பட மூலாதாரம், Life Span publisher
சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் எழுதப்பட்ட பல நூல்களில் கூட குறிப்பிடப்படுவதிலிருந்தே சந்திரகுப்த மௌரியரின் செல்வாக்கை அறிந்துகொள்ளலாம்.
மெகஸ்தெனீஸின் ‘இண்டிகா’ உள்ளிட்ட நூல்கள் இதில் அடங்கும் என்றாலும் எந்த நூலின் அசல் பிரதியும் எங்கும் கிடைக்கவில்லை என்பதால் மௌரிய வம்சத்தை நிறுவிய சக்ரவர்த்தியின் ஆட்சிக் காலத்தின் உண்மையான விவரங்கள் கிடைக்கவில்லை.
அவரது பேரன் அசோகர் கூட தனது கல்வெட்டுகளில் தனது தாத்தாவை பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.
சந்திரகுப்த மௌரியரைப் பற்றி வரலாற்றாசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. பௌத்த மத ஆதாரங்களான ‘தீக நிகாய’ மற்றும் ‘திவ்யாவதான்’ ஆகியவற்றில் மௌரியர்கள் பிப்பலிவனில் ஆட்சி செய்த சத்திரிய வம்சத்தினராகக் கூறப்படுகிறது.
மறுபுறம், பல அறிஞர்கள் மௌரியர் என்ற சொல்லின் வேர்கள் மயூராவில் உள்ளன என்று நம்புகின்றனர், இதனால் அவர்கள் மயில்கள் அதிகம் உள்ள பகுதியைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது அவர்களது வாழ்க்கையில் மயில்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
சிலர் அவர்கள் மயில்களை வளர்த்தனர் என்று நம்புகின்றனர், சிலர் அவர்கள் மயில்களை வேட்டையாடினர் என்று நினைக்கின்றனர், ஆனால் உறுதியாக எதையும் கூறுவது கடினம்.
விஷாகதத்தா தனது பிரபல நாடகமான ‘முத்ராராக்ஷசா’வில் சந்திரகுப்தருக்கு ‘வ்ருஷலா’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார், சிலர் இதன் பொருள் ‘சூத்திரரின் மகன்’ என்று கூறுகின்றனர்.
ஆனால் ராதாகுமுத் முகர்ஜி தனது ‘சந்திரகுப்த மௌரியா அண்ட் ஹிஸ் டைம்ஸ்’ என்ற நூலில், ‘வ்ருஷலா’ ‘சிறந்த அரசர்’ என பொருள்படும் ஒரு மரியாதைக்குரிய சொல் என்று எழுதியுள்ளார். பல பழங்கால நூல்களில் சாணக்கியர் சந்திரகுப்தரை அன்புடன் ‘வ்ருஷலா’ என்று அழைத்ததாக குறிப்பிடுகிறார்.
சந்திரகுப்த மெளரியர் மற்றும் சாணக்கியர் சந்திப்பு
பட மூலாதாரம், Getty Images
சந்திரகுப்த மௌரியரின் பிறப்பு பற்றி பல முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அவர் கிமு 4ஆம் நூற்றாண்டில் சுமார் 21 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
முதலில் அவர் தன்னை பஞ்சாபில் நிலைநிறுத்தி, பின்னர் கிழக்கே சென்று மகதத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இந்த முழு பயணத்தில் சந்திரகுப்தருக்கு அதிக உதவியை சாணக்கியர் அளித்தார். சந்திரகுப்தர் சாணக்கியரை சந்தித்த கதையும் சுவாரஸ்யமானது.
மகத மன்னன் தனானந்தரின் மோசமான நடத்தையால் புண்பட்ட சாணக்கியர் கிராமப்புறங்களில் சுற்றி வந்தார் என்று பல பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது 11-12 வயது சந்திரகுப்தர் குழந்தைகளின் விளையாட்டில் ராஜாவாக பங்கேற்று ஒரு அரசவையை நடத்தி கொண்டிருந்தார்.
தேவிகா ரங்காச்சாரி தனது ‘த மௌரியாஸ், சந்திரகுப்தா டு அசோகா’ என்ற நூலில, “சாணக்கியர் சந்திரகுப்தர் ஒரு மரத்தின் தண்டில் உட்கார்ந்து ஆதாரங்களின் அடிப்படையில் நியாயம் வழங்குவதை பார்த்தார். அவர் அதனால் மிகவும் கவரப்பட்டார். அந்த சிறுவனின் பெற்றோரிடம் அவரை தன்னுடன் வர அனுமதிக்கும்படி கோரினார்,” என எழுதியுள்ளார்.
