0
21ஆம் நூற்றாண்டில் மாறிக் கொண்டிருக்கும் அதீத தொழிநுட்ப மாற்றங்களுடன் கூடிய இன்றைய காலகட்டத்தில் உலகில் மனிதனைப் படைக்கும் சக்தி சொரூபமாகவும், கண்ணில்பட்ட தெய்வமாகவும் வாழும் கடவுளாகவும் நம் முன்னோர்களால் என்றும் பெண்கள் போற்றப்பட்டு வருகின்றனர்.
கலை, அரசியல், கல்வி, பொருளாதாரம், கலாசாரம், விளையாட்டு, விஞ்ஞானம், கண்டுபிடிப்பு, வணிகம், சட்டம் முதலான பல துறைகளில் வெவ்வேறு பதவிகளில் தங்களுக்கான அங்கீகாரத்தை தாபித்து ஆண்களுக்கு சரிநிகராக சர்வதேச துறைகளில் பெண்கள் தனக்கென உறுதியானதும் நிலையானதும் கௌரவமானதுமான இடங்களைப் பிடித்துள்ளனர்.
இன்று பெண்ணடிமை ஒழிந்து நாடு கடந்து கடல் கடந்து பல்வேறு கோணங்களில் ஆகாய விமானம் ஓட்டுவது, புகையிரத இயந்திரம் இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, கணினித் துறையில் புரட்சிகரமான சாதனைகளை நிகழ்த்துவது என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறைகளே இல்லை என வியக்கும் அளவிற்கு சிறந்து விளங்குகிறார்கள்.
இப்பொழுது சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் வெல்வதுமான பாரதியின் புதுமைப் பெண்கள் உருவாகிக் கொண்டிருப்பது மட்டுமின்றி குடும்பம், பதவி, கௌரவம் பாரம்பரியம் என அனைத்தையும் பேணி வருகிறார்கள்.
பெண்களே நாட்டின் கண்கள், நம்மை பெற்றவள் பெண், நமது சந்ததியை பெற்றுக்கொடுப்பவள் பெண், மனித வாழ்வில் தாய், மனைவி, மகள், சகோதரி என பல பாத்திரங்களில் நல்ல உறவாக இருப்பவளும் பெண். கங்கா, யமுனா, காவேரி என புண்ணிய நதியாக இருப்பவளும் பெண். சர்வதேச வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை அழைத்து செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதற்காக, பெண் கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களது நல்வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில், 1978ஆம் ஆண்டு முதல் மகளிர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்று வருவதோடு, அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு கருப்பொருளை மையப்படுத்தி கொண்டாட்டம் இடம்பெற்று வருகிறது. இலங்கை தற்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நாட்டிலுள்ள பெண்கள் தொடர்ச்சியாக வலிமை மற்றும் மீளெழுச்சித்தன்மையை வெளிப்படுத்தி முன்னோக்கி பயணிப்பதன் மூலம் மரியாதையையும் பாராட்டையும் பெறுகின்றனர்.
அந்த வகையில், இவ்வருட மகளிர் தினமானது இலங்கைப் பெண்களின் குறிப்பிடும் படியான சாதனைகளை கௌரவிக்கும் பொருட்டு ‘பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள்’ எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகின்றது.
பாலின சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடவும் நேர்மறையான மாற்றத்திற்காக வாதிடவும் இந்த நாளின் நோக்கமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து அனைத்துப் பெண்களையும் உள்ளடக்கி சமத்துவமான சமூகத்தை நோக்கிச் செயற்பட இது ஒரு வாய்ப்பாகும்.
உலகளாவிய இயக்கத்தில் இணைந்து, பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலுக்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் மோதல்களுடன் நாட்டில் நிலவும் வறுமை நிலைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கங்கள் வரை பல நெருக்கடிகளை உலகம் எதிர்கொள்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளால் மட்டுமே இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும்.
