நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பில், ‘சப்தம்’ திரைப்படம் இன்று (பிப்ரவரி 28) வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஈரம், குற்றம் 23, ஆறாது சினம் போன்ற படங்களை உருவாக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கியுள்ளார்.
2009ஆம் ஆண்டு ஆதி-அறிவழகன் கூட்டணியில் வெளியான ‘ஈரம்’ திரைப்படம் மெகா ஹிட் ஆனது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் தற்போது சப்தம் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் சிம்ரன், லைலா, லக்ஷ்மி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
சப்தம் படத்தின் டிரைலர் வெளியாகி ‘இது ஒரு த்ரில்லர் படமா அல்லது திகில் படமா?’ என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மனதில் தூண்டியது.
இந்நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது? ஊடங்கங்கள் கூறுவது என்ன?
மூணாரில் இருக்கும் ஒரு மருத்துவ கல்லூரியில் மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது தற்கொலையா அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று அந்த கல்லூரி நிர்வாகம் குழப்பத்தில் இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, இந்த விஷயம் குறித்து விசாரணை செய்ய மும்பையில் ஆவிகளை சத்தத்தின் மூலம் கண்டுபிடிக்கும் நிபுணரான ரூபன் (ஆதி) என்பவருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அவர் அந்த கல்லூரியில் ஆவிகள் இருக்கின்றதா என்று சோதனை செய்கிறார்.
அதற்கு பிறகு இந்த தற்கொலைகள் நடப்பது நின்றதா? இந்த கொலைகள் நடந்ததற்கான காரணம் என்ன? என்பதே சப்தம் படத்தின் கதை.
பட மூலாதாரம், X/@AadhiOfficial
‘நம்பும்படியான கதை’
“படத்தை அட்டகாசமான தரத்தில் இயக்குனர் அறிவழகன் உருவாக்கியுள்ளார். அறிமுகக் காட்சியிலிருந்து இறுதிவரை படத்தின் மேக்கிங் தனித்து தெரிகிறது. பேய்க்கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்றாலும் ரசிகர்களுக்கு ‘இப்படியும் இருக்கலாம் இல்லையா?’ என ஓரளவுக்கு நம்பும்படியான கதையையே அவர் படமாக்கியிருக்கிறார்”, என்று தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.
“ஆதி- அறிவழகன் கூட்டணியின் முதல் படத்திற்கும், இந்த படத்திற்கும் ஒற்றுமையாக பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. இரண்டு படங்களிலும் ஆதி கொலைகள் பற்றி விசாரணை செய்வார். மேலும் ஆதியின் கதாபாத்திரத்துக்கு அந்த வழக்குடன் தனிப்பட்ட தொடர்பும் இருக்கும். இரண்டு படத்திற்கும் தமன்தான் இசையமைத்துள்ளார். இவ்வாறு இரண்டு படங்களும் ஒரே வழியிலே கையாளப்பட்டுள்ளன”, என்று தி ஹிந்து அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
“படத்தின் முதற்பாதி சற்று விறுவிறுப்பாக இருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதி அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை, வழக்கமான கதைக்களத்தை கொண்டிருக்கிறது. சாமியார்கள், சூனியம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுவான கதையாகவே உள்ளது”, என்று டைம்ஸ் ஆஃப் இந்திய விமர்சித்துள்ளது.
பட மூலாதாரம், X/@dirarivazhagan
படக்குறிப்பு, இயக்குனர் அறிவழகனுடன் நடிகர் ஆதி
நடிப்பு எப்படி?
“நடிகர் ஆதி தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு பெரிதாக மெனக்கெடாமல் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். சிம்ரன், லக்ஷ்மி மேனன், லைலா உள்ளிட்டோரும் கவனம் ஈர்க்கின்றனர். எம். எஸ். பாஸ்கர் கதாப்பாத்திரத்தை படத்திற்குள் இன்னும் கொண்டுவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”, என்று தினமணி தெரிவித்துள்ளது.
“ஆதி கதாபாத்திரத்தை தவிர மற்ற நடிகர்களின் பங்கு குறிப்பிடும் அளவில் இல்லை. படத்தை வணிக ரீதியாக மாற்றும் முயற்சியில், வைக்கப்பட்டுள்ள ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை காட்சிகளை பார்வையாளர்கள் சகித்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது. படத்தில் உள்ள VFX காட்சிகளும் மோசமாக இருக்கின்றன.”, என்று தி ஹிந்து அதன் திரை விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது
சப்தம் – ‘சத்தமான படம்’
“பெயருக்கு ஏற்றபடி ஒலியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஒலி அமைப்பு சீரற்றதாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளில் நன்றாகவும், சில காட்சிகளில் மிகவும் அதிக ஒலியுடன் இருக்கின்றது”, என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
“ஈரம் படத்தில் இருந்தது போல மனதிற்கு இனிமையான பாடல் என இந்த படத்தில் எதுவும் இல்லை என்றால்கூட, தமனின் பின்னணி இசை சிறப்பாக இருக்கின்றது”, என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது.
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன் மற்றும் கலை இயக்குனர் மனோஜ் குமாருக்கு பெயர் சொல்லக்கூடிய படமாகவே இந்த படம் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள தினமணி, “மேக்கிங்கில் மிகுந்த கவனம் செலுத்திய இயக்குனர் கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் நல்லதொரு படமாகவே சப்தம் உருவாக்கியிருக்கும். ஆக மொத்தம் எந்த வித எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்க்கக்கூடிய படமாகவே சப்தம் திரைப்படம் இருக்கிறது”, என்று குறிப்பிட்டுள்ளது.