருக்குச் சொந்தமான வானளாவிய கட்டடம் போன்ற வீடு இருந்தது. அவரிடம் பெரிய கிடங்குகளும் இருந்தன. ஹாஜி தனது சொத்துகளைக் கைவிட்டு கோட்டைக்குத் தப்பிச் சென்றார். மராத்தியர்கள் அவரது வீட்டையும் சூறையாடினர்.”
பட மூலாதாரம், Getty Images
மராத்திய வீரர்களை தடுத்த ஆங்கிலேயர்கள்
அந்தப் புத்தகத்தின்படி, அதே நேரத்தில் இஸ்தான்புல்லில் இருந்து ஒரு பணக்கார யூதர் சூரத் வந்திருந்தார்.
அவர் பேரரசர் ஔரங்கசீப்பிற்காக ஏராளமான ஆபரணங்களைக் கொண்டு வந்திருந்தார். மராத்தியர்கள் அவரைப் பிடித்தனர், ஆனால் அவர் மன உறுதியுடன் இருந்து எந்தப் பாதிப்பும் இன்றி தப்பினார்.
“வியாழக்கிழமை, சூரியன் உதித்து மூன்றாவது மணிநேரத்தில், சாலையில் சுற்றித் திரிந்த கொள்ளையர்களை ஆங்கிலேயர்கள் தாக்கினர். அதனால் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அடுத்த நாள், ஆங்கிலேயர்கள் ஹாஜி சையத் பேக்கின் வீட்டிற்கு அருகில் ஒரு காவல் அரணை அமைத்தனர். இது மேற்கொண்டு சேதம் ஏற்படாமல் அவர்களைக் காப்பாற்றியது. சூரத் சூறையாடப்பட்டதால், மராத்தியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது.”
சூரத் வரலாற்றாசிரியர் இச்சாரம் தேசாய் தனது ‘சிவாஜியின் சூரத் கொள்ளை’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“வட்டிக்கு பணம் கொடுக்கும் சிலர் ஆங்கிலேயர் முகாமுக்கு வந்து தங்கள் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றுமாறு கெஞ்சினர். அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அந்த ஆண்டு, ஆங்கிலேயர் முகாமில் 87 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன.”
ஆங்கிலேய ஆளுநர் ஜார்ஜ் ஆக்சாண்டன், சுவாலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த தனது கப்பல்களில் இருந்து பீரங்கிகளை வரவழைத்தார். அவர் அந்தப் பீரங்கிகளைத் தனது ‘கோதி’ இல்லத்தில் வைத்தார். ஆக்சாண்டன், சுமார் 150 ஆங்கிலேயர்கள் மற்றும் 60 உள்ளூர் வீரர்களுடன் தனது தற்காப்புக்கான திட்டத்தை வகுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
“ஆக்சாண்டன் நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்று, கோஷங்களை எழுப்பி மக்களின் மன உறுதியைக் குலைக்க வேண்டாம் என்று ஊக்கப்படுத்தினார்,” என்று இச்சாரம் தேசாய் பதிவு செய்துள்ளார்.
மறுபுறம், சிவாஜி ஆங்கிலேயர்களிடம் ஒரு தூதரை அனுப்பினார். ‘நீங்கள் உயிர் பிழைக்க விரும்பினால், அபராதம் செலுத்த வேண்டும்’ என்று அவர் கூறினார். ஆங்கிலேயர்கள் சிவாஜியின் கோரிக்கையை நிராகரித்தனர்.
“இதனால் கோபமடைந்த மராத்தியர்கள், ஆங்கிலேயர் முகாமைச் சுற்றியுள்ள வீடுகளுக்குத் தீ வைக்க முயன்றனர். ஜெரால்ட் ஆங்கியர் என்ற துணிச்சலான ஆங்கிலேயர் தலைமையிலான ஒரு சிறிய படை மராத்தியர்களை கடுமையாகத் தாக்கியது. அந்த மோதலில் சிலர் கொல்லப்பட்டனர். எனவே, சிவாஜி அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்திக் கொண்டார். இதுமட்டுமல்லாமல், ஆங்கிலேயர் முகாமைச் சுற்றி வாழ்ந்த பணக்காரர்களும் செல்வந்தர்களும் மராத்தியர்களின் கொள்ளை மற்றும் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றப்பட்டனர்” என்று இச்சாரம் தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜியை, ஆங்கிலேயர்களும் டச்சுகாரர்களும் எதிர்த்தனர். அதிலும் ஆங்கிலேயர்கள் எவ்வளவு துணிச்சலாக நின்றார்கள் என்றால், தங்களோடு சேர்த்துப் பிறரின் சொத்துகளையும் பாதுகாத்தனர். டச்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் உடைமைகள் சிவாஜிக்கு கிடைத்திருந்தால், அவருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்வம் கிடைத்திருக்கும்.