பெண்களில் முதலீடு செய்வதன் மூலம் நாம் மாற்றத்தைத் தூண்டலாம். மேலும் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் பெண்களை சமமான உலகத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மாத்திரமே சமூக மாற்றத்தை துரிதப்படுத்தலாம். 2030ஆம் ஆண்டிற்குள் 342 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிர வறுமையில் வாழலாம் என ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. பெண்களின் தேவைகளுக்கேற்ப முன்னுரிமைகள் பரிசீலிக்கப்படுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் கட்டாயமாக பெண்களின் பாலினம் சார்ந்த நிதியுதவிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன் நாட்டுப் பெண்களின் அத்தியாவசிய சேவைகளையும் சமூகப் பாதுகாப்பிற்கான பொதுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணியின் மூலம் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரத்திற்கு பெண்கள் செய்யும் முக்கிய பங்களிப்பை ஒவ்வொருவரும் மதிப்பது மட்டுமின்றி அங்கீகரிக்கவும் வேண்டும். ஏனெனில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மூன்று மடங்கு அதிக நேரத்தைச் சம்பளமில்லாத பராமரிப்புப் பணிகளில் செலவிடுகின்றனர்.
மேலும், இந்தச் செயற்பாடுகளுக்கு குறித்த தொகை ஒதுக்கப்பட்டால் அவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் கணக்கிடப்படுவர்.
பெண்களில் முதலீடு செய்வது, பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பது முதலான செயற்பாடுகள் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குகிறது.
இலங்கையில் பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் தலைமைத்துவத்தைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் பெண்கள் தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம் (WCIC) மகளிர் தலைமைத்துவ மன்றத்துடன் இணைந்து இவ்வருடத்தில் பல செயற்திட்டங்களை வழங்கத் தயாராகி வருகிறது. இது “InspireInclusion – Count Her In” எனும் கருப்பொருளில் மார்ச் 14, 2024இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு – ஜப்பான் அரசாங்கம் இணைந்து ஐ.நா பெண்களின் ஆதரவுடன் 2023- 2027 காலப்பகுதியில் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதன் முதல் தேசிய செயற்திட்டத்தை (WPS) இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
பெண்கள் மீது காட்டப்படும் பாகுபாடு என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பாகுபாடு பெண்கள் மீது சுமத்தப்படும் மாபெரும் தடையாகும். பெண்களின் துணையுடனேதான் பல சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அமைதியான குடும்ப சூழல், பொருளாதார வளர்ச்சி, சீரான முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு ஒவ்வொரு குடும்பம் முதல் சர்வதேச சமூகம் வரையும் தேவைப்படுகிறது.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு துறைகளை வலுப்படுத்த பெண்களின் பங்கு தேவைப்படுகிறது.
அந்தவகையில் மேரி கியூரி, புளோரன்ஸ் நைட்டிங்கேள், ஒளவையார், அன்னை தெரேசா, ராணி லக்ஷ்மிபாய், சாவித்ரிபாய் பூலே, ஆனந்திபாய் ஜோஷிசரோஜினி, நாயுடு விஜய லட்சுமி பண்டிட், கமலா தேவிசட்டோபாத்யாய், நீதிபதி அன்னா சாண்டி, சுசேத்தா கிரிப்லானி, கிட்டுர் சென்னம்மா, பூலாந்தேவி, அனுலாதேவி, இந்திராகாந்தி, கல்பனா சாவ்லா என சாதனைப் பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது எனலாம்.
சர்வதேச ரீதியில் பல்துறைகளிலும் பெண்களின் சாதனைகள் போற்றத்தக்கது. காவல்துறை, சட்டத்துறை, அரசியல் துறை, தகவல் தொடர்பு துறை, மருத்துவத் துறை, போக்குவரத்து துறை, விளையாட்டுத் துறை, வணிகத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் உயர் பதவிகளை வகித்து திறம்பட செயல்படுகின்றனர். போக்குவரத்து துறையிலும் பெண் ஓட்டுனர்கள் வந்துவிட்டனர்.