“சாணக்கியர் சந்திரகுப்தரை தன்னுடன் தக்ஷசிலாவுக்கு அழைத்துச் சென்றார், இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது, அங்கு அவரை ஒரு குருகுலத்தில் சேர்த்தார். அப்போது தக்ஷசிலா கல்விக்கான மிகப்பெரிய மையமாக இருந்தது. மேலும், சாணக்கியர் அவரை அடிக்கடி சோதித்து எதிர்கால சவால்களுக்கு அவரை தயார்படுத்தினார்.”
இதே சமயத்தில் அலெக்ஸாண்டர் இந்தியாவில் தனது படையெடுப்பை தொடங்கினார். வாய்ப்பை பயன்படுத்துவதில் நிபுணரான சாணக்கியர் சந்திரகுப்தரை அலெக்சாண்டரை சந்திக்க அனுப்பினார்.
“சந்திரகுப்தர் மகதத்தை தாக்குவதற்கு அலெக்ஸாண்டரின் உதவியை கோரி சென்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், இந்த சந்திப்பு வெற்றி பெறவில்லை, அலெக்ஸாண்டருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை சந்திரகுப்தர் கூறினார்,” என கிரேக்க வரலாற்றாசிரியர் புளூடார்க் எழுதியுள்ளார்,
மற்றொரு கிரேக்க வரலாற்றாசிரியர் ஜஸ்டின், “சந்திரகுப்தரின் பேச்சுமுறை அலெக்ஸாண்டரை மிகவும் கோபப்படுத்தியதால், அவர் அவரை கொல்லும்படி உத்தரவிட்டார். அவரது வேகமான கால்களால் சந்திரகுப்தரின் உயிர் காப்பாற்றப்பட்டது.”
“அங்கிருந்து தப்பி, சந்திரகுப்தர் களைத்து உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய சிங்கம் அருகில் வந்தது. அது தனது நாக்கால் அவர் உடலில் வழிந்தோடிய வியர்வையை நக்கிவிட்டு அங்கிருந்து சென்றது. அதன் பிறகு சந்திரகுப்தர் சிலரை சேர்த்து தனது படையை உருவாக்கத் தொடங்கினார்.”
அலெக்ஸாண்டரின் மரணத்திற்குப் பிறகு சந்திரகுப்தர் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதியின் மக்களை விடுவித்ததை ஜஸ்டினின் விவரிப்பு காட்டுகிறது.
சந்திரகுப்தர் சாணக்கியரை சார்ந்திருந்தார்
பட மூலாதாரம், S&S India
சந்திரகுப்தரின் அடுத்த இலக்கு மகதமாக இருந்தது. அங்கு சந்திரகுப்தரின் ஒப்பீட்டளவில் சிறிய படை தனானந்தரின் பெரிய படையுடன் மோதியது. ஆனால் வெற்றி சந்திரகுப்தின் பக்கமே இருந்தது.
இந்த போரை பௌத்த நூல் ‘மிலிந்த பஞ்ஹோ’ விவரிக்கிறது. அதன் படி, “பதாசாலா தலைமையில் நந்த படைகள் சந்திரகுப்தரை தைரியமாக எதிர்த்தன. இந்த போரில் தனானந்தை தவிர நந்த வம்சத்தைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களும் கொல்லப்பட்டனர்.”
இந்த முழு பயணத்திலும் சாணக்கியர் அவருடன் ஒரு நிழல்போல இருந்தார்.
“இந்த முழு கதையிலும் சாணக்கியரின் தாக்கம் தெளிவாகவே தெரிகிறது. பல இடங்களில் சந்திரகுப்தர் மெளனமாக நின்று, சாணக்கியருடன் சென்று அவரது திட்டத்தை பின்பற்றி மகத மன்னனாக மாறினார்,” என தேவிகா ரங்காச்சாரி எழுதியுள்ளார்,
“அறியாத நபரை முழுமையாக நம்பி தனது எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைப்பது எளிதான காரியம் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் சந்திரகுப்தர் இவற்றை செய்தபோது அவர் மிகவும் இளமையாக இருந்தார்.”
