பட மூலாதாரம், thirunallarutemple.org
மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என திருக்கணிதப் பஞ்சாங்கம் கூறும் நிலையில், அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி இல்லை என திருநள்ளாறு கோவில் அறிவித்திருக்கிறது.
சனிப்பெயர்ச்சி எப்போது என்பதிலேயே முரண்பாடுகள் தோன்றுவது ஏன்? சனிப் பெயர்ச்சி தொடர்பான அறிவியல் உண்மை என்ன?
சனிப் பெயர்ச்சி எப்போது?
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 அன்று சனிப் பெயர்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தை நம்புபவர்கள், இந்த சனிப் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள், பூஜைகளைச் செய்யலாம் என்ற விளம்பரங்களும் தென்படுகின்றன. ஊடகங்களில் ஜோதிடர்களும் இதற்கான பலன்களைச் சொல்லிவருகின்றனர்.
ஆனால், சனீஸ்வரனுக்கு மிக முக்கியமான கோவிலாகக் கருதப்படும் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேவஸ்தானம், மார்ச் 29ஆம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை எனத் தெரிவித்துள்ளது. இது சனிப் பெயர்ச்சியை நம்பக்கூடிய பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வானியல் ரீதியாக சூரியக் குடும்பத்தில் ஆறாவதாக உள்ள கிரகம் சனி. இந்த கிரகம் சூரியனைச் சுற்றிவர 29.45 ஆண்டுகளாகின்றன. அதாவது சுமார் 30 ஆண்டுகள். ஜோதிடத்தை நம்புபவர்களைப் பொருத்தவரை, மொத்தம் 12 ராசிகள் உள்ளதாகவும் மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த 12 ராசிகளில் ஏதாவது ஒன்றில் பிறந்ததாகவும் கருதப்படுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ஏழரை சனி என்று ஜோதிடம் எதை கூறுகிறது?
சூரியனைச் சுற்றிவர சனி எடுத்துக்கொள்ளும் இந்த 30 ஆண்டுகளில், ஒவ்வொரு ராசியிலும் 2.5 ஆண்டுகள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சனியின் நகர்வு, அவரவர் ராசியின் அடிப்படையில் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் நம்புகின்றனர். ஒருவருடைய ராசிக்குள் சனி இருப்பது, பெரும்பாலும் ஒரு சிக்கலான காலகட்டத்தை உருவாக்கும் என அவர்கள் நினைக்கின்றனர்.
ஒருவருடைய ராசி மட்டுமல்லாது, அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலமும் அந்த ராசிக்காரர்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படும் என ஜோதிட நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
உதாரணமாக, ஒருவர் விருச்சிக ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், விருச்சிக ராசிக்குள் சனி இருக்கும் காலகட்டம் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய ராசியான துலாம் ராசியில் சனி இருக்கும் இரண்டரை ஆண்டுகளும் விருச்சிக ராசிக்கு அடுத்த ராசியான தனுஷ ராசியில் சனி இருக்கும் காலகட்டமான இரண்டரை ஆண்டுகளும் சேர்த்து, மொத்தமாக ஏழரை ஆண்டுகள் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த ஏழரை ஆண்டு காலமே, ஏழரை சனி எனக் குறிப்பிடப்படுகிறது.
சனியைப் போலவே, குரு, ராகு – கேது ஆகிய கிரகங்கள் ஒருவரது ராசிக்கு வருவதும் விலகுவதும் வாழ்வின் நிகழ்வுகளை பாதிப்பதாக நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். இருந்த போதும், சனி கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் என நம்பிக்கையாளர்கள் கருதுவதால், ஒருவரது ராசிக்குள் சனி வருவதும், விலகுவதும் நம்பிக்கையாளர்களால் வெகுவாகக் கவனிக்கப்படுகிறது.
பட மூலாதாரம், thirunallarutemple.org
வாக்கியப் பஞ்சாங்கம் முறைப்படி சனிப்பெயர்ச்சி எப்போது?
இப்படி கிரகங்கள் ஒருவரது ராசிக்குள் வருவதையும் விலகுவதையும் கணிக்க பஞ்சாங்கம் எனப்படும் வானியல் சார்ந்த கால அட்டவணைகள் (almanac) பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்தியாவில் இரு விதமான கணிப்புகளை அடிப்படையாக கொண்ட பஞ்சாங்கங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று, வாக்கியப் பஞ்சாங்கம், மற்றொன்று திருக்கணிதப் பஞ்சாங்கம்.