வேளாண்மை துறையிலும் பெண்கள் பங்களிப்பு உள்ளது சிறப்புக்குரியதாகும். குடும்ப பெண்கள் தங்கள் வீட்டுக் கடமைகளை முடித்துவிட்டு பகுதி நேர வேலைக்கு சென்று கணவரின் கஷ்டத்தில் பங்கெடுக்கின்றனர். விளையாட்டு துறைகளிலும் பெண்கள் பங்கேற்று நாட்டிற்கு பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார்கள். அண்மையில் இலங்கையில் உலக சாதனை படைத்த தமிழ் சிறுமி நேரடியாக நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கலிய தோட்டத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.
BBC 100 women 2020 அறிக்கையின்படி, சைவாணி பில்கிஸ் மானசி ஜோசி, ரிதிமா பாண்டே முதலாக 100 பெண்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்கள் சாதனையாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். உலகை மாற்றிய சக்தி வாய்ந்த நூறு பெண்களின் பட்டியலில் அறிவியல் புலத்தில் மிக அரிதான சாதனை படைத்தவராக மேரி கியூரி அம்மையார் குறிப்பிடத்தக்கவர். சிறுவயதில் இலங்கைச் சிறுமி ஒருவர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்டியனில் நடைபெற்ற 11வது MTM younger achievers விருது விழாவில் 15 வயது மதிக்கத்தக்க யெனிலி பினாரா இச்சாதனையை நிகழ்த்தினாள். அதேபோல் திருமதி உலக அழகி போட்டியில் இலங்கைப் பெண்ணான கெரோலின் ஜூலி தேர்வு செய்யப்பட்டார். அவ்வாறே 2020ஆம் ஆண்டுக்கான திருமணமான உலக அழகி கிரீடத்தை சம்மந்திக்கா குமாரசிங்க “ஆசியாவின் திருமதி அழகி” பட்டத்தை வென்றார். 2019ஆம் ஆண்டில் முதல் ஐந்து அழகி பட்டங்களை வென்று கறுப்பினப் பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
அறிவியலில் சாதனை படைத்த ஏழு இந்தியப் பெண் விஞ்ஞானிகள் பெண்ணினத்தின் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளார்கள். அறிவியலில் எட்ட சாத்தியம் இல்லாதவைகளாக கருதப்பட்ட உச்சத்தையும் பெண்கள் எட்டியுள்ளனர்.
நோபல் பரிசு வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் தங்களது பெயர்களை தடம் பெறச் செய்துள்ளனர். ஆணாதிக்கத்துக்கு மத்தியிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் சாதனையும் படைத்துள்ளனர். ரிது கரிதால், சந்திரிமா சாஹா போன்றோர் இஸ்ரோ, INSA நிறுவனங்களில் உயர் பதவி வகித்து புதிய திட்டங்களை செயற்படுத்தி சாதனை படைத்தும் வருகின்றனர். அந்த வகையில் உலகில் ஏவுகணைப் பெண் என அழைக்கப்பட்டு அக்னி – 4 ஏவுகணைத் திட்ட இயக்குனராக கடமையாற்றும் 56 வயதான டெசி தாமஸ் என்பவர் “ஏவுகணை முனைவர்” பட்டம் பெற்றுள்ளார்.
இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என அழைக்கப்பட்ட சந்திராயன்-2 திட்டத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு வகித்தவராக ரிது அரிதால் என்ற இந்தியப் பெண் விஞ்ஞானி “மங்கள்யான்” திட்ட உதவி இயக்குனராகப் பணியாற்றி தலைசிறந்த விஞ்ஞானி விருது பெற்றவராவார்.