சாணக்கியருக்கும் தனானந்தருக்கும் இடையேயான மோதல்
பட மூலாதாரம், Gyan Publishing House
சாணக்கியர் தனானந்தரை ஆட்சியில் இருந்து அகற்ற சந்திரகுப்த மௌரியரை பன்படுத்தும் அளவு இருந்த பகைமை என்ன என்ற கேள்வி எழுகிறது.
ஒரு முறை சாணக்கியர் பாடலிபுத்திரத்தில் தனானந்தரின் அரசவையில் உட்கார்ந்து உணவு உண்ணும் போது, அரசவையில் நுழைந்த தனானந்தரின் முதல் பார்வை சாணக்கியரின் மீது விழுந்தது என்பது ஒரு விவரிப்பு.
“சாணக்கியர் ராஜாவை பார்த்த போதிலும் உணவு உண்ணுவதை தொடர்ந்தார். ஆணவம் நிறைந்த ராஜாவுக்கு இது மிகவும் வெறுப்பாக இருந்தது, உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு உடனடியாக அரசவையை விட்டு வெளியேறுமாறு அவர் சாணக்கியருக்கு உத்தரவிட்டார்,” என தீபா அக்ரவால் தனது ‘சாணக்கியா – த மாஸ்டர் ஆஃப் ஸ்டேட்கிராஃப்ட்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
“சாணக்கியர் அவரது வார்த்தையை கேட்காததால் ராஜாவின் கோபம் உச்சத்தை எட்டியது. அதன் பிறகு சாணக்கியர் கோபத்துடன் எழுந்து, நந்த வம்சத்தின் வேர்களை அழிக்கும் வரை தனது சிகையில் முடிச்சு போட மாட்டேன் என்று கூறினார். அதன் பிறகு அவர் தனது சபதத்தை நிறைவேற்ற உதவும் ஒரு நபரை தேடத் தொடங்கினார்.”
துர்தராவுடன் சந்திரகுப்த மௌரியரின் திருமணம்
பட மூலாதாரம், Life Span publisher
தனானந்தரின் தோல்விக்கு பிறகு அவர் சிம்மாசனத்தை விட்டு விலக வேண்டியிருந்தது, அதன் பின்னர் சாணக்கியர் தனது சிகையை மீண்டும் முடியத் தொடங்கினார்.
“நாட்டை விட்டு துரத்தப்பட்ட ராஜாவின் இளைய மகள் துர்தராவை சந்திரகுப்தர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் முன்மொழிந்தார். தந்தையை சிம்மாசனத்திலிருந்து அகற்றியவரை ஒரு மகள் மணக்க தயாராக இருப்பாளா என் விநோதமாகத் தோன்றலாம், ஆனால் இதில் அரசியல் நோக்கங்கள் உள்ளன. திருமணத்தின் மூலம் இரு எதிரி அரசர்களை இணைத்து அவர்களின் கசப்பை நீக்கும் முயற்சிகள் அதற்கு முன்பும் நடைபெற்றுள்ளன,” என தேவிகா ரங்காச்சாரி எழுதியுள்ளார்.
பாடலிபுத்திரத்தின் மகத்துவம்
பட மூலாதாரம், Getty Images
கிமு 320 ஆம் ஆண்டுக்குள் சந்திரகுப்தர் தனது அனைத்து இந்திய எதிரிகளையும் வென்று கங்கை சமவெளியில் தனது கட்டுப்பாட்டை நிறுவினார். அந்த காலத்தில் மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரம் உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது.
“பாடலிபுத்திரத்தின் மொத்த பரப்பு 33.8 சதுர கிலோமீட்டர்கள். எகிப்தின் அலெக்ஸாந்திரியாவின் பரப்பு அதில் பாதிதான், ரோமின் பரப்பு 13.72 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே. பாடலிபுத்திரம் ஏதென்ஸ் நகரை விட 11 மடங்கு பெரிய நகரமாக இருந்தது. முழு நகரத்திலும் 64 வாயில்கள் மற்றும் 570 கோபுரங்கள் இருந்தன. அந்த காலத்தில் பாடலிபுத்திரத்தில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசித்தனர்,” என டைட்டர் ஷிலிங்காலஃப் தனது ‘ஃபோர்டிஃபைட் சிட்டீஸ் ஆஃப் இந்தியா’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
அலெக்ஸாண்டரின் வாரிசு செல்யூகஸ் தனது சாம்ராஜ்யத்தை மீண்டும் பெற கிழக்கு நோக்கி படையெடுத்தபோது அது தோல்வியில் முடிந்தது. கிமு 305-ல் அவர் சந்திரகுப்த மௌரியருடன் மோதியபோது அவருக்கு பெரிய தோல்வி ஏற்பட்டது.
“சந்திரகுப்தர் தனது 9,000 யானைகளில் 500 யானைகளை செல்யூகஸுக்கு கொடுத்து அந்த நிலத்தை பெற்றார். செல்யூகஸ் தனது ராஜ்யத்தின் கிழக்குப் பகுதியை சந்திரகுப்தருக்கு கொடுத்தார். சந்திரகுப்தர் தனது ஒரு மகனை செல்யூகஸின் மகளுக்கு திருமணம் செய்து வைத்தபோது இரு தரப்புக்கும் இடையேயான கூட்டணி மேலும் வலுப்பெற்றது,” என வரலாற்றாசிரியர் வில்லியம் டெலரிம்பல் தனது ‘த கோல்டன் ரோட்’ என்ற நூலில் எழுதியுள்ளார்,
“சந்திரகுப்தர் ஒரு கிரேக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடும், ஏனெனில் அந்த காலத்தில் அமைதி ஒப்பந்தங்களுக்கு இதுபோன்று செய்வது வழக்கமாக இருந்தது. சந்திரகுப்தரின் வாரிசுகளின் ரத்தத்தில் கிரேக்க ரத்தம் ஓடியிருக்கலாம் என்று கூறுவது அசாத்தியமல்ல,” என பாட்ரிக் ஓலிவெல் தனது ”Society in India 300 BC to 400 BC” என்ற நூலில் எழுதியுள்ளார்.
சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி முறை
பட மூலாதாரம், Life Span publisher
செல்யூகஸ் தனது பிரதிநிதியான மெகஸ்தெனீஸை சந்திரகுப்த மௌரியரின் அரசவைக்கு அனுப்பினார். அவர் தனது ‘இண்டிகா’ என்ற நூலில் அந்த கால இந்தியாவைப் பற்றி விரிவான தகவல்களை அளித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, மெகஸ்தெனீஸ் விவரித்தவற்றின் அசல் பிரதி இப்போது கிடைக்கவில்லை, ஆனால் அதை பயன்படுத்தி பல கிரேக்க மற்றும் லத்தீன் ஆசிரியர்கள் அந்த கால இந்தியாவின் உருவத்தை விவரித்துள்ளனர்.
இந்த விவரிப்பு, மௌரிய சாம்ராஜ்யத்தின் நிர்வாகம் மிகவும் முன்னேறியிருந்ததையும், ராஜ்யத்தின் பொருளாதார செயல்பாடுகளின் மீது முழு கட்டுப்பாட்டை கொண்டிருந்ததையும் காட்டுகிறது.
அரசர் நிர்வாகத்தின் தலைவராக இருந்தார். அவருக்கு உதவ 18 ‘அமாத்தியர்கள்’ இருந்தனர், அவர்கள் நிர்வாகத்தின் ஒவ்வொரு அலகையும் கண்காணித்தனர்.
சந்திரகுப்த மௌரியரின் பெரும் படை
பட மூலாதாரம், Picador India
மெகஸ்தெனீஸ் சந்திரகுப்தின் நீதி அமைப்பை பாராட்டி, அரசர் திறந்த அரசவையில் தானே மக்களுக்கு நீதி வழங்கினார் என்று எழுதியுள்ளார்.
“சந்திரகுப்தர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய சொகுசான அரண்மனையில் வசித்தார், அதன் அழகும் பிரமாண்டமும் நம்பமுடியாததாக இருந்தது, ஆனால் எப்போதும் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் இருந்ததால் அவரது வாழ்க்கை மிகவும் சுகமானதாக இல்லை,” என மெகஸ்தெனீஸை மேற்கோள் காட்டி ஏ.எல். பாஷம் தனது ‘The Wonder That Was India’ என்ற நூலில் எழுதியுள்ளார்,
“அவரது பாதுகாப்புக்கு கடுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாடலிபுத்திரம் நான்கு திசைகளிலும் மரத்தால் ஆன சுவர்களால் சூழப்பட்டிருந்தது. அந்த சுவர்களில் அம்புகளை ஏவும்வகையில் பல்வேறு இடங்களில் துளைகள் போடப்பட்டிருந்தன.”