இதில் வாக்கியப் பஞ்சாங்கம் பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தப் பஞ்சாங்கத்தில் வானியல் ரீதியாக உள்ள சில பிழைகளைத் திருத்தி, 19ஆம் நூற்றாண்டில் திருக்கணித பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. இப்போது தமிழ்நாட்டின் கோவில்களிலும் மடங்களிலும் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரும்பாலான ஜோதிடர்களும் திருக்கணித பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றனர்.
இந்தத் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சனி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறது.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அறிவிப்பு
இந்த நிலையில்தான், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலின் (தர்பாரண்யேஸ்வரர் கோவில்) அதிகாரிகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், “பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn’s Transit) தொடர்பாக பல்வேறு செய்திகள், கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சி நிகழும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் – ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம், வாக்கியப் பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கிறோம். ஆகையினால், 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும்.
திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என இந்த அறிக்கை கூறியது.
மார்ச் 24ஆம் தேதி வெளியான இந்த அறிக்கை, சனிப் பெயர்ச்சியை நம்பக் கூடிய பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஜோதிடர்கள் கூறுவது என்ன?
ஆனால், பிரபல ஜோதிடர்கள் மார்ச் 29ஆம் தேதிதான் சனிப்பெயர்ச்சி நிகழ்வதாகச் சொல்கின்றனர். “வாக்கியப் பஞ்சாங்கத்தில் உள்ள காலப் பிழைகளைத் திருத்தியதுதான் திருக்கணிதப் பஞ்சாங்கம். ஆனால் தமிழகப் பகுதிகளில் உள்ள கோவில்கள் மட்டும் இன்னமும் வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகின்றனர்.
திருப்பதி கோவிலிலேயே திருக்கணிதப் பஞ்சாங்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29ஆம் தேதிதான் சனிப்பெயர்ச்சி நடக்கிறது. தற்போதைய சனிப்பெயர்ச்சியின்படி, உலகம் யுத்தத்தை நோக்கிச் செல்லும், பேரழிவுகள் நிகழும். அதற்கான எல்லா அறிகுறிகளும் தற்போது தெரிய ஆரம்பித்துவிட்டன. ஆகவே திருக்கணிதப் பஞ்சாங்கம் சொல்வதுதான் சரி” என்கிறார் பிரபல ஜோதிடரான ஷெல்வி.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் ஜோதிடத்திற்கான ஸ்டார் அகாதெமியின் நிறுவனர் எல்.ஆர். ஸ்ரீநிவாஸன். “நிழலைப் பார்த்து நேரத்தைச் சொல்வதற்கும் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சொல்வதற்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கையின் சில பகுதிகளில் உள்ள கோவில்களும் சிறு குழுக்களும்தான் இன்னும் வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றுகின்றனர். மற்ற எல்லா இடங்களிலும் திருக்கணித பஞ்சாங்கம்தான் பின்பற்றப்படுகிறது. இதனால், வாக்கியப் பஞ்சாங்கம் தவறு என்று சொல்லவரவில்லை. அந்தப் பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து திருத்தப்பட்ட பஞ்சாங்கம்தான் திருக்கணித பஞ்சாங்கம். ஆகவே அதைப் பின்பற்றுவதே சரி,” என்று கூறுகிறார் எல்.ஆர். ஸ்ரீநிவாஸன்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாத முதல் வாரத்தில், அதாவது மார்ச் 6ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது.
பட மூலாதாரம், thirunallarutemple.org
வெவ்வேறு நாட்களில் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதா?
இந்த சனிப் பெயர்ச்சியில் வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் வித்தியாசம் வருகிறதென்றால், இதற்கு முந்தைய சனிப் பெயர்ச்சிக்கும் இதுபோல நடந்திருக்க வேண்டுமே? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஷெல்வி, பின்வருமாறு கூறினார்: “ஆம். இதற்கு முந்தைய சனிப்பெயர்ச்சியிலும் இதுபோல நடந்தது. ஆனால், அப்போது வித்தியாசம் சில நாட்கள்தான் என்பதால் பெரிதாக யாரும் கவனிக்கவில்லை.
இந்த முறை வித்தியாசம் ஒரு ஆண்டு என்பதால் பெரிதாக பேசப்படுகிறது. அதைப்போலவே குருப் பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி ஆகியவற்றின்போது இரு பஞ்சாங்கங்களுக்கிடையிலும் வித்தியாசம் இருந்து வருகிறது. ஆனால், அவையெல்லாம் சில நாட்கள் வித்தியாசத்தில்தான் இருந்தன என்பதால் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை.”
ஆனால், அறிவியலாளர்கள் இந்த இரு முறைகளிலுமே தவறு இருக்கிறது என்கிறார்கள்.
