பட மூலாதாரம், museumsofindia.gov.in
சந்திரகுப்தர் முதுமையடைந்தபோது, பதவியைத் துறந்து, அரசாங்கத்தின் பொறுப்புகளைத் தனது மகன் சமுத்திரகுப்தரிடம் ஒப்படைத்தார்.
சமுத்திரகுப்தர், முதலாம் சந்திரகுப்தரின் மூத்த மகன் அல்ல.
சமுத்திரகுப்தர் தான் ஒரு தகுதியான வாரிசு என்பதை நிரூபித்தார். அவர் தனது விசுவாசம், நீதி மற்றும் வீரத்தால் தனது தந்தையின் இதயத்தை வென்றார். சமுத்திரகுப்தர், சந்திரகுப்தருக்குப் பிறகு பதவியேற்றது பற்றிய தெளிவான விவரிப்பு அலகாபாத்(தற்போது பிரயாக்ராஜ்) தூண் கல்வெட்டில் காணப்படுகிறது.
” சந்திரகுப்தர் தனது மகன் சமுத்திரகுப்தரைத் தழுவி, ‘நீ ஒரு சிறந்த ஆத்மா’ என்று கூறினார். சந்திரகுப்தர் இந்த வார்த்தைகளைக் கூறியபோது, மென்மையான உணர்ச்சியால் அவரது உடலில் இருந்த மயிர்க்கால்கள் அனைத்தும் சிலிர்த்தன.”
“இந்த அறிவிப்பு வெளியானவுடன், சில அரசவை உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர், ஆனால் மற்றவர்கள் மன சோர்வடைந்தனர். சந்திரகுப்தர் கண்ணீர் மல்க சமுத்திரகுப்தரைப் பார்த்து, ‘இனி உலகைப் பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு’ என்று கூறினார்.”
சமுத்திரகுப்தரே வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அவர் மன்னராவதற்கு மற்ற சில போட்டியாளர்களுடன் போராட வேண்டியிருந்தது என்று சில நவீன வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.
பட மூலாதாரம், Bhairavi
பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சியைப் பெற்ற சமுத்திரகுப்தர்
ஆட்சிக்கு உரிமை கோரியவர்களில் முதன்மையான பெயர் முதலாம் சந்திரகுப்தரின் மூத்த மகனான கச்சா. கச்சாவின் பெயர் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரியணையில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், கச்சாவின் இருப்பு குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.
கே.பி. ஜெயஸ்வால் தனது “இம்பீரியல் ஹிஸ்டரி ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்தில், கச்சா என்பது சமுத்திரகுப்தரின் கிளர்ச்சி செய்த சகோதரரான பாஷ்மாவின் மற்றொரு பெயர் என்று எழுதியுள்ளார். பரமேஸ்வரி லால் குப்தா, ஸ்ரீ ராம்கோயல் மற்றும் லலிதா பிரசாத் பாண்டே ஆகியோரும் கச்சாவும் பாஷ்மாவும் ஒருவரே என்று நம்புகிறார்கள். குப்த பேரரசின் அரியணையைப் பெறுவதற்காக பாஷ்மா சமுத்திரகுப்தருக்கு எதிராகப் போராடினார்.
சமுத்திரகுப்தர் என்பது ஒரு நபரின் பெயர் அல்ல, அது ஒரு பட்டம் என்று சில வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ராதாகுமுத் முகர்ஜி தனது ‘தி குப்தா எம்பயர்’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். “இந்த பட்டத்தின் அர்த்தம் என்னவென்றால், யாருடைய பேரரசு கடல் வரை பரவியிருக்கிறதோ, அவரைக் கடல் பாதுகாக்கிறது என்பதாகும். மதுராவிலுள்ள இரண்டாம் சந்திரகுப்தரின் கல்வெட்டும், சமுத்திரகுப்தரின் புகழ் நான்கு கடல்கள் வரை பரவியிருந்தது என்பதைப் பதிவு செய்துள்ளது.”