அதேபோல் சந்திராயன்-2 திட்டத்தின் இயக்குனராக கடமையாற்றி 2006 ஆம் ஆண்டில் சிறந்த பெண் விஞ்ஞானி விருதைப் பெற்றவராக முத்தையா வனிதா சாதனை படைத்துள்ளார். குழந்தைகளை தாக்கும் வைரஸ் நோய்க்கிருமிகளை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ரூடவ்டுபட்ட முதல் விஞ்ஞானி என்ற சாதனையை பெற்றவராக சுகன்தீப் காங் என்பவர் பெண்களின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், அந்தாண்டிக்காவில் உறை பனிச் சூழலில் 403 நாட்கள் செலவிட்டு உறை பணியில் அதிக நாட்கள் தங்கிய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை 56 வயதான மங்களாமணி என்பவர் பெற்றுள்ளார். இவர் இப்பணிக்கு தெரிவு செய்யப்பட முன் இத்தகைய பணிச்சுழலுக்கு பரீட்சயம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புளூட்டோவை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய நியூ ஹாரிசன் என்கின்ற விண்கலத்தில் இருந்து தகவல் சேகரிப்புக்கான சிப் மற்றும் அல்காரிதம் உருவாக்கும் பொறுப்பை மேற்கொண்ட பெண் விஞ்ஞானியாக காமாட்சி சிவராம கிருஷ்ணன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
மேலும், இவர் இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் முதல் பெண் தலைவராக 85 ஆண்டுகளுக்கு பின் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் தலைவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இவ்வாறு சகல துறைகளிலும் பெண்கள் சர்வதேச ரீதியில் வயது, பால், அந்தஸ்து, பரம்பரை, மதம், குடும்பச் சூழல் என்பவற்றைத் தாண்டி சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
2023 மார்ச் 08ஆம் திகதி இலங்கையில் உள்ள பெண்களை வலுவூட்டுவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு பத்தரமுல்லையில் இடம்பெற்றது. இலங்கைப் பெண்களின் கருணையையும் நேர்த்தியையும் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் சாதனைகளை வெளிப்படுத்திய மூன்று ஒப்பற்ற பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இவ்வுலகிற்கு ஒவ்வொரு பெண்களும், ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்கும் அவனது வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். சாதனைப் பெண்கள் ஏனைய பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட சிறந்த முன்மாதிரிகளாகவே உள்ளனர்.
ஆயிரம் கவிஞர்கள் பெண்ணியம் பேசினாலும் பல்வேறு தடைகளைத் தாண்டியே பெண்கள் சமனிலை பெற வேண்டியிருக்கிறது.
உடல், உள, சமூக ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுவதை தடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் சட்டங்கள், விதிகள் கொள்கைகள் சர்வதேச செயலொழுங்கில் உயிர்பெற வேண்டும்.
கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் இலங்கைப் பெண்கள் கணிசமான முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையிலும், அமைச்சுக்கள், திணைக்களங்கள், அமைப்புக்கள் என பல இயங்குநிலையில் இருந்தும் பெண்களின் உரிமைகள் இன்னும் மறுக்கப்படுவதையும் அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதையும் காண முடிகிறது. பெண்களின் முன்னேற்றம் நாட்டின் எதிர்காலத்துக்கும் ஜனநாயக சமுதாயத்தை தோற்றுவிப்பதற்கும் அவசியமாகிறது.
நாட்டின் வறுமையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் பெண்களின் முன்னேற்றமே பேசும் பொருளாக உள்ளது. கொவிட் தொற்றுநோய், புவிசார் அரசியல் மோதல்கள், காலநிலைப் பேரழிவுகள் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பு ஆகியவற்றின் தாக்கமானது 2020ஆம் ஆண்டிலிருந்து 75 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமைக்குள் தள்ளியுள்ளது.
இயந்திரமயமான சமுதாயத்தில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அனுபவ அறிவையும் பெற வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகளின் பிறப்பு முதல் பெண்களின் முக்கியத்ததுவத்தை ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளிடத்தில் விதைக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு, உரிமை, சுதந்திரம், கௌரவம், அங்கீகாரம் என்பன உறுதி செய்துகொள்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதாவது பெண்கள் பாதுகாப்புச் சட்டம், போக்சோ சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை தாண்டி இச்சமூகத்தில் வாழும் ஒவ்வொரு ஆண்களும் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன்னில் ஒருவராக எப்பொழுது உணர்கின்றார்களோ அன்றுதான் குடும்பத்தில் சமூகத்தில் நாட்டில் பெண்களின் பிரச்சினைகள் நீங்கி புரட்சிகரப் பெண்களின் மறுமலர்ச்சி உதயமாகும்.