இதற்கிடையில், ஒரு ஆங்கிலேயர் மராத்தியர்களிடம் பிடிபட்டார். சுவாலி துறைமுகத்தில் இருந்து நகரத்திற்கு வந்து கொண்டிருந்த அந்தோணி ஸ்மித் என்ற ஆங்கிலேய வணிகர் சிவாஜியின் ஆட்களால் சிறைபிடிக்கப்பட்டார்.
அவரை விடுவிக்க மராத்தியர்கள் மீட்புத் தொகை கேட்டனர். நேரில் கண்ட சாட்சியங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் ஆதாரங்களாகப் பாதுகாப்பக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள குறிப்புகளை மேற்கோள் காட்டி இச்சாரம் தேசாய் தனது நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
“இந்த ஆவணச் சான்றுகளில் இருந்து மராத்தியர்கள் எவ்வளவு பயங்கரமாக சூரத்தைச் சூறையாடினார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அவர்கள் 6 பேரின் மணிக்கட்டுகளையும் தலைகளையும் துண்டித்தனர்.”
பட மூலாதாரம், Print Collector via Getty Images
எச். வி. சேஷாத்ரியின் ‘யுக்பிரவர்த்தக் சிவாஜி’ என்ற புத்தகத்தை கிஷோர் மக்வானா மொழிபெயர்த்துள்ளார்.
அதில், “சிவாஜி மகாராஜ் ஸ்மித்தின் கைகளை உடைக்க உத்தரவிட்டார். அதற்கு ஸ்மித், ஏன் என் கைகளை மட்டும் உடைக்கிறீர்கள், தலையையே துண்டித்துவிட வேண்டியதுதானே? என்று பதிலளித்தார். அந்தப் பதிலைக் கேட்ட பிறகு, மகாராஜ் அவரிடம் 350 ரூபாய் மட்டும் அபராதமாகப் பெற்றுக்கொண்டு உயிரோடு விடுவித்தார்.” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவாஜியிடம் சுமார் 5,000 வீரர்கள் இருந்தனர், ஆங்கிலேயர்களிடம் 210 வீரர்கள் மட்டுமே இருந்தனர் என்று புத்தகம் குறிப்பிடுகிறது. ஆனால் ஆங்கிலேயர்களின் ‘துணிச்சலும் தந்திரமும்’ மராத்தியர்களை மூழ்கடித்தது.
சூரத்திற்கு உதவ வேறு ஏதேனும் வெளிநாட்டுப் படைகள் வருவதற்குள் மராத்தியர்கள் தங்கள் இடத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது. எனவே ஆங்கிலேயர்களுடனும் டச்சுகாரர்களுடனும் மோதாமல் தவிர்ப்பதே புத்திசாலித்தனம் என்று கருதி மோதலைத் தவிர்த்தனர். ஜனவரி 10ஆம் தேதி சிவாஜி சூரத்தை விட்டுப் புறப்பட்டார்.
பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்த ஒரு சில ஆங்கிலேயர்களால் தங்கள் செல்வத்தைப் பாதுகாக்க முடிந்தது. ஆனால் சூரத் மக்கள் அனைத்தையும் இழந்தனர்.
அந்த நேரத்தில் சூரத்தின் மக்கள் தொகை சுமார் 8 லட்சமாக இருந்தது. ஆபரணங்கள் நிறைந்த தங்கள் பெட்டிகளை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்த சூரத்தின் செல்வந்தர்களிடம், சிவாஜி சென்ற பிறகு ஆங்கிலேயர்கள் அவற்றைத் திரும்ப ஒப்படைத்தனர்.
இருப்பினும், ‘சூரத் சோனா நி முரத்’ என்ற புத்தகத்தில், கிறிஸ்தவ மதகுரு ஃபாதர் அம்ப்ரோஸின் வேண்டுகோள் காரணமாக சூரத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை மராத்தியர்கள் துன்புறுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் சில செல்வந்தர்களும் தங்கள் செல்வத்தை தேவாலயத்தைச் சுற்றிப் புதைத்து வைத்திருந்தனர்.