ஒரு கவிஞரும், வலிமைமிக்க ஆட்சியாளரும்
பட மூலாதாரம், Motilal Banarasidas
சமுத்திரகுப்தர் கி.பி. 318 ஆம் ஆண்டில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஐந்து வயதில், அவர் எழுத்து மற்றும் கணிதம் ஆகிய அடிப்படைத் கல்வியைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ஆட்சிமுறை மற்றும் கொள்கைகள் கற்பிக்கப்பட்டன.
அலகாபாத் கல்வெட்டு, சமுத்திரகுப்தர் பல வேதக் கலைகளில் அறிஞராக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் குறிப்பாக கவிதையில் மிகவும் திறமை பெற்றவராக இருந்ததால், அவருக்கு “கவிராஜா” என்ற பட்டம் கிடைத்தது. அவரது அரசவையில் ஹரிஷேணன் மற்றும் வசுபந்து போன்ற புகழ்பெற்ற இலக்கிய அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதன் காரணமாக, சமுத்திரகுப்தர் இலக்கியத்தின் சிறந்த புரவலராகக் கருதப்படுகிறார். பல நாணயங்களில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வீரத்திற்காகவும் மிகவும் புகழ்பெற்றவர்.
அலகாபாத் கல்வெட்டில், ‘பரசு (கோடரி), ஷர் (அம்பு), ஷங்கு (ஈட்டி), சக்தி (வேல்), அசி (வாள்), தோமர் ( கதாயுதம்) போன்ற நூற்றுக்கணக்கான ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்களால் சமுத்திரகுப்தரின் உடல் பாக்கியம் பெற்றதாகவும், மிகவும் அழகாகவும் மாறியிருந்தது’என்று எழுதப்பட்டுள்ளது.
சமுத்திரகுப்தர் ஒரே நேரத்தில் போர்வீரன், ஆட்சியாளர், கவிஞர், இசைக்கலைஞர் மற்றும் பரோபகாரி ஆகிய குணங்களைக் கொண்ட அசாதாரண திறமைகளைக் கொண்ட மனிதராகக் கருதப்படுகிறார்.
ஆரம்பத்திலிருந்தே, இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற வலுவான லட்சியம் சமுத்திரகுப்தருக்கு இருந்தது, அதற்காக அவர் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.
பட மூலாதாரம், Bhairavi
வெவ்வேறு கொள்கைகள்
சமுத்திரகுப்தர் வட இந்தியாவின் ஒன்பது ராஜ்யங்களை வெல்ல தனது தொலைநோக்கு பார்வையைப் பயன்படுத்தினார். இந்த ஒன்பது மன்னர்களிடமும் அவர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். தனது ராணுவ வலிமையால் அவர்களின் ராஜ்யங்களைத் தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். ஆனால், அவர் தெற்கில் வென்ற பன்னிரண்டு ராஜ்யங்களைத் தனது பேரரசுடன் இணைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
‘சமுத்திரகுப்தா: எ மிலிட்டரி ஜீனியஸ்’ என்ற தனது புத்தகத்தில் சத்தோங்கலா சாங்டம் பின்வருமாறு எழுதுகிறார். “இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், அக்காலத்தில் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக இருந்ததால், பாடலிபுத்திரத்திலிருந்து அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருந்திருக்காது. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப், கிழக்கு ராஜபுதனம் மற்றும் மாளவத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு அவர் தன்னாட்சி அதிகாரத்தையும் வழங்கினார்.”
சமுத்திரகுப்தர் ஆட்சியின் போது, பாடலிபுத்திரம் தனது பழைய பெருமையை மீட்டெடுத்தது. அவரது அதிகாரத்தின் உச்சத்தில், சமுத்திரகுப்தர் கிட்டத்தட்ட முழு கங்கை சமவெளியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கிழக்கு வங்கம், அசாம் மற்றும் நேபாள ஆட்சியாளர்கள் கூட அவருக்குக் கப்பம் செலுத்தினர்.
