பட மூலாதாரம், Getty Images
உணவை மீண்டும் சூடுபடுத்துவது உங்கள் உடல்நலனுக்குப் பல ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது உங்கள் உணவைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும் உதவும்.
உணவு விஷயத்தில் செய்யக்கூடாதவை என்ன?
உணவை அதிக நேரம் வெளியே வைக்காதீர்கள்
அறை வெப்பநிலையில் இரண்டு முதல் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக சமைத்த உணவை வெளியே வைக்க வேண்டாம்.
பேசில்லஸ் செரியஸ் என்ற பாக்டீரியா விரைவாகப் பெருகும் என்பதால் சமைத்த உணவை ஒரு மணிநேரத்திற்கும் மேல் வெளியே வைக்க வேண்டாம்.
உணவகத்தில் வாங்கிய சாதத்தை மீண்டும் சூடாக்க வேண்டாம்
உணவகங்களில் வாங்கிய சாதமானது பெரும்பாலும் அவை விற்பனை செய்வதற்கு முன்பே பலமுறை சூடுபடுத்தப்படுகின்றன.
அவற்றை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் ஆபத்தானது. உணவகத்தில் வாங்கிய சாதத்தை, வாங்கியவுடன் சிறிது நேரத்திலே சாப்பிட்டுவிடுவது நல்லது.
பட மூலாதாரம், Getty Images
வீட்டில் சமைத்த உணவை அதிக நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்காதீர்கள்
சமைத்த உணவுகளை 24-48 மணிநேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அப்படி உடனடியாகச் சாப்பிடவில்லை என்றால், அவை கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள்.
வெந்நீரில் உறைந்திருக்கும் கோழிக்கறியை போடவேண்டாம்
ஃப்ரீசரில் இருந்து கோழிக்கறியை எடுத்தவுடன், அவற்றை உறைந்த நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மாற்ற வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம்.
இதனால் கோழிக்கறி சீரற்ற முறையில் உருகி, சில பகுதிகள் முழுமையாக உருகுவதற்கு முன்பே ‘ஆபத்தான நிலையை’ அடையக்கூடும்.
எப்போதும் கோழிக் கறியை ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் அதை குளிர்சாதன பெட்டியின் சராசரி பகுதியில் வைத்து குளிர்ச்சியான நிலைக்கு மாற்றிய பின்னரே நன்கு சமைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யாவிட்டால் கோழிக்கறியில் உள்ள காம்பிலோபேக்டர் பாக்டீரியாவால் கடுமையான வயிற்றுப் பிரச்னைகள், வாந்தி போன்ற ஆபத்தான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
உணவு விஷயத்தில் செய்ய வேண்டியவை என்ன?
பட மூலாதாரம், Getty Images
உணவை மீண்டும் சூடாக்குவதற்கு முன்பு எப்போதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்
உணவை குளிர்சாதன பெட்டியில் (5°C அல்லது அதற்குக் கீழே உள்ள வெப்பநிலையில்) வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன் உங்கள் உணவை அறை வெப்பநிலைக்குக் கொண்டு வர வேண்டும்
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அது உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையை உயர்த்தி, அதிலுள்ள மற்ற உணவுகளில் பாக்டீரியாக்கள் வளர அனுமதிக்கும்.
சமைத்த உணவை சராசரி வெப்பநிலைக்குக் கொண்டு வந்து குளிரவித்த பிறகே குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். சூடாக இருக்கும்போது, சிறிது நேரம் மட்டுமே உணவை வெளியில் வைத்திருப்பது, பாதுகாப்பானது.
‘அபாயகரமான மண்டலம்’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
8° மற்றும் 63° செல்சியஸுக்கு இடைப்பட்ட வெப்பநிலையில், பாக்டீரியாக்களின் பெருக்கம் வேகமாக இருக்கும். உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையை 5° செல்சியஸுக்கும் கீழே வைத்திருப்பது உணவு நஞ்சாவதைத் தடுக்க உதவுகிறது.
