மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.
வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பல வாகனங்களுக்குத் தீ வைத்தது. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததை மொராதாபாத் பிரிவு ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் உறுதி செய்துள்ளார்.
சம்பல் பகுதியின் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜியாவுர் ரஹ்மான் பார்க், பிபிசி செய்தியாளர் தில்னவாஸ் பாஷாவிடம் பேசுகையில், காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவியதாகவும் கூறினார்.
காவல்துறை தரப்பு கூறுவதென்ன?
மொரதாபாத் பிரிவு ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் கூறுகையில், 11 மணியளவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு ஆய்வுக் குழுவினர் வெளியேறியபோது, மூன்று திசைகளில் இருந்தும் வெவ்வேறு குழுக்கள் கற்களை வீசித் தாக்கினர், அதன் பிறகு காவல்துறை வன்முறை கும்பலிடம் இருந்து அதிகாரிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இதனிடையே மூன்று திசைகளில் இருந்து வந்த குழுக்களும் கற்கள் வீசித் தாக்கின. அப்போது, துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், இதில் காவல் கண்காணிப்பாளரின் செய்தித் தொடர்பாளர் காலில் சுடப்பட்டதாகவும், துணை ஆட்சியரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். 15-20 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நயீம், பிலால், நௌமான் ஆகிய மூவர் உயிரிழந்ததாக ஆஞ்சநேய குமார் சிங் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆஞ்சநேய குமார் கூறுகையில், கலவரத்தின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வுப் பணிகள் அமைதியாக நடந்தன என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய சம்பல் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) கிருஷ்ண குமார், வன்முறை கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக காவல்துறையும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறினார். மேலும் கல் வீச்சில் ஏராளமான காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் சம்பல் பகுதியில் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் கூறியதாவது: “நீதிமன்ற உத்தரவின்படி கோட்வாலி சம்பல் பகுதியில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆய்வுப் பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் பல தெருக்களில் இருந்து மக்கள் வெளியே வந்து திடீரென காவல்துறை மீது கற்களை வீசித் தாக்கினர்.”
“தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. கற்களை வீசிய மக்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளும் வீசப்பட்டன. சம்பல் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது” என்றார்.
கிருஷ்ண குமார் மேலும் கூறுகையில், “வன்முறையைத் தூண்டியவர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் வன்முறையில் ஈடுபட நினைக்கும் மக்கள் நினைவில் கொள்ளும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சம்பலில் நடந்த கல் வீச்சுத் தாக்குதல் குறித்து உத்தர பிரதேச டிஜிபி பிரசாந்த் குமார் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “சில சமூக விரோதிகள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். தற்போது காவல்துறை மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. கல் வீசியவர்களை காவல்துறை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்றார்.
அங்கு நடந்தது என்ன?
கைலாதேவி கோவிலின் தலைமை அர்ச்சகரான ரிஷிராஜ் கிரி மகராஜ், சம்பலில் இருக்கும் ஷாஹி மசூதியை ஹரிஹர் கோவில் என்று கூறியிருந்தார்.
ரிஷி ராஜ் கிரி மகராஜ் நவம்பர் 19ஆம் தேதி அன்று சிவில் நீதிமன்றத்தில் இங்கு ஆய்வு நடத்தக் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஏழு நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்ட நீதிமன்றம், வீடியோ மற்றும் புகைப்படத்துடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆய்வுக் குழுவிடம் கூறியது.
இதில் வழக்கறிஞர் ஆணையராக (advocate commissioner) ரமேஷ் சிங் ராகவ் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
கடந்த முறை இரவு நேரமாகிவிட்டது என்பதால் ஆய்வை முழுவதுமாக முடிக்க முடியவில்லை, அதனால் இன்று ஆய்வு நடத்தப்பட்டதாக சம்பல் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ராஜேந்திர பென்சியா தெரிவித்தார்.
ஆய்வுப் பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது, ஆனால் மசூதிக்கு வெளியே இருந்த கூட்டம் திடீரென காவல்துறை மீது கற்களை வீசத் தொடங்கியது, இது பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்து தரப்பு வழக்கறிஞர் சொல்வது என்ன?
வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், செவ்வாயன்று சம்பல் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியின் சீனியர் பிரிவில் பல மனுதாரர்கள் சார்பாக ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.
விஷ்ணு சங்கர் ஜெயின், வாரணாசியின் ஞானவாபி மசூதி வழக்கிலும் வழக்கறிஞராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஷ்ணு சங்கர் ஜெயின், மசூதியில் ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறினார்.
“ஆய்வுப் பணிகள் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை நடந்தன. அனைத்து அம்சங்களையும் வழக்கறிஞர் ஆணையர் புகைப்படம் எடுத்து, வீடியோவும் எடுத்தார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தற்போது இந்த ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளன. இந்த வழக்கு நவம்பர் 29ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது” என்றார்.
“மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது நீதிமன்ற நடைமுறை. இதுவொரு நீண்ட செயல்முறை. உடனடியாக எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை. வழக்கறிஞர் ஆணையர் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பார்” என்றும் கூறினார்.
விஷ்ணு ஜெயின் கூறுகையில், “வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன், மற்ற தரப்பினர் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைக்கும். அதன் பிறகுதான் வழக்கில் முடிவு எட்டப்படும். மசூதி தரப்பு வழக்கறிஞரும் குழு உறுப்பினர்களும் ஆய்வின்போது உடனிருந்தனர்” என்றார்.
சர்ச்சையின் பின்னணி என்ன?
சம்பலின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமா மசூதி கட்டப்பட்ட காலகட்டம் குறித்து சர்ச்சை நிலவி வந்த நிலையில், முகலாய அரசர் பாபரின் உத்தரவுப்படி இதுவோர் இந்து கோவில் இடத்தில் கட்டப்பட்டதாக இந்து தரப்பு, நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இருப்பினும், சம்பலின் வரலாறு குறித்து ‘தாரிக்-இ-சம்பல்’ என்ற புத்தகத்தை எழுதிய மௌலானா மொயீத் கூறுகையில், “பாபர் இந்த மசூதியை பழுது பார்த்தார். எனவே, அவர்தான் இந்த மசூதியைக் கட்டினார் என்பது உண்மையல்ல,” என்றார்.
மௌலானா மொயீத் கூறுகையில், “லோதி ஆட்சியாளர்களை தோற்கடித்த பாபர் 1526இல் சம்பலுக்கு பயணம் செய்தார் என்பது வரலாற்று உண்மை. ஆனால் பாபர் ஜமா மசூதியைக் கட்டவில்லை” என்றார்.
மௌலானா மொயீதின் கூற்றுப்படி, இந்த மசூதி துக்ளக் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம். இதன் கட்டுமான பாணியும் முகலாயர் காலத்துடன் ஒத்துப் போவதில்லை.
இந்த மசூதி தற்போது இந்திய தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது மற்றும் பாதுகாக்கப்பட்ட கட்டடமாக உள்ளது. இந்த ஜமா மஸ்ஜித் தொடர்பாக சர்ச்சை ஏற்படுவது இது முதல் முறையல்ல.
இது கோவில் என இந்து அமைப்புகள் கூறி வருவதுடன் சிவராத்திரியின் போது இங்கு கட்டப்பட்டுள்ள கிணற்றின் அருகே வழிபாடு நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், சமீபத்திய ஆண்டுகளில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை என முஸ்லிம் தரப்பு கூறுகிறது.
முஸ்லிம் தரப்புடன் தொடர்புடைய வழக்கறிஞர் மசூத் அகமது கூறுகையில், “இந்த வழக்கை தாக்கல் செய்ததன் மூலம், இந்த முஸ்லிம் மத ஸ்தலத்தில் பிரச்னை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசூதி தொடர்பாக நீதிமன்றத்தில் எந்தச் சிக்கலும் இன்னும் கண்டறியப்படவில்லை” என்றார்.
அரசுத் தரப்பு சொல்வது என்ன?
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்குத் தடையாக இருப்பவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சம்பல் வழக்கு குறித்து உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசு மற்றும் காவல்துறை நிர்வாகத்தின் பொறுப்பு. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றார்.
இந்நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி வீடியோ ஒன்றை வெளியிட்டு, “நீதிமன்ற ஆணையர் குழு ஆய்வு நடத்துவதற்காக சம்பலுக்கு வந்துள்ளது. அவர்கள் மீது கல் வீசியது, அவர்களுக்கு அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை, நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை, சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது” என்றார்.
ராகேஷ் திரிபாதி, சம்பலில் அமைதி காக்க வேண்டும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பல் சம்பவத்திற்கு யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில் “சம்பலில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இரு தரப்பினரையும் கூட்டிச் சென்று அமைதியான முறையில் இந்தப் பணி நடந்திருக்க வேண்டும், அது நடைபெறவில்லை. சம்பலில் நடக்கும் குழப்பம் மற்றும் வன்முறைக்கு அரசும் நிர்வாகமும்தான் காரணம்” என்று மாயாவதி கூறினார். மேலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.