தங்கள் மகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் நாங்களே மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொள்கிறோம் என்று கோவையிலுள்ள தனியார் பெண்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு குழந்தையின் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, 100 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் வகுப்பு ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதலின்றி இப்படி எழுதி வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்று பலரும் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில், வேறு எந்தப் பெற்றோரிடமும் இதுபோன்று எழுதி வாங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள தடாகம் சாலையில் அமைந்துள்ளது அவிலா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையான கார்மேல் சபை சகோதரிகளால் இந்த பள்ளி (Convent), நடத்தப்பட்டு வருகிறது.
பாலர் வகுப்பில் துவங்கி 12 ஆம் வகுப்பு வரையிலும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பயின்று வருகின்றனர். கல்விச்சேவையில் பல்வேறு தரச்சான்றுகளைப் பெற்றுள்ளதாகச் சொல்கிறது இந்த பள்ளியின் இணையதளம். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தின் பிரபல காட்சி ஊடகம் சார்பில் தமிழகத்தின் தலைசிறந்த பள்ளியாகவும் இந்த பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது.
வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல; கல்வியே வாழ்க்கை!
பட மூலாதாரம், Avila Convent Website
இந்த பள்ளியின் இணையதளப் பக்கத்தில், ”ஒவ்வொரு மாணவரின் கல்வி மற்றும் கல்வி சாராத தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் பள்ளியின் கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல, ஆனால் கல்வியே வாழ்க்கை என்று நாங்கள் நம்புகிறோம். வித்தியாசமான கல்வித்திட்டங்களைக் கொண்டு எங்கள் மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் புதுமை நிறைந்த பள்ளியாக விளங்குகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான போட்டி, நீடித்த சாதனைக்கான ஊக்குவிப்பு, சமூக அர்ப்பணிப்பு, உற்சாகம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து பள்ளி முன்னேறி வருவதாகத் தெரிவிக்கிறது. அறிவுபூர்வமான, நேர்மையான, பொறுப்புள்ள குடிமக்களாக மாற எங்கள் மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு பெருமைகளுக்குரியதாகக் கருதப்படும் இந்த பள்ளியின் மீது, கடந்த வாரத்தில் அதிர்ச்சி தரக்கூடிய புகார், பள்ளிக் கல்வித்துறைக்குச் சென்றுள்ளது. இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை என்று கூறி, அந்தக் குழந்தையின் பெற்றோரிடம், ‘குழந்தை இனிமேல் சரியாகப் படிக்காவிட்டால் நாங்களே மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொள்கிறோம்’ என்று 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதி வாங்கியுள்ளது என்பதே அதிர்ச்சியளிக்கும் அந்த புகாராகும்.
இதற்கான ஆதாரத்துடன் பள்ளிக் கல்வித்துறையின் கோவை மாவட்ட தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலரிடம் இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் இந்த புகாரைத் தரவில்லை என்றாலும், அந்தக் குழந்தையின் தந்தையிடம் பணியாற்றும் ஒருவரால் இந்த தகவல் வெளியில் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அக்குழந்தைக்கு காப்பாளர் போல இருக்கும் அந்த ஊழியர் மூலமாக வெளியில் சென்று அமைப்பு சாரா தொழிலாளர் அமைப்பின் நிர்வாகியால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முத்திரைத்தாளில் எழுதி வாங்கியது இதுதான்!
பட மூலாதாரம், Special Arrangement
நுாறு ரூபாய் மதிப்புள்ள அந்த முத்திரைத் தாளில் அந்தக் குழந்தையின் பெயர், வகுப்பு, பிரிவு மற்றும் பள்ளியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதுடன், பெற்றோரால் சில உறுதிகளும் தரப்பட்டுள்ளது.
அதில், ”இந்த பெயருடைய குழந்தையின் பெற்றோராகிய நாங்கள், எங்கள் குழந்தை கடந்த ஆண்டில் அவருடைய வகுப்பில் மிகவும் மந்தமாகப் படித்து (slow learner) வந்ததை ஒப்புக் கொள்கிறோம். இனி வரும் ஆண்டில் அவளுடைய படிப்புக்கு நாங்கள் உதவி, வரும் ஆண்டில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு உறுதியளிக்கிறோம். ஒரு வேளை அப்படி அவளால் அந்த மதிப்பெண் பெற முடியாமல் பழைய நிலையில் தொடர்ந்தால் நாங்களே முன் வந்து பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொள்கிறோம்.” என்று எழுதி அதில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர்.