ஆனால் சிவாஜியின் ஆட்கள் அதைக் கண்டுபிடித்துத் தோண்டி எடுத்தனர். வளந்தாவை சேர்ந்த தரகர் மோகன்தாஸ் பரேக் எப்போதும் தர்மம் செய்து வந்தார். மராத்தியர்கள் அவரது வீட்டையும் தொடவில்லை என்று பல்வேறு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், CLASSIC IMAGE ALAM
ஆங்கிலேய ஆளுநர் ஆக்சாண்டனுக்கு முகலாயர்களின் சலுகை
ஆமதாபாத்தில் இருந்த முகலாய சுபா முகமது கான், சூரத்திற்கு உதவி செய்ய ஒரு படையை அனுப்பியபோது, காலம் கடந்துவிட்டது. அதற்குள் மராத்தியர்கள் சூரத்தை சூறையாடிவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
ஆங்கிலேய கோட்டையின் ஆளுநரான ஆக்சாண்டனின் துணிச்சலைப் பாராட்டி முகலாய அரசு அவருக்கு நன்றி தெரிவித்தது. ஆமதாபாத்தில் இருந்து வந்த முகலாய படைத் தளபதி, சூரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஆக்சாண்டனிடம் ஒப்படைத்தார்.
அவரது சேவைக்காக முகலாய படை அவருக்கு ஒரு குதிரையையும், தங்கத் தலைப் பாகையையும் வழங்கி கௌரவித்தது.
இருப்பினும், தான் ஒரு வணிகர் என்பதால், தனக்கு வணிக ரீதியான சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று ஆக்சாண்டன் முகலாயர்களிடம் கோரினார்.
டெல்லி பேரரசர் ஔரங்கசீப்பின் அனுமதியுடன், ஆமதாபாத் சுபா, ஆங்கிலேய பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியில் ஒரு சதவிகிதம் சலுகை வழங்கினார்.
சிவாஜியின் இரண்டாவது சூரத் சூறையாடல்
அக்டோபர் 2, 1670 அன்று, சிவாஜி இரண்டாவது முறையாக சூரத்தை கொள்ளையடிக்க வருகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. மக்களிடையே மீண்டும் பீதி ஏற்பட்டது.
“சூரத்தின் வணிகர்களும் அரசு ஊழியர்களும் முந்தைய நாளே தப்பிவிட்டனர். அக்டோபர் 3-ஆம் தேதி, சிவாஜி மீண்டும் நகரத்தைத் தாக்கினார்,” என்று ஜாதுநாத் சர்க்கார் குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜியின் முதல் தாக்குதலுக்குப் பிறகு, ஔரங்கசீப் உத்தரவின் பேரில் சூரத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. இருப்பினும், சிவாஜியின் வீரர்களைச் சிறிது நேரம் எதிர்கொண்ட பிறகு, கோட்டைப் பாதுகாவலர்கள் தப்பியோடினர்.
அந்த நேரத்தில், ஆங்கிலேயர்கள், டச்சுகாரர்கள், துருக்கியர்கள், பிரெஞ்சுகாரர்கள் மற்றும் இரானியர்களின் வணிகம் முந்தைய சூறையாடலில் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீண்டு வந்திருந்தது.
ஒரு சில இடங்கள் தவிர, நகரம் முழுவதையும் மராத்தியர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பிரெஞ்சுகாரர்கள் மராத்தியர்களுக்குப் பெரிய பரிசுகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.
“பிரிட்டிஷ் குடியிருப்பு ஒரு திறந்த முகாமில் இருந்தது. ஆனால் அவர்கள் 50 கடற்படை வீரர்களின் உதவியுடன் மராத்தியர்களை எதிர்த்துப் போராடிப் பாதுகாத்தனர்,” என்று ஜாதுநாத் சர்க்கார் பதிவு செய்துள்ளார்.
மராத்தியர்கள் பெரிய வீடுகளை வசதியாகச் சூறையாடியதோடு, பாதி நகரத்தைத் தீக்கிரையாக்கினர். அக்டோபர் 5-ஆம் தேதி, அவர்கள் இரண்டாவது முறையாக சூரத்தைச் சூறையாடிவிட்டுத் தப்பினர்.
ஜதுநாத் சர்க்காரின் கூற்றுப்படி, இரண்டாவது தாக்குதலில் சிவாஜியின் படைக்கு 66 லட்சம் மதிப்புள்ள கொள்ளைப் பொருட்கள் கிடைத்தன. மராத்தியர்களின் தாக்குதல்கள் மற்றும் தொந்தரவுகளால், சூரத்தின் வணிகம் முற்றிலும் சீர்குலைந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு