0
நமது சருமம் அதிகம் வறண்டுபோகக் காரணம் உடலின் நீர்ச்சத்து குறைந்து இல்லாமல் போவதால்தான். வெயிலின்போது வியர்த்து நீர்ச்சத்து குறைவதால் சருமம் பாதிக்கப்படும். மழைக்காலத்தில் கடுங்குளிரால் வறண்டு போகும். பனி, தூசு ஆகியவற்றால் சருமத்தில் ஏற்படும் வறட்சி, சுருக்கத்தை போக்க வல்லது பாலாடை. எளிதாக வீட்டில் கிடைக்கும் பாலாடை கொண்டு சிறியோர் முதல் பெரியவர்வரை அனைவரும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம். சிறு மெனக்கெடல் மட்டுமே தேவை.
ஒரு டீஸ்பூன் பால் பவுடருடன், பாலாடை 2டீஸ்பூன் சேர்த்து பேக் போல போடலாம். இதனால் சருமம் வறண்டு போகாமல், நீர்த்தன்மையை இழக்காமல் இருக்க உதவும். சருமம் பளபளப்பாக இருக்கும்.
தரமான மாய்ஸ்சுரைசர் லோஷனை தேர்வு செய்து உபயோகிக்க குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி, வெடிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
பாலாடை ஒரு டேபிள்ஸ்பூன், முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில், சருமத்தில் தடவி பின் குளித்து வந்தால் சரும பளபளப்பு மேம்படும்.
முட்டை வெள்ளைக் கருவுடன், பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், பாலாடை சேர்த்து கலந்து முகத்தில் சருமத்தில் தடவி பின் கழுவ சரும பொலிவு பெறுவதோடு தோலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப் பெற்று சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பாலாடையுடன் ஆலிவ் எண்ணெய் சிறிது சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ சரும வறட்சி சுருக்கத்தை போக்கி புத்துணர்வை தரும்.
பாலாடையுடன் தேன் கலந்து உதட்டில் தடவி வர வெடிப்பு, கருமை மாறி உதடுகள் பளபளப்பாக இருக்கும்.
தழும்புகள், கால் வெடிப்புகள் மறைய பாலாடையுடன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து போட்டு பின் கழுவ நல்ல குணம் கிடைக்கும்.