ஏ.எல். பாஷம் தனது ‘தி வொண்டர் தட் வாஸ் இந்தியா’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். “சமுத்திரகுப்தரின் அதிகாரம் அசாம் முதல் பஞ்சாப் எல்லை வரை பரவியிருந்தது. மௌரியர்களைப் போல ஒரு ஒருங்கிணைந்த பேரரசை உருவாக்க அவர் எண்ணினார். அவர் வட இந்தியாவின் ஒன்பது ராஜ்யங்களை இணைத்துக் கொண்டதாக அலகாபாத் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. இருப்பினும், ராஜஸ்தானின் போர்க்குணமிக்க பழங்குடியினரும் எல்லைப்புற அரசுகளும் அவருக்கு மரியாதை செலுத்தி தங்களின் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். தெற்கில், சமுத்திரகுப்தர் காஞ்சிபுரம் வரை வெற்றி பெற்றார், ஆனால் அங்குள்ள மன்னர்கள் கப்பம் செலுத்திய பிறகு, அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தி பெயரளவு ஆட்சியாளராகவே இருந்தார்.”
சமுத்திரகுப்தரும் அசோகரும் இரண்டு வெவ்வேறு ஆளுமைகள்
பட மூலாதாரம், Sidgwick & Jackson
மதத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, அலகாபாத் கல்வெட்டு அவரை “தர்ம-பிராசிர் பந்து” என்று குறிப்பிடுகிறது. இருப்பினும் அவர் பிற மதங்களிடமும் சகிப்புத்தன்மையுடன் இருந்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமுத்திரகுப்தர் மகாவிஷ்ணுவின் மீது நம்பிக்கை கொண்டிருந்த போதிலும், இலங்கை மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க புத்த கயாவில் ஒரு பௌத்த மடாலயத்தை நிறுவ அவர் அனுமதி அளித்தது, சமுத்திரகுப்தர் பிற மதங்களை மதித்தார் என்பதைக் காட்டுகிறது.
சமுத்திரகுப்தரின் காலத்து பொருளாதாரச் செழிப்பை, அவர் தனது ராஜ்யத்தில் தங்க நாணயங்களை மட்டுமே புழக்கத்தில் விட்டார் என்பதிலிருந்தும், நாணயங்களில் ஒருபோதும் வெள்ளியைப் பயன்படுத்தவில்லை என்பதிலிருந்தும் அறிந்துகொள்ள முடியும்.
“சமுத்திர குப்தர் எட்டு வகையான நாணயங்களை வெளியிட்டார். தனது நாணயங்களுக்கான தங்கத்தை அவர் தனது போர்களின் வெற்றிகளின் மூலம் பெற்றார்” என்று ராதாகுமுத் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
முனைவர் ஹெச்.சி. ராய்சௌத்ரி சமுத்திரகுப்தருக்கும் அசோகருக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான ஒப்பீட்டைச் செய்துள்ளார்.
ராய்சௌத்ரி தனது ‘பொலிட்டிக்கல் ஹிஸ்டரி ஆஃப் ஆன்சியன்ட் இந்தியா’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். “கொள்கை ரீதியாக, அசோகருக்கும் சமுத்திரகுப்தருக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. அசோகர் அமைதியையும் அகிம்சையையும் ஆதரித்தபோது, சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பை நம்பினார். அசோகர் வெற்றியை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினார், ஆனால் சமுத்திரகுப்தருக்கு வெற்றியின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. சமுத்திரகுப்தர் அசோகரை விட பன்முகத்திறன் கொண்டவராக இருந்தார். அசோகரின் பெருமை மத நூல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் சமுத்திரகுப்தர் கலை மற்றும் கலாசாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அசோகர் தனது மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக உழைத்தபோது, சமுத்திரகுப்தர் அவர்களின் பொருளாதார நலனுக்காக உழைத்தார். மக்கள் பொருளாதார ரீதியாக செழிப்பாக இல்லாவிட்டால், ஆன்மீக மேம்பாடு அவர்களுக்கு எந்த அர்த்தத்தையும் தராது என்று சமுத்திரகுப்தர் நம்பினார்.”
பட மூலாதாரம், Maple Press
இந்திய வரலாற்றின் பொற்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பேரரசர்
காந்தாரம், காபூல் மற்றும் இலங்கை போன்ற இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாடுகளுடனான சமுத்திரகுப்தரின் ராஜ்ஜீய உறவுகள், அவரது சர்வதேச நிலையை உணர்த்துகின்றன. சுவாரஸ்யமாக, தமிழ்நாட்டின் அரசுகளுடன் அவருக்கு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், இலங்கையுடன் அவர் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.
சமுத்திரகுப்தர் தனது மனிதாபிமானப் பண்புகளுக்காகவும் நினைவு கூரப்படுகிறார். அவர் எப்போதும் ஏழைகள் மீது மிகுந்த கருணை கொண்டிருந்தார். இந்திய வரலாற்றின் பொற்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.
பல விதங்களில், அவரது ஆளுமையானது குப்த பேரரசர்களிடையே மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற பேரரசர்களிடையேயும் மிகவும் கம்பீரமான ஒன்றாகத் தோன்றுகிறது. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் முனைவர் ராதேஷரன் தனது “பேரரசர் சமுத்திரகுப்தர்” என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“அவர் தனது காலத்தின் ஒரு தனித்துவமான பேரரசர். அவரது செயல்பாட்டு முறை மற்ற பேரரசர்களை விட மிகவும் நடைமுறைக்கு உகந்ததாக இருந்தது. பொருளாதார ரீதியாக, அவரது பேரரசு அநேகமாக அன்றைய உலகில் மிகவும் செழிப்பான ஒன்றாக இருந்திருக்கலாம்.”
பட மூலாதாரம், Radha Publication
ஒரு போரில் கூட தோற்காத சமுத்திரகுப்தர்
சமுத்திரகுப்தர், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வீழ்ந்த மௌரியப் பேரரசிற்கு இணையான ஒரு ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர். சமுத்திரகுப்தர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ராணுவப் பயணங்களிலும் தனது வீரர்களுடனும் கழித்தார்.
முனைவர் வின்சென்ட் ஸ்மித், சமுத்திரகுப்தரை இந்தியாவின் நெப்போலியன் என்று அழைத்துள்ளார்.
ஒரு திறமையான ராணுவத் தளபதிக்குரிய அனைத்துப் பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவர் தொலைதூரத்தில் இருந்து உத்தரவிடும் தளபதியாக இல்லாமல், களத்தில் நின்று படையை வழிநடத்துபவராக இருந்தார்.
அலகாபாத் கல்வெட்டு அவர் நூற்றுக்கணக்கான போர்களில் பங்கேற்றதாகக் குறிப்பிடுகிறது. சமுத்திரகுப்தரின் பேரரசு வடக்கே இமயமலை முதல் தெற்கே இலங்கைத் தீவுகள் வரையிலும், வடமேற்கு இந்தியா முதல் கிழக்கே வங்காளம், அசாம் மற்றும் நேபாளம் வரையிலும் பரவியிருந்தது.
அலகாபாத் கல்வெட்டு இந்தியாவில் அவருக்குப் போட்டியாளர்களே இல்லை என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. அவர் தனது பேரரசின் பெரும்பகுதியைத் தன்னாட்சியுடன் இருக்க அனுமதித்தார். இந்த தன்னாட்சி அரசுகள், தங்களின் உள் நிர்வாகத்தில் சுதந்திரமாகச் செயல்பட்டாலும், பேரரசரின் அதிகாரத்தை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டன.
வரலாற்றாசிரியர் பாலகிருஷ்ணா கோவிந்த் கோகலே தனது ‘சமுத்திரகுப்தா: லைஃப் அண்ட் டைம்ஸ்’ என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். “நெப்போலியன் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு திறமையான வெற்றியாளர், ஆனால் இரு பேரரசர்களின் சமகாலச் சூழல்கள், வெற்றிகள் மற்றும் நோக்கங்களை ஆராய்ந்தால், சமுத்திரகுப்தர் நெப்போலியனை விட வெகுதூரம் முன்னிலையில் இருந்தார் என்பது தெரிகிறது. ஒரு வெற்றியாளராக, அவர் வெறும் நிலப்பரப்பை விரிவாக்குபவராக மட்டும் இருக்கவில்லை, வெற்றியின் நெறிமுறைகளிலும் அதிக கவனம் செலுத்தினார். நெப்போலியனைப் போலன்றி, சமுத்திரகுப்தர் ஒருபோதும் ராணுவத் தோல்வியைச் சந்தித்ததில்லை. வாகாடகர்களுக்கு எதிரான போரில் அவர் சற்று போராட வேண்டியிருந்தது, ஆனால் இறுதியாக அவரே வெற்றி பெற்றார்.”