இப்படி முத்திரைத் தாளில் எழுதிக்கொடுத்தது குறித்து, சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் முயன்றபோது, அவர்கள் யாரும் பேச மறுத்துவிட்டனர்.
புகார் பதிவானது எப்படி?
அந்தக் குழந்தைக்கு காப்பாளர் போன்று, பள்ளிக்கு அழைத்து வரும் சுனில் என்பவர் இதுகுறித்து சில விளக்கங்களைத் தெரிவித்தார். தனது வழியாகவே இந்த விவகாரம் வெளியில் வந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
”அந்தக் குழந்தை என்னுடைய முதலாளியின் குழந்தை. என்னுடைய குழந்தையும் இதே பள்ளியில்தான் படிக்கிறது. என்னுடைய முதலாளியிடம்தான் இப்படி ஒரு பத்திரத்தை எழுதி வாங்கியுள்ளனர். அதுபற்றி தெரிந்ததும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதுபற்றி என்னுடைய நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்தான் இந்த விஷயத்தை கல்வி அதிகாரியிடம் கொண்டு சென்றுள்ளார்.” என்றார் சுனில்.
மேலும் பேசிய அவர், ”இந்த விவகாரம் வெளியே வந்ததும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து, பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளனர். அந்தக் குழந்தையின் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். பெற்றோர் பலரும் பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் இதுபற்றி விசாரிப்பதாகக் கூறினர். எங்களை யாரும் அழைத்து விசாரிக்கவில்லை.” என்றார்.
முறையாக விசாரணை நடந்ததா?
இரண்டாம் வகுப்புக் குழந்தையின் பெற்றோரிடம் முத்திரைத் தாளில் எழுதி வாங்கியதுபற்றி, பள்ளிக் கல்வித்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்த புவனேஸ்வரன், இந்த விவகாரம் முறையான விசாரணை ஏதுமின்றி அப்படியே மறைக்கப்பட்டுவிட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு இதில் விருப்பமில்லாததும் அதற்கு முக்கியக் காரணம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இவர் பாரதிய ஜனா மஸ்துார் மகாசன் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் (BJMM) மாநில துணைத்தலைவராக இருக்கிறார். புகார் கொடுத்த தன்னையும் எந்த விசாரணைக்கும் எந்த அதிகாரியும் அழைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியுமென்றும் அவர் கூறினார்.
வேறு எந்த பெற்றோரிடமிருந்தும் புகார்கள் இல்லை!
பட மூலாதாரம், Special Arrangement
பள்ளியின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துக் கேட்பதற்காக, பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் தரப்பில் யாரும் பேச முன் வரவில்லை. ஆனால் குழந்தையின் பெற்றோரிடம் எழுதி வாங்கியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ஃபில்சி கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதியன்று, பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறி, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். சம்பவம் நடந்த அன்று பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் சென்று விட்டதால் தான் பள்ளியில் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
”பள்ளி விதிகளுக்கு முரணாக, குழந்தையின் பெற்றோரிடம் முத்திரைத்தாளில் எழுதி வாங்கியதாக காட்சி ஊடகத்தில் தகவல் பார்த்ததும் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த குழந்தையின் எதிர்கால கல்வி நலனைக் கருதி, பெற்றோரின் ஆதரவு தேவை என்பதற்காக இந்த தவறைச் செய்ததாக அந்த ஆசிரியர் ஒப்புக் கொண்டார். எப்படியிருப்பினும் இது கடுமையான தவறு என்பதால், அன்றே அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கோவை மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாளிடம் பிபிசி தமிழ் இதுபற்றி கேட்டபோது, ”அந்த புகார் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல், வகுப்பு ஆசிரியை தன்னிச்சையாக அந்த பெற்றோரிடம் எழுதி வாங்கியிருப்பது தெரிந்து, அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். அதற்கு மேல் வேறு எந்தப் புகாரும் இல்லை.” என்றார்.
பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதல் இன்றி, வகுப்பு ஆசிரியரால் மட்டும் இதை வாங்கியிருக்க வாய்ப்புள்ளதா, வேறு எந்த மாணவியரின் பெற்றோரிடமும் இதுபோல எழுதி வாங்கப்பட்டுள்ளது குறித்து விசாரிக்கப்பட்டதா என்று மாவட்டக் கல்வி அலுவலரிடம் கேட்டபோது, ”நாங்கள் விரிவாக விசாரித்து விட்டோம். வேறு எந்த பெற்றோரிடமும் இதுபோல நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.” என்றார்.