• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் | Udhayanidhi Stalin is proud for dmk is symbol of social justice

Byadmin

Sep 10, 2025


காஞ்சிபுரம்: ‘சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் வந்தார். முதலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வாக்குச் சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறியதுடன், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மகளிர் முகத்தில் மகிழ்ச்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவுக்கு 90 சதவீதம் மகளிர் வந்துள்ளனர். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி தெரிகிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அடையாளம் இருக்கும்.

பாஜகவுக்கு அடக்கு முறை அடையாளம். அதிமுகவுக்கு அடிமைத்தனம் அடையாளம். ஆனால், நமது திமுகவுக்கு சமூகநீதிதான் அடையாளம். முதலமைச்சர் பொறுப்பேற்றதும் அவர் முதல் கையெழுத்தாக மகளிர் விடியல் பயணத்துக்கு கையெழுத்திட்டார். அதன் பின்னர், மகளிர் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். விடுபட்ட மகளிர் தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனுஅளித்து வருகின்றனர். அவர்களுக்கும் அந்த உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் பாராட்டியதுடன் இதனை பஞ்சாபில் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். வீட்டுமனைப் பட்டா என்பது பலருடைய கனவு. மக்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலை மாறி, அரசே உங்களைத் தேடி வந்து பட்டா கொடுக்கிறது. இன்று முதல் நீங்கள் குடியிருக்கும் இடம் உங்களுக்கு சொந்தமானது. அந்த நிம்மதியுடன் இருக்கலாம்.

வெளிநாட்டு முதலீடு: முதல்வர் வெளிநாடு சென்று ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். முதல்வரின் பல்வேறு முயற்சிகளால் தமிழ்நாடு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அரசு உங்களுக்கு துணையாக இருப்பதுபோல் நீங்கள் அரசுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், 4,997 பேருக்கு ரூ.215 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பணி முடிந்த கட்டிடங்களை திறந்தும் வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்டச் செயலர்க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ், காஞ்சிபுரம் மாநகரச் செயலர் சி.கே.வி.தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.



By admin