எதிரிகள் நகருக்குள் நுழையமுடியாதபடி சுவர்களுக்கு அருகில் 600 அடி அகலமுள்ள அகழி தோண்டப்பட்டிருந்தது, பாடலிபுத்திரத்தை 30 உறுப்பினர்கள் கொண்ட ஒரு நிர்வாக வாரியம் ஆட்சி செய்தது.
சந்திரகுப்தருக்கு ஒரு பெரிய படை இருந்தது, அவர்களுக்கு தொடர்ந்து சம்பளம் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
மெகஸ்தெனீஸின் கூற்றுப்படி, சந்திரகுப்தரின் படையில் ஆறு லட்சம் காலாட்படை, முப்பது ஆயிரம் குதிரைப்படை வீரர்கள் மற்றும் ஒன்பது ஆயிரம் யானைகள் இருந்தன. ஒவ்வொரு யானையின் மீதும் பாகனைத் தவிர நான்கு வீரர்கள் உட்கார்ந்திருந்தனர்.
சந்திரகுப்தரின் தினசரி வாழ்க்கை
சந்திரகுப்த மௌரியர் பெரும்பாலான நேரத்தை அரண்மனையில் கழித்தார்.
“சந்திரகுப்தரின் பாதுகாப்பு ஆயுதம் ஏந்திய பெண் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் மக்களிடையே செல்லும் போது சிறந்த மஸ்லின் துணியால் ஆன உடைகளை அணிந்தார், அதில் ஊதா மற்றும் தங்க நிறத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டிருந்தது. குறுகிய தூர இடங்களுக்கு குதிரையில் சென்றார், ஆனால் நீண்ட தூர பயணத்தை யானை மீது அமர்ந்து மேற்கொண்டார்,” என ஜெ.டபிள்யூ. மெக்ரெண்டல் தனது ‘Ancient India as Described by Megasthenes and Arrian’ என்ற நூலில் எழுதியுள்ளார்,
“அவர் பகலில் தூங்குவதில்லை. இரவில் தன்னை கொல்லும் எந்த திட்டத்தையும் குலைக்கும் வகையில் தனது படுக்கையறையை ஒவ்வொரு இரவும் மாற்றிக்கொண்டிருந்தார். மசாஜ் செய்யப்படும்போதும் அவர் மக்களின் கோரிக்கைகளை கேட்டார். அவருக்கு யானைகள், மாடுகள் மற்றும் காண்டாமிருகங்களின் சண்டை பார்ப்பது பிடித்திருந்தது. மாட்டு பந்தயத்தை பார்க்கும் எந்த வாய்ப்பையும் அவர் தவற விடவில்லை.”
சிம்மாசனத்தை துறத்தல்
பட மூலாதாரம், Life Span publisher
தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், சந்திரகுப்த மௌரியர் அமைதியைத் தேடி ஜைன மதத்தை நோக்கி திரும்பினார், அவர் சிம்மாசனத்தை துறந்து தனது மகன் பிந்துசாராவை மகத மன்னராக்கினார்.
“சந்திரகுப்த மௌரியா ஒரு ஜைன சாதுவான பத்ரபாஹுவுடன் தெற்கு நோக்கி சென்றார். அங்கு கர்நாடகாவின் சரவண பெலகோலாவில் ஜைன முறையில் பட்டினி இருந்து தனது உயிரை துறந்தார். அவரது மரணம் கிமு 293-ல் நிகழ்ந்தது. அப்போது அவரது வயது 50-க்கு மேல் இருந்தது,” என ரோமிலா தாப்பர் தனது ‘எர்லி இந்தியா’ என்ற நூலில் எழுதியுள்ளார்,
அவர் ஒரு வகையில் முழு இந்திய துணைக்கண்டத்தின் அரசராக இருந்தார். அவரது சாம்ராஜ்யம் இரானின் எல்லையிலிருந்து கங்கை சமவெளி முழுவதும் பரவியிருந்தது.
அதில் இன்றைய இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீரும் அடங்கும். கலிங்கம் (ஒடிசா), ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அவரது சாம்ராஜ்யத்தில் இருக்கவில்லை, ஆனால் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் அவரது சாம்ராஜ்யத்தின் பகுதியாகவே கருதப்படுகிறது.
அவர் ஒரு வெற்றியாளர் மற்றும் பேரரசை உருவாக்கியவர் மட்டுமல்ல, அதே அளவு சிறந்த மேலாளர் மற்றும் நிர்வாகியாகவும் இருந்தார் என அவரைப் பற்றி சொல்லப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு