இட்லி மஞ்சூரியன்
தேவையான பொருள்கள்
இட்லி- 5
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி – தலா 4
கொத்தமல்லி- 1 கட்டு
சீரகம், சில்லி சாஸ், மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலா தூள் – தலா 1 தேக்கரண்டி
மைதா மாவு- 200 கிராம்
தக்காளி சாஸ், சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும். மைதா மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்துகொள்ள வேண்டும். இட்லி துண்டுகளை மைதா மாவில் புரட்டி எண்ணெயில் பொரித்து வைத்துகொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு, தாளிக்க வேண்டும். தக்காளியை மிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும். சீரகம் தாளித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த தக்காளிச் சாறு, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்றாகக் கொதித்தவுடன் மைதா மாவில் பொரித்துவைத்த இட்லியைப் போட்டு புரட்ட வேண்டும். அதனுடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ் போட்டு நன்றாக வதக்கி எடுக்க வேண்டும். அதன் மேல் வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவ வேண்டும்.
சிறு தானிய அடை
தேவையான பொருள்கள்:
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, பாசிப் பருப்பு- தலா 200 கிராம்
மிளகு- 30
மிளகாய் வற்றல்- 4
துவரம் பருப்பு- 100 கிராம்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு- 6 பல்
முருங்கை இலை- ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
பெருங்காயப் பொடி- அரை தேக்கரண்டி
செய்முறை: சாமை அரிசி, தினை அரிசி, குதிரைவாலி அரிசி எல்லாம் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பாசிப்பருப்பு, துவரம் பகுப்பையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசியுடன் மிளகு, மிளகாய் வற்றல், இஞ்சி தோல்வி சீவியது பூண்டு பல் நறுக்கிப் போட்டு ரவை பதத்துக்குக் கரகரப்பாக அரைக்க வேண்டும். துவரம் பருப்பையும், பாசிப் பருப்பையும் தனியாக அரைத்து அரிசி மாவையும் கலந்து தேவையான உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்து முருங்கை இலை நறுக்கி, மாவுடன் கலந்து தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் மாவை சிறிது கனமாக ஊற்றி, பரவலாக எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.
தக்காளிப் பழம்- ஜவ்வரிசி வடாம்
தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி- 200 கிராம்
தக்காளிச் சோறு- 5 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 2
இஞ்சி- 1 துண்டு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: முதல்நாள் இரவு ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதை தண்ணீரில்லாமல் வடித்து ஆவியில் வேக வைக்க வேண்டும். வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கவும். வேகவைத்த ஜவ்வரிசி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சியை தண்ணீரில்லாமல் கெட்டியாக வெண்ணெய் போல் அரைக்க வேண்டும். அரைத்த விழுதில் உப்பு, மிளகாய்த் தூள், தக்காளிச் சாறு எண்ணெயை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு வெள்ளைத் துணியில் மிக மெல்லிதாக வடைகள் போல தட்டி, வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். வடாம் நன்றாகக் காய்ந்தவுடன் எடுத்து வைக்க வேண்டும்.
சாம்பார் வடாம்
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு, வெள்ளைக் கடலை- தலா 100 கிராம்
சாம்பார் வெங்காயம்- 200 கிராம்
காய்ந்த மிளகாய்- 10
கொத்தமல்லி இலை- 1 கட்டு
உப்பு- தேவையான அளவு
செய்முறை: முதல்நாள் வெள்ளைக் கடலையை தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் கடலையின் தோலை அகற்றி, துவரம் பருப்புடன் சேர்த்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், கொத்தமல்லி இலைகளைப் பொடியாக நறுக்கவும். மிளகாய், உப்பு இரண்டையும் வெண்ணெய்யாக அரைத்தவுடன் ஊறவைத்த பருப்பையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு வெள்ளைத் துணியை மொட்டை மாடி தரையில் விரித்து துணியில் மீது வடை மாதிரி தட்டி, வெயிலில் நன்றாகக் காயவைத்து எடுக்க வேண்டும். தேவையானபோது, எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, சாம்பாரில் சுவை மேலும் கூடும்.
வீட்டுக் குறிப்புகள்…
* வெந்தயத்தை பொடி செய்து தேன் சேர்த்து, உட்கொண்டால் மூல நோயின் கொடுமை குறையும்.
* வெள்ளாட்டுப் பால் பசியையும், ஜீரணத்தையும் மேம்படுத்தும். இருமல் வயிற்றுப் போக்கையும் கட்டுப்படுத்தும்.
* வெந்தயத் தோசைக்கு கொத்தமல்லித் தழை சேர்த்து அரைத்துச் சுட மிகவும் சுவையாக இருக்கும்.
* அடை வார்க்கும்போது, நிறைய முள்ளங்கித் துருவல், கூடவே மல்லித் தழை தூவி வார்த்தால் சுவையும் வாசனையும் சத்தும் நிறைந்த அடை தயார்.
* பச்சரிசி சாதம் மூளைக்குப் பலம் கொடுக்கும். கோதுமை உணவு, உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.
The post சமையல்… சமையல்… appeared first on Vanakkam London.