“ஆரம்பத்தில் கோள்களின் நகர்வைக் கணிக்க பரஹிதா என்ற முறையைப் பயன்படுத்தினார்கள். ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டுவாக்கில், தமிழ்நாட்டில் சுந்தரேஸ்வரா, கேரளாவில் நீலகண்ட சோமயாஜி, பரமேஸ்வரா போன்ற வானவியலாளர்கள் அந்த முறையில் கோள்கள் நகர்வதைக் கணிப்பதில் சில பிரச்சனை இருப்பதை உணர்ந்தார்கள். இதனால் சில தவறுகள் ஏற்படுவதையும் உணர்ந்தார்கள்.
பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு, பல பிழைகளை நீக்கி கோள்கள் நகர்வுக்கான ஒரு அட்டவணையை உருவாக்கினார்கள். இதுவே சுத்த வாக்கியப் பஞ்சாங்கம் எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால், இதிலும் சில பிழைகள் வரலாம், இந்தக் கணிப்பும் மாறலாம், அதற்கேற்றபடி அவ்வப்போது இதனைத் திருத்த வேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனைப் பயன்படுத்துபவர்கள் காலப்போக்கில் சுத்த வாக்கியப் பஞ்சாங்கத்தை கடவுளும் ரிஷிகளும் தந்தது எனச் சொல்ல ஆரம்பித்தார்கள்,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
திருக்கணித பஞ்சாங்கம் உருவானது எப்படி?
இது குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசிய மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர். த.வி.வெங்கடேஸ்வரன், “1868ல் ஒரு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது. அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் மிகப் பெரிய தொலைநோக்கியை கொண்ட ஆய்வு நிலையம் இருந்தது. அங்கே ரகுநாதாச்சாரி என்ற வானவியலாளர் பணியாற்றிவந்தார்.
அவர் அந்த சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு முன்பே, அந்த கிரகணம் எப்போது ஏற்படும், எப்போது முடியும் என்றெல்லாம் கணக்கிட்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதினார். பிறகு அதனை அப்போதிருந்த பஞ்சாங்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அது முற்றிலும் வேறுபட்டிருந்தது. சூரிய கிரகணம் நிகழ்ந்த போது, பஞ்சாங்கத்தில் சொல்லியதுபோல நிகழவில்லை.
வானவியல் அறிஞர்கள் கணித்தபடியே நிகழ்ந்தது. ஆகவே, வானியல் ஆய்வில் கிடைத்த முடிவுகளுக்கு ஏற்றபடி பஞ்சாங்கத்தைத் திருத்த நினைத்தார் ரகுநாதாச்சாரி. அதன்படி, பஞ்சாங்கத்தின் மீது ஆர்வம் கொண்ட சிலரோடு சேர்ந்து, வாக்கியப் பஞ்சாங்கத்தைத் திருத்தினார்.
இப்படி திருத்தப்பட்ட பஞ்சாங்கத்தை ‘திருக்கணித பஞ்சாங்கம்’ என்ற பெயரில் தமிழிலும் தெலுங்கிலும் பதிப்பிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இந்தப் பஞ்சாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், ரகுநாதாச்சாரியுடன் நிகழ்ந்த பல விவாதங்களுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் இருந்த அகோபில மடம் அந்தப் பஞ்சாங்கத்தை ஏற்றுக்கொண்டது.
இதற்குப் பிறகு கும்பகோணத்தில் இருந்த சங்கர மடமும் இதனை ஏற்றுக்கொண்டது. இதற்குப் பிறகு திருக்கணித பஞ்சாங்கம் பிரபலமாக ஆரம்பித்தது. ஆனால், அதிலும்கூட பிரச்னைகள் இருந்து வருகின்றன,” என்கிறார்.
அறிவியல் உண்மை என்ன?
திருக்கணிதப் பஞ்சாங்கம் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடப்பதாகச் சொல்கிறது. வாக்கியப் பஞ்சாங்கம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனிப் பெயர்ச்சி நடப்பதாகச் சொல்கிறது. “ஆனால் இவர்கள் சனிப் பெயர்ச்சி என எந்த நகர்வைச் சொல்கிறார்களோ, அந்த நகர்வு வானவியல்படி எப்போதோ நிகழ்ந்துவிட்டது” என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.
நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை, சனிப் பெயர்ச்சி நிகழும் போது, எந்த ராசிக்குள் சனி நுழைகிறதோ அந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள் கவலையடைவதோடு, பரிகாரங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். சனி விலகும் ராசியைச் சேர்ந்தவர்கள், நிம்மதி உணர்வை அடைவார்கள். ஆனால், இந்த முறை வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் இடையில் உள்ள முரண்பாட்டால் இந்த இரு பிரிவினரும் ஒரு குழப்பமான உணர்வில் இருக்கிறார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு