மதுரை: திருச்சி முதல் மதுரை வரை 10 நாள் மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தின்போது, திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஜன.2 முதல் 12-ம் தேதி வரை 180 கி.மீ. திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் தேர்வு வைகோ தலைமையில் மதுரையில் நடந்தது. தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “மது,போதைப்பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் தடுக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளை கண்டிக்க வேண்டும். கல்லூரிகளில் நட்பு, சமூக உணர்வு வளரவேண்டும். மது, போதையை ஒழிக்க அரசு, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களை விற்காதீர்கள்… 25 ஆண்டுக்கு பிறகு உணவு பஞ்சம் தாக்கும் அபாயம் உள்ளது.
மது, போதை ஒழிப்பு, சாதி சங்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஏற்கெனவே பொது பிரச்னைகளுக்காக 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் செய்துள்ளேன். தற்போதைய பயணத்தில் அண்ணா, கருணாநிதி அடித்தளமிட்ட திராவிட இயக்கம் பாதுகாக்கவேண்டும். இதற்காக திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்.

நான் திமுகவில் இருந்தபோது, கருணாநிதியின் அறிவுறுதலில் தொண்டர் படையை ஏற்படுத்தி, ராணுவ வீரர்கள் மூலம் பயிற்சி அளித்திருக்கிறேன். தொண்டர் படை பாதுகாப்பில் நெல்லையில் கருணாநிதியை அழைத்து வந்து அண்ணாவின் பிறந்தநாளை நடத்தினோம். தொண்டர் படைக்கு தடை எம்ஜிஆர் தடை ஏற்படுத்தினார். இதையெல்லாம் தாண்டி பயிற்சி கொடுத்து தொண்டர் படையை வளர்த்தோம். திமுகவை விட்டு நீக்கிய பிறகு 3 ஆயிரம் தொண்டர் படை வீரர்களை உருவாக்கினோம். எங்களது படையினர் போக்குவரத்து இடையூறு இன்றி நடைபயணம் இருக்கும்.
சமூக முன்னேற்றம், சாதி, மதி மோதல் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தூய நோக்கத்துக்காக செல்கிறோம். இதற்காக 7 மாவட்டத்தில் நானே வீரர்களை தேர்ந்தெடுக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடக்கும் நிறைவு நிகழ்வில் வைரமுத்து பங்கேற்கிறார். பயணத்தின்போது, கூட்டணி தலைவர்கள் வாழ்த்துகின்றனர்.
மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல், வாடிப்பட்டி வழியாக கிராமப்புறங்களுக்கு சென்று மதுரையில் நிறைவு செய்கிறோம். சிறிது தூரம் நடப்பது, பிறகு வாகனத்தில் பயணிக்கும் பித்தலாட்ட பயணமில்லை. முழுவதும் நடந்து செல்கிறோம்” என்று வைகோ கூறினார்.
இதனிடையே, மதுரையில் வைகோ இன்று தன்னுடைய நடைபயணத்தில் பங்கேற்கும் தொண்டர்களை தேர்வு செய்தார். இதற்காக கட்சியின் தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியினரிடம் நேர்காணல் நடத்தினார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் சமத்துவ நடைபயணம் குறித்து பேசினார். பேட்டியின் இறுதி கட்டத்தில் செய்தியாளர்கள் ஒருசில அரசியல் தொடர்பான கேள்விகளை வைகோவிடம் கேட்டனர். அதிருப்தியடைந்த வைகோ, ‘‘அரசியல் பேசுமிடம் இது அல்ல. நான் அதற்காகவும் இங்கு வரவில்லை. அரசியல் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லபோவதில்லை.
விதண்டவாதமான கேள்விகளை கேட்கக்கூடாது. அதற்கு பதிலளிக்க மாட்டேன். நான் உங்களை இங்கு வரச்சொல்லவில்லை. நான் சொல்வதை போட்டால் போடுங்கள். இல்லைனெில் புறப்படுங்கள், ’’ என்று கோபமடைந்தார். தொடர்ந்த வைகோ, ‘‘மாலை நேரத்தில் எங்களை பற்றி டிவி-களில் நடக்கும் விவாதங்களில் கூட எங்களை பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது குறித்து கூட நானும் பொருட்படுத்துவதில்லை’ என்று விரக்தியடைந்தார்.