பட மூலாதாரம், Getty Images
இந்திய வரலாற்றின் தலை சிறந்த ராணுவத் தளபதி
தனது திறமையை வெளிப்படுத்த, சமுத்திரகுப்தர் அஸ்வமேத யாகத்தை நடத்தினார்.
சமுத்திரகுப்தரின் வரலாற்றுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் அலகாபாத் பாறைக் கல்வெட்டு, இந்த அஸ்வமேத யாகத்தைப் பற்றி மௌனம் காக்கிறது.
இதிலிருந்து, அலகாபாத் கல்வெட்டு எழுதப்பட்ட பின்னரே இந்த அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
பி.ஜி. கோகலே தனது ‘சமுத்திரகுப்தா: லைஃப் அண்ட் டைம்ஸ்’ புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். “பண்டைய காலத்தில், அஸ்வமேத யாகம் என்பது உலகளாவிய இறையாண்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது. சமுத்திரகுப்தர் தனது பல வெற்றிகளுக்குப் பிறகு முறைப்படி அஸ்வமேத யாகத்தை ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது. இந்த யாகத்தின் நினைவாக அவர் பல நாணயங்களை வெளியிட்டார். இந்த நாணயங்களின் முன்பக்கத்தில், பலி பீடத்தின் முன்னால் ஒரு குதிரை நிற்பது போன்ற உருவம் உள்ளது. அந்தக் குதிரை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குதிரையின் முதுகில் ஒரு முத்துச் சரம் இருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.”
சமுத்திரகுப்தரின் செயல்பாடுகள் அவர் பல திறமைகளைக் கொண்ட மனிதர் என்பதை உணர்த்துகின்றன. அவரது சமகாலத்தவரான ஹரிஷேணன், “அவரிடம் இல்லாத குணம் என ஒன்று உள்ளதா?” என்று கூறியுள்ளார்.

சமுத்திரகுப்தரின் உடல்வாகு மற்றும் தோற்றம் இணையற்றதாக இருந்தது. நாணயங்களில் உள்ள அவரது உருவங்களிலிருந்து இதன் ஒரு பகுதியை நாம் அறியலாம். இந்த நாணயங்கள் அவரது கட்டுக்கோப்பான, உயரமான மற்றும் நேர்த்தியான உடல் அமைப்பைத் தெளிவாகச் சித்தரிக்கின்றன.
சமுத்திரகுப்தர் தனது அனைத்துப் போர்களையும் முன்னணியில் நின்று ஒரு வீரராகவே போராடினார். ராதாகுமுத் முகர்ஜி அதுகுறித்துப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
“சமுத்திரகுப்தர் ஒரு அச்சமற்ற போர்வீரர். அவர் ஒரு சிறுத்தையின் சுறுசுறுப்பையும் வேகத்தையும் கொண்டிருந்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள எரான் கல்வெட்டு, சமுத்திரகுப்தர் வெல்ல முடியாத சக்திகளைக் கொண்டிருந்ததாகப் பதிவு செய்துள்ளது. அவரது பெரும்பாலான செயல்கள் ஒரு சாதாரண மனிதருடையதாக இல்லாமல், ஒரு ‘சூப்பர்மேன்’ உடையதாக இருந்தன.
சமுத்திரகுப்தர் இந்தியாவின் மிகச்சிறந்த பேரரசர்களில் ஒருவராகவும், இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ராணுவத் தளபதியாகவும் கருதப்படுகிறார்.”
சுமார் 45 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, இந்தியாவின் இந்த மாபெரும் போர்வீரரும் ஆட்சியாளருமான சமுத்திரகுப்தர் கி.பி. 380 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு