தருமபுரி: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தருமபுரி திமுக மாவட்ட பொறுப்பாளர் நீக்கப்பட்டு, புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தடங்கம் சுப்பிரமணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தர்மச்செல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தருமபுரியில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற திமுக கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில், “கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட எல்லோரும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்” என்று கூட்டத்தில் தர்மச்செல்வன் பேசிய ஆடியோவெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக தர்மச்செல்வனை திமுக தலைமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. இந்நிலையில், தர்மச்செல்வன் நேற்று மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி, கிழக்குமாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், மாவட்ட பொறுப்பாளர் தர்மச்செல்வனின் பேச்சு அரசு அதிகாரிகள், வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி எதிர்மறை விளைவுகளை உருவாக்கி விடும் என்று கருதி, திமுக தலைமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மூத்த திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.