பட மூலாதாரம், Getty Images
சனி கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள வளையங்களைப் போலவே, பூமிக்கும் ஒரு காலத்தில் வளையங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
45 கோடி ஆண்டுகளுக்கு முன்
வல்லுநர்களின் கருத்துப்படி, சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய குறுங்கோள் (ஆஸ்டிராய்டு) பூமியுடன் கிட்டத்தட்ட மோதியுள்ளது. அதன் விளைவாக ஏற்பட்ட கழிவுகளைக் கொண்டதொரு வளையம் பூமியை சுற்றி உருவாகியுள்ளது. இவ்வாறு உருவான வளையங்கள் ‘டெப்ரிஸ் ரிங்’ எனப்படும். இவை, பூமியின் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்ன?
46 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, “ஆர்டோவிஷியன் இம்பாக்ட் ஸ்பைக்” என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அசாதாரணமான அளவில் விண்கற்கள் பூமியைத் தாக்கத் தொடங்கின.
இதனை ஆய்வு செய்துள்ள, ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பூமியில் இருக்கும் 21 பெரிய குறுங்கோள் தாக்கக் குழிகளை (இம்பாக்ட் கிரேட்டர்ஸ்) தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்தக் குழிகள் அனைத்தும் உருவான சமயத்தில் அவை, பூமத்திய ரேகைக்கு அருகில் (30 டிகிரிக்குள்) இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இதுபோன்ற குழிகள் உலகின் வெவ்வேறு இடங்களில் ஏற்படவில்லை.