அதே நேரத்தில் மைனஸ் 18° செல்சியஸ் வெப்பநிலையில் உறைய வைப்பது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை நிறுத்துகிறது.
இருப்பினும், இந்த உறைநிலையில் இந்த பாக்டீரியாக்கள் கொல்லப்படுவதில்லை. உணவு குளிர்ச்சியான நிலைக்கு வந்தவுடன் அவை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்.
முழுமையாக சூடு தணிந்த பிறகு சமைத்த உணவை ஃப்ரீசரில் வைக்கலாம்
உணவுப் பொருட்களை அவற்றின் பயன்படுத்த ஏதுவான தேதி (use-by date) வரை உறைய வைக்கலாம். பிரெட் போன்ற பொருட்களைக்கூட உறைய வைக்கலாம். ஏனெனில் அவை நன்றாக உறைந்து, ஃப்ரீசரில் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.
உறைந்த உணவை மீண்டும் சூடுபடுத்துவதற்கு முன்பு முழுமையாக குளிர்ச்சியைத் தணிக்க வேண்டும்
ஃப்ரீசரில் உறைந்த நிலையில் உள்ள உணவை குளிர்சாதனப் பெட்டியில் 24 மணிநேரம் வரை வைத்து குளிர்ந்த நிலைக்குக் கொண்டு வரலாம். இந்தக் கால வரையறை உணவுப் பொருட்களின் அளவைப் பொறுத்து மாறுபடும்.
ஒரு முழு கோழி போன்ற பெரிய உணவுப் பொருட்களை உறை நீக்கம் செய்ய அதிக நேரமாகலாம். ஆனால் சிறிய பகுதிகளில் உள்ள உணவுகளை விரைவாக உறை நீக்கம் செய்யலாம்.
சில உணவுகளை மைக்ரோவே ஓவனில்கூட உறை நீக்கம் செய்யலாம். ஆனால் அதில் வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது சிறந்தது. குளிர்சாதனப் பெட்டியில் ஒரு உணவை உறை நீக்கம் செய்வது, அந்த உணவு ‘அபாயகரமான மண்டலத்திற்குள்’ வராமல் இருப்பதை உறுதி செய்கிறது.
பட மூலாதாரம், Getty Images
சமைப்பதற்கு முன் உணவு முழுவதுமாக உறை நீக்கி இருப்பதை உறுதி செய்யவேண்டும்
உணவு பாதியளவு மட்டுமே உருகியிருந்தால், அது சீரற்ற முறையில் சமைக்கப்படலாம். இதனால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சியடையலாம்.
மீதமுள்ள உணவை 24 மணிநேரத்திற்குள் மீண்டும் சூடாக்கி சாப்பிட்டுவிட வேண்டும்
அரிசியை சாதமாகச் சமைத்த பிறகும் அதில் பேசிலஸ் செரியஸ் பாக்டீரியா உயிர் வாழலாம். சாதத்தை ஆறவைத்த பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது, உடல்நலத்துக்கு ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
ஆனால் சமைத்த சாதத்தை ஒருமுறை மட்டுமே சூடாக்கி உண்ண வேண்டும். சமைத்த சாதத்தை உறைய வைப்பது, அதில் உருவாகக் கூடிய பாக்டீரியாகளின் வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்துகிறது.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய உடல்நிலையைக் கொண்டவர்களுக்கு மீண்டும் சூடாக்கப்பட்ட உணவை வழங்குவதில் கூடுதல் கவனம் தேவை
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு உணவு மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது.
உணவை முழுவதுமாக ஆவி பறக்கும் வரை மீண்டும் சூடுபடுத்தவும்
சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது, அது முழுவதுமாக சூடுபடுத்தப்பட வேண்டும். அதாவது உணவில் இருந்து ஆவி பறக்கும் அளவுக்கு அது சூடாக இருக்க வேண்டும்.
மைக்ரோவே ஓவனில் சூடுபடுத்தும்போது, உணவு சீராக சூடாவதை உறுதிப்படுத்த அது பாதி சூடானதும் கிளறிவிட வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.