• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

சர்க்கரைவள்ளிக் கிழங்கு – தேங்காய் கொழுக்கட்டை!

Byadmin

Jan 20, 2026


இப்போது சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீசன். இந்த காலத்தில் இந்த கிழங்கை வாங்கி சாப்பிடுவது உடலுக்கு நல்லதோடு, சுவைக்கும் குறைவில்லை. ஆனால் வீட்டில் இருப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நேரடியாக சாப்பிட விரும்பாமல் இருக்கிறார்களா? அப்படியானால் கவலை வேண்டாம். அதையே வைத்து ருசியான கொழுக்கட்டை செய்து கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை சுவையானது மட்டுமல்ல, சத்துகளும் நிறைந்தது. தேங்காய் சேர்ப்பதால் இயற்கையான இனிப்பு கிடைக்கும்; எண்ணெய் இல்லாத ஸ்நாக்ஸ் என்பதால் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. ஒருமுறை இப்படி செய்து கொடுத்தால், “மீண்டும் இதையே செய்யுங்க” என்று வீட்டிலேயே கேட்கத் தொடங்குவார்கள்.

ஈவ்னிங் நேரத்தில் டீக்குப் பக்கத்தில் கொடுக்க ஒரு சூப்பரான ஹெல்தி ஸ்நாக்ஸாக இது இருக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கும், இரண்டு கைப்பிடி தேங்காயும் இருந்தாலே போதும்; குறைந்த பொருட்களில், எளிதாக செய்யக்கூடிய இந்த கொழுக்கட்டை அனைவரையும் கவரும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆசையா? எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

உள்ளே வைப்பதற்கு…
* சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1
* தேங்காய் – 2 கைப்பிடி
* ஏலக்காய் – 2
* தண்ணீர் – 1/2 டம்ளர்
* நாட்டுச்சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

மேல் மாவிற்கு….
* அரிசி மாவு – 1 கப்
* துருவிய தேங்காய் – 1 கைப்பிடி
* உப்பு – 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் – 1 டம்ளர்
* நெய் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:
* முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு, 2 கைப்பிடி நறுக்கிய தேங்காய் துண்டுகள், 2 ஏலக்காய் சேர்த்து, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 கைப்பிடி துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 1 டம்ளர் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தட்டில் நெய்யை தடவி, அதில் முதலில் அரிசி மாவு கலவையை பாதியை சேர்த்து பரப்பி விட வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதனுள் இட்லி தட்டி கவிழ்த்து வைத்து, அதன் மேல் இந்த தட்டை வைத்து, மூடி 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 1 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதன் மேல் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கலவையை பரப்பி, மீண்டும் மூடி 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் 1 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதன் மேல் மீதமுள்ள அரிசி மாவை பரப்பி மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக கத்தியால் அதை முக்கோண துண்டுகளாக வெட்டினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை தயார